உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
நிலாக் காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலாக் காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 டிசம்பர், 2016

பெளர்ணமிப் பொழுதுகள்





சித்ரா பெளர்ணமி அன்றைக்கே எழுத நினைத்தது,பின் பகிரமுடியாத சூழலும், மன நிலையும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்கையில் தேமேனென்று நடப்பவைகளை வேடிக்கை பார்க்கும் மனோநிலைக்கு பழக்கப்படுத்திக்கொண்டிருக்கும் விளையாட்டுகளில் சமீபமாய் ஈடுபட்டுக்கொண்டிருப்பதில், நேற்றைய வானமும் வளர்ந்துவிட்ட நிலவும் கொடுத்த உற்சாகம் வார்த்தைகளுக்குள் அடைக்கமுடியாத கொண்டாட்டம்..

ஒரு இரவை நிலவைப் பார்த்தபடியே கடப்பதென்பது என் பெரும் ஆசை.. அதை நிறைவேற்றிக்கொடுத்த இந்த கோடையை இன்னும் கூட கொஞ்சிக்கொள்ளத் தோன்றுகிறது. சரியாக 43° C என்று என் மொபைல் வெயிலைக் குறித்துக்காட்டையில் செங்கல் சூளைக்குள் இருப்பதை வீடென்று நம்பிக்கொண்டிருக்கிறோமா என்ற எண்ணத்திற்கு இழுத்துவந்துவிட்ட வெயில்!? இரவுகளில் மொட்டைமாடியை தஞ்சம் புக அனுமதித்திருக்கிறது.

படுப்பதற்கு முன் நீர் தெளித்து வெட்கையை விரட்டும் அம்மாவின் கைகள் சகலத்திலிருந்தும் நம்மை ரட்சிக்க வந்த தேவனின் கைகள் என்றே சொல்லத் தோன்றுகிறது..

அதன்படி நேற்றைக்கு தூரத்தில் எங்கோ பெய்த மழையில் நனைந்த ஈரக்காற்றும், அதற்கு இசைந்து கொண்டு குளிர்வாங்கிய நிலவும் சிரிந்தபடியே என்னை வரவேற்க, மாடியில் பெரும் விருந்தொன்றை செவியில் நிறைத்த ஜோடிக்குயில்களின் பாடலும் மனதை எனக்கு பிடித்த தனிமையின் திசை நோக்கியே இழுத்துப் போனது..

நானிருக்கும் உலகம் சற்று நேரம் freeze out ஆனதில் இன்னும் கூட உண்ட களிப்பிலிருந்து மீளாதவளாய்த் தானிருக்கிறேன். இந்த வாழ்க்கை அத்தனைக்குப் பிறகுமென்ற இடத்திற்கு வந்து நிற்கும் போது கூட கொண்டாடப்படவேண்டியது தான், அதற்கு தயாராய் இருந்தால்.

குறையென்றானது குறைவில்லாதது என்ற மன நிலைக்கு வரும் போது அது கொண்டாடப்படவேண்டியதாய் மாறுகிறது. அப்படியே அத்தனையின் எல்லாமும்.

இங்கே சித்திரைத் திருவிழாவும் கிட்டத் தட்ட முடிகிற நேரத்தில் வீதிகள் எங்கும் நிறைந்து வழிகிற புதுமுகங்களும், கோடையை வேறு இடத்தின் நகர்வில் கொண்டாட வந்த குழந்தைகளும் தூங்கிப் போன வீதியை, ஒப்பனை களைத்த நடனக்காரியின் கால் சலங்கையின் ஓய்வில் இருக்கும் ஆட்டத்தைப் போல் வேடிக்கை பார்க்கிறேன்..

அதன் சலசலப்பு, யாருமற்ற வீதியில் எரிகிற சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் படுத்திருக்கும் நாயின் கண்கள் வாங்குகிற காட்சிகளைப் போல கனமானது.அரூபமானது.

நேற்றைய நிலவைப் பார்த்த படி படுக்கையை விரித்ததில் முகம் பார்த்து கதை பேசிய நிலவு பின் கொஞ்சம் கொஞ்சமாய் தலைக்குப் பின் நின்று விளையாட்டுக் காட்டையில் தொலைத்த பால்ய தோழியின் சாயலைக் கொண்டுவிட்ட நிலவை, இந்த விடியலில் ஆட்டோகிராப்பிற்குள் அடைபட்ட தோழியின் கையெழுத்திற்குள் தொலைந்துவிட்ட முகத்தைப் போல் தேடுகிறேன்.

என்னிடம் இப்போதும் இரண்டு ஆட்டோகிராப் டைரிகள் உண்டு.. உதட்டுச் சாயத்தை முத்தமென்று பதித்துக் கொடுத்த தோழியின் சாயல் இதழின் ரேகைகளில் ஆயுளை வளர்த்துக்கொண்டிருக்கும் இன்னொரு நிலவு தானென்று எப்போதும் தோன்றும்.

தேய்வதும், வளர்வதும் மட்டுமே வாழ்க்கையல்ல..

நின்று கவனிப்பதில் வளர்ந்தது தேய்வதும், தேய்ந்தது வளர்வதுமே நம் வாழ்விற்கான ஆகச்சிறந்த நிலாக்காலங்கள் என்று எண்ணுகிறேன்..

இப்போதும் என்னிடம் ஒரு பாடல் உண்டு..

அதையும் பகிர்ந்து விடுகிறேன் ;)

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில

#நிலாக்காலம் தொடரும்..

-ரேவா

வெள்ளி, 30 டிசம்பர், 2016

பெளர்ணமிப் பொழுதுகள்

மாதங்களின் வித்தியாசங்களைப் போல் மாறாத அதே நிலவு தான்..
ஆனால் உள்ளாடும் மனதின் அசைவுக்கு பொருந்திப் போகிற செளந்தர்ய இசை இந்த தனித்த?! வளர் நிலவுக்கு எப்போதும் உண்டு..

கோடையில் வளர் நிலவு கொஞ்சம் வித்தியாசமானவையாகவே என்னை எப்போதும் எண்ண வைத்ததுண்டு..

வியர்வையைக் கழற்ற தேடுகிற காற்றின் உடை மனதின் இசை(வு)க்கு அல்லது இரவுக்கு ஏற்ப பொருந்திப் போவது தான் இந்த இயற்கையின் பெருங்கருணை..

வெயில் காலங்களின் வழியே நாம் தரிசிக்கிற இரவின் நிழல் கொஞ்சம் வெட்கையானவையே.. அவை தொடரும் நம் நிஜ நிழல்களையும் அசைத்துப் பார்த்துவிடும் வல்லமை வாய்ந்தவை...

;)

நம்புகிறேன்..

வியர்வையை எழுத்தின் வழியாய் துடைப்பதின் மூலம்..

இயற்கைக்கு அல்லது நிலவுக்கு நான் சொல்ல நினைக்கும் நன்றி என்பது எப்போதும் எழுத நினைத்து மறந்துபோன ஆகச்சிறந்த சொல்லொன்றின் தவிப்பு..
அதை எழுதும் நிலாக்காலங்களின் ஒவ்வொரு பொழுதுகளிலும் நான் உணர்ந்ததுண்டு..

கோடை காலங்களின் என் வளர் நிலவு எனக்கு கொண்டாட்டமானவை..

பிடித்த ப்ளேவர் ஐஸ்க்ரீம் வழியாய் கெட்டிபட்டுப் போன வெயிலை வெளியில் எடுத்து, நிலவை ஸ்பூனாக்கி, நாவை இசை நரம்புகளாக்கி,உணவுக்குழாய் வழியே கரைகிற வெயில் இறுதியாய் சுவாசத்தை குளிராக்கித் தரும் உணர்வு போடுகிற தாளம் ஓரு கொண்டாட்டமான வெளிச்சத்தின் சுவை..

கிட்டதட்ட பிடித்தவர் ஒருவரின் வியர்வை மணம் போல அது அத்தனை போதை..

கரைந்து போன பழைய குளிர் நினைவை ப்ரீசரில் வைத்துக் கெட்டிப்பாக்கிக்கொள்ள நவீனம் கொடுத்துவிட்ட அல்லது கொடுத்துவைத்த இடம் இந்த வளர் நிலாக்காலங்கள்..

ஒவ்வொரு நாளிலும் கூடிக்கொள்கிற வெளிச்சத்தில், இரவுகள் ஏற்றிக்கொள்கிற ஒப்பனை ஓர் ஆடலலங்காரியின் நாட்டியச் சலங்கை..

அது பேசும் இசை நடப்பதின் பித்து..பித்தென்பது புரிந்துணர்வின் உன்மத்தம்..

கையில் மிராண்டாவை ப்ரீசரில் வைத்துக் ஐஸ்கட்டியாய் தன்னை உருமாற்றம் செய்துகொண்ட காத்திருப்பை, கைபொருக்கமுடியா குளிரோடு, உதடுகள் உறிஞ்சும் சுவையென்பது, வறண்ட பொழுதில் கிடைத்திட்ட ஒரு துளி நீருக்கான துடிப்பு..

மொத்தமாய் அதைச் சுவைத்துமுடித்துவிட்டு கைகளை நிலவுக்கு உயர்த்திப் பிடிக்க, மரத்துப் போன குளிர் கைகளை தட்டச்சுவதின் வாயிலாய் உருமாற்றம் செய்துகொள்ளமுடியுமென்ற இந்த காத்திருப்பையும் நான் வளர் நிலவோடு ரசிக்கிறேன்..வெளிச்சங்கள் பொறுக்க..

எல்லா வீடுகளும் இப்போது ஒரே குரலை இசைத்துக்கொண்டிருக்கிறது..

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் இங்கு யாரோ?
வந்து விழுகின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி

நிலாக்காலங்கள் வளரும்..

-ரேவா

பெளர்ணமி பொழுதுகள்

நிலவு வளரத் தொடங்கிவிட்டது.

மொட்டைமாடிச் சுவர்களில் பட்டுத் தெறிக்கும் நிலவின் வெளிச்சம் இம்முறை வித்தியாசமாய் விரிக்கிறது தன் நிழலை. பொங்கலால் புத்தாடை அணிந்து கொண்ட வீட்டின் சுவர் போட்டுக்கொண்ட அதிகபட்ச மினுப்பும் இந்த வெளிச்சத்திற்கு கூடுதல் காரணமாய் இருக்கலாம்.
மாடியில் வளர்க்கும் சொற்பச் செடிகளிடம் பேசும் காற்று, தன் ரகசியங்களை என் நாசியின் செவிகளில் சொல்லிவிட்டு பிரிகையில் இருக்கிற வாசம் ஓர் உன்மத்தம்.அது பிடித்தவர் கைகள் கோத்து அவனைப் பேசவிடாது, இதயத்தின் ஓசையில் கடல் தேடும் மெளனத்தின் உப்புச் சுவை.

கூடுபாய்ந்ததைப் போலொரு உணர்வு.
காற்றில் கைவிரித்து, எதுவும் துட்சமென்று நம்மை ஒப்புக்கொடுத்த பின், கிடைக்கிற கையளவே ஆன தனிமையில், நிலவுக்குத் துணையாய் இல்லை நிலவைத் துணையாக்கிக் கொண்டு நடக்கையில் தோன்றும் நடந்துபார்த்தல்கள் ஒரு வித சுயத்தின் மீட்புகளாய் தான் எனக்குத் தோன்றியிருக்கிறது.

சறுக்கல்களையும், மனிதக்கட்டிடங்களின் மேல் நாம் வளர்த்துக்கொண்ட செளகர்யங்களையும் அதனால் அடைபட்டுக் கொண்ட வட்டத்தில் ஏற்படும் மூச்சுத் திணறல்களையும், சரிசெய்வதற்கான கட்டுமானத்திற்கான தெளிவை நிலவோடான பேச்சு தந்துவிடும் தான்..

மனிதர்களை மீறி இயற்கையின் மீது கொண்டுவிடும் காதல், நம்மை ஒரு போதும் நிராகரிப்பதில்லை, வெறுத்து ஒதுக்குவதில்லை, தரவரிசைகளிட்டு நம்மை பின்னுக்குத் தள்ளுவதில்லை. முக்கியமாய் நம்மை அது நாமாகவே ஏற்கிறது என்பதில் நம் உயரத்தின் மீது நாம் கொள்ளும் காதல் அலாதியானது தான்.

வெயில் காலம் தொடங்கிவிட்டதற்கான வெட்கை காற்றில் கலந்திருந்தாலும், மனதின் சூழலுக்குப் பழகிப் போன தனித்த நிலவு?! தாங்கிப் பிடிக்கிறது நமக்கான தட்பவெட்பத்தை..
தனித்த நிலவு !

எத்தனை பெரிய பொய்யென்று எனைப் பார்த்து நட்சத்திரங்கள் கேலி பேசுகிறது.. நம் பொதுபுத்திக்குள் ஏறிக்கொண்டுவிடும் தனிமையின் பெயர் தனிமை தானா என்று இப்போதெல்லாம் கேள்வி எழுகிறது..
தடுக்கி விழுந்தா தூக்கிவிட எங்கிருந்தோ வர்றவங்க இருக்கிறவரைக்கும் நாம் தனிமையில் இல்லைங்கிற வசனம் இப்போ நியாபகம் வருது.

மொபைலில்
மூங்கில் போலே விளைந்தொரு மங்கை இருக்க
துளைக்கும் வண்டாய் மனதை துளைத்தாய் நீயே
வண்ண மலர் உண்டு….
வெள்ளி அலை உண்டு……
வருடிடும் காற்றென உலவ போ
பற்றிடும் கொடியொன்று
பசும் புல் மடியுண்டு
நீர் துளியை போல தழுவ போ
இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு
உனது திறமைகள் அங்கு பலிக்குமோ
நீயும் விலையாட நூறு இடம் உண்டு
அனுதினம் வருத்துதல் நியாயமோ
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்
இந்த இள மனம் இளகிடவே
என்னை என்னை செய்தாய் வேங்குழலே வேங்குழலே
பாடல் காற்றோடு சேர்ந்துகொண்டு இந்த இரவில் என்னை நிலவுக்குத் துணையாக்கி கரைக்கிறது..
நான் கரைகிறேன் நிலவின் ஒளியென,
மிதக்கிறேன் காற்றின் கையென..
உடைகிறேன் உச்சரிக்கப்பட்டாத சொல்லொன்றின் தூரமென..
வண்ண மலர் உண்டு….
வெள்ளி அலை உண்டு……
வருடிடும் காற்றென உலவ போ
பற்றிடும் கொடியொன்று
பசும் புல் மடியுண்டு
நீர் துளியை போல தழுவ போ
நிலவு வளரத் தொடங்கிவிட்டது.


-ரேவா