உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
அவன் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவன் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 ஜனவரி, 2013

புரியாக்காலமது



இன்றோடு வருடம் ஆறாக, என் நினைவுதனில் வற்றாது ஓடும் ஒரு பிரவாகமாய்  நீ உருவெடுத்திருக்கிறாய், இன்னும் இன்னும் ஆழமாய்.
ஒரே பார்வையில் பருகிவிட முடியா ஆழத்தில்  நீ இருக்கிறாய் என்பது மட்டும் திண்ணம்..எப்படி ஆரம்பம் என்ற புள்ளியில் தெளிவில்லையென்றாலும் அமர்களமாய் நீ மனதமர்ந்த காலம் என்றும் எனக்கு விழாக்காலம் தான்..

 மழைக்கு ஒளிந்து கொள்வதின் பொருட்டு, என் துப்பட்டா தூரலில் பதியமிட்ட அந்த பார்வைக்குப்பின் பல மழையை சந்தித்தாகிவிட்டது, ஒன்றிலும் உன்னை சந்தித்த உற்சாகமில்லை என்பதே உண்மை..பிரிதொரு நாள் என் இருக்கை அருகில் வந்தமர்ந்த தினம் யுத்தம் செய்யும் எந்தன் உள்ளத்தின் ஓசை நீ அறிந்திருப்பாயா என்று நான் அறியேன்.. 
ஆர்பாட்டமில்லா உன் புன்னகை, கர்வத்தை மறைக்கும்  உன் குறும்பு மீசை, திருத்தம் செய்த உன் புருவம், பாங்காய் எடுத்த வகிடு, கையோடு இட்டிருந்த அந்த மஞ்சள் கயிறு, நெற்றி நடுவில் சின்னதாய்  குங்குமம் இவையெல்லாம் உனக்கு கூடுதல் அழகை கொடுக்கத்தான் செய்தது..

ஹாய் மேம், இப்படித்தான் ஆரம்பித்தாய்..

உங்கள எங்கையோ பார்த்திருக்கேனே என்பதைப்போல் நான் ஆரம்பமானேன்..

கிட்டதட்ட குட்டி மழையொன்று சில்லென்று என் நெஞ்சம் நனைக்க, மழைவிட்டதும் வெரித்திருக்கும் வானத்தை போல் அழகு நிறைந்ததாய் இருந்தது அன்றைய தினம்..பரஸ்பரம் அறிமுகம் முடிந்தாகிற்று, தொலைபேசி எண்ணுக்குள் நுழைந்து கொண்டு குறும்பு செய்தது என் நெஞ்சம்..அதை உணர்ந்தவனாய் உடன் கொடுத்தாய் உன் எண்ணை..
வீடு வந்தாகிற்று விற்றுத்தீர்த்த பலாப்பழத்தின் வாசம் போல விடாது துரத்தியது உன் வாசம்.. ஏதே ஏதோ குழப்பம் கொண்டு அனுப்ப நினைத்து அழித்த குறும்செய்திகள் எண்ணிக்கையில் 100த்தொட, என்னை நான் திட்டிக்கொண்டே தூக்கிப்போனேன்...

காலை 6 மணி இப்போதெல்லாம் என் மூன்றாம் கைகளாய் மாறிப்போன கைப்பேசியை எடுத்து பார்த்துத்தான் ஆரம்பமாகும் என் அத்தனை நாளும், இன்று மட்டும் ஒரு ஆனந்தவிருட்சத்தை விழிக்கு தந்தது, குட் நைட் என்னும் குறும் செய்தியில் தொடங்கி அன்பு தாங்கி அனுப்பட்ட அத்தனை குறும்செய்திகளாலும் நிறைந்து வழிந்தது என் கைப்பேசி..என்ன நினைப்பான் என்னை என்ற எண்ணம் மேலிட, சின்னதாய் மன்னிப்பில் தொடங்கி வைத்தேன் அன்றைய நாளை..அதன் பின் பதிலேதுமில்லாது போனது, அதைப்பற்றி நினைப்பேதுமில்லாமல் மூழ்கிப்போனேன் எந்தன் வேலையில்..

ஏதோ புரியாத உணர்வு தொண்டை நெருக்கி, புலப்படா வலிவந்து கண்ணீரில் முடிக்க, விதி அமைத்துகொடுத்த பயனாய் வந்து நிறைத்தது அவன் அழைப்பு
பரஸ்பர பேச்சிலும் பிடிபடா ஏதோ ஒரு உணர்வை அவனோடு பேசையில் உணர்ந்தேன்... பின்னும் இரவும் பகலுமென எங்கள் நேரத்தை தின்று தீர்த்தது எங்கள் இரவுக்குமான பிடிபடா ஏதோ உணர்வு...

உடைத்து பேசிவிடவேண்டுமென்ற எண்ணத்தில் துளிர்த்துக்கொண்டிருந்த மனஒத்திகைகளை இனம் கண்டவனைப்போல் என் அருகில் வந்தான்

இன்னைக்கு ஈவினிங் நம்ம ஆபிஸ் பக்கத்தில இருக்கிற காபிடேக்கு போவோம் வர்ஸிதா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..

ம்ம்ம்ம் ஒகே பார்க்கலாம் ப்ரியன்...

உள்ளுக்குள் உற்சாகக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டாலும் வெளியே எதுவும் நடக்காதைப்போல் காட்டிக்கொள்வது எத்தனை பெரிய சங்கடமென்பதை அன்றே உணர்ந்தறிந்தேன்... 6 மணிக்கு இதோடு 6000 முறை கடிகாரம் பார்த்தாகிவிட்டது, நகராத கடிகாரம் உலக அழிவை கண்முன்னே நிறுத்துவதைப்போலொரு மாயையைக்கொடுக்க, நிறுத்திக்கொள் உன் கற்பனையை என்பது போல் 6 மணியை நெருங்கியது...

இதோ கண்முன் திரையிட்டு நாடகம் நடத்தும் எங்கள் உணர்வுகளுக்கு காதலெனும் பெயர் சூட்டுவிழா நடந்தேறிக்கொண்டிருக்கிறது...

இருவருக்குள்ளும் ஒளிந்து விளையாடிய காதல் பிள்ளையை கண்டெடுத்து இதோ வருடம்  6 ஆக, காதலியலை முழுதாய் படிக்கும் முயற்சியில் ஒவ்வொரு நாளும் புதுப்புது பாடம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது....
நினைவுகளில் எப்போதும் சூல் கொண்டு எங்களை சுமங்கும் அஸ்திவார நியாபங்களே எங்களின் அந்த புரியாக காலங்கள் தான்.....

ஒவ்வொரு சமாதானங்களுக்கு 
பின்னும் 
முளைத்து வரும்
அத்தனை விருட்சமும் 
காதலே.....

  - ரே

வியாழன், 21 ஜூன், 2012

சற்றுமுன் நடந்த கொலை....




ஊரெல்லாம் உறங்கிப்போன
ஓர் இரவில்
உறக்க மறந்த நிமிடங்களினால்
உறைந்து போய் நானிருக்க,

அறையின் ஓரத்தில் யாரோ
அழுவதுபோன்ற குரல் 
அடித்துப்போட்டது 
என் கவனத்தை..

கவனமீர்த்த திசைநோக்கி
 நடந்துசெல்கிறேன்,
மீதமாய் மிதந்தலையும்
அவன் நினைவுகள்
கழுத்தை நெறிக்க
கண்ணீரோடு கரைந்து போயிருந்தேன்...

 பின் நிதானம் பிடிபட
மெல்ல மெல்ல 
அழுகைவந்த இடம் சென்றடைந்தேன்..
சற்றுமுன் உக்கிர நடனம்
ஆடிவிட்டுச்சென்ற காதலின்
வார்த்தை சலங்கைகள்
அங்கங்கே  சிதறிக்கிடக்க,
அதை ஒவ்வொன்றாய் கோர்த்து
பார்த்து பார்த்து
அழுதுகொண்டிருந்தது
இந்த பொல்லாத
காதல்..........

மரணம் சில
வார்த்தைகளால் கூட
நிகழ்ந்துவிடும்.....................




வியாழன், 7 ஜூன், 2012

சின்ன சின்னதாய் காதல்....4



உனக்காக எங்கு காத்திருந்தாலும்
அவ்விடத்தையெல்லாம்
விட்டுவிட்டு
நீ இருக்கும் இடத்தை நோக்கியே
இழுத்துவருகிறது
மனது...

 உன் தோள்களில்
சாய்ந்துகொள்வதற்காவே
பேருந்து பயணத்தையே
தேர்வு செய்கின்றேன்யென்பதை
நீ அறிவாயா?........


 உன் அழகு சுமந்துவரும்
இந்த கவிதையை
இறக்க இடம் காணாமல்
தேடுகிறேன்
இப்புவி முழுவதும்....
கல்லில் சிலைவடிக்கும்
சிற்பியாய்
என்னில் காதல் வரவைத்த
கலைஞன்
நீ.........



சிரிப்பதும்
பின் அணைப்பதுமாய்
நீள்கிறது
நம் சண்டைக்கு பின்னான
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.........

எத்தனையோ முறை
உன்னை மறக்க
முயற்சித்தும்
பூஜ்ஜியங்களிலே
வந்து முடிக்கின்றது
மனம்..........

 
மற்ற ஆணிடமிருந்து
உன்னை
தனித்து காட்டும் சொல்
காதல்.......


உன்னை நினைத்தவுடனே
கண் முன்னே கட்டிப்போட
எப்படி தெரிகிறது
என் கவிதைக்கு..
 
உன் நினைவுத்தலையணையில்
பத்திரமாய் உறக்குகிறது
என் காதல்......


ஊரெங்கும் அடைமழை
உள்ளுக்குள் நிறைந்து
வழிகிறாய்
நீ



முந்தைய பதிவு : 



புதன், 6 ஜூன், 2012

சின்ன சின்னதாய் காதல்...3


இவன்

என் வரையறுக்கப்பட்ட வார்த்தை
வாழத்தூண்டும் அனுபவம்
கூடவே இருக்கும் அறை நிலா..

 எந்த புள்ளியில்
தொடங்கினாலும்
அது உன்னையே
வந்து சேர்கின்றது..

 எழுதா பக்கங்களைப்போல
ஒரு அழகான் கவிதை
இருந்துவிடுமா
உன்னை பற்றி சொல்ல...


 தனிமையில் துணைக்குவரும்
நிலவை போல
நிழலைப்போல
எனக்கு
நீ...

 உன்னால் தூண்டப்படும்
என் கவிதைகளில்
காதல் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
ஆனால்
அதில் நீ இருக்கிறாய்........



செவ்வாய், 1 மே, 2012

சிந்துவாகிய நான்............



                மை இருட்டு கேள்வி பட்டிருக்கின்றேன், இது என்ன மையிட்ட என் கண்களை கூசச்செய்யும் இருட்டு... இந்த எகத்தாள வார்த்தைகளை உதிர்த்த படி நானிருக்க, அங்கு தான் அவன் முதல் காட்சி காணக்கிடைத்தது..பள்ளி பருவத்தேர்வு ஒன்றில், என் பள்ளிக்கு தேர்வெழுதவந்த அவன் நிறத்தை பரிகாசித்து, பிள்ளைகுறும்பை அவனிடம் கொட்ட, சிறுபிள்ளை மனம் கொண்ட அவன் கூனிகுறுகி நின்ற இடம் இன்னும் மனக்கண்ணில் திரையிட, மன்னிப்பு என்னும் வார்த்தை மூலம் நண்பனாய் அறிமுகமானான்.. 

பள்ளி தேர்வுகள் முடியும் தருவாயில், பிள்ளை மனம் கொண்ட அவனின் நட்பும் ஆட்டோகிராப் நோட்டில் தஞ்சம் புகுந்தது.காலப்போக்கில் கரையான் அரிக்கும் பக்கமாய் நட்பின் நினைவுகள் ஒவ்வொன்றையும் காலக்கரையான் அரிந்து தின்றுகொண்டிருந்த காலமது. கல்லூரி வளாகத்தில் சேர்க்கை விவரம் அறிய நின்றிருந்த இடத்தில் மீண்டும் துளிர்ந்தது எங்கள் நட்பு,, மோகன் இதுதான் அவன் பெயர். இந்த பெயரை தன் அம்மாவிற்க்கு அடுத்து நானே அழைப்பதாய் அடிக்கடி சொல்லிக்கொள்வான். கல்லூரியில் எல்லாருக்கும் மோகன் என்றால் கரிச்சட்டி என்று தான் அறிமுகமாகியிருந்தான். இவன் அதிர்ந்து பேசி ஒரு நாளும் நான் பார்த்ததில்லை. அன்று அந்த சம்பவம் நடக்கும் வரை....உனக்கும் சிந்துக்கும் காதலாமே, உனக்கு எங்கயோ மச்சமிருக்குடா? உன் கலருக்கு அவளா என்னால நினைச்சே பார்க்கமுடியலடா? என்னத்த காட்டி அவள மயக்கின சொன்னா நாங்களும் முயற்சி பண்ணுவோம்ல இந்த வார்த்தை கேட்கும் வரை பொறுமையாய் இருந்த மோகன் மிகவும் உணர்ச்சி வயப்பட்டு அவர்களுடன் சண்டையிட என் தோழிகளின் வாயிலாய் இந்த பிரச்சனையை அறிய கல்லூரி வளாகத்திற்க்கு செல்லுவதற்க்குள் தலைமை நிர்வாகிகளால் மோகனும் பிற நண்பர்களும் இடை நீக்கம் செய்ய பெற்றனர்..

 இதுவரை உணராத அவன் இருப்பை அவன் இல்லாத இந்த பத்து நாட்களில் உணர்ந்தேன்..அவன் அன்பு என்னை எவ்வளவு தூரம் ஆக்கிரமித்திருக்கின்றது என்பதை எனக்கே அடையாளம் காட்டியது அவன் இல்லாத அந்த நாட்கள்... அன்று மாலை கல்லூரி முடித்து வரும் தருவாயில் எனக்காய் காத்துக்கொண்டிருந்தான் மோகன்.

சிந்து கொஞ்சம் இரு நானும் வரேன்..
அட மோகன் இங்க எங்கே  நீ உன்னை தான் காலேஜ் ல இருந்து சஸ்பென்ட் பண்ணிட்டாங்கள்ல அப்பறம் எங்க இங்கே..
சிந்து நீ இன்னும் மாறவே இல்லை, ஸ்கூல்ல பாத்த அதே சிந்து தான், இன்னுமும் என்னை கேலி பண்ணுற சிந்துவா தான் இருக்க.
சாரி டா எதோ விளையாட்டுக்கு சொன்னேன், சரி எதுக்கு இங்க வெயிட் பண்ணுற மோகன்..
ஒன்னுமில்லை உன்னை பார்க்கனும்போல இருந்தது அதான் வந்தேன் சிந்து.
சரி பாத்துட்டையா கிளம்பு மோகன் எனக்கும் டைம் ஆச்சு...

           இப்படி வெறும் நலம் விசாரிப்புகளில் தான் எங்களில் பெரும்பாலனா நாட்கள் கழிந்தது, ஆனாலும் மோகனின் அன்பு கொஞ்சம் கொஞ்சமாய் என்னை ஆக்கிரமித்து வந்ததை உள்ளமது உணர்ந்து கொண்டு தான் இருந்தது..
கல்லூரி முடியும் காலம் வந்தது..இங்கேயும் சின்ன நினைவேட்டில் தன்னை ஒளித்துக்கொள்ள சித்தமாய் இருந்தது நட்பு..

மோகன் என் ஆட்டோகிராப் நோட்டில் கையெழுத்து இடுவதற்க்கு பதிலாய் தன் காதலை சொல்லியிருந்தான்..என் மனமும் அதை எதிர்பார்த்தாலும், பழைய குறும்புத்தனம் ஏனோ அவனிடம் மட்டும் வந்து வந்து சென்றது...
பதிலுக்கு அவனிடம் சென்று மோகன் உன் கலருக்கு நானா? உனக்கே இது விளையாட்டா தெரியல
எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு மோகன் என்று எப்பொழுதும் போல என் அறியா தனத்தை வெளிப்படுத்த,
எல்லோர் முன்னிலையிலும் இன்றும் தலைகவிழ்ந்து நின்றான் என் நண்பன்... இல்லை இல்லை என்னவன்..சின்ன சீண்டலாய் நான் நினைத்து செய்தது என் வாழ்வை வெகு தூரத்திற்க்கு புரட்டி போட்டது..
அன்று கண்ணீர் மழ்க என்னிடம் இனி உன்னை என் வாழ்வில் ஒரு நாளும் தொல்லை செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றான்..
நானும் அவன் வீட்டிற்க்கு சென்று சமாதானம் செய்துகொள்ளாலாம் என்ற துணிவில் அமைதியாய் இருந்துவிட்டேன்..

        இதற்க்கிடையே வேலை தேடும் போராட்டத்தில் அவனை மறந்தே போயிருந்தேன், சற்றென்று அவன் ஞாபகம் துளிர்க்க அவனிடம் சென்றேன், எத்துனை பெரிய முட்டாள் தனம் என்வாழ்வில் அரங்கேறியது என்று அன்று தான் உணர்ந்தேன். மோகனின் தாயார் காலமானதும் அதன் பின் கல்லூரி கேம்பஸ் இன் டர்வீயுவில் செலக்ட் ஆனதற்க்கான பணி நியமனத்தை பெற்றுகொண்டு அவன் கனடா சென்றதாகவும் அவன் இருக்கும் இடத்தில் அருகில் இருப்பவர்கள் என்னிடம் சொல்லி நான் வந்தால் என்னிடம் கொடுக்கச்சொல்லி ஒரு கடிதத்தையும் கொடுத்திருந்தான்..

அன்புத் தோழி சிந்துவுக்கு,

இது நாள் வரைக்கும் என் அன்பு தோழியாய் இருந்தவளுக்கு இந்த பிரிவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்குமோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் உன் இருப்பை என் இயலாமையில் உணர்கிறேன் சிந்து. ஒரு தடமாவது என் பெயர் சொல்லி அழைக்க மாட்டாயா என்று ஏங்கித்தவிக்கிறது என் மனம்.. எங்கு சென்றாலும் உன் நினைவு என்னை நிம்மதியாய் என் செயலை செய்யவிடுவதில்லை, அதனாலே இந்த துணிகற செயலில் இறக்கினேன்.. என் அம்மாவின் அஸ்தியை ஏந்திக்கொண்டு உன் நினைவை என் ஆஸ்தியாய் எடுத்துச்செல்கிறேன்.. உன் நட்பு எனக்கு இன்னுமோர் தாய்மடி.. எல்லோரும் என்னை தள்ளிவைத்து விளையாட நீ மட்டுமே என் உணர்வுகளை புரிந்த உன்னத ஆத்மா என்றிருந்தேன், நீயும் சிறுபிள்ளை கையிலிருக்கும் பொம்மை தான் நான் என்பதை உணரவைத்தாய்.

ஆனாலும் தோழியே உன்னை எல்லோரை போலவும் நட்புக்குள் அடைக்க மனம் இடம் தரவில்லை அதனாலே, என் தகுதியை மறந்து இந்த தங்க கிளையை என் உடன் வைத்துக்கொள்ள நினைத்தேன்.. அது எத்தனை பெரிய தப்பு என்பதை இப்போது உணர்கிறேன் டா.. இனி உன் வாழ்க்கையை இந்த நண்பன் கரிச்சட்டியன் இல்லாமல் சந்தோஷமாய் வாழு.. உன்னோடு கழித்த ஒவ்வொரு நிமிடத்தையும் நெஞ்சுக்கூட்டில் சுமந்துசெல்கிறேன்... நீ என் காதலாக தொடராவிட்டாலும் ஒரு நட்பாய் என்னை தொடர நினைத்தால் இந்த மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்...

பிரியங்களுடன்
எல்லோருக்கும் கரிச்சட்டியன்
உனக்கு மோகன்...
   கடிதம் முடித்த இடத்தில் கரைதட்டி நிற்கும் என் கண்ணீரைப்போலவே சில வார்த்தைகள் அவன் கண்ணீரால் அளிக்கப்பட்டு இருந்தது..ஆனாலும் என் காதல் என் கைவிட்டு போகவில்லை என்ற தைரியத்தில் அவன் மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்பினேன்...

எப்படி டா இருக்க மோகன்,

நீ இல்லாம எனக்கு போரிங்கா இருந்தாலும் ஒன்னும் பிரச்சனையில்லை, எனக்கு நல்ல வேலை கிடைச்சிருக்குடா, நல்ல சம்பளம், லைப் நல்லா போகுது, நீ உடம்ப பாத்துக்கோடா மோகன்... பாய்..

      இப்படியே பெரும்பாலனா மின்னஞ்சல்கள் அக்கறை விசாரிப்புகளாகவே நிறைந்து இருந்ததே தவிர என் காதலை ஏனோ அவனிடம் சொல்ல மனம் அனுமதிக்கவில்லை..

             மோகனிடமிருந்து ஆறுமாதமாய் எந்த மின்னஞ்சலும் வரவில்லை, என்னை பல நூறாய் அறுத்து போட்டதை போன்ற வலி. எந்த செயலையும் செய்ய வாய்க்கவில்லை.. அவன் இருக்குமிடத்தை என் இன்னோரு நண்பனிடம் சொல்லி விசாரித்து பார்த்தேன்,அவனை பற்றிய விவரமேதும் தெரியவில்லை
என்ற செய்தியை தாங்கியிருந்தது நண்பனின் பதில்..இதற்கிடையே எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தேற, என் காதலை என் குடும்பத்திடம் சொல்லி அனுமதி வாங்கி, அவனிருக்குமிடம் நோக்கி பரந்து வந்தேன்...

               ஒவ்வொரு நிமிடமும் ஊசியால் குத்தி கிளிப்பது போன்ற உணர்வு அத்தனையும் உன் விளையாட்டு தனத்தால் வந்ததுதான் சிந்து, இந்த செயலுக்கு நீ வாழ் நாள் முழுதும் அனுபவிக்க போகிறாய் என்று ஏனோ மனது அடிக்கடி ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.. காரணம் ஆறு மாதத்திற்கு முன் நான் அனுப்பிய செய்தி அப்படி, எனக்கு வந்த வரன் ஒன்றின் புகைப்படத்தை மோகனிடம் அனுப்பி நான் இவனை தான் விரும்புவதாய் அவனை சீண்டி விட்டதன் விளைவு தான் நான் அனுபவிப்பது..

             அவன் இருக்குமிடம் சென்றேன், அவனை பற்றியே செய்தியேதும் அங்கு இல்லை அவன் வேலை செய்யும் இடத்திலும் முன்னறிவித்தல் இன்றி வேலையை விட்டதாய் கேள்விபடவே, எப்படியும் இங்கு வந்துவிடுவான் என்று அவன் இருந்த அறையிலே தங்கி கொண்டு அவன் பணி புரிந்த அலுவலகத்திலே பணி புரிந்து கொண்டிருக்கிறேன்.. இன்றோடு வருடம் ஏழு ஆகிறது.. அவன் எனக்கு அனுப்பிய கடிதத்திலும், மின்னஞ்சலிலும், பரிசு பொருளிலும், அவனறியாமல் அவன் பேச்சை பதிவு செய்த கோப்புகளும் தான் என் இத்தனை நாள் வாழ்வை உந்தித் தள்ளியது..இனியும் அவன் வருவான் என்று உள்மனது உரக்கச்சொல்லிக்கொண்டே இருக்க, இறுதியில் வந்து சேர்ந்தான் என்னவன்... 

            அடடா அவன் உருவத்தில் தான் எத்தனை மாற்றம், பணமும் பதவியும் கிடைக்க பெற்றவர்கள் அத்தனையும் கிடைக்கபெறுவர் என்பது எத்துணை பெரிய உண்மை.. அவன் உருவத்திலும், பேச்சிலும் எத்தனை பெரிய மாற்றம்.. ஆனால் நான் நான், அவனில்லாத இந்த பொழுதுகளில் கணவனை இழந்த கைம்பெண்ணை போலத்தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.. கவலையின் குறியாய் என் முகத்தில் வயதான தோற்றம், அய்யோ இது அவனுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்று உள்ளுக்குள் உழன்று தவிக்கிற கேள்விக்கு விடையாய் அவன் பின்னிருந்து வந்தால் சித்ரா. அவள் உடையிலே தெரிந்தது அவன் மோகனின் மனைவி என்பது.. எத்தனை பெரிய தவறு நம் அறியாமையில் விளைந்தது என்பதை உணர்ந்து கொண்டு, எப்போதும் போல என் சிறுபிள்ளைத்தனத்தை இம்முறை போலியாய்

           பரவாயில்லையே மோகன் கடைசில உனக்கும் ஒருத்தி மாட்டிட்டாளா? வாழ்த்துக்கள் பா... எனக்கு இங்கே வேலை கிடைத்தது, அதான் நீ எப்படியும் இங்கு வருவன்னு உன் அறையிலே தங்கியிருந்தேன்.. நான் நினைத்ததும் நடந்திருச்சு, என் நண்பன நான் பாத்துட்டேன்.. சரி டா எனக்கு வேலைக்கு நேரமாச்சு, நான் இந்த அறையிலே தங்கிக்கிறேன். நீயும் உன் மனைவியும் வேறு ஒரு இடத்தில் தங்கிகோங்க டா பீளிஸ்.....

எதற்கு நான் இங்கு வந்தேன் அவனும் கேட்க்கவில்லை... நானும் சொல்லவுமில்லை...என் தவறுக்கு கிடைத்த தண்டனையாய் அவன் நினைவுகளை தனிமையில் சுமந்து கொண்டு, பெற்றோரின் வருத்தத்தை சம்பாதித்து கொண்டு, இன்று வேறு ஒரு நாட்டில் பணி புரிந்துகொண்டிருக்கிறேன்..அவன் இப்போதும் கானல் நீராய் என் காதலை வளர்த்துச்செல்கிறான்.....


சரியான நேரத்தில் கொடுக்கப்படாத மன்னிப்பும், சரியான நேரத்தில் சொல்லப்படாத காதலும் ஆயுள் உள்ளவரை நம்மை கருணை கொலை செய்துகொண்டே இருக்கும் என்பதற்கு உதாரணம் தான் நான்..........................


திங்கள், 5 மார்ச், 2012

பொய் கோபம்

THANKS: Google



இந்த நேரம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துவிடும் நித்யா இன்று தான் அலுவலகம் கிளம்பும் நேரமாகியும் வராததை அடுத்து அவளுக்கு போன் செய்தான் பிரபஞ்சன்... அவள் போன் அணைத்து வைக்கப்பட்டது என்ற செய்தி அவனுக்கு பதட்டத்தை வரவைக்க, நித்யாவின் அலுவலகத்திற்க்கு தொடர்பு கொண்டான், அங்கும் அவள் கிளம்பி போய் வெகு நேரமான செய்தி அவனுக்குள் இடியாய் இறங்கியது...

அவள் தோழிகள் நம்பருக்கும் தொடர்பு கொண்டு, அங்கும் எதிர்ப்பார்த்த செய்தி கிடைக்காததை அடுத்து வருத்தமும், பயமும் கலந்து கொள்ள கதவு திறக்கும் ஓசை கேட்டு, ஜன்னலை பார்த்தான், வருவது அவள் தான் என்று தெரிந்து, நிம்மதியடைந்தாலும், அவள் அலட்சியமாய் வந்தது, பிரபாவுக்கு கோவத்தை ஏற்படுத்தியது...

என்ன பிரபா மணி 7ஆச்சு நீ இன்னும் office போகலயா?

நான் போறது இருக்கட்டும் நீ எங்க போன இவ்வளவு நேரம்...

அவன் வார்த்தையில் இருக்கும் கோவத்தை உணர்ந்தவளாய், சாரி டா, ரீமா அவ பெண்ணுக்கு ட்ரஸ் எடுக்க என்ன கூட்டிட்டு போனா அதான் இவ்/ளோ நேரம் பிரபா.. சாரி

உன் சாரி யாருக்குடி வேணும்... இவ்வளவு நேரம் வரலையே ஒரு போன் பண்ணி சொல்லிருக்கலாம்ல நானாவது நிம்மதியா offlice கிளம்பி போய் இருப்பேன் ல..

இல்லை போன்ல சார்ஜ் இல்லைடா? அதான்......

போன வாரம் நான் என் ஃப்ரண்ட்ஸ் ஒட அவுட்டிங்க் போகும் போது, என் போன்ல சார்ஜ் இல்லை அதான் உனக்கு போன் பண்ணி சொல்லமுடியலன்னு சொன்னதுக்கு எவ்வளவு கோவப்பட்ட, உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?

பிரபா அது வேற இது வேற?

எப்படி டி வேற வேற ஆக முடியும் சொல்லு.....

இப்போ ஏன் வந்ததும் வராததுமா சண்டை போடுற. நீ offlice போ டைம் ஆச்சு...

காரணம் கேட்டா கிளப்ப சொல்றயா? என்ன ஒரு பொறுப்பில்லாத பதில் நித்தி, நீ வரலன்னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா?

பிரபா நீ இந்த பயத்த தெரிஞ்சுக்கனும்னு தான் அப்படி பண்ணேன் சாரி டா...

என்ன நித்தி சொல்ற?...

ஆமாம் ஒவ்வொரு வீகெண்ட்லயும், நீ உன் ஃப் ரண்ட்ஸ் ஒட போயிடுற, சில நேரம் உன் ஃப் ரண்ட்ஸ் கம்பெல் பண்றாங்கன்னு டிரிங்ஸ் எடுத்துக்கிற, நீ வீடு வந்து சேர்ர வரைக்கும், நான் படுற பாடு எனக்கு தான் தெரியும் நடுவுல ஒரு போன் பண்ணுறது கூட கிடையாது, நான் பண்ணாலும் switch off....
காரணம் கேட்ட சார்ஜ் இல்லைனு சொல்லுவ...எத்தனை தடவ தான் இதே உப்பு சப்பில்லாத காரணத்தையே கேட்கிறது... நீ புரிஞ்சுக்கனும்னு தான் இப்படி பண்ணேன்... நான் எப்போவோ வீட்டுக்கு வந்துட்டேன்... என் பீல் உனக்கு புரியனும்னு தான் ரீமா பிளாட் ல கொஞ்சம் நேரம் இருந்தேன்... உன் cap வந்தும் நீ போகலனு தெரிஞ்சதும் தான், மனசு கேட்காம வந்தேன்... நீ கிளப்பு பிரபா டைம் ஆச்சு...

வாயடைத்து போய் பதில் எதுவும் சொல்லாமல் மெளனமாய் சென்றான் பிரபா...

பதில் எதும் சொல்லாமல் அவன் செல்வதை வருத்ததோடு பார்த்தாள்... சற்று நேரத்தில் கைபேசி சிணுங்க, பிரபாவிடமிருந்து செய்தி,  sorry nithi  just now i realized my mistake,  hereafter i wont do it... dinner is on the table. please do take them. I love you de :))))))) 

 நான் எதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுக்கோடா... I TOO LOVE YOU HONEY...




 நமக்கு பிடித்தவர்கள் மீது நாம் காட்டும் கோவமும் ஒரு அன்பே.............



திங்கள், 4 ஜூலை, 2011

அவன் நினைவோடு நான்....





            அடர் இருளில், யாருமற்ற சாலையில், என் கைகளில்  பத்து விரல்கள் முளைத்த நேரம்....ஆம் என் அருகில் அவன்.....இருளோடு பயம் கொண்ட நானே, அவன் இருக்கும் நினைவால் இறுமாப்போடு வர, சிறு குழந்தைப் போல, பயம் கொண்டு என் கரம் பற்றிய அந்த நேரம், நட்பின் கதவினை உடைத்து எனக்குள் காதல் பிறந்த தருணம் அது....

       அந்த இருளுக்குள்ளும், என் இதயத்தில் சந்தோச இடியோசை....இந்த நிமிடம் இப்படியே முடிந்துவிட உள்ளுக்குள் மணியோசை...ஏதாவது பேசுவான் என்று நினைத்து, படபடக்கும் அவன் விழியை கவனிக்கையில் உணர்ந்தேன்...களவு போனது நான் மட்டும் அல்ல, அவனும் தான் என்று....

            என் விருப்பம் சொல்ல நினைத்த நேரத்தில் எல்லாம், ஏதோ ஒன்று தடுக்க, தப்பி பிழைத்தேன் நட்பின் முகவரியில்....இன்று அவன் கைத்தலம் பற்றிய நேரம்....மணவறைக் கோலங்கள் கண்ணில் தெரிய, சொல்லத் தெரியா சந்தோஷம் கொண்டேன்...

              இதுவரை பயணித்த பாதை, இன்று  புதிதாய் தோன்றியது  போல் உணர்வு...இதுவரை கடிந்து கொண்டே சென்ற, என் வீதியின் நீளம், இன்று சுகமாய் தெரிந்தது...எப்போதும் குலைத்து பயமுறுத்தும் நாயின் சப்தமும், சங்கீதமானது ..கண்ணில் பட்டதை எல்லாம் ரசித்தேன்...இன்றே புதிதாய் பிறந்ததாய் நினைத்தேன்..இதுவரை முளைக்காத சிறகெல்லாம், இன்றே முளைத்ததாய் உணர்ந்தேன்...

           அவன் செல்லும் நேரம் வந்தது....கைபிடிக்குள் இருந்த காதல், நட்பாய் மாறி நலம் விசாரித்து சென்றது...பத்திரமாய் செல்..போனதும் எனக்கு போன் பண்ணு...என்ற வார்த்தையில், விழித்துக் கொண்டது என் கனவு...இம்ம்ம் என்று பதில் சொல்லி, அவன் வீடு கடந்து நடந்தேன்...ஓசைகள் அற்ற வீதி, காற்றோடு கலந்து வரும் மண் வாசம், துளி துளியாய் கோலமிட ஆயத்தமான மழை,  அழகாய் தெரிந்த தனிமை, எல்லாம் சேர்ந்து அவன் நினைவோடு மறுபடியும் பயணப் படவைத்தது...

            என் வீடும் வந்தது...அம்மாவின் அன்பும், அப்பாவின் கரிசனமும், தம்பி, தங்கையின், சண்டையும் இன்று அந்நியமாய் தெரிந்தது....வெட்க்கித்து, இந்நிலையிலிருந்து மீள நினைத்தேன்....மீட்டிய வீணையின் நாதமாய், என் தலையணை அருகில் இருந்த பொம்மையை பார்க்கையில், பற்றி எரிந்தது அவன் நினைவுகள்...அவன் தந்த பரிசோடு, அவன் ஸ்பரிசம் கண்டு, அதோடு உறவாடினேன்....இரவில் அனைவரும் உறங்க, நான் மட்டும் விழித்திருக்கிறேன் காதலோடு....

            பொழுதும் புலர்ந்தது...இதுவரை நான் பார்க்காத சூரியன், என்னை புதிதாய் பார்த்து சிரித்தான்...சிட்டுக் குருவிகளும், மைனாக்களும் சத்தம் இடும் ஓசைகள் சங்கீதமானது...வீட்டுத் தோட்டத்தில் பூத்த மலர்களும், புன்னகையோடு அவன் வாசம் தந்தது... அவன் வாசம் தந்த பூக்களை சூடிக் கொண்டு,  சென்றேன்....புன்னகையோடு....

          அருகில் வந்தவன், நேற்று போனதும் ஏன் மெசேஜ் பண்ணல, என்ற அன்பான வார்த்தையை உதிர்க்க, பதில் சொல்ல தெரியாமல், அவன் விழி மொழிகள் வாங்கிக் கொண்டு, பதில் பேசாமல் இருந்தேன்..இருவருக்குள்ளும் இருந்திடும் காதலை உணர்கிறோம் என்றாலும், யார் முதலில் சொல்வது என்ற தயக்கமே, தண்டவாளமாய் நீள, நட்பின் பெயரில் இணைந்தே இருந்தோம்...

              ஓர் மாலை கோவிலுக்கு செல்வதாய் முடிவு செய்து, இந்த நட்புக்கு முடிவு கட்டிவிட, இருவரும் நினைத்தோம்....கோவிலுக்கு சென்று வழக்கம் போல், அர்ச்சனை செய்ய, அர்ச்சனை டிக்கெட் வாங்கி  வர சென்றவன், சாமி பெயருக்கு பதில், எங்கள் இருவரின் பெயரையும் எழுதிக் கொண்டு வந்தான்...அதுவரை பட படத்துப் பேசிய இதழ்கள், மௌனப் புன்னகையை மட்டுமே பதிலாய் தந்தது அவனிடம்...கோவில் பூசாரியும், எங்களை தம்பதியராய் நினைத்து, கடவுள் மாலையை எங்களுக்கு சூட, கடவுளின் தீர்ப்பும் நாங்கள் இணைவதே என்பதைப் போல் உணர்ந்தோம்...

           கோவிலை விட்டு வெளியே வந்தாலும், இருவர் மனமும் சந்தோஷத்தில், பேச வார்த்தைகள் தேடிக் கொண்டிருந்தது...அவன் சிந்தும் வெட்கப் புன்னகையை உள்வாங்கி, நானும் புன்னைகையை அவனுக்கு பதிலாய் தந்தேன்...கடவுளின் ஆசிர்வதமாய். சில மழைத்துளிகள் எங்கள் கைகளில்...

           நண்பர்களாய் இருந்தவர்களை, காலம் காதலர்களாய் மாற்றியது...காதலோடு அவன் தந்த அன்பு மொத்தத்தையும் ஆசையோடு பருகி வந்தேன்...விதி என்னும் வில்லன் என் வழி வந்து, எனக்கும் அவனுக்குமான இந்த பயணத்தை, தூரமாகிப் போடுவான் என்று கனவிலும் அறியேன்...

          எங்கள் பிரியம் இருவர் குடும்பத்திலும் தெரிய, அவர்கள் தரும் முடிவிற்க்காய் காத்திருந்தோம் காதலோடு...இறுதியில் சாதி என்னும் வில்லன், சிம்மாசனமிட்டு அமர்ந்தான் எங்கள் காதலின்  முன்னே... பின் இருவரும் சிறைபடுத்தப்பட்டோம், எங்கள் காதல் நினைவுகள் முன்னே.  இந்த பிரிவு தற்காலிகமானது என நான் நினைத்தாலும், அவனை விடுத்து, இயங்குதல் என்பது இயலாத செயல் என்று அவனும் அறிவான்...

          எப்படியும்  அவனோடு பேசிவிட நினைத்து, அவன் அலுவலகம் சென்றேன், காதலின் அன்பை அணு அணுவாய் பருகி வந்தவர்கள், நீண்டநாள் சந்திப்பிற்கு பின், பேச வார்த்தைகள் அன்றி, கண்ணீரில் நலம் விசாரித்தோம்.இணைந்து வாழ்வது என்றால், பெற்றோரின்  சம்மதத்துடனே இருவரும் இணைவது, இல்லையேல் இருக்கின்ற நிலையில், நிலையாய் இருப்பது என்று உறுதி வாங்கி, திரும்பி வந்தேன், எங்கள் மாறாக் காதலோடு..

         .எங்களின்  இந்த பிரிவு, சாதி என்னும் கண்ணுக்குத் தெரியா கௌரவப் பேயால் வந்தது... அந்த கௌரவப் பேய்கள் பிடித்தும் ஆடும் உறவுகளை, எங்கள் உண்மைக் காதலின் வலிமை மாற்றும், என்று நினைத்து அமைதிகாத்தோம்...இந்த காத்திருப்பில், அவனை விடுத்து,அவன் குரல் மொழிகள் கேட்காது,  நீளும் என்  இரவுகளில், நீங்காத அவன் நினைவுகள், என் தனிமையை சுட்டெரிக்கும் என்றாலும் .. என் அருகில் அவன் இல்லை என்று, நினைக்கும் பொழுதுகளில், என் அருகில் அன்பு சிம்மாசம் இட்டு, நினைவுகளில் காதல் செய்வான்...

         சின்ன சின்ன சண்டையின் போது ஏற்படும் பிரிவுகளின் காத்திருப்பு  எல்லாம்,  சமாதானம் எனும், அவன் அன்பான காதல் மூலம் நிரப்பப் படும்...இன்று?.... இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும், உன் கைபிடிக்க..ஆனாலும் உனக்கான இந்த காத்திருப்பிலும், வலி கலந்த சுகம் இருக்கத்தான் செய்கிறது... .என் பாசம் மொத்தத்தையும் ஒன்றாய் திரட்டி, நான் காதல் செய்த காதலனே, நீயில்லாது, பிடித்தங்கள் இல்லை என்பதை எப்படிப் புரியவைப்பேன், என் உறவுக்கு...

             உருகி உருகி உயிர் தேய்ந்த பொழுதுகளில் கூட, சாதியால், நம் அன்பை, புறம் தள்ளிய, நம் உறவுக்களுக்கு எப்படிப் புரியவைப்பது..என் உயிர் நீ என்றும், உன் உயிர் நான் என்றும்..

        ஒவ்வொரு தொடக்கத்தின் போதும், அதற்கான முடிவும் எழுதப்படுமாம்..நம்மக்கான முடிவும் வந்தது, உன் பெற்றோர், வேற திருமணம் செய்ய சொல்லி, வற்புறுத்துவதாகவும், நீ அதை தவிர்த்து  வருவதாகவும், உன் நண்பன் என்னிடம் சொன்ன நேரம், மரணம் தரும் வலி என்ன என்பதை உணர்ந்தேன், முதல் முறை....ஒரு முறை உன்னிடம் பேசிவிட நினைத்து, உன் நண்பனிடம் உன்னை வர சொல்லிவிட்டு உன் வருகைக்காய் காத்திருந்தேன், நம் காதல் நினைவிடத்தில்....

         உன்னை முதல் முதலில் காதலனாய், எனக்கு காட்டிய,  இடம் அல்லவா..என் காதலுக்கான கருவறை அல்லவா அந்த இடம்....அங்கே இருக்கையில், ஒரு வித அமைதியை இருவரும் உணர்வோம்...இன்று, கண்ணீர் பெருக்கெடுக்க, காரணம் புரியாமல் காத்திருக்கின்றேன்,   நீ தரும் பதிலுக்காய்...வெகு நேரம் கழித்து, வந்தவன் .சாதிக்காய், புறம் தள்ளப்பட்ட நம் காதலை சாதிக்க, மரணம் மட்டுமே வழி என்றான்.. சாவதென்று ஆன பின், அனைவரையும் எதிர்த்து வாழலாம்.  நம் காதலை, நாம் வாழும் வாழ்க்கையில், அவர்களுக்கு புரியவைக்கலாம்...சாவது என்பது முட்டாள் தனமல்லவா? என்று அவனிடம் உரைத்தாலும், ஏற்கனவே ஒரு முடிவோடு வந்தவன், என் முடிவுக்குள் வரமறுத்தான் என்பதை அவன் பார்வையில் உணர்ந்தேன்...

            மரணம் என்ற வார்த்தை மிரட்டல், தைரியமில்லாதோர், தான் காரீயம்   சாதிக்க பயன்படுத்தும் வார்த்தை, என்று அவன் சொன்னது எனக்கு நினைவு வர, சாவதென்று முடிவெடுத்துவிட்டால், இருவரும் ஒன்றாய், உறவை எதிர்த்து, வாழ்ந்து விடலாம், இல்லையேல், பெற்றவற்க்காய், தனித் தனியே பிரித்து போய், நமக்கான விருப்பங்களை சாகடித்து, அவர்களுக்காய், அவர்கள் விருப்பபடி வாழ்ந்து விடுவோம், என்று சொல்லி முடிப்பதற்குள், என்னிடம் அவன் எதிர்பாத்த பதில் வந்து விட்ட திருப்தியில், நானும் அதையே நினைத்தேன், என்று பதில் சொன்னவனின், முகம் பார்க்க முடியாமல் தலைகவிழ்ந்தேன்...

         கண்ணீர் என் காதல் நனைக்க, இருதயம் துடிக்க மறுக்க, உலகமே இருண்டதாய் ஒரு கணம் தோன்ற, என் வாழ்க்கை முழுவதும் வருவதாய் சொன்ன,  என்னவன் என்னை விலகிச் சென்றான்..எங்கள் காதல் ஆரம்பம் ஆன அந்த இடத்திலே, முடியும் என்று தெரியாமல் போனது...சிறு நேர அழுகைக்குப் பின், பயணப் பட்டேன் என் பாதையில், மழைத்துளி, என் கண்ணீர் மறைத்தது...இருவரின் காதல் பரிமாற்றத்தின் போதும், தோன்றிய மழை
நியாபகம் வந்தது...அன்று அட்ச்சதயாய்த் தெரிந்தது, இன்று நெருப்பு துண்டுகள்  மேலே பட்டது போல் சுட்டது, அவன் நினைவுகளுடன்.... 

        வாழ்க்கையில் காதல் மனிதனை பக்குவப்படுத்தும்..என் காதல், முதுகெலும்பில்லாத என்னவனின், இன்னொரு முகம் நான் அறிய காரணமாய் இருந்தது...விருப்பங்கள் எல்லாம், விருபுகின்ற ஒன்று கிடைக்கின்ற வரையில், என்பதும் புரிந்தது...

               அவனை மறத்தல் என்பது அத்தனை பெரிய விஷயம் இல்லை, என்று, உறவின் முன், அவனை மறந்ததாய், பொய்யாய் நடிக்க, காலம் எனக்கு காதலோடு, வாழ்வியலையும் சொல்லிக் கொடுத்திருக்கிறது...அவன் இல்லாத இடத்தில், அவன் நினைவுகள் என் நாட்களை நிரப்பிக் கொண்டு இருக்கிறது...அவனுக்கு விதிக்கப் பட்ட வாழ்க்கையோடு, பொய்யாய் ஒரு வாழ்க்கைப் பயணத்தை அவன் தொடங்க,  அவன் தந்த காதல் நினைவுகளுடன், இன்னொருவரை, அவன் உறவில் நிரப்ப விருப்பமற்று, அவன் காதல் நினைவுடன் நான்..

திங்கள், 14 ஜூன், 2010

தனிமை விரும்பி நான்



தனிமை விரும்பி நான்......
ஆனால்,
உன் தகவல் நுட்பம்
என்னை தவிர்த்து சென்ற
நாளிலிருந்து நான் விரும்பும்
தனிமையை தவிர்க்கிறேன்.

ஆம் தோழனே,

*** தனிமையில் நான் கண்மூடும்,
பொழுதுகளில் எல்லாம்,
என் விழித்திறைக்குள்
விளையாடும் விண்மீன்
நீ தானே!!!!!!!!!!!!!!!!!

தனிமையில் நான்
நடக்கும் பொழுதுகளில்
எல்லாம் நான் காணும் காட்சிப்பிம்பம்
உன் முகம் தானே!!!!

தினம் தினம்
போட்டி போடும் உலகில்
என் போராட்டம் எல்லாம்
உன் நினைவோடு தானே!!!!

தோழனே!
@ எனக்கென்று ஒரு உலகம்
என்னோடு இருந்தும், என்னக்காய்
பட்ட என் உலகம் நீ தானே!!!!

உன்னோடு நான்
இருந்த பொழுதுகள் எல்லாம்
என் தாயின் கருவறைக்குள் நான்
இருந்த நினைவுகள்...
அந்த ஆனந்த நினைவுகள் எல்லாம்
இன்று நெஞ்சத்தில் பத்திரமாய்
என்னுளே

தோழனே!!!!
மறந்து விடு என்று
நீ சொன்னாய்..... சொன்ன நிமிடத்தில்
இருந்து மறந்தேன்! நீ சொன்ன
ஒற்றை வரி உயிர் வலிக்கும்
சொல்லை...

தோழனே!
உயிர் குடிக்கும்
உன் நினைவுகள் எல்லாம் எனக்கு
நித்திரையை மறக்க செய்தனவே தவிர
உன்னை????

தவிக்கிறேன் தோழனே
தனிமையில்,
உன்னோட நான் தவற விட்ட
என் உரிமைகளை எண்ணி
தவிக்கிறேன் தோழனே....

இன்றும் சொல்கிறேன்
தனிமை விரும்பி நான்.....

ஆனால்,
உன் தகவல் நுட்பம்
என்னை தவிர்த்து சென்ற
நாளிலிருந்து நான் விரும்பும்
தனிமையை தவிர்க்கிறேன்.