*
முழுப்பைத்தியத்தைப் போல்
சாந்தமாய்
முன்னமர்கிறது
இந்த மழை
கைமூட்டைக்குள் களவு கொடுத்த
நினைவுகளை
தேடியெடுக்கும் லாகவம் வாய்க்கா
இந்த நனைதல்
ருசியின் பசி
அடித்துப் பெய்யும் குளிரிடம்
யாதொரு சமாதானமும்
வாய்க்காதவாறு
நிரம்புகிறது
நீர்கொண்ட பாத்திரம்
*
சலிப்பூட்டுவதில் இருக்கும்
சங்கடங்கள்
அறியாது
கடக்கிறது
அந்த இரயில்
தண்டவாளமென நீண்டுகிடக்கிற
சம்பவங்கள் மேல் ஒவ்வொரு திசை
திசைக்கொன்றாய் பயணம்
நிறுத்தங்கள் இறக்கிவிடுவதில்லை யாவற்றையும்
அது
தொடர்கிறது
*
என்றுமில்லாதபடி கரிசனம் காட்டத்தொடங்கியிருக்கும்
இரவை
இரவால் கொல்வதென்று திட்டம்
உன்
என்
நழுவத்தொடங்கிவிட்ட
பிம்பத்தின் முற்றத்தில்
நிலா ஆடுகிறது
கல்லெறிந்த குளத்தின் தவிப்போடு
மிகுந்த அழுத்தத்திற்கு இழுத்துப் போகிறது
உன் இயலாமைப் படகு
நடுகடலில் கவிழ்ந்துவிடுமென்ற பயத்தை
என் பயமாய்
பறைசாற்றுகின்றாய்
உன் ராஜதந்திரம்
அரசவைக் கிரீடங்களில்
இன்னும் மின்னிக்கொண்டிருக்க
விழிபிதுங்கும் இப்பயணத்தில்
வழிப்போக்கனின் புன்னகைக்கூட கிடைக்காத
உன்னிடம்
புத்தன் பற்றி பேசியிருக்கக் கூடாது
நீ
இப்போது
தனியே துடுப்பசைக்கிறாய்..
-ரேவா
தொலைந்து போய்விடும் படி
வந்து சேருகின்ற ஆணையொன்றை
வெகுநேரம் கையில் வைத்திருக்கின்றேன்
எழுத்துக்கூட்டி வரும் நினைவின் கடல்
ஒற்றையாய் அலைவுறுகிற
படகின் துடுப்பாக்க
செலுத்துதலின் வேகம்
சோர்வுற வைக்கும் காற்று
கருணை வேண்டி காத்திருப்பு
பலனளிக்கா வானிலைக்கு
அடிபணியும் அபத்தம்
நின்று பார்ப்பதெனும் போராட்டம்
சுழிக்குள் இழுக்கும் சூட்சுமம்
ஒப்படைத்தலில் இறுக்கி பிடித்திருக்கும் படகை
கைவிடுதலில் கரைந்துபோகிறது
பெருங்கடல்
-ரேவா
*
நிமிடத்தில் எல்லாம் மாறிவிடும் கணத்திற்காய் காத்திருக்கிறோம்
நடப்பதின் மீதிருக்கும் தவறின் சரியும்
சரிக்கு உதவா நியாயங்களின் தவறும்
தர்க்க முரணிட்டுக் கொள்ளும் இடத்தில்
அவசரச் சிகிச்சையின் அதிரடித் தடம்
ஒவ்வாமைகள் ஒத்துக்கொண்டுவிடும் தவறுக்கும்
ஒத்துக் கொள்ளாத சரிக்கும்
ரப்பர் செருப்பணிந்து நடக்கவிடும் வேடிக்கைக்குப் பின்
நூற்றாண்டு கால அரசியல்
காகிதங்களை தின்று பழகிய கழுதைகள்
பாரங்களை விரும்பிச் சுமப்பதில்லையென்ற சித்தாந்தம்
தூக்கி வைக்கும் சுமையில்
எங்கோ களவாடப்பட்ட ரகசியங்கள்
விரும்பிச் சுமக்க துணிந்ததும்
புறமுதுகில் குத்தப்படும் எண்ணிக்கையில்
பாவங்களின் பிசகுகள்
பலி எண்ணிக்கை அதிகமாகும் இடத்தில்
தொற்றிக் கொள்ளும் பதட்டம்
அறிவிக்கும் கணத்தில்
அனுமதிக்கப்படாத பார்வையாளர்கள்
-ரேவா
Painting : Brenda Maddox
எழுதா டைரியின் பக்கத்தில்
எதைச் சொல்லவோ
சருகாகிக் கிடக்கிறது ஜோடி மல்லி
வெள்ளையென அதன் சிரிப்பு
அடையாளத் தேதியில் பளிச்சென்று தெரிய
அவசர அவசரமாய் உனைத் தேடிய
வார்த்தைக்குள் மணத்துக் கிடக்கிறது
முழம் தப்பி விழுந்த
இச்சோடி மல்லி....