உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
முதிர்கன்னி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதிர்கன்னி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

மீண்டும் ஓர் மழைநாளில்

படம் : நன்றி கூகிள்

கசங்கிய ரேகைகளுக்குப் பின்
களவு போன என் வாழ்க்கை,
இன்னொரு ஆணிடம் 
கவனமாய் இருக்கச் சொல்கிறது...

மீண்டும்
முதலில் இருந்து தொடக்கமா?
என்று நினைக்கையில்
தொண்டைக்குழியில் ஈரம்
விஷமாய் கசக்கிறது...

சலனமே இல்லாமல்
நடக்கும் ஒவ்வொரு
பெண்பார்க்கும்  படலத்திலும்,
ஏளனப் பார்வைக்கு மத்தியில்
உடலெங்கும் உணர்ச்சி தீ 
கட்டுக் கடங்காமல் எரிகிறது..

சில நேரங்களில் மனுஷி
என்ற அடையாளம் எதுவும்
இன்றி மனிதப் பார்வைகளுக்கு 
நடுவே தொலைந்து போகிறேன் நான்....
எனக்கென்ற தனி அடையாளம்
எதுவுமற்று மௌனிக்கச் சொல்கிறது 
சுற்றியுள்ள கூட்டம்...

தனக்குப் பிடித்தவைகளை
பட்டியல் இட்டு,
பட்டியலின் கடைசியில்
என் பெயரையும் எழுதிச் செல்கிறது
ஆணைப் பெற்ற கூட்டம்..

வந்தவர் செல்ல,
ஒப்பனைகள் களைய
கண்ணாடியின் காட்சியும் 
எனைப் பார்த்து சிரிக்கிறது....

இன்னும் ஒருமுறை
இயலாமை எனும் முடிச்சி
ரகசியமாய் அவிழ்க்கப்படுகிறது..
அப்பாவின் பென்சன் பணத்தின் பாதியிலும்,
அண்ணனின் அலுவலக லோனின் மீதியிலும்,
எடை போடப்படுகிறது
என் வாழ்க்கை...

இல்லை எனும் வார்த்தை
மீண்டும் ஒரு முறை தன் 
கோரமுகம் காட்டி
என்னைப் பார்த்து சிரிக்கிறது..

மீண்டும் மீண்டும் எழுதப்பட்டு
அழிக்கப்படும் இந்த
பழையகதையில், புதிய கதைக்கு
இடம் இருக்கா? இல்லையா? என்று
என்று ஜோதிடம் பார்த்தே
கசங்கிப் போகிறது என் ரேகை...

இறுதியில் ராசியற்றவள்
என்ற முத்திரைகுத்தி
தன் இயலாமைக்கு முகத்திரை
சூடிக்கொள்கிறது சொந்தம்...

இளமையின் ரணம் கணக்க,
இந்த இளமையை சபிக்கிறேன்..
கனவில் மட்டுமே காதல் பேசும்
அந்த ஆண்மையைச் சபிக்கிறேன்...

மீண்டும் ஒரு மழைநாளில்,
தேநீர்க் குவளைக்கு மத்தியில்
அடுக்கப்படுகிறது என் வாழ்க்கை
புதியக் கதை ஒன்று எழுத....

வியாழன், 7 ஏப்ரல், 2011

முதிர் கன்னித் தாயின் பிறவாக் குழந்தைக்காய் இக்கடிதம்.....


அன்பு மகனே !
 உன்னை சுமக்க தகுதியற்ற ஏழைத் தாயின் கடிதம்....

நாதியற்ற உலகில் நான் நாட்களை முதிர் கன்னியாய் கழித்துக் கொண்டு ஏதோ நலமாய் இருக்கின்றேன்...இன்னும் எழுதப்படா என் வாழ்க்கை தீர்ப்பில், திருப்பம் தர உன் தந்தையென
யாரும் வராததால், எனைக் கொத்தி தின்னும் பார்வைகள், என்னுள்  தந்த வலியால் எழுதுகிறேன் இந்த கடிதம்.....

 என்னை உயிர் கொண்டு நிரப்பும், எனக்கான உன் தந்தை, இது வரை என்னை வந்து சேரவில்லை ....இரு சங்கமங்கள் சங்கமிக்காததால் என்னில் ஜனிக்காத என் மகனே, இறைவன் முன் ரச்சிக்கப்பட்ட நீ நலமா?.....


நீ நலமாய் இருப்பாய் என்பது தெரியும்... குழம்பிப் போன உன் தாயின் நிலையை யாரிடம் சொல்ல, அதனாலே எழுதுகிறேன் உனக்கு இக் கடிதத்தை...வறுமையில் பிறந்ததால் வறுமைக்கே வாக்கப் பட்டேன்...நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய், கனவிலே என் நாட்கள் நகர, என் உணர்வை அறியாமல், சுற்றிய சுற்றம் பேசியே, எனை நரகத்தில் தள்ள, மணமாகா   விதவயாய்ப் போனேன்...   
.

என்னுள் நிரம்பிய ஆசைகள், இன்னும் நிறம் பெறவும் இல்லை, உருப் பெறவும் இல்லை.., தினம் தினம் நான் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லிமாளாது என் கண்ணே....விடியலில் இருந்து அடையல் வரைக்கும், பிறர் சகுனப் பார்வையிலே நான் செத்து செத்து பிழைக்கின்றேன்.

.கல்லுக்கு சேலை கட்டினாலும் திருப்பிப் பார்க்கும் சில சதைக்கு அலையும் மனிதர்கள்  மத்தியில், செத்த ஜடமாய் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...நட்பாய்ப் பழகி நாளடைவில் நயவஞ்சக பாம்பாய் பலர் காமம் என்னும் விஷம் கக்க, வீரியம் மிக்க என் மனம் கொண்டே நான் வாழ்ந்து வருகின்றேன்...


என் வயதொத்த எல்லா பெண்ணும் ஆணென்றும் பெண்ணென்றும் தான் மகவைப் பேண, நான் மட்டும் மையிழந்த பேனாவாய் ஓரத்தில் கிடக்கின்றேன்..பூ வைக்கவும் முடியாமல்
புத்தாடை அணியவும் முடியாமல், புறம் பேசும் நாக்குகள் மத்தியில் பொய்யாய் சிரித்தே நாட்களை கழிக்கின்றேன்...
 
.பணம் இல்லா என் வாழ்வில், பரிகாரம் செய்யச் சொல்லி கோவிலுக்கு சென்றாலும், கோவில் சிலைகளைப் பார்பதற்கும் பணம் தேவையாம்... தோஷம் இல்லா என் வாழ்வின் சந்தோஷம் எல்லாம் பணம் என்ற தோஷத்தால் பாலாய்ப் போனது...


பெண் பார்ப்பதாய் பலர் வருகின்றனர்... கொடுத்த உணவோடு ,பார்வையால் எனையும் தின்று விட்டு செல்கின்றனர்.. இப்படி தினம் தினம் நடக்கும் நாடகத்தில் ,உப்பில்லா வாழ்வில் நான் போடும் ஒப்பனைகளே சாட்சி என் வயதிற்கு....  எனைப் பார்த்த யாருக்கும் என்னைப் பிடிக்காமல் இல்லை ஆனால் எல்லோருக்கும் பணம் பிடித்திருக்கிறது...     


புவிதனில் பிறந்த நாள் முதல், புரியாத வாழ்வை, பணம் என்ற மூன்றெழுத்தின் மூலம் புரிந்ததாய் ஒரு கூட்டம் சுற்ற....என் எதிர்பார்ப்பு  எல்லாவற்றிற்கும்  அர்த்தம் இல்லாமல் போகிறது, சீதனம் என்னும்  நிராகரிப்பின் மூலம்...ஆனாலும்  வலி கொண்ட என் வாழ்க்கை மட்டும காத்துக்கிடக்கிறது என் மணக் கோலத்திற்காக...


உயிர் ஜனிக்கும் வலியை விட இவர்கள் எனைப் பார்க்கும் வலி பெரிதாய் தெரிகிறது என் மகனே/மகளே ...என்றேனும் உன் தந்தை, என்னை தன் துணையாய் ஏற்றிட்டால், என்னுள் ஜனிக்க உள்ள என் மகனே/மகளே... இப்பொழுதே சபதம்  கொள்....பொல்லாத இந்த உலகில் இல்லாத ஒரு உயிர்க்கே நீ துணையாய் இருப்பேன் என்று...


அன்பு மகனே / மகளே , உன்னிடம் என் எண்ணத்தை சொல்லிவிட்டதால் என் பாரம் குறைந்ததாய் உணர்கின்றேன்.... இனி ஒரு சந்திப்பில் நீ என் மடியில் தவழ்வாய் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன்
இந்தக் கடிதத்தை....

அன்புடன் 
உன்னை சுமக்க  காத்திருக்கும் 
உன் அன்புத் தாய்....



அன்புடன் 
ரேவா