காலம் நின்று விடுகிறது, நாம் பார்க்க ஆசைப்பட்ட என்ற வார்த்தைக்கு பின்னிருக்கும் காட்சிகளின் மத்தியில்..
ஒவ்வொரு கூடுடையும் நம்பிக்கைக்குப் பின்னும் பறக்க அனுமதித்த வானத்தின்
கருணை?! கற்றுக்கொண்டதின் சுதந்திரம். அல்லது சிறகுகளின் கற்றல்.
நரைகூடும் பருவமென்பதில் வளர்ந்துவிடும் பால்பற்கள் உச்சரிப்பதற்காக
வாங்கிக்கொண்ட இன்னொரு வரம். அது வளரும்.. பின் விழுமென்பது பிள்ளை வயது
பாடம்.
நாமே தான் வடிவமைக்கிறோம்
என்ற புரிதலுக்கு வரும் போது வந்து நிற்கிற நிறுத்தம் அனுமதிப்பதில்லை
வயதையும், வாழ்க்கையையும். ஆனாலும் இருக்கும் வரைக்கான ஒவ்வொரு
ப்ரயத்தனமும் இருந்து பார்ப்பதற்கான புதிய பிறப்பு என்ற கூக்குரல்
பிறக்கும் போது நாம் பார்க்க ஆசைப்பட்ட என்ற சொல் பறந்துவிடுகிறது ஆளற்ற
வனத்தை நோக்கி..
ஒரு சொல்லின் வனம் நாம் என்றும் நடந்துபார்ப்பதற்கான புதிய பாதை. அது அனுமதிக்கிறது எத்திசையிலிருந்து எத்திசையையும்..
மழை குளித்த நிலங்கள் முதல் பிரசவம் கண்ட தாயைப் போல் புதுவாடை கொண்டு மணத்துக்கிடக்கிறது.. மழைப் பொழுதின் ஒவ்வொரு வருகையும் ஒவ்வொன்றை உடுத்திக்கொள்ளும் போது இந்த மழையின் நிர்வாணம் காணும் அழகு கன்னிக் கனவு..
ஒவ்வொரு மழையும் ஒரு முதல்.. முடிவுகள் காணாத தொடக்கமென்பது மழைக்கான கொண்டாட்டம்..
வெயிலை மீறி நேற்று பெய்த மழையால் அழகேறிக்கொண்ட வீதிகளை நாலு சுவர்களின்
மத்தியிலிருந்து மொட்டைமாடிச் சுவர்கள் தாண்டி பார்க்கும் போது,
மீறிப்போகச் சொன்ன மனதை நேற்று கால்கள் கேட்டு பயணப்பட்டது ஒரு
சுகானுபவம்..
என்னை மீறிய மனமென்பது எண்ணிலடங்கா கால்களின் கூட்டு.. புரியும் போது அவை விடையறியாத கணக்கு..
பழக்கப்பட்ட வீதிகள் தான் பருவக்கனவுகள் போல் மழைக்காலத்தின் வெள்ளந்தி
முகங்களைச் சூடிக்கொள்வது, பால்யத்தோழனின் காதலை நினைவு படுத்துகிறது..
ஏற்கவா வேண்டாமாவென்ற திண்டாட்டங்கள் இல்லாத ரசிப்பு ஒரு கொண்டாட்டம். அது
சுத்தமான தேசாந்திரியின் திட்டமிடல். கை நிறைய காரணங்களற்று திசையின்றி
போகும் திசை ஒரு முகம். அதன் புதிர்கள் ஒரு வயோதிகம்..
இருப்பதைத் தாண்டி இந்த இயற்கை அழைத்துச் செல்லும் ஒவ்வொரு வழியும் என்
புதுப்பிறப்பு.. அதை மீறச்சொல்லும் அழுகைகள் எல்லாம் என்னிலிருக்கும்
எண்ணிடலாங்கா மழை..
மழை ஒரு புதிர்காடு.. பருகக்கிடைத்த தேனீர் விதை.. விருட்சங்களாகும் சிந்தனையோடு கிளம்பிடும் பார்வை ஒரு தனிசுவை..
சுவைத்து வாழ மழையோடு இணைந்து கொள்வோம்..
இங்கே வெயில் மீறி மழைமேகம் கூடத்தொடங்கிவிட்ட இன்னொரு மாலை
வீசித்தெறிக்கும் காற்றின் வாடை, நாளை மலரக்காத்திருக்கும் செம்பருத்திப்
பூவின் இன்றைய நடனம், மொட்டில்லாத ரோஜா இதழலில் வருகைக்கான கொண்டாட்டம்,
விதைத்து வைத்திருக்கும் விதைக்கான முதல் இலையென அத்தனையும்
மழைவாங்கிக்கொள்ள பிரியப்படுகிறது முதல் காதலைப் போல..
வா மழையே முன்நெற்றி முத்தம் என் பைத்தியக் காதலின் தவம்.. வரம் தர வா..
நீ
இருக்கும் திசை நோக்கி என் சொற்களை அனுப்புகிறேன். அவை பிறந்த குழந்தையின்
பிஞ்சுப் பாதங்களுக்கு ஒப்பானது. முதல் முதலாய் பூமி பார்க்கும் அதற்கு
இந்த உலகத்தின் வழியெதுவும் தெரியாது..தெரிந்ததெல்லாம் அதற்கு பசி
மட்டுமே.. பசிக்கும் நேரத்தில்
அதன் குரல் அழுகையின் சுவை.. அதற்கு பாகுபாடு இல்லை. பருவங்கள் மாற மாற
மாறும் அதன் பருவம் கோடைக்கானது மட்டுமல்ல என்பதை எப்போதாவது புரியவை..
கம்பங்கூழ் நேசமென அருகிப் போய்விட்ட இந்த உலகில் மனித நிழலென்பது ஒரு
அடிக்கும் சற்றுக்குறைவாய் போய்விட்ட இந்த பிரபஞ்சத்தில் தான் அது நடக்கக்
கற்றுக்கொள்ளவேண்டும் அதற்கு துணை புரி.
மரத்துப் போய்விட்ட
பாதங்களுக்குக் கீழ் பதுங்கியிருக்கிற நிழலென்பது நடப்பதற்கான தெம்பென்பதை
ஏதாவது ஒரு மழைக்காலத் தேனீரின் போது புரியவை..
ஒட்டுமொத்தமென்பது
நாம் வாழும் மிகச்சில எண்ணிக்கையில் அடங்கிப் போவது ஒரு பெரிய கணக்கு. அவை
தேறிய வகுப்பின் போது கடினமாய் தெரிந்து பின் வந்து நிற்கும் வகுப்பின்
போது எளிமையாய் இருக்கும் கணக்கைப் போல் புரிதல் தருணத்தின் புரிதலற்று.
இறுதியாய் குழந்தையின் பாதங்களென்று அவற்றை அலட்சியப் படுத்தாதே.. அவை ஏழு உலகம் அளக்கும் வாய்ப்பிற்கு உட்பட்டது..
முழுதாய்
வளர்வதற்குள்ளான காத்திருப்பை அணில் கடித்துவிட அதன் இதழ்களில் ரோஜா
வாசம்.. அதன் குட்டிக் கைகளுக்குள் அகப்பட்ட மலரின் விரிதல் கற்றுத் தேராத
காத்திருப்பின் மணம்..
பார்த்துப் பார்த்து வளர்த்தாலும்
வாடிவிடுகிற மலரின் புரிதலைப் போலவே இந்த கணம். அதன் வாசம் பிறவி உடுத்திப்
பார்க்காத செவ்வண்ணம். வளர்தல் ஒருவிதமான காத்திருப்பு, அதன் வசமான
புரிதல் வேர்கொண்ட விதைகளுக்கான விடுதலை.. சுதந்திரம் நம் கைமணல்.. ஊற்றுகிற சொல்லின் நீர்மை உயிர் வளர்ப்பதற்கான ஆதாரம். .
என் செடிகளுக்கு மத்தியில் ஒரு செந்நிற ரோஜா செடியுண்டு.. எப்போதாவது
ஜோடியாய் பூக்கும் அதன் புன்னகையின் போதெல்லாம் தொற்றிக்கொள்கிற நறுமணம்
என் மறுபிறப்பு.
இம்முறையும் மொட்டொன்றை வளர்வதற்குள்ளே அணில்
கடித்துவிட அதன் விழிகளுக்குள் அகப்பட்ட மிரட்சியை அணில் தன் சத்தங்களின்
வழியாய் உடைத்துக் காட்டுகிறது.க்க்க்கிவிக் க்க்க்விக் சத்தம் பாண்டிய
நாட்டில் நீதிகேட்கிற பரல்களின் சத்தமாய் மனதை நிறைக்கிறது நியாயங்கள் என்றும் விலை போவதில்லை. அது வளர்கிறது புரிதலுக்கேற்ற பக்குவத்தின் நிழலில்..
நாமாக ஏற்றிக்கொண்டுவிட்ட உருவத்தின் மீதான கனத்தில் தவறவிடுகிற கணமென்பது
ஒரு யுகத்திற்கான வேண்டுதல்..அது பிடுங்கப்பட்டாலும் மலர்கிறது. மலர்தல்
புரிதலின் ஒருவழிச்சாலை..அங்கே திசைகள் இல்லை. நாமாக
ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்ட பிம்பம் நம் பிம்பம் மட்டுமா? அது
ரோஜாவினுடையதாய் இருந்த போது காத்திருந்தது. அணிலின் இதழாக மாறிய போது
கொஞ்சம் கொஞ்சமாய் அணிலின் இதழாய் மலர்கிறது..பின் சுவருக்கு சுவர் வெயில்
உடுத்தி தாவுகிறது..
எதையும் எப்படி பார்ப்பது என்பதில் பித்தாகி
நிற்பதற்கு பின்னிருக்கும் இருட்டு தனிமை மட்டுமே அல்ல. அது
சத்தியத்திற்கான வெளிச்சம். அங்கே சத்தங்கள் நீதிகேட்கிற மெளனத்தின்
பரல்கள்..
மெளனம் என்றும் பேசப்படுவதில்லை. அது மிச்சம்
வைத்திருக்கிறது காத்திருப்பை. அது கைகூடும் போது உண்ட மிச்சம் போக
மிச்சத்தில் விரிகிறது செந்நிற ரோஜாவாக. இதழ்களைத் தொலைத்ததை ரோஜா
கைகாட்டிவிடுகிற போதும், ரேகைகள் இன்னும் மிச்சமிருக்கிறது என்பது வேரின்
பாக்கியம்
அல்லது வேர்கொண்ட மனதின் நம்பிக்கை..
காத்திருப்பின் மிச்சத்தில் சிரிக்கப்பழகிவிட்ட என் ரோஜா இதழ்கள் மாடி முழுதும் பூத்து மணக்கிறது.. இப்போதும் அணில் வருகிறது.. வாடுதலென்பது உண்ணப்படும் / உணரப்படும் வரை உயிர்வாழ்கிறது ஒரு முடிவுறாக் காலத்தைப் போல். -ரேவா
ஒரு நெடுஞ்சாலையின் பிரியமென இருக்கிறது இந்த இருப்பு..
கையசைத்தல் கணம் கவனிக்கும் முன் கழன்றுவிட்ட இலைச்சருகின் பச்சையக் கனவாகிற போது, இந்த வாழ்தலை வாழ்தலின் வழியே ரசிக்கிறேன்..
எதன் பொருட்டும் மண்டியிடப் பழகாத வாழ்தலின் பிரார்த்தனையென்பது
வெள்ளைக்கோடுகளாய் சாலையின் இருபக்கமும் பிரிந்துகிடக்கையில் நடப்பதற்கான
சாத்தியம் நாம் மட்டுமா என்ன?
எங்கிருந்தோ நீள்கிற வெப்பத்தின் கைகளைப் பற்றிக்கொள்கிறேன். நிழல் என்பது
ஒரு நீண்ட தனிமை.. அது வேண்டும் போது தருகிற இருண்மையை, நிழலின் வேறொரு
கண்ணாய் பார்க்கிற தரிசனத்திற்கான தவமென்பது இந்த ஆயுளை ஆயுளுக்குமாய் பயன்படுத்துவது தான் என்ற இடத்திற்கு வருவது ஒரு நீண்ட தியானம்..
அந்த தியானத்தின் முன் மனிதச் சத்தங்கள் ஒரு புல் மிதிபடுகிற ஓசையைப் போன்றது.
கண் திறக்கிறேன்..
புல்லின் மேலிருக்கும் பனித்துளியை விழுங்குகிற வெயில், வெயிலை தன்
பாணியில் உறிஞ்சிக் குடிக்கிற அந்தி, அந்தியை இருளில் கரைக்கிற நிலவு,
நிலவை மறைக்க இன்னும் கூட தேய்பிறை
ஒன்றை மிஞ்சும் ஒன்று..
வாழ்தல் கொண்டாட்டம் வாழ்தல் ஒரு பரிசு வாழ்தல் குழந்தையின் கண்கள் வாழ்தல் ஒரு அறியா மொழி சுருக்கமாய் வாழ்தல் தொப்புள் கொடி
இதழ்களில் பற்றிக்கொண்டிருந்த வறட்சியின் திசைத் தப்பி பெய்த மழை நிழலை
நனைக்கிறது ஆனாலும் அங்கே குளிர் வளர்கிறது. குளிரென்பது வெயிலைப்
போன்றதொரு குணம்..
குணமென்பது புத்தி தெளிவினைப் போன்றதொரு நிறம்..
நேற்றைய வானம் எதிர்பாராத திருப்பம்..
வெயிலுக்கான முன்னேற்பாடுகளை உறித்துப்போட்டுக்கொண்ட பாம்பின் சட்டை, அது
இன்றும் ஈரமாய் பளபளக்கிறது.. பாத வேர்களின் வழி சில்லிட்டு பாய்கிற உணர்வை
பாதுக்காக்கிற இடம் இன்னொரு கிழக்கு.
அங்கே சூரியன் எழுகிறது நேற்றைய ஈரத்தை அவிழ்த்து.. கொஞ்சம் கொஞ்சமாய் கரைகிற மழை, வாசம் மலர்ந்து வாடிய மலரின் பிறப்பு..
மாடிச்செடிகள் சிரிக்கிறது,வெயிலைப் பார்த்து. வெயில் அதனை அணைக்கிறது தன் பூக்கரங்கள் கொண்டு..
எல்லாம் ரசிக்கப்படவேண்டியவை என்ற இடத்திலிருந்து கொண்டாடப்படவேண்டியது
என்ற அறிவின் நகர்விற்கு என்னை எடுத்துவந்த நேற்றைய மழை எனக்கொரு
பொக்கிஷம்..
வெளிச்சங்களையெல்லாம் இருட்டடைக்கும் மெளனத்தின் வழியாய் எடுத்துக்கொண்ட கணத்தின் திரை விலகுதல், கொற்றவை நடனம்..
சொல்லின் சலங்கை நிலம் முழுதும் தெரித்து அதிர்கிறது. அடங்க மறுக்கிறது மனதின் மேடை.. மூச்சுமுட்ட நிலம் பார்க்கும் வேர்வையில், பூக்கிறது பூக்காடு..
வாசம் வாசம் எங்கும் தனிமையின் கடல் வாசம்..
ஓர் அடர்பொழுதின் பிடிக்குள் உப்புக்காற்றின் சுவையோடு என்னை வந்த சேர்ந்த
இந்த கலைஞனையும், அதற்கு பின் எனக்குப் புழங்கக் கிடைத்த வார்த்தைகளையும்
இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்..
காட்சிகள் மாறுகிறது, கடலாகாது..
கடல் என்னை ஒவ்வொருமுறையும் வெவ்வேறு ஆழத்தில் காவு வாங்கியிருக்கிறது...
அசைவற்று அதன் ஆழம் பழகுதலை, கிளிஞ்சல் பொறுக்கும் சிறுமியின் ஆவல் கைகளென அலையவிடுகிறேன்..
கடல் விரிகிறது, புரியப்படாத மெளனத்தின் நீலத்தில்.. மூச்சடைக்கிறது, நாசியேறிவிட்ட உப்பின் கரிப்பில்..
நான் கடலாவதை, கரை நின்று பார்க்கிற தனிமைக்கு என் மேல் அத்தனை காதல்.. தீண்டுகிறது இன்னும் தீராமல்..
ஷங்கர் டக்கர்..
அண்ணனின் வழியாய் அறியக்கிடைத்த பெயர்,
இன்றும் எனக்குள் பேசிப் பேசிச் சலித்த என் பெரும்பான்மை பொழுதுகளை,
என்னிலிருந்து எனக்கு வேறாக்கித் தருகிற பாடல்கள் இவரது யூடியூப்
பக்கத்தில் நிறைந்து கிடக்கிறது..
நீ நினைத்தால் ஆகாததும் உண்டோ என்று மனம்
உச்சக்கட்டமாய் கத்த ஆசைப்படுகிற வேண்டுதலில் தொடங்கி, ஆசை முகம் மறந்து
போச்சே இதை யாரிடம் சொல்வேனடித் தோழி என்ற ஏக்கத்திலெல்லாம் நான்
தொலைந்திருக்கிறேன்..
அண்ணனுக்குப் பிடித்த மன்மோகினி பாடலின் ஆண் மேல் எனக்கும் அத்தனை காதல்..
மொழிகள் பிடிபடுவதற்குள் நம்மைத் தொற்றிக்கொள்கிற, பால்பற்களுடைய
உணர்வுகள் மட்டுமே, நம்மை மொழியறியும் முயற்சியை நோக்கி முரண்டுபிடிக்கும்
குழந்தையாய் வளர்க்கிறது.
இன்றும் நான் முரண்டுபிடிப்பவள் தான்..
இந்த மதியத்தை எதுவுமற்றுக் கழிப்பதென்ற எண்ணத்தை மீறிக்கொண்டு வந்துவிட்ட இந்த கைகளையும், கேட்க ஆசைப்படுகிற இந்த பாடலையும் உங்களோடு பகிர்வதில் நிம்மதியடைகிறேன்.
ஆசை முகம் மறந்து போச்சே -இதை யாரிடம் சொல்வேனடி தோழி நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில் நினைவு முகம் மறக்கலாமோ
இம்மாத பிப்ரவரி 2016 -ல் வெளிவந்த கணையாழி இதழில் என் கவிதையும் வந்திருந்தது இந்த வருட தொடக்கத்திற்கான உற்சாகத்தைத் தந்தது. அண்ணன் ஜீவகரிகாலன் அவர்களின் சிறுகதையும், என் கவிதையும் அடுத்த அடுத்த பக்கத்தில் என்ற கூடுதல் சந்தோஷத்தோடு தான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். சமீபங்களில் பீடித்திருக்கிற சோம்பேறித்தனமோ அல்லது நம்மை நாமே நாமாய் கவனிப்பதில் ஏற்படுகிற சோர்வோ, இன்னும் சொல்லத் தெரியா ஏதோ ஒன்றால் வாசிப்பும் எழுத்தும் முரண்டு பண்ணுகிற வேலையில் வந்த கணையாழியைக்கூட எடுத்துபார்க்கிற மனம் வாய்க்காதது ஒரு தனிச்செய்திக்குப் பின் தான் உரைத்தது..
கதையின் தலைப்பு தேய்பிறை..
இந்த வருடத்தில் வாசித்த முழுக்கதை என்பதில் சந்தோஷமும், அதைத் தாண்டி வாசிக்கக் கிடைத்த அனுபவம் கொடுத்த சுவை அலாதியானது..
கதையில் மொத்தம் எட்டுக் கதாபாத்திரப் பெயர்கள்.. கதைக்குள் இயங்குபவர்களாய் கண்ணன், கண்ணனின் தாயார், கண்ணனின் நண்பன் பிரகாஷ், கண்ணனின் தம்பி மற்றும் அப்பா..
பன்னிரண்டாம் வகுப்பில் அதிகமதிப்பெண் எடுத்தாலும் தனக்கு விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து அதில் நிறைவு பெற்றவனாய் வலம் வருகிற கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் மேல் அலாதி நம்பிக்கையை ஏற்றிவிடுகிற வர்ணனைகள்.. அது வாசிக்க வாசிக்க கண்ணனை நமக்கும் பிடித்துப் போகிறது.
உளவியல் படிப்பை தேர்ந்தெடுத்து அதே துறையில் ஒரு வேலைக்கும் தன்னை அமர்ந்துகொண்ட இடம் கண்ணனைப் பற்றிய ஒரு முடிவுக்கு எளிமையாய் வர உதவியிருக்கிறது. காரணம் தன் நண்பனுக்காக உளவியல் படிப்பை எடுத்து பின் பேங்க் தேர்வெழுதி ஒரு உத்யோகத்தில் உட்கார்ந்து கொண்ட பிரகாஷில் இருந்து இவன் வேறாய் தெரிவதே இந்த கதைக்கான ஒரு பிடியைக் கொடுத்து நம்மை பயணப்பட வைக்கிறது.. மரணத்தை எதிர்கொள்வது எப்படி என்பது தான் கதையில் மையக்கரு.. மரணம் என்பது ஒரு மார்கண்டேயச் சாவி.. அதற்கு வயதின் சுருக்கங்கள் விழுவதே இல்லை..
மொத்த கதையையும் இங்கே தட்டச்சு செய்துவிடுவேனோ என்ற பயம் என்னை இந்த கணம் சூழ்கிறது..
தந்தைக்கும் மகனுக்குமான உறவு, வளர்ந்த பிறகு நம்மை எப்போதும் வளர்க்கவிடுவதில்லை என்பதை கண்ணனின் அலுவல் விசயமான நேர தாமத்தை, கோபத்தோடு எடுத்தாளும் தந்தைக்கும், மகனுக்கும் இடையே சிக்கித் தவிக்கிற, தன் மகன் செய்கிற செயல்களால் பெருமைபட்டுக்கொள்கிற, நம் வீட்டுப் பெண்களைப் போலவே இந்த தாயும்.. வெறும் செய்தியாய் இல்லாது போன மரணத்தை நாம் எப்படி எதிர்க்கொள்வது? ரத்தமும் சதையுமான நம் சுய நலத்தின் வலிகளை நாம் விரட்டி அடிக்கிற போது வருகிற கண்ணீரின் சுவைக்கு என்ன பெயர் இடுவது? என படிக்க படிக்க இருக்கிற மடிப்புகள் தான் இந்த கதைக்கு பலம்.. அதுவே இந்த டைரிக்குறிப்பில் என்னை எழுதத் தூண்டியிருக்கவும் வேண்டும்.. நம்புகிறேன்.. :)
தன் தாய்க்கு ஒரு மரணத்தை எதிர்கொள்வதை, தான் பெற்ற அல்லது விரும்பிய பட்ட அறிவால், அவள் மனதை தயார் செய்கிற இடம் எல்லாம் நாமும் கூடவே பயணப்படுகிறோம். வழி நெடுக saw படங்களில் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பரிபோகிற உயிர் யாருடையாதாய் இருக்குமென்பதில், இருப்பவர்களிடம் வெளிப்பட்டுவிடும் வாழ்வின் மீதான பற்றுதலை, இங்கே வேறாக வேகம் குறையாமல், நம்மையும் அந்த பதட்டத்திற்குள்ளே அழைத்துப் போன இந்த எழுத்தை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது.. குறியீடுகள் நம்மை ஒரு நீண்ட பயணத்திற்கு அழைத்துப் போவவை..அவைக்குள் எல்லைகள் இல்லா வெளி பரந்திருப்பதே ஒரு தேசாந்திரிக்கு கிடைத்திருக்கிற வரம் தான். அப்படியாக இந்த தேய்பிறை கதையில் இருக்கிற குறியீடுகள் அத்தனையும் சொல்லவந்த விசயத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது என்றே நம்புகிறேன்.. முடிவு என்ன என்பதை தேய்பிறையை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.. இந்த கதையை குறும்படமாய் எடுக்க இருப்பதாகவும் சொன்ன அந்த தகவலோடு என் கனவுகள் வளரத்தொடங்கிவிட்டது.. காணும் காலத்திற்காய் காத்திருக்கத் தான் வேண்டும்.. இனி சின்னச் சின்ன விசயங்களையும் இங்கே எழுதியே, அகப்படாத பலவற்றைத் தீர்ப்பதென்று முடிவெடுத்துவிட்டேன்.
உடையவர்களே உரிமையானவர்கள்.. அண்ணனிடம் பேசிக்கொண்டிருக்கையில் சுவாசத்தை நெறித்த இரண்டே இரண்டு வார்த்தைகள் இவை.. அழைப்பேசியை துண்டித்து முடித்த பின்னும், விபத்தில் உடல் துண்டாவதை, உணர்வு, மூளைக்கு அனுப்பி அதை நாமே வேடிக்கை பார்க்கிற போது, நம் கண்களில் இருக்கிற வலி போல இருக்கிறது இந்த வரிகள்..
சொற்களை நமக்கான ஏந்திவருகிற அத்தனை பேரும் நமக்கான தேவதைகள்... மூச்சடைக்கிறது..
சுவாசிப்பதற்கு யாரேனும் கொஞ்சம் சொற்களைக் கொடுத்தால் தேவலாமென்று தான் இருக்கிறது. இருப்பென்பது எதிலிருந்து தொடங்குகிறது என்பதை இப்போதும் யோசிக்கிறேன்.. இருப்பது என்பது இருப்பாகுமா? அல்லது இல்லாத பின்னும் இடம் பிடிக்கிற சொற்களுடைய மனிதர்களின் இருப்பை, இருப்பென்று மட்டும் சொல்தல் சரியாகுமா? சொற்களோடு விளையாடும் அர்த்தங்கள் ஒரு கூட்டு சமையல் தான்.. விரும்பிய சுவையின் தேர்வு நமக்கான அருமருந்து.. யாரிடமும் இப்போதெல்லாம் சொற்களின் பொருட்டு மண்டியிட விருப்பமில்லை.. கூடுடைய பறவைகளை, அதன் திசையிலிருந்து பார்க்கிற கண்களைக் கொடுத்துவிட்ட காலத்தின் முன், அதன் பறத்தலை மரம் ரசிக்கிறது அல்லது அது அப்படி தான் நிகழ்ந்தாகவேண்டுமென்ற வேரின் போக்கை தக்கவைத்திருக்கிறது.
கிளையுதிர்தலும், இலையுதிர்தலும் ஒன்றாவென்று வேரிடம் கேட்கும் மனதில், வேறிடம் இல்லையென்பதே வேர் அறிந்த ரகசியம் என்ற வார்த்தை விளையாட்டுகளில் மனம் லயிப்பற்றுக் கிடக்கிறது. ஆனாலும் எல்லாவற்றிலும் வேர்பிடித்திருக்கிறது. நம்பிக்கையற்றுவிட்ட நம்பிக்கையிலே பிழைத்திருக்கப் பிரியப்படுகிறேன். நெருங்குவதற்கான கதவுகளை முழுக்க மூடிக்கொண்ட பின்னும், இருள் திறந்துவிடப் பிரியப்படுகிற சுவாசித்தலுக்கான வெளிச்சம் நிலவாய் மட்டும் இருந்துவிட்டுப் போகட்டும் என்பதில் மனம் கெட்டிப்படுகிறது. என் டைரிகள் என்னை வந்து சேராத இந்த காலத்திலும், எனக்கான இடத்தை, நான் மட்டுமே வளர்க்கிற என் வனத்தை, தொலைந்த வழிப்போக்கன் ஒருவனின் பாடலில் தென்பட்ட சுகத்தைக் கொண்டு கடக்கப் பிரியப்படுகிறேன்..
. மிச்சமிருக்கிறவரை அத்தனையும் செலவுகள்
என்ற எனதிந்த வரிக்குள்ளே நான் பத்திரமாகிக்கொள்கிறேன்...
அனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து.
தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..