திறவுகோலது கையிலே இருக்க
திறந்திடும் முன்னே
நின்றிடு
வார்த்தைகளாலான
அறையெனது
உனக்கு பிடித்தச்சொற்களை
உருவுவதில் தொடங்கி
நீடித்துகொள் எனதறையில்
தொடர்ந்தென்னை வார்த்தைகளால் தோற்கடி
தோற்பதில் தான் ப்ரியத்தின்
உயிருள்ளதென்பதை
நானுணர்ந்ததைப் போல்
நீ உணர்
உணவாகும் வரை உயிர் தேடலென்பது
தொடருமென்பது
உணவுச்சங்கிலி கொடுத்தபாடமென்றாலும்
வலிக்க வலிக்க
உனது தேடலை தொடர்
உண்ண உணவது
உயிரினில் அடியினில் கிடக்க
அடிவானமதை கண்டடைந்த போது
உறங்கிப்போ
அதற்குமுன்
முத்தமிடு
சத்தமிட்டு காதலிப்பதாய் சொல்
சாத்தியப்படுகையில் உன் வார்த்தைகளால்
எனதறைக்கு பலம் சேர்
சேர்ந்து வாழ
பிரியமட்டும் போதாதென்பதை
நான் கட்டிய எனதறையை
படித்தறிதலில்
புரி
புரிந்தறிதலில்
தெளி
தெளிந்த பின்
தேடு
தேடியடைந்த பின்
கூடு
கூடிய பின்
களி
களித்தெழ
கழித்திடு
ப்ரியம் முட்டும் வரை
வானம் படை
பிறகு போட்டுடை
முதலில் இருந்து தொடங்கு
முடிவைத்தேடி நெருக்கு
நெருங்கிய பின்
முற்றுபுள்ளியிட்டு
மறுபடியும் தொடர்
தொடர காரணமற்று நீண்டுபோன
இவ்வரிகளுக்கான
திறவுகோலது கையிலே இருக்க
திறந்திடும் முன்னே
நின்றிடு.
-ரேவா
உன் முகம் தேவையில்லையெனக்கு
அப்படியே என்னுடையதும்
பெயர்
மொழி
தொலைபேசி எண் என
எல்லாமே தேவையற்றது தான்
நீ போலியென சந்தேகித்தாலும் கூட
நிமிர்ந்து கிடக்குமிடத்தில் குனிதல்
உன் குணமென சொல்லி
வேஷம் போடுவதை தவிர்
சாயம் வெளுத்த கூட்டங்கள்
நானறிவேன்..
உனக்குள்ளிருக்கும் எதிர்பார்ப்பை
சூன்யப் பெருவெளியில்
சுட்டெறி
குளிர்காய காரணங்களாவது கிடைக்கும்
பொய்களை இன்னொரு நாக்காய்
எடுத்தாள்வதை நிறுத்து
எதையும் நம்புவதாய் இல்லை
நான்
வேறென்ன
பெரிதாய் ஒன்றுமில்லை
முடிந்தால் இவ்வரிகளை
படித்துவிட்டுச் செல்
நான் அப்படியில்லையென்ற பொய்களோடு.. :)
-ரேவா
பேசுவதற்காகத்தான்
உனை வரச்சொன்னேன்
வரும்வழியெல்லாம் மனம்
பேசியச்சொற்களின் அயற்சி
உனைபார்த்ததும் ஓய்வெடுத்துகொள்ளுமென
சத்தியமாய் நினைக்கவேயில்லை
மெளனமாய் இந்த நிமிடம்
துளி புன்னகையில்லை
சினேக விசாரிப்புகள் இல்லை
நம்மிடையே சூழ்ந்திருந்த
அந்த உன்னத உணர்வும்
இந்நிமிடம் கிடைக்கவில்லை
உன் பார்வையின் வழியே நினைவோட்டம்
கொஞ்சம் நிதானித்து இருக்கலாம் தான்
என்ன செய்ய
பேசமாலே கிடக்கும்
என் சொற்களை
காதலெனும் சிறகெடுத்து
நானுனக்கு மாட்டிவிட்டபின்
இலக்கின்றி பறந்தலைந்த பொழுதொன்றில் தான்
எங்கோ தொலைத்திருந்தேன்
என் ஒற்றைச்சிறகை
சில்லு சில்லாய் சிதறிக்கிடக்கும்
பிரியங்களின் வார்த்தைகளிலெல்லாம்
நிறைந்து கிடக்கின்ற முகம்
இறைத்து போட்டபடியிருக்கிறது சபையேறா பேச்சுகளை
கதைசொல்லி களைத்து போகின்ற இடம்
காரணமின்று சிரித்துப்பார்த்த தடம்
எது என்னை உன்னை நோக்கியிழுத்ததென்று
நினைப்பை கொடுத்த களம்
அத்தனையும் தாண்டி
கடல் மணலின் பாதங்கள் பரப்பி விளையாடும்
பிள்ளைமனதாகிப்போகின்ற
ப்ரியத்தின் முன்
வெட்கங்களை உண்டு
வேட்கைகளை நிறைவேற்றும் உன் தளமெனக்கு
அன்னியமாய்பட்ட போதும்
அடுத்தடுத்த எடையிழப்புகளால்
நிலைகுலைந்து போன சுயம்
உன் முகமெடுத்து கொண்ட போதும்
உனது விருப்பங்களுக்கு முன்
பலியிடப்படும் எனது கனவுகளைபற்றியோ
காணாமல் போகும் வார்த்தைகளைபற்றியோ
பற்றற்றுபோன
பற்றுதலை பற்றி
யாதொரு கவலையுமுனக்கு இல்லையென்ற போதும்
தொலைத்திருப்பேனென்று
தெரிந்திருந்தால்
நண்பனாகவே இருந்திருக்கலாம்
நீ
மெளனம் ஒரு பாடலாகவே
இருந்தது நமக்கு..
இசைக்குறிப்புகள் பற்றிய கவலையின்றி
தாளம் பற்றிய தயங்கங்களின்றி
சுதி சுத்தமாய் பாடப்படுமோவென்ற பயங்களின்றி
ப்ரியத்தின் வரிகள் சரியாய்
படிக்கப்பட்டதன் பொருட்டு
இந்த மெளனம் ஒரு பாடலாகவே
இருந்தது
ந
ம
க்
கு.....
-ரேவா
இருபக்கமும் அடர்ந்திருக்கும்
அவ்வசீகர சாலை
ஆரம்பத்தில் குறுகளாகி
ஆரம்பித்ததன் வேகத்தின் கணக்கில்
லாவக ஓட்டம் பிடிக்க
அழுத்தம் நிறைந்த பகுதிக்குள்
தடையின்றி செல்ல
நீலியின் கைகள்
ஏதுவாய் அமைய
தூரமாய் செல்லச்செல்ல
செல்ல கைகளாய் மாறிய
நிழல்
உதிர்ந்த காரணங்களையெல்லாம்
கிளையேற்றி பார்க்கும்
கண்களை கொடுக்க
நிலா
நீ
வானம்
தனிமையென அலைந்து பறக்கின்ற
மனதிற்கு
வேகத்தடையெடுத்து வருகிறது
இம்முத்தவழிச்சாலை...
காலத்தின் முகம் அணிந்துகொண்டவனுக்கு,
நானிருக்கும்
வரை நலமாய் இருப்பாய் என்ற எண்ணத்திலே எழுத்துகளின் ஊடே உனக்கொரு வலை
பின்கிறேன்...எழுத்தில் உன் முகம் பார்க்க, எழுதிட சுகம் சேர்க்கும் உன்
நினைவுகளே உற்சாகமெடுத்து ஓடவைக்கட்டும் இனி வரும் வரிகளை..எழுத மறந்து போன
நாட்களில் எங்கோ இருந்து எழுதிடச்சொல்கிற இந்த போக்கு எனக்கொன்றும்
புதிதில்லையென்றாலும் வாழ்க்கையின் சூழ்ச்சியில் வஞ்சிக்கப்பட்டவர்களில்
நாமும் ஒருவரென்பதை இதுவரை சந்திக்காத விழிகளின் கிடைக்கின்ற இருளில்
உண்ர்வோம்...
திரும்பிப்பார்த்தலென்பது எப்போதும் லயிப்பான விசயமாய்
இல்லாது போகும் இக்காலச்சூழலில் இக்கடிதம் கண்ணில் படும் போதெல்லாம்
ரசிப்பிற்கு விருந்துவைக்கும் விசயமாய் மாறிப்போகட்டும் நம்
வாழ்க்கைப்பக்கங்களுக்கு.. பிறப்பு குறித்த பிரபஞ்ச ரகசியங்களை உடைக்குமொரு
நிகழ்வு இதுவரை நிகழவேயில்லையென்பது நிகழ்ந்தவரை கிடைத்த நகர்வில் இருக்க,
எப்படி இருக்கிறாய்? என்ன செய்கிறாய்யென யாதொன்றும் தெரியாதிருக்க, எனை
எதை எதையோ செய்யவைக்கிறாய், சின்னதாய் பொய்கோலம் பூண வைக்கிறாய்..
விசித்திர விரிப்புகள் மத்தியில் ஒய்யார வந்தமர அருபமாய் இருக்கும் என்
மனதில் அடிக்கொரு முறை உனை அளவெடுத்துக்கொள்கிறேன்.. எப்போதேனும் எனை
நினைப்பாயா? எனைக்குறித்து உன் கொள்ளளவு என்னவாய் இருக்கும் .. உன்
நண்பனின் பொல்லாத மனைவியோடு என்னையும் ஒப்பிட்டுக்கொள்வாயா? இல்லை உன்
தோழியின் நேசத்திற்குரியவனைப்போல் என்னிடம் நடந்துகொள்ளவேண்டுமென
ஒத்திகைசெய்துகொள்வாயா? யாதொன்றிலும் எனக்கு தெரிவில்லையென்றாலும்
ஆண்னென்பதின் பதம் என் அப்பாவிற்கடுத்து உன்னிடம் தான் நான்
தேடத்தொடங்கவேண்டும்..
தனிமையின் நிறமெனக்கு எப்போதும் பிடித்தது, அது தரும் சுகந்தமும்
ஆறுதலும் எனக்கு எதுவுவொன்றும் தந்துவிடாது அதேபோல் உனக்கெப்படி
என்னைப்போல் அதிகம் பேசுவாயா? இல்லை அளவெடுத்து வார்த்தைகளை விடுவாயா? பெண்
என்பவள் உன் பார்வைக்கு எப்படி? நீ என்பதில் நான் எதுவரைக்கும்? இப்படி எத்தனையோ
கேள்விகள் உள்ளன, உனக்கும் அப்படியாய் இருக்கலாம்.இந்த கேள்விகள் தான்
நான் இருக்கிறேன் என்பதற்கான என் இறுப்பினை உறுதிசெய்யும் காரணிகளாய்
இருக்க, என் எதிர்ப்பார்ப்பு உன் வருகைக்கானதாய் மட்டுமென்பதை
அறிந்துகொள்.
எழுத்தின் வாயிலாய் உன் முகம்
தேடத்தொடங்கியிருக்கும் இந்நாட்களில் இக்கடிதம் உனக்கும் எனக்குமான முதற்
புள்ளியை வைத்துவிட்டு கள்ளத்தனமாய் சிரிக்கிறது...
,