உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 5 மார்ச், 2016

மனக்கிறுக்கல்கள் 20





கடந்த காலங்களின் மேல் கல்லெறிபவர்கள் மீது சமாதானம் உண்டாவதாக..

 நம் எளிய நேர்மைக்கு நேர்வது எதுவானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், திக்கெட்டும் விரிகிற உணர்வை ஊன்றுகோலாக்கி எழுந்துவிடுகிற மனம் மட்டுமே நம் பிரதானம்..

அத்தனை செல்வமும் உன்னிடத்தில் 
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் 
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் 
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில் 

இதன் மையத்தை தொட்டுவிட பிரயத்தனப்படுகிற வாழ்வின் முரண் புதிர்களே, நம் ஆசையின் சிக்கல் காடு. 

எங்கேயும் எழுந்துகொள்கிற விதையென குரல்கள், புதைந்து எழுகிற நேரத்தின் விருட்சம். பற்றிய கனவுகள் மனவேரின் துடிப்பு..

எதுவாகவோ விழுந்து, எதன்மூலமோ கிடந்து, பின் முளைக்கிற பொழுதுக்கான நீர்மையை வார்ப்பது நம் மன நிலமே அன்றி வேறெதுவாய் இருந்திடமுடியும். 

அன்பு செலுத்துவதும், பின் அது நகைமுரணாய் மாறி பிரசவிக்கிற துரோகத்திற்கும், இடையே எத்தனை எத்தனை நிறுத்தங்கள், எத்தனை எத்தனைக் கொண்டாட்டங்கள்..எத்தனைவிதமான உணர்வாட்டங்கள்..

ஊசலாட்டம் காட்டும் காலத்தின் முன் ஆடத்தெரிந்தவர்கள் பாக்கியவான்கள்.
அவர்கள் ஒப்பனைகள் இட்டுக்கொள்வதில்லை, நம் உடம்பொரு ஒப்பனைக்கூடம்.. அது களைகிற இடத்தில் இருக்கிற வெளிச்சம் பிரபஞ்சத்தின் சக்தி.

 நம்மை இறக்கிவிட பிரியப்படுகிற பிரியத்தின் எந்த நிறுத்தத்தில்  நாம் இறங்கிக்கொள்வது? எந்த கொண்டாட்டத்தின் கால்களை வாங்கிக்கொண்டு இனி அங்கே பயணப்படுவது என்பது மட்டுமே நம் மனமுதிர்வை வெளிக்காட்டுவிடுகிற சுருக்கங்கள்..

வயதின் சுருக்கம் வாழ்வாகிவிடுவதில்லை என்ற இடத்தில் இருக்கும் ஆழம், அனுபவத்தின் நீச்சல் கைகள்.. நீந்துதல் என்பது பிழைத்தலாகும் போது வாழ்தலின் பெயரில் மரணம் அதே வாழ்வாகி சம்பவிக்கிறது. 

இருப்பதற்கும் இல்லாமல் போவதற்குமான சொற்ப தூரமே வாழ்வாகிக் கிடக்கையில், கடத்தலென்ற சொற்ப வரிக்குள் நாம் கண்டு தெளிகிற வளைவுகள் எத்தனை.

ஓர் அணுவுக்குள் அடைபட்ட உயிரின் வளர்ச்சி, நம்மை அடைகாக்கிற இந்த பிரபஞ்சத்தின் நிலம் தரும் காருண்யம். அது நிராகரிப்பதில்லை என்பதே நாம் வாழும் மரணத்திற்கான உத்திரவாதம்..

இடைப்பட்ட இந்த தூரங்கள் இப்படித்தான் கடந்திடவேண்டுமென்றால், பணிதல் மட்டுமே சிறந்த மாணவர்களுக்கு அழகென்ற இடத்தை எடுத்துக்கொண்டு, தோள் தாங்குமளவு சுமக்கத் தயாரகும் பயணத்தை ஏற்றுக்கொள்வதே,  நீண்டு கிடக்கும் இந்த பிரபஞ்சத்தை அடைவதற்கான வழியாகவும் இருக்கிறது. 

வலியறிந்து வழி அடைவோம்..

இன்னும் பேசுவோம்..


ரேவா

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

மிர்தாதின் புத்தகம்
அம்மை வடு முகத்தானின்
நாடோடி நினைவுக்குறிப்புகள்

இரண்டு மட்டுமே..
என் புத்தக அலமாரியில்...