மதிப்பீடற்ற விசயங்களைக் கடந்து
விஷமங்கள் அரங்கேறும்
இத்தருணத்தில்
விஷமேறிய பற்களோடு
காத்திருக்கிற கடுச்சொல்லிருந்து...
துரத்திவிடுதலை
துணைக்கழைத்து
தன்னை விடுவித்துகொள்கிற
கணத்தில்
உயிர் உணர்கிற தவிப்புகளிலிருந்து
எப்படியோ மென்மரணமொன்று
இனி மெல்ல மெல்ல நடக்குமென்பதை
உணர்ந்தும்
அந்திசாமத்து பிடிகளிலிருந்து
விடுபடுதலைவிட
கொடுரமானது
தனித்திருத்தலென்பது....
சுற்றிலும் கொஞ்சம் சுடுவார்த்தை
சாவகாசமாய் இளைப்பார
நீளும் வாழ்க்கையென
ஒவ்வொருஇரவிலும்,
அவசர அவசரமாய் அழிக்கப்படுகிறது
தோல்வியின் தடயங்கள்...
அதிகார ஆளுமைக்கு பயந்து
பொருளில்லா வாழ்வால்
இருளிடம் நயந்து,
அவன் இருக்கையில் சிரித்து,
இருக் கையால் அணைத்து,
மென் முத்தமொன்றை
புசிக்கையில் ரசிப்பதாய் நடித்து,
சாத்தப்பட்ட அறையின்
சடங்குகள் முடிந்து
தனித்து விடப்படுகின்றேன்...
இந்த தனிமையில் வலி
நெஞ்சைகிழிக்க
வலிதாளாது
துவண்டுவிழுகின்றேன்...
ஒவ்வொரு இரவும்ஒவ்வொருவரின் வரவால்வாய்பிழக்கச்செய்ததுவாழும் நம்பிக்கையை...அந்த இருண்ட அறையில்கசிந்துகொண்டிருந்த
என் கனவுகள் சிலவும்,அங்கிருந்து அகற்றப்பட,என்னிடமிருந்து பலவந்தமாய்
பறிக்கப்பட்ட கறுப்பு பக்கமொன்றைதேடிக்கொண்டிருகின்றேன்நான்.....
சமீபகாலமாய் என்னால்
தனிமைபடுத்தபட்ட
என் தனிமைக்கு
ஏதோ ஒரு வெறுப்பு
என் மேல் ...
நலம் விரும்பிகளையும்,
நட்புகளையும்,
எனக்கென இருந்த உறவுகளையும்
வெளித்தள்ளிவிட்டு
ஒய்யார நடை நடந்துவருகின்றது
என் அறையெங்கும்...
தினம் வரும்
நலம்விசாரிப்புகளிலிருந்து,
நேசம் பரிமாறிடும் காதலிலிருந்து,
அன்பு தாங்கி வந்த
அத்தனை பேரையும்
வெறுப்பை சுமந்து செல்லும் படி
செய்கிறது...
கவிதைகளை கைக்கு
கிடைக்கசெய்துவிட்டு
காதலை தள்ளி வைக்கின்றது....
காலர நடக்கச்செய்துவிட்டு
நான்கு சுவர்களுக்கு நடுவே
கட்டிபோட்டுவிடுகிறது...
இப்போதெல்லாம்,
சுவர் பல்லியும்,
தேநீர் குவளையும்,
சில புத்தகங்களும்,
சில பல கவிதைகளுமே
சொந்தமென்றான பின்,
உண்மையாய் பழகி
உயிரினில் வைத்து
உரிமை பாராட்டுவதாய்
நினைத்து
உதறித்தள்ளும் உறவுகளை விட
இந்த தனிமை
எனக்கு
பிடித்துதான் இருக்கின்றது...
வெற்றுடம்பை சுமந்திருக்கும்
இந்நாட்களில்
இல்லை
அன்றைய நாட்களைப் போன்ற
பெரியதொரு உற்சாகம்....
உறக்க கத்துவதைக் காட்டிலும்
மெளனம்
பயங்கரமானதாக இருக்கின்றன
இவ்வேளைகளில்.
மெளனமுடைக்க
இல்லாத ஏதோ ஒன்றிடம்
பேசி பேசி
வெல்ல நினைக்கின்றேன்..
நீளும் இந்நாட்களை,
நாழிகையிலும், நிமிடங்களிலும்
மணிகளிலுமாய்
கரைந்து கொண்டிருக்கின்ற
நினைவுகளை
கடத்த ஏதுவாய் ஒன்றும்
அமையவில்லை...
வரைந்து பார்க்கிறேன்
இசைத்து பார்க்கிறேன்
புரட்டி பார்க்கின்றேன்
எதிலும் நான் நினைத்த
ஒன்று கிட்டவேயில்லை..
ஏதோ ஒன்றை மறக்க
எதனிடமோ த்ஞ்சமடைகின்ற
மனதுக்கு ஏனோ
எதுவுமே பிடிக்கவில்லை..
சில நேரங்களில் எதையோ
நினைத்தபடி,
கணத்திடும் இரவை துரத்தியபடி,
சிதறிக்கிடக்கும் மௌனங்களை
சேகரித்தபடியென
நீள்கிறது
என் இந்நாளைய தனிமை...