உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
நகைச்சுவை தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பெண் பார்க்கும் படலமும் பெயர் தெரியாத மாப்பிள்ளையும்.....



                 வணக்கம் வணக்கம் அட வணக்கமுங்க, என்னடா இந்த பொண்ணு ரொம்ப குலைவா பேசுறாளேன்னு பார்க்கிறேங்களா? எல்லாம் ஒரு மரியாதைதான்... பொம்பள புள்ளைன்னா இப்படி தான் அடக்க ஒடுக்கமா இருக்கனும்மாம், எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற பல்லு போன தாத்தா பாட்டி எல்லாம் சொல்லுறாங்க, அதான் நமக்கு வாராத ஒன்ன வரவைக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்,, ஹி ஹி... இந்த பொண்ணுங்களும் சரி பசங்களும் சரி படிச்சு முடிச்சு ஒரு வேலைக்கு போயிட்டாங்கன்னு வையுங்க, பக்கத்துல இருக்கிறவங்களும் சரி, சொந்தகாரங்களும் சரி நம்ம நிம்மதிய குழைக்க ஒரு நீயா நானாவே நடத்துவாங்க பாருங்க, யாரையும் விரும்புறையா? உனக்கு எப்படி பையன்வேணும், அப்படி இப்படின்னு ஏகப்பட்ட கேள்வி கேட்டு பாடா படுத்திருவாங்க..

    அப்படி சமீபத்தில நான் பட்ட அவஸ்தையை தான் சொல்லப்போறேன்... எல்லோருக்கும் சந்தோசமா இருக்குமே, அட ஆமாங்க, சமீபத்துல என்னை பொண்ணு பாக்க வந்தாங்க?!!! அவ்வ்வ்வ்வ்வ்,,,, நீ பொண்ணான்லாம் கேக்கக் கூடாது, அப்பறம்  நம்ம ஆமினாவோட சமையல் பிளாக் அஹ படிக்கச்சொல்லுவேன், நியாபகம் இருக்கட்டும்.... ஹி ஹி...ஏற்கனவே எனக்கு ஒரு அத்தை பையன் இருந்தான், அவன் அப்பாவுக்கு சமைச்சு கொடுத்து, என் கனவுல நானே மண்ண அள்ளி போட்டது எல்லாத்துக்கும் தெரியும்ன்னு நினைக்கிறேன்..அன்னைக்கு நான் சமைச்சு கொடுத்து சாப்பிட்ட மனுஷன் தான் இன்னும் மதுரை மண்ணுல கூட கால வைக்கலங்கிறது நியாபகம் இருக்கட்டும்...அவ்வ்வ்வ்... நம்ம பட்ட கஷ்டமெல்லாம் வீணா போச்சே ரேவா...


    சரிங்க, நம்ம இந்த விஷயத்துக்கு வருவோம், என் கிட்ட திட்டுவாங்கின என் சொந்தகாரவுங்க ஒருத்தர் என்னை எப்படியாவது பழிவாங்கனும்ன்னு ஒரு வரனோட ஜாதகம் கொண்டுவந்தாங்க, என்ன ரேவா நல்லது தானே பண்ணிருக்காங்கன்னு சொல்லாதிங்க, அப்பறம் நான் திட்டுவேன்... பையன் என்ன வேலை பாக்குறாங்கன்னு தெரியுமா? தெரியுமா?...... அவ்வ்வ் போலீஸ்ங்க, நமக்கெல்லாம் காக்க காக்க ஜூர்யாவ பாத்து லிட்டர் லிட்டரா ஜொள்ளுவிடுற அளவுக்குதான் தைரியம் இருக்குங்கிறத நீங்க நோட் பண்ணிக்கன்னும்.. அப்பா பையனோட ஜாதகத்தை பார்த்துட்டு ஒரு ஜர்க்கு கொடுத்தாரு பாருங்க, நமக்கு அல்லு கலண்டுடிச்சு..அவ்வ்வ்வ்.. அம்மா ரேவதி ஒனக்கு இத விட நல்ல இடம் அமையாதும்மா, நான் நாளைக்கு பையன் வீட்ல இருந்து உன்னை பார்க்க வரசொல்லிட்டேன், நீ ரெடியா இருன்னு, நாட்டாமை தீர்ப்பு சொல்லுற மாதிரி நம்ம பக்கம்கூட பாக்காம சொல்லிட்டு போயிட்டாரு...

      விடிஞ்சும் விடியாமையுமா கஜினி முகமது படையெடுத்துட்டு வருர மாதிரி ஒரே கூட்டம், என்னன்னு எங்கம்மாட்ட கேட்டா? உன்னை பாக்கவந்த கூட்டம்டின்னு சொல்லிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்...என்னடா இந்த ரேவதிக்கு வந்த சோதனைன்னு நினைச்சு, வந்தவங்க போகட்டும் அப்பறம் கச்சேரிய வச்சுக்கலாம்ன்னு அமைதியா இருந்திட்டேன்.. ஒரு அம்மா என்னனா பாட சொல்லுது, இன்னோரு அம்மா என்னனா கவிதை சொல்ல சொல்லுது, இங்கிட்டு ஒருத்தரு நொய்யு நொய்யின்னு கேள்வியை கேட்டு கொழையா கொன்னுகிட்டு இருக்காரு... எனக்கு பொறுமை சுத்தமா போயி என் அப்பாவ பார்தேன் அத தப்பா புரிச்சுட்டு ஒருத்தர் மாப்பிள்ளைய பொண்ணு தேடுதுயா கொஞ்சம் பையனையும் கண்ணுல காட்டுங்கன்னு சொன்னாரு பாக்கன்னும்... நான் கேட்டேனா நான் கேட்டேன்னா ஒய் பெருசு இரு என்னைக்காவது என்கிட்ட மாட்டுவேல அன்னைக்கு இருக்கு இப்படி என் மெயின்ட் வாய்ஸ் பேச ஆரம்பிச்சிடுச்சு...(பெருசு இந்த இடம் மரியாதை குறைவாக இருக்கிறது ஆனாலும் மன்னிக்கவும்...)

            சரி போனா போகட்டும் பையனயாவது பாத்துவைப்போம்னு காத்துகிட்டு இருந்தேன், அட ஆத்தி... அட மடப்புரத்து ஆத்தா  அவ்வ்வ்வ்வ்.. அந்த ஆளு (மரியாதை ரேவா மரியாதை) அந்த மாப்பிள்ளை பையன் வரதுக்கு முன்னாடியே அவரு மீசை என் ரூமுக்கு வந்திருச்சு... அய்யய்யோ பெருச்சாலின்னு நான் கத்துன கத்துல வந்த கூட்டமெல்லாம் அங்கிட்டு இங்கிட்டுன்னு சிதறி ஒடிடுச்சு, என்னை பயமுறுத்துன அந்த பையன எங்கன்னு தேடுனா தேடுனா ஹி ஹி அத எப்படி என் வாயால சொல்லுவேன், நான் கத்துன கத்துல பையன் அரைகிலோ மீட்டர் தாண்டி ஒடிட்டு இருக்கிறாத சொன்னாங்க, ஹி ஹி அய்யோ அய்யோ, நம்ம கத்துக்கே பயப்பிட்டானே, இவனெல்லாம் சாரி இவரெல்லாம் நம்மள கல்யாணம் பண்ணிகிட்டா அவ்வளவு தான் போலிருக்குன்னு சிரிச்சுகிட்டேன்...அப்பறம் அந்த மாப்பிள்ளை பையனும் ஒருவழியா வீட்டுக்குள்ள வந்துட்டாங்க. பொண்ணு உங்ககிட்ட ஏதோ பேசனும்ன்னு ஒரு குரல்..( நான் எப்படா கேட்டேன் இதையெல்லாம், அட மாரியாத்த அந்த புள்ளைய வீடு போறவரைக்கும் பத்திரமா பாத்துக்கோன்னு வேண்டிக்கிட்டேன்).. அந்த பையன் நான் போய் பேசுறேன் ஆனா அந்த பொண்ணு மறுபடியும் என் மீசையை பாத்து கத்தக்கூடாதுன்னு சொல்லுங்கன்னு சொல்லிகிட்டே என் ரூமுக்கு வந்தாரு...............

                அய்யய்யோ அம்மா இங்கஒடிவாயேன்னு நான் கண்ணமூடிட்டு கத்த, கண்ண தொறந்து பாத்த பையனக்காணாம், ஹி ஹி ஒரேதா ஓடிட்டாரோன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன், சரி இந்த தடவ எதுக்கு கத்துனேன்னு கேக்குறேங்களா? இவர்தான் டா போலீஸ்ங்கிற மாதிரி அவர் வரதுக்கு முன்னாடி மீசை வந்தது அதுக்கப்பறம் அவரு தொந்தி வந்தது அத பாத்து தான் பூனையோன்னு நெனைச்சு மீ பயந்திங்.... டூ மச்சா இருக்க, ஹி ஹி கோவத்துல கல்லவிட்டு அடிக்கனும் போல இருக்குமே, அப்படியெதுவும் பண்ணிகிட்டு உங்க கம்யூட்டர் மானிட்டர கெடுத்துக்காதீங்க, அதுக்கெல்லாம் இந்த ரேவா பொறுப்பாக மாட்டா சொல்லிபுட்டேன் :)

          சரி கதைக்கு வருவோம், அப்பறம் ஒரு வழியா பையன்கிட்ட பேசி கீசி முடிச்சுட்டு எல்லாரும் கிளம்ப ரெடியா இருந்த நேரம் என் மாமா வந்தாரு, எந்த மாமான்னு தானே கேக்குறேங்க, அட  நான் சமைச்சத சாப்பிட்டு என் ஊரு பக்கமே தலைவக்காம இருந்தாரே அவருங்க அவரு... இப்போ எதுக்கு வந்தாருன்னு தானே கேக்குறேங்க, சஸ்பென்ஸ், அப்பா மாப்பிள்ளை பையன காட்டி மாமா கிட்ட பேசிட்டு இருந்தாங்க, சரி நமக்கு ஆயுள் தண்டனை கன்பார்ம் போல்ன்னு ரத்த கண்ணீர் எம் ஆர் ராதா மாதிரி உட்காந்திருந்தேன்.. மாப்பிள்ளை வீட்டுல எல்லாரும் கிளம்புறோம்ன்னு சொன்ன நேரம், என் மாமா, இருங்க ஒன்னுக்குள்ள ஒன்னாகிட்டோம் என் மருமக கையால ஒரு காபி குடிச்சுட்டு போங்கன்னு சொன்னாரு பாக்கனும்... அங்க நிக்கிறாரு என் மாமா. யூ டு மாமான்னு மனசுக்குள்ள அவர திட்டிக்கிட்டே காபி போட்டு வந்து எல்லாருக்கும் கொடுத்தேன்... முதல்ல பையன் தான் காதல் பார்வையோடு காப்பிய எடுத்து வாயில வச்சாருங்க, அய்யய்யோன்னு ஒரு சத்தம்.. எல்லாரும் என்ன பாக்க, கடைசி நான் அமைதியா இருக்கிறத பாத்து சத்தம் வந்த இடத்த பாத்து எல்லாரும் திரும்புனா திரும்புனா? ஹி ஹி பையன் வாயில ஒரே நுரையா கிளம்புறத பாத்து அவங்க அம்மா கத்துன கத்துதாங்க அது.. அடி பாவி என் பையன கொல்ல பாத்தியே, உன் சங்காத்தமே வேணாம் தாயின்னு கும்புடு போட்டு கிளம்பிட்டாங்க...


           அப்பாடா விடுதலை விடுதலை விடுதலைன்னு மனம் ஏககாலத்துல சந்தோஷமா பாட, அப்பாவுக்கும் மாமாவுக்கும் சண்டை, ஏங்க அவங்க கல்யாணதேதி குறிக்கிற வரைக்கும் வந்தவுங்கள இப்படி பண்ணிட்டேங்கன்னு அப்பா கேக்க, அதுக்கு மாமா அதெப்படி ரேவதி என் பையனுக்குன்னு இருக்கேல, அவள வேர ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ண நீ எப்படி முயற்சி செய்யலாம்ன்னு கேக்க? எனக்குள்ள சுசீலாம்மா சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் மாமான்னு பாட ஆரம்பிச்சுட்டாங்க. (இந்த பாட்டு சுசீலாம்மா பாடுனதான்னுலாம் கேக்கக்கூடாது மீ க்கு தெரியாது) கடைசில ரெண்டு பேரும் சமாதானமாகிட்டு ரேவாம்மா உன் மாப்பிள்ளைட்ட நீயே நடந்தத சொல்லிடு. அவன் உன் போன்னுக்கு காத்திட்டு இருப்பான்னு மாமா சொல்ல, டக்கால்ட்டி இந்த நேரம் பாத்து நான் கவுன்டர் கொடுக்கிறேனாம்!?! மாமா வந்த அந்த மாப்பிள்ளை பையன் பேரே எனக்கு தெரியாது அவர் கிட்ட எப்படி நான் சொல்லுவேன்னு, ஹி ஹி எல்லாருக்குளையும் ஒரு குட்டி போலீஸ் ஒளிச்சிட்டு இருந்தாங்கன்னு எனக்கு அப்போ தான் தெரிஞ்சது, என்ன கும்மு கும்முன்னு கும்மி எடுத்துட்டாங்க.................அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......



டிஸ்கி : வணக்கம் பாஸ் எதுக்கு இந்த டிஸ்கின்னு தெரிஞ்சிருக்குமே. ஹ ஹ அதே அதே இந்த நிகழ்வும் ஒரு கற்பனையே கற்பனையே, எனக்கு மாப்பிள்ளை பார்க்கவும் இல்லை, மாமா பையனுமில்லை... டாடா






சனி, 21 மே, 2011

என்னது எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....



ஹாய் நண்பர்ஸ்..... வழக்கம் போல காதல் கவிதையையே கிறுக்காமா, கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது கிறுக்கலாம்னு நினச்சுதான் இந்த பதிவு...நேத்து முகூர்த்த நாள்கிறதால ஏகப்பட்ட கல்யாணங்கள்..எங்க அம்மாவும், அப்பாவும் மாறி மாறி ஒவ்வொரு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கா கிளம்பிட்டு இருந்தாங்க...இதுல என்ன கண்டுக்கவே இல்லை....

பிள்ள கொழந்தயாச்சே, சாப்பாடுக்கு என்ன பண்ணும்னு நினைப்பே இல்லாமல் கிளம்பிட்டாங்க....சரி நானும் அம்மாவந்து ஏதாவது சமையல் செஞ்சு தருவாங்கன்னு சாப்பிடாம  இருந்தேன்..மதியம் ஒரு 12 மணி இருக்கும், எங்க வீட்டு காலிங் பெல் அடிக்கிற சவுண்ட் கேட்டது, என்னடா வழக்கமா நம்ம வீட்டுல இந்த பழக்கத்த எல்லாம் பாலோவ் பண்ணுறது இல்லையே,பின்ன யாருன்னு பாத்தா கொழந்தைங்க...அவங்கள சத்தம் போட்டுட்டு வந்துட்டேன்...மறுபடியும் காலிங் பெல் அடிக்கிற சத்தம், அப்போ கண்டிப்பா எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற குட்டிப் பிசாசுங்க தான் இந்த வேலையப் பண்ணுங்கனு, கண்டுக்காம இருந்துட்டேன், மறுபடியும் காலிங் பெல் அடிக்கிற சவுண்ட், சரி இதுங்கள இப்படியே விட்டா சரிப்படாதுன்னு திட்டிகிட்டே போக, கடைசில பாத்தா எங்க அத்தை மாமா வந்துருக்காங்க... 

நான் அப்படியே சாக் ஆயிட்டேன்.. வழக்கம் போல அவங்க கிட்ட குசலம் விசாரிச்சுக்கிட்டு கிளம்பிடுவாங்கனு இருந்தப்போ தான் என் தலைல அந்த பெரிய இடி விழுந்தது...ரேவதி உன் மாமா க்கு கல்யாண சாப்பாடு ஒத்துக்காது, அவருக்கு சுகர் இருக்கு, இங்க நீ சமைச்சுத் தறியா ?.....நீ நல்லா சமைப்பேன்னு அப்பா சொல்லிருக்கான்னு என் தலைல இடிய ஏறக்க, நானா நான் நான் நான்தானே நல்லாவே சமைப்பேன் அத்தை னு சொல்லி கிச்சன் போனவ தான்....(.அதோட அந்த அத்தைக்கு அழகான பையன் இருக்கான்...இப்போ நீங்களே சொல்லுங்க, சமைக்க தெரியாட்டியும், தெரியும்னு தானே சொல்லுவேங்க, நானும் அப்டித் தான் சொன்னேன்...)

சரி சமைக்கிறது என்ன பெரிய ஆரிய வித்தையானு களத்துல குதிச்சுட்டேன்...இந்நேரம் பாத்து வீட்டுல ஒண்ணுமே இல்ல, சரி ஒரு வெஜிடபிள் .பிரியாணி செய்யலாம்னு மேக்கிங் பவுடர் எடுத்து, அப்படி, இப்படின்னு கைக்கு கிடைச்சது, எனக்கு பிடிச்சதுன்னு எல்லாத்தையும் குக்கர்ல போட்டு, அரிசியையும் அதோடு போட்டு, கைடைசில ஒருவழியா குக்கர ஆன் பண்ணி, ஒரு டைம் பிக்ஸ் பண்ணிட்டேன்.....நேரம் ஆக ஆக மாமா டென்ஷன்ல,அத்தைய கத்துறது, எனக்கு இங்க கிச்சன்ல கேட்டது....ஆனாலும் நாமலாம் யாரு...இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம்ல(அவ்வ்வ்வவ்வ்வ்வ்)..பின்ன அத்தை வந்து என்னமா ரெடி ஆகிடுச்சா, உன் மாமா கத்துறாரு, பரவா இல்லையே நல்ல வாசனை வருதேன்னு சொல்ல, இதுவேறயான்னு மனசுக்குல நினச்சுக்கிட்டு, அத்தை நீங்க போன இதோ ஒரு பத்து நிமிஷத்துல எல்லாத்தையும் ரெடி பண்ணிடுறேன்,  நீங்க போய் ரெஸ்ட் எடுங்கத்தனு, அவங்ககிட்ட  சொன்னேனே தவிர எனக்கு ஒன்னும் தெரியாதே...அவ்வ்வ்வவ்வ்வ்வ் மீ பாவம்ல,

சரி எல்லாம் பண்ணிட லாம்னு பாத்தா, கடைசி நேரத்துல குக்கர்ல இருந்து அலாவுதீன் படத்துல பூதம் கிளம்புற மாதிரி ஒரே பொகையா கிளம்புச்சு...என்னடா இந்த ரேவதிக்கு வந்த சோதனைன்னு, வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிட்டேன்...இத சரியா பண்ணாட்டி இவங்க போய், அவங்க பையன்ட என் அருமை, பெருமைய எல்லாத்தையும் சொல்லிடுவாங்களே, நமக்கு இருக்கிற ஒரு அத்தை பையனும் இல்லாம போயிடுவாநேனு மனசு கெடந்து தவிக்க, இந்த பாழாப்போன குக்கரு பிசாசு வேற விசில் அடிக்கவே இல்ல, கடைசில குக்கர தொறந்து பாத்தா பாத்தா பாத்தா, அட இருங்க பாஸ், கொஞ்சம் பில்ட் அப் கொடுத்துக்கிறேன்...தொறந்து பாத்தா ஒரே தண்ணியா இருக்கு,  கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் கழிச்சு, மாமாவே கிச்சன் வந்து ரேவா சாப்பாடு கிடைக்குமா, இல்லா கிடைக்காதானு கேக்க, அந்த நேரத்துல நான் காமிடி பன்னுரேணாம், அவர்ட்ட கிடைக்கும் ஆனா கிடைக்காதுன்னு அள்ளிவிட மனுஷன் டென்ஷன் ஆகிட்டார்...பின்ன எபப்டியோ சமாளிச்சு,
வேர்க்க, விறுவிறுக்க, கிட்ட தட்ட திர்ல்லர் படம் பாக்குற எபெக்ட் ல அந்த சமையல் அஹ செஞ்சு முடிச்சுட்டேன்..ஸ்ஸப்பா...முடியல...

என்ன மெனுன்னு கேக்குறேங்களா?(இம்க்கும் இதுவேறயான்னு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது...ஆனாலும் விடமாட்டோம்...ஏன்னா நாங்கலாம் மதுரை காரங்க ஹி ஹி ) 

பிரின்ஞ் ரைஸ், ஆனியன், அப்பறம் தயிர், அப்பறம் ஒயிட் ரைஸ், கொஞ்சம் உருளைக்கிழங்கு வறுவல் இவ்வளவும்  கஷ்டப் பட்டு செஞ்சாச்சு..மாமாவுக்கு சாப்பாடு அத்தை போட, மாமா சாப்ட்டு டெரர் லுக் கொடுக்க, நான் மாமா சாப்பாடு எப்படி  இருக்குனு தான் கேட்டேன்....மனுஷன் தார தாரையா  கண்ணீர் அஹ கொட்ட ஆரம்பிச்சுட்டாரு...இத்தன வருசத்துல என் பொண்டாட்டி கூட இப்படி ஒரு சமையல் பண்ணது இல்ல ரேவதினு சொல்ல, எனக்கோ ஆகாயத்துல பறக்குற ஒரு பீலிங், என்ன பீலிங்க்னு நீங்க கேக்கலாம்...ஆனா நான் சொல்ல மாட்டேனே...

கடைசியா அவரும் சாப்டாச்சு, காபி போடவான்னு கேக்க  வேணாமா கடைல வாங்கிடு வர சொல்லுனு சொல்லிடாரு(அவ்வ்வ்வவ்வ்வ்)
அப்பறம் காபி குடிச்சுட்டு கிளம்பும்போது, கிளம்பும் போது, அவ்வ அத எப்படி என் வாயல சொல்லுவேன்...எங்க மாமா பையன் சொல்லிருந்தேன்ல  அவனுக்கு என்ன கட்டிகொடுக்கனும்னு நினச்சாங்களாம்,ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு, அவன் சரி பட மாட்டான் ரேவதி...ஆனா ஒன்னு சொல்லுறேன், உனக்கு வரவன் ரொம்ப கொடுத்து வச்சவன்னு சொல்லிட்டு போயிட்டாங்க....அடப் பாவிங்களா?...இதுக்கா இந்த போராட்டாம்...நீங்களே சொல்லுங்க மீ பாவம்ல...


(ஒரு மாறுதலுக்காய் கற்பனைகலந்த நிஜத்தை நகைச்சுவையாய் பதிவு செய்துள்ளேன்...பிடித்திருந்தால் கருத்திடவும்...வரட்டா...ஹி ஹி...)

சனி, 19 மார்ச், 2011

இந்த மனுசன கட்டிக்கிட்டு நான் படுறபாடு இருக்கே..


விடிஞ்சும் விடியாததுமா இன்னைக்கு இந்த மனுஷனுக்கு லீவ் ஆச்சே... சரி இன்னைக்கு ஒரு நாளாவது அந்த பாவி மனுஷனுக்கு பிடிச்சத சமைக்கலாம்னு,  என்ன சமைக்கனு அவர் கிட்ட கேட்டா , படுபாவி,  நீ ஒன்னும் சமைக்க வேணாம்,  இன்னைக்காவது  நான் நல்ல சாப்பாடு சாப்புடுறேன்னு அவரே சமைக்க போயிட்டருங்க...சரி நமக்கு சமைக்கிற வேலை மிச்சம்னு சொல்லி வீட்டு வேலைய கவனிக்க போனா... துவைக்க எடுத்து வச்ச துணி எல்லாத்தையும் நானே துவைக்கிறேன் நீ போ னு சொல்லிடாரு... என்ன ஆச்சு இந்த மனுசனுக்குனு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.. 

டமால் னு ஒரு சத்தம், என்னனு போய் பாத்த........  என் வீட்டு மனுஷன் சமைக்கிறேன்னு சொல்லி, ஸ்டவ் ஆன் பண்றத்துக்கு  பதிலா, இன்டெக்ஸ்டன் அட்டுப்புல குக்கர வச்சுருக்காறு...குக்கர் அக்செப்ட் ஆகாம வெடிச்சிருச்சு. நான் அடுப்படிக்குள்ள போனதும் அவரு  பேய் முழி.முழிக்க .. எனக்கோ ஒரே கோவம்.... ஸாரி டி னு அவர் சொல்ல,  எனக்குள்ள எப்படி அப்படி ஒரு காளியாத்தா ஒளிசுருந்தானே தெரியல, நீங்க ஆணியே புடுங்க வேணாம்... நான் நல்லா சமைக்காட்டியும் பரவா இல்ல... என் சமையலையே எப்போவும் போல சாப்பிடுங்கன்னு சொல்லி சமையல கவனிக்க போயிட்டேன்.. 

திடிருன்னு பாத் ரூம் ல இருந்து சத்தம் ஐய்யோ அம்ம்மானு, என்னடா இன்னும் தேர்தல் முடியலையே அதுக்குள்ள கலைஞர் கத்துறாரேனு பாத்தா, என் வீட்டு மவராசா துணி  துவைக்க போயி, என் அப்பா சீதனமா கொடுத்த வாசிங் மெஸின பொகைய வச்சுட்டாறு..அவ்வ்வ்வவ்வ்வ் .அட பாவி மனுசா ஏன்யா உனக்கு இந்த வேண்டாத வேலைன்னு கேட்டா?.... சாரி ரேவா மா, நானும் உனக்கு ஒத்தாசையா இருக்கணும்னு நினச்சு தான் இப்படி பண்ணுனேன்.... தெரியாம மெஷின் பால்ட் ஆகிடுச்சு, இத மனசுல வச்சுகிட்டு என் அம்மா எனக்கு ஆசையா வாங்கித்தந்த என் பைக் அஹ ஒன்னும் பண்ணிடாதாடானு கெஞ்சிக் கேட்டாரா, எனக்கோ ஒரே சந்தோஷம் ஆகா இந்த ஐடியா நமக்கு தோணாம போயிடுச்சேனு,  மனுஷன் அசந்த நேரம் வண்டி பிரேக் அஹ கலட்டிடலாம்னு நினைச்சேன்... 

அப்பறம் கொஞ்சம் வேலை காரணமா என் வீட்டால  கவனிக்க முடியல, சரி என்ன பண்ணுறாருனு பாக்கப் போனா, அட உங்அப்பன் , வலுக்கத் தலைக்கு சவுரி வைக்க, (ச்சே ச்சே என் மாமனார் அஹ சொல்லல, சும்மா பழமொழி) மாடில பக்கத்து வீட்டுல இலியான மாதிரியே ஒரு பொண்ணு இருக்கும்ங்க , இந்த மனுஷன் இலியானா போட்டோவையே சோறுதண்ணி இல்லாம பாப்பாரு,  இதுல அந்த பொண்ணும் இவரையே பாக்க, எனக்கு ஒரே பீதி... அதுவும் சொல்லி வச்ச மாதிரி அவருக்கு பிடிச்ச புல் ஹான்ட் சுடி போட்டுருக்கா, இவருக்கோ புல் ஹான்ட் சுடி போட்டு வயசான பாட்டிப் போனாலே, அந்த பாட்டி வெட்க்க படுற அளவுக்கு பேசுவாரு, இதுல இந்த பொண்ணு இவரோட ரொமாண்டிக் லூக்குக்கே அவுட் ஆகிடுச்சு... (பாத்தாலே தெரிஞ்சது) இதுல பேசுனா அவளோ தான், என்னடா நம்ம தாலிக்கு வந்த சோதனைன்னு, தாலிய கண்ணுல ஒத்திக்கிட்டு, என் வீட்டு லூசு தலைல நறுக்குன்னு ஒரு கொட்டு, ஆனா என் புருஷன் ரொம்ப நல்லவங்க, நான் செல்லமா எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு,(செல்லமா தாங்க )ஹி ஹி 

ஆனாலும் அடிச்சது ஒரு பொண்ணு முன்னாடி அதுவும் இலியானா மாதிரி ஒருத்தி முன்னாடி, சாருக்கு வலிச்சாலும் வலிக்காத மாதிரியே ஸீன் போட்டார் நானும் விடுறதா இல்ல..ஒரு வேலையா அந்த மனுசன மாடில இருந்து தேத்திக் கூட்டிட்டு வந்துட்டேன், நான் போய் காபி போடுட்டுவரேன் இங்கயே இருங்கன்னு சொல்லி அந்த காபி பைத்தியத்துக்கு காபி போட போயிட்டேன்,  மறுபடியும் டமால்னு சத்தம் என்னடானு பாத்தா என் பொறந்த நாள் பரிசா என் சினேகிதி வாங்கித் தந்த மீன் தொட்டிய கழுவுறேன்னு உடசுட்டாறு... 

எனக்கு காதுல இருந்து ஒரே புகையா வர .... உனக்கு இன்னைக்கு சோறும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது, ஒழுங்கா போய்  பதிவு போடுறேன் பதிவு போறேன்னு என் மானத்த வாங்குவேங்கள்ள அதயாவது பண்ணித்தொலைங்க, இங்க இருக்கிறதா ஒன்னு ஒன்ன ஒடச்சு என்ன கடுப்ப கெளப்பாதிங்கனு சொன்னது தான் தாமசம்... மனுஷன் குட்டி போட்டா பூனையாட்டம் போய் அவர் லேப்டாப் கிட்ட உட்காந்துகிட்டாறு...ஆளு அட்ரசே தெரியாத அளவுக்கு அமைதியா இருந்துருக்காரு...இதுல அப்போ அப்போ சிரிப்பு சத்தம் வேற என்னடா இந்த மனுசன தலைல அடிச்சோமே சித்தம் கலங்கிடுச்சானு பாத்தா, மாத்தி மாத்தி யோசிக்கிற நம்ம ரஜீவன் பதிவ படிச்சிடு இருக்காரு..ஹி ஹி..


அப்பறம் கொஞ்சம் நேரம் கழிச்சு பசிக்குது ரேவா சோறு போடுறையா இல்ல என் மீசைய வச்சே உனக்கு ஊசி குத்தவானு ரொமாண்டிக் அஹ பேச, உனக்கு இதெல்லாம் வராதே எப்டி நீங்க இப்படி ஆனேங்கனு கேட்டா ஒன்னும் இல்லா இப்போதான் வசந்த சார் ஓட வெட்கத்தை அடைகாக்கும் காதலி அப்டேட்ஸ்  படிச்சேன்னு சொன்னாரு..எனக்கோ கோவம் வர கடைசில நம்ம நாற்று நண்பன் அதாங்க நம்ம நிரூபன் பாணில விளக்கமா....ஹி ஹி  என் பாணில என்னவரை வாழ்த்திட்டு வந்து உக்காந்தேன்...

கடைசில எங்க வீட்டுல இருந்து அம்மா போன், பேசிட்டே இருக்கும்போது, என் போன் அஹ பிடிங்கி நான் அடிச்சது, சாப்பாடு போட மாட்டேன் னு சொன்னது எல்லாத்தையும் ப்ளாக் அஹ போஸ்ட் அஹ போட்டாராம் அது இன்னைக்கு ஹிட்  ஆம்...என் அம்மாகிட்ட சொல்லி சொல்லி சிரிக்கிறாரு.... அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்... இந்த பாவி மனுசன கட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே ... அப்பப்பாஆஆஆஆஆ முடியல...யாராவதும் ஒரு வழி சொல்லுங்களேன்... 

( என்ன நண்பர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நேத்து மீள்பதிவுன்னு போட்ட என் பழைய கவிதை கொஞ்சம் அழுகாச்சிய போயிடுச்சு அதான் சும்மா கொஞ்சம் மொக்கையா ட்ரை பண்ணலாம்னு... ஹி ஹி அப்பறம் பாவம் ரேவா உங்களவர்னு கமெண்ட் போடா கூடாது ஏன்னா  என் இளவரசன் இன்னும் கண்ணுல மாட்டல... ஹி ஹி..அதோட நல்ல வாய் பேசுறே கொஞ்சம் நகைச்சுவையா எழுதலாம்னு ஒருத்தர் ஐடியா கொடுத்தார் அதன் விளைவே இது ..நாங்களும் மொக்கையா எழுதுவோம்...ஹி ஹி  ........யாரையாவது இந்த பதிவு காயபடுத்தி இருந்தால் மனிக்கவும். சும்மா ஒரு பேச்சுக்கு போட்டுவைப்போம்.சரி நண்பர்ஸ் வரட்டுமா..  அப்பறம் அப்டியே படிக்காதவங்க என்னோட முந்தய பதிவு : உன் ஊடல் இதையும் படிச்சிடுங்க...)