உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
பயணக்கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணக்கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஜூலை, 2013

பயணங்கள் முடிவதில்லை......

        



             பயணங்கள் எப்போதும் அழகானவை அதை ஏதாவது ஒரு விதத்தில் கூடுதல் அழகாக்கிப்போக  நம் எல்லாப்பயணத்திலும் ஏதோவொன்று சேர்ந்தே நம்மோடு பயணிக்கிறது. பயணங்களில் ஜன்னலோரத்து மழைதூரலாய் சிலிர்ப்பை ஏற்படுத்தும் சுகானுபவம் குழந்தைகளோடு பயணிக்கையில் மட்டும் கிடைக்கும் ஒன்று...வாழும் காலத்தில் வரங்களை கொடுப்பவர்கள் குழந்தைகளாக மட்டுமே இருக்க முடியுமென்பது எவ்வளவு பெரிய உண்மை...

           எத்தனை ஆழ்ந்த பார்வை அவர்களது, எத்தனை அழகான உலகம்,என்ன ஒரு  நேர்த்தியான சிந்தனை, , தோற்றுபோவதைக்கூட பாவத்தோடு சொல்லும் அந்த பாங்கிற்காகவாவது சின்ன சின்ன சீண்டல்களை செய்யச்சொல்கிறது மனம்.. குட்டி குட்டி பாவங்களில் தான் எத்தனை அழகான வசீகரம், பொதுவாக பயணங்கள் எல்லோருக்கும் பிடித்தமானது அதுவும் ஜன்னலோர இருக்கைகளோடு பயணிக்கையில் கிடைக்கும் சுகம் என்றைக்கும் தனியானது தான்...

          யாருமற்ற சாலை, அடர்மரங்கள் நிறைந்திருக்கும் இடங்களில் கதிரவனை தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் கிளைகள், தன் கீழ் உள்ளவர்கள் மேல் கதிர்களை படவைக்காது பாதுகாத்து சாலையின் இருபுறங்களையும் அரவணைத்திருக்க, பேச எடுக்கும் வார்த்தைகளைக்கூட களைத்துப்போடும் காற்று காதுக்குள் புகுந்து இன்னிசை நடந்த, ஒப்பனை இல்லா புன்னகை எல்லோர் உதட்டையும் மெருகேற்ற, கூடுதல் அழகாய் குழந்தைகளும் இணைந்துகொண்ட பயணத்தில்  இளையராஜாவும் இணைந்துகொண்டால், அடடா, வாழும் நாட்களுக்குள் வந்து விழுந்த சொர்க்கம் தானே.
 

          எப்போதும் எதுவும் மாறாமல் பயணப்படும் இயந்திர வாழ்க்கையில் எப்போதேனும் வந்தமரும் இம்மாதிரியான பயணங்கள் ஏதோ ஒரு மாற்றுவிசையை மனதிற்கு தந்துபோகமட்டும் மறுப்பதில்லை... இன்றைக்கும் அப்படியான பயணம் தான் தங்கையின் கல்லூரி அலுவல் விசயமாய் சிவகங்கையை நோக்கிய பயணம், எதோ ஒரு வித அயர்ச்சி ஆரம்ப நேரத்திலே உடன் அமர்ந்து கொள்ள எதையும் கவனிக்காது பயணப்பட்ட நேரத்தில் தான் உள் நுழைந்தது அக்குட்டிப்புயல், கிட்டத்தட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தன் கட்டுப்பாட்டில் அனைவரையும் கட்டிவைத்தது...உள் தைத்த என் சோகத்தின் அடர் இருளை மறைத்து பிரகாசங்களை வாரிகொடுத்தது அம்மலர்செண்டு...அவள் இறங்குவதற்கான இடம் வந்ததும் தாவிவந்து என் மடி ஏறிக்கொண்டு அக்கா உன் போனை எனக்கு தரியா, உனக்கு சாக்லெட் தாரேன்னு சொன்ன அழகில் இன்னும் இனித்துக்கிடக்கிறது மனம்... எத்தனை அழகான தேவதைகள் குழந்தைகள் அவளை அணைத்துக்கொண்ட அந்த நிமிடத்திலிருந்து கும்மாளமிட்ட மனது கிட்டத்தட்ட என் கட்டுபாட்டை இழந்து துள்ளிக்குதித்ததை நினைத்து நானே வியந்துகொண்டேன்...

       கல்லூரியை அடைவதற்கான இரண்டு மணி நேரப்பயணமும் அந்த இளம் தளிரோடு போனதில் நேரமென்பதே தெரியாமல் போனது... ஒரு வழியாய் கல்லூரியில் வேலைகளை முடித்து திரும்பையில் அதே அயர்ச்சி, பேருந்திற்கான காத்திருப்பும் கூடுதலாய் அயர்ச்சிகொடுக்க, சேர் ஆட்டோவெனும் ஆபத்பாந்தவர்களை!?... நம்பியே ஆரம்பித்தோம் நானும் என் தங்கையும். இருவர் மட்டுமான பயணம் எப்போதும் நிரம்பி வழியும் ஆட்டோவில் நானும் அவளும் மட்டும் என்பதே கூடுதல் கனமாய் தெரிய, ஏதோ சொல்லத்தெரியா பயமொன்று உள் நின்று எக்காளமிட்டது... மனதைச்சுற்றி வட்டமடிக்கும் பல எண்ணங்களில் சுற்றிய எதுவும் லயிக்கவில்லை, ஆனாலும் எதிர் இருக்கை மட்டும் வந்த பயணத்தின் குழந்தையின் முகம் கொடுத்தது இடையிடையே ஆட்டோ ஓட்டு நரின் மொபைல் பேச்சு நிழலை உடைத்து நிஜத்தை காட்டி  கூடுதல் பயம் கொடுக்க, ரேவா நீ என்ன தான் வீராப்பா பேசுனாலும் நீயும் ஒரு பெண்ணுன்னு அம்மா சொல்லும் அந்த வார்த்தை ஏனோ இன்று அதிகம் வலிக்க கொடுத்து காற்றோடு அடி நாசிவரை ஊடுருவி கிளம்ப, இடையிடையே ஓட்டு நரின் பார்வை கண்ணாடி வழியே எங்களை ஊடுருவ, கதை மாந்தர் பலர் கதை சொல்ல ஆரம்பித்தனர் மனதில், திரைகாட்சி மனதில் விரிய, கத்தியில்லாமல் சத்தமில்லாமல் ஒரு சண்டைக்காட்டி மனதோடு மல்லுக்கட்ட, பயணம் ஆரம்பிக்கையில் எடுத்த மூச்சு எங்கோ ஒரு சாலையின் முடிவில் ஒரு மூதாட்டி வந்தமர்கையில் தான் சாவகாசமாய் விட முடிந்தது... அப்பாட்டியும் அவர் பாணியில் எங்களை கடிந்து பேச ஆரம்பித்தார்..

 ஏந்த்தா படிச்ச புள்ளகளா தெரியுறீகளே இப்படியா ஒரு வயசுப்பையன் ஆட்டோல தனியா ஏறுவீக, இப்போ இந்த கிழவிய அவன் தள்ளிட்டு எதாவது பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க காலங்கெடக்கிற கெடயில....ம்ம்ம்ம் நாங்களலாம் அந்த காலத்துலன்னு கூடுதல் பயமேற்றி வெற்றிலை பாக்கை குதப்பலானார்... யாரும் ஆட்டிவிடாமலே ஆடிக்கொண்டிருந்த பயத்தின் ஊசல் பாட்டியின் பேச்சில் கூடுதலாய் ஆடத்தொடங்கியது.. 

       ஒருவழியே நெடுச்சாலைகளை கடந்து மனித நடமாட்டங்கள் ஆரம்பிக்கையில் தான் சாய்ந்து கொள்வதற்கான தைரியம் மனதில் வந்தமர்ந்தது...இறுதியாய் இரண்டு மணி நேரப்பயணம் முடியும் தருவாய் பணம் கொடுத்து திரும்புகையில்  அந்த ஆட்டோ நண்பர் 
தங்கச்சி இன்னைக்கு எம்புள்ளைக்கு பொறந்த நாளுத்தா இந்தா மிட்டாய்ன்னு நீட்டினார்...
மனம் அறுத்துக்கொண்டே பதில் பேசாது வாங்கிவந்தேன் அந்த மிட்டாயை... மனிதர்களை எடைபேடுவதில் நாம் இன்னும் மோசமான மனிதர்களாகவேதான் இருக்கிறோமென்று நினைத்துக்கொண்டேன்...இதோ கணினித்திரைக்கு மிக அருகில் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் மிட்டாய் பேப்பரில் அந்த குழந்தையும் அந்த ஆட்டோக்கார சகோதரனும்....

சனி, 9 ஜூன், 2012

பயணங்கள் புதிதில்லை...ஆனாலும் புதிதாய்.....


வணக்கம் உறவுகளே... அனைவரும் நலமா?.... கவிதை தளத்தில் பயணங்கள் பற்றி பகிர்ந்திட நினைத்ததின் நோக்கம், சில பயணங்கள் நாம் நினைத்ததையும் தாண்டி ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்திவிட்டு போகும், அப்படி எனக்குள்ளான மாற்றங்களை எழுத்தில் ஏற்றிடத்தான் இந்த பதிவு... ஏற்கனவே என் சென்னை வாழ்க்கையை பற்றி தொடர ஆரம்பிச்சு இன்னைக்கு தொடரமுடியாமல் இருப்பது வருத்தமா இருந்தாலும், இதுவும் சென்னையப்பற்றிய பதிவுதான்ங்கிறது கொஞ்சம் ஆறுதலான விஷயமா இருக்கு...

சென்னை எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர்ன்னு சொல்லலாம்..எப்பவும் ஓடிட்டே இருக்கிற மனுசங்க, பரபரப்பா எதையாவது தேடிட்டே இருக்கிற முகங்கள், கொஞ்சம் அசந்தாலும் முளைச்சலவை மூலம் சாயம் போக காத்திருக்கும் வாழ்க்கைன்னு பல முகங்களை தனக்குள்ள வச்சுக்கிட்டு சக்கரமா சுத்துற ஊரு... சென்னையில வேலையவிட்டு வந்தப்பயெல்லாம் மாதம் ஒரு தடவைன்னு சென்னைக்கு போய் என் நினைவுகளை புதுப்பிச்சுட்டு வருவேன்... இப்ப அப்படியெல்லாம் இருக்க முடியலை... குடும்ப சூழல் ஒரு பக்கம் கழுத்தை நெறிக்க, சென்னை தந்த நினைவுகள் கொஞ்சம் கனக்கன்னு காலம் எப்படியோ போயிட்டு இருக்கு...வருடம் ஒன்னாச்சு சென்னைக்கு போயி.. என் நினைவுகளை சுமந்துகிட்டு இருக்கிற பழைய இடங்கள் எல்லாம் எப்படி இருக்கும்ன்னு அப்ப அப்ப நினைச்சு பார்க்கிறது உண்டு...

இப்ப மே மாதம் இறுதியில் சென்னைக்கு போகுற வாய்ப்பு கிடைச்சது... பல எதிர்பார்ப்புகளை சுமந்துகிட்டு தாயத்தேடி ஓடும் பிள்ளையா சென்னைய நோக்கி வந்தேன்...அப்பப்பா எத்தனை மாற்றம் இந்த ஒருவருட காலத்தில் சென்னை சந்திச்சிருக்கு... சென்னையில எனக்கு மனசுக்கு நெருக்கமான இடம்ன்னா டி. நகர் வீதிகள் தான், நான் வேலை பார்த்த பகுதியென்பதால் அங்கு அங்கு என் பிள்ளை குறும்புகள் கொட்டிக்கிடக்கின்ற இடம் அது...
டி நகர் வீதியில் தொடங்கி போக் ரோடுகள் வரை ரொம்ப பரிச்சையமான வீதிகள்.. காலமாற்றத்தில் வந்திட்ட மாற்றங்கள் தான் எத்தனை எத்தனை...

  நான் சென்னையில பணிபுரிந்த காலங்களில் தான் லூக்காஸ் பாலம் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாகின, அப்ப எல்லாம் அந்த இடம் வாகன நெருக்கடிகளால் மூச்சுத்தெணரி நிற்கும்.. இன்று பணிகள் நிறைவடைந்து அதோட பிரம்மாண்ட தோற்றத்தப்பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாகவும், பல சோகங்களை போக்க அந்த கட்டுமானப்பணிகளுக்கு வெளி ஊர்ல இருந்து வந்து டெண்ட் போட்டுகிட்டு வேலை பார்த்த அந்த சகோதரர்களின் முகமும் நினைவுக்கு வந்து போகுது...

எப்போதும் பஸ் பயணித்தில் அதோட அழகை ரசிச்ச எனக்கு என் தம்பியோட இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சியாகவும் புது சந்தோஷத்தையும் தந்தது..அவனுக்கு பழக்கப்பட்டுப்போன இந்த வசதிகளுக்கு பின்னான ஆரம்ப கட்ட செய்திகளை சொல்லிகிட்டே அந்த இடம் விட்டு நகர்ந்தேன்...

அடுத்து என்னோட பல நினைவுகளை ஒளிச்சு வச்சுகிட்டு இருக்கிற இடம் கோயம்பேடு வீதிகள், நாதன்ஸ் கபேல தொடங்கி கோயம்பேடு மார்கெட், விஜயகாந்த் கல்யாண மண்டபம், அப்பறம் ரோகிணி தியேட்டர் வரைக்கும் பஸ்க்காக காத்திருந்த நாட்களில் தோழமைகளோடு கதை பேசி நடந்ததுண்டு, இன்று மெட்ரோ ரயில் திட்டத்திற்க்கான வேலைகளால் பழைய முகத்தை கொஞ்சம் மறைச்சுவச்சுகிட்டு என்னை வரவேற்றது அந்த வீதிகள்.. சில நினைவுகளை மீட்டெடுத்து மீளமுடியா நினைவுகளோடு திரும்பி வந்தேன்... கோயம்பேடு நிறுத்ததில் அமர்ந்துகொண்டு பல சாயல் கொண்ட முகங்களையும் மனிதர்களையும் எவ்வளவு நேரம் வேணாலும் பார்க்கிற தியானம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

அடுத்து கோடம்பாக்கம் வீதிகள், ஹாஸ்டலுக்காக அலையோ அலையோன்னு நண்பர்களோட அலைஞ்ச இடம், என் வயதிற்கே ஆனா குறும்புத்தனங்களால் பிரச்சனைகளை ஹேண்ட் பேக்ல போட்டுட்டு சுத்துன சந்தோஷ காலம்...கோடம்பாக்கம் ரயில் நிலையத்துல டிக்கெட் கவுண்டருக்கு எதிரில் இருக்கும் இரண்டாவது இருக்கைகளில் எப்போதும் அமர்ந்திருக்கும் என் நண்பனின் முகம் இன்னும் அவ்விடங்களை கடக்கும் போதெல்லாம் என்னை பார்த்து சிரிப்பதாய் ஒரு உணர்வு...இவ்வீதிகளும் மெட்ரோ திட்டத்தில் மாறித்தான் போயின.

டி. நகருக்கு அடுத்து நான் பணிபுரிந்த இடம் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ளது..ஆரம்பத்தில் இந்த வீதிகளின் மீது பெறிதும் ஈடுபாடு இல்லாமல் போனாலும் போகப்போக ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு... சென்னையோட இன்னொரு முகம் ஜெமினி தொட்டாலே தெரிஞ்சிடும்..அந்த பரந்த வீதிகளில் பயணம் செய்யுறதே அலாதிதான், அதுவும் இரவு நேரங்களில் 29C க்கு காத்துகிடந்து கூட்டத்தில காணமப்போற பலருல நானும் ஒருத்தி...
எப்படியோ வாழும் சூழலை மாத்திக்க பலரும் போன சென்னைக்கு நானும் போனேன்..ஆனாலும் என் மதுரைக்கு அடுத்து நான் அதிகம் நேசிக்கிற இடம் சென்னை தான்...ஆரம்பகாலத்தில் சென்னை மீது வெறுப்பு வந்தாலும் வாழும் முறைய சொல்லிக்கொடுத்தது சென்னை தான்...தோல்விகளும் வலிகளும் அதிகம் என்றாலும் வாழ்வை சொல்லிகொடுத்தது சென்னை தான்......

சென்னை பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே இருப்பேன்...இந்த பயணம்  நான் நினைச்ச படி இருந்ததான்னா இல்லைன்னு தான் சொல்லனும், இங்க பழைய நினைவுகளை புதுப்பிச்சுக்கிட்டாலும் அந்த நினைவுகளை தந்த பல உறவுகள் இன்னைக்கு காலப்பிரட்சியால காணமப் போனதும், பல நண்பர்களின் கல்யாணத்தின் மூலம் நட்புக்கு முற்று புள்ளி வைத்ததும், பலர் தொடர்பை துண்டித்தும், துண்டிக்கப்பட்டும் தொலைந்து போன நட்பின் தொலையா நினைவுகளால் ஒருவாறு மனம் கனத்து போய் தான் அந்த நினைவுகளை எடுத்துட்டு வந்தேன்... இறுதியா சொல்லனும்னா I Miss You...................


I miss you all the time, but I miss you most when i lay awake at night and think of all the wonderful times we spent with each other; for those were some of the best times of my life.


எதிர்பாராமல் சென்னை வந்ததால் பல உறவுகளை சந்திக்க முடியவில்லை, அதற்கு இந்த பதிவின் மூலம் மன்னிக்க வேண்டுகிறேன்...