உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

பெளர்ணமி பொழுதுகள்

நிலவு வளரத் தொடங்கிவிட்டது.

மொட்டைமாடிச் சுவர்களில் பட்டுத் தெறிக்கும் நிலவின் வெளிச்சம் இம்முறை வித்தியாசமாய் விரிக்கிறது தன் நிழலை. பொங்கலால் புத்தாடை அணிந்து கொண்ட வீட்டின் சுவர் போட்டுக்கொண்ட அதிகபட்ச மினுப்பும் இந்த வெளிச்சத்திற்கு கூடுதல் காரணமாய் இருக்கலாம்.
மாடியில் வளர்க்கும் சொற்பச் செடிகளிடம் பேசும் காற்று, தன் ரகசியங்களை என் நாசியின் செவிகளில் சொல்லிவிட்டு பிரிகையில் இருக்கிற வாசம் ஓர் உன்மத்தம்.அது பிடித்தவர் கைகள் கோத்து அவனைப் பேசவிடாது, இதயத்தின் ஓசையில் கடல் தேடும் மெளனத்தின் உப்புச் சுவை.

கூடுபாய்ந்ததைப் போலொரு உணர்வு.
காற்றில் கைவிரித்து, எதுவும் துட்சமென்று நம்மை ஒப்புக்கொடுத்த பின், கிடைக்கிற கையளவே ஆன தனிமையில், நிலவுக்குத் துணையாய் இல்லை நிலவைத் துணையாக்கிக் கொண்டு நடக்கையில் தோன்றும் நடந்துபார்த்தல்கள் ஒரு வித சுயத்தின் மீட்புகளாய் தான் எனக்குத் தோன்றியிருக்கிறது.

சறுக்கல்களையும், மனிதக்கட்டிடங்களின் மேல் நாம் வளர்த்துக்கொண்ட செளகர்யங்களையும் அதனால் அடைபட்டுக் கொண்ட வட்டத்தில் ஏற்படும் மூச்சுத் திணறல்களையும், சரிசெய்வதற்கான கட்டுமானத்திற்கான தெளிவை நிலவோடான பேச்சு தந்துவிடும் தான்..

மனிதர்களை மீறி இயற்கையின் மீது கொண்டுவிடும் காதல், நம்மை ஒரு போதும் நிராகரிப்பதில்லை, வெறுத்து ஒதுக்குவதில்லை, தரவரிசைகளிட்டு நம்மை பின்னுக்குத் தள்ளுவதில்லை. முக்கியமாய் நம்மை அது நாமாகவே ஏற்கிறது என்பதில் நம் உயரத்தின் மீது நாம் கொள்ளும் காதல் அலாதியானது தான்.

வெயில் காலம் தொடங்கிவிட்டதற்கான வெட்கை காற்றில் கலந்திருந்தாலும், மனதின் சூழலுக்குப் பழகிப் போன தனித்த நிலவு?! தாங்கிப் பிடிக்கிறது நமக்கான தட்பவெட்பத்தை..
தனித்த நிலவு !

எத்தனை பெரிய பொய்யென்று எனைப் பார்த்து நட்சத்திரங்கள் கேலி பேசுகிறது.. நம் பொதுபுத்திக்குள் ஏறிக்கொண்டுவிடும் தனிமையின் பெயர் தனிமை தானா என்று இப்போதெல்லாம் கேள்வி எழுகிறது..
தடுக்கி விழுந்தா தூக்கிவிட எங்கிருந்தோ வர்றவங்க இருக்கிறவரைக்கும் நாம் தனிமையில் இல்லைங்கிற வசனம் இப்போ நியாபகம் வருது.

மொபைலில்
மூங்கில் போலே விளைந்தொரு மங்கை இருக்க
துளைக்கும் வண்டாய் மனதை துளைத்தாய் நீயே
வண்ண மலர் உண்டு….
வெள்ளி அலை உண்டு……
வருடிடும் காற்றென உலவ போ
பற்றிடும் கொடியொன்று
பசும் புல் மடியுண்டு
நீர் துளியை போல தழுவ போ
இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு
உனது திறமைகள் அங்கு பலிக்குமோ
நீயும் விலையாட நூறு இடம் உண்டு
அனுதினம் வருத்துதல் நியாயமோ
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்
இந்த இள மனம் இளகிடவே
என்னை என்னை செய்தாய் வேங்குழலே வேங்குழலே
பாடல் காற்றோடு சேர்ந்துகொண்டு இந்த இரவில் என்னை நிலவுக்குத் துணையாக்கி கரைக்கிறது..
நான் கரைகிறேன் நிலவின் ஒளியென,
மிதக்கிறேன் காற்றின் கையென..
உடைகிறேன் உச்சரிக்கப்பட்டாத சொல்லொன்றின் தூரமென..
வண்ண மலர் உண்டு….
வெள்ளி அலை உண்டு……
வருடிடும் காற்றென உலவ போ
பற்றிடும் கொடியொன்று
பசும் புல் மடியுண்டு
நீர் துளியை போல தழுவ போ
நிலவு வளரத் தொடங்கிவிட்டது.


-ரேவா

0 கருத்துகள்: