உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

பெளர்ணமிப் பொழுதுகள்

மாதங்களின் வித்தியாசங்களைப் போல் மாறாத அதே நிலவு தான்..
ஆனால் உள்ளாடும் மனதின் அசைவுக்கு பொருந்திப் போகிற செளந்தர்ய இசை இந்த தனித்த?! வளர் நிலவுக்கு எப்போதும் உண்டு..

கோடையில் வளர் நிலவு கொஞ்சம் வித்தியாசமானவையாகவே என்னை எப்போதும் எண்ண வைத்ததுண்டு..

வியர்வையைக் கழற்ற தேடுகிற காற்றின் உடை மனதின் இசை(வு)க்கு அல்லது இரவுக்கு ஏற்ப பொருந்திப் போவது தான் இந்த இயற்கையின் பெருங்கருணை..

வெயில் காலங்களின் வழியே நாம் தரிசிக்கிற இரவின் நிழல் கொஞ்சம் வெட்கையானவையே.. அவை தொடரும் நம் நிஜ நிழல்களையும் அசைத்துப் பார்த்துவிடும் வல்லமை வாய்ந்தவை...

;)

நம்புகிறேன்..

வியர்வையை எழுத்தின் வழியாய் துடைப்பதின் மூலம்..

இயற்கைக்கு அல்லது நிலவுக்கு நான் சொல்ல நினைக்கும் நன்றி என்பது எப்போதும் எழுத நினைத்து மறந்துபோன ஆகச்சிறந்த சொல்லொன்றின் தவிப்பு..
அதை எழுதும் நிலாக்காலங்களின் ஒவ்வொரு பொழுதுகளிலும் நான் உணர்ந்ததுண்டு..

கோடை காலங்களின் என் வளர் நிலவு எனக்கு கொண்டாட்டமானவை..

பிடித்த ப்ளேவர் ஐஸ்க்ரீம் வழியாய் கெட்டிபட்டுப் போன வெயிலை வெளியில் எடுத்து, நிலவை ஸ்பூனாக்கி, நாவை இசை நரம்புகளாக்கி,உணவுக்குழாய் வழியே கரைகிற வெயில் இறுதியாய் சுவாசத்தை குளிராக்கித் தரும் உணர்வு போடுகிற தாளம் ஓரு கொண்டாட்டமான வெளிச்சத்தின் சுவை..

கிட்டதட்ட பிடித்தவர் ஒருவரின் வியர்வை மணம் போல அது அத்தனை போதை..

கரைந்து போன பழைய குளிர் நினைவை ப்ரீசரில் வைத்துக் கெட்டிப்பாக்கிக்கொள்ள நவீனம் கொடுத்துவிட்ட அல்லது கொடுத்துவைத்த இடம் இந்த வளர் நிலாக்காலங்கள்..

ஒவ்வொரு நாளிலும் கூடிக்கொள்கிற வெளிச்சத்தில், இரவுகள் ஏற்றிக்கொள்கிற ஒப்பனை ஓர் ஆடலலங்காரியின் நாட்டியச் சலங்கை..

அது பேசும் இசை நடப்பதின் பித்து..பித்தென்பது புரிந்துணர்வின் உன்மத்தம்..

கையில் மிராண்டாவை ப்ரீசரில் வைத்துக் ஐஸ்கட்டியாய் தன்னை உருமாற்றம் செய்துகொண்ட காத்திருப்பை, கைபொருக்கமுடியா குளிரோடு, உதடுகள் உறிஞ்சும் சுவையென்பது, வறண்ட பொழுதில் கிடைத்திட்ட ஒரு துளி நீருக்கான துடிப்பு..

மொத்தமாய் அதைச் சுவைத்துமுடித்துவிட்டு கைகளை நிலவுக்கு உயர்த்திப் பிடிக்க, மரத்துப் போன குளிர் கைகளை தட்டச்சுவதின் வாயிலாய் உருமாற்றம் செய்துகொள்ளமுடியுமென்ற இந்த காத்திருப்பையும் நான் வளர் நிலவோடு ரசிக்கிறேன்..வெளிச்சங்கள் பொறுக்க..

எல்லா வீடுகளும் இப்போது ஒரே குரலை இசைத்துக்கொண்டிருக்கிறது..

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் இங்கு யாரோ?
வந்து விழுகின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி

நிலாக்காலங்கள் வளரும்..

-ரேவா

0 கருத்துகள்: