
ஒவ்வொரு வருடத்தின் இறுதியும் அச்சுறுத்துவதாய் இருக்கும் மாயக் குகையின் கைவிளக்காய் இருக்கிறது..
கடந்து வந்த கரடுமுரடான பயணங்கள் பலவற்றிலும் கை சேர்ந்த அனுபவம், துணிச்சலின் துணையோடு புத்தாண்டிற்குப் போக பணிக்க,
இன்னுமொரு குகை, புரியாத குகை வாழ்க்கை, வாழ்க்கை அங்கே நிறுத்தி
வைத்திருக்கும் புலனாகா சூட்சுமங்களோடு, உடன் பயணிப்பவர் மொழியறிய, குணம்
புரிய, கையகப்படுத்திய சிக்கி முக்கிக் கல் உரசலில் பெறப்போகும்
வெளிச்சங்களென, ஒரு டைனோசரின் மிச்சத்தை சுமந்தலையும் பல்லியாய் நமை
மாற்றி வைத்திருக்கும் இவ்வாழ்க்கையை வியப்போடு பார்க்கிறேன்.
நாம் கண்டெடுத்த மொழியும், கற்றுத் தேர்ந்த அறிவும் ஒன்று சேர்ந்து
உண்டாக்கிய சக்கரமே, வெளிச்ச உரசல்களுக்கு விடையாய் போக, அறிவு கண்டெடுத்த
இச்சக்கரம் விதவிதமாய் நமை குழைத்து பாண்டமாக்கி உலவ விட, அதில் சேகரமாகிய
விசயங்களைக் கொண்டு தான் திருந்தங்களெனும் ஏர், மன வயலை
உழுகிறது...விதைக்கும் அனுபவங்களிலிருந்து முளைக்கும் ஒவ்வொரு பயிரெனும்
வெற்றியின் நடுவில் நமை அசைத்துப் போடும் தோல்வியின் களை வளர்ந்துகொண்டே
தானிருக்கிறது.. களையத் தெரிந்தவனையும் காலம் கொண்டாடிக்கொண்டேதானிருக்கிறது..
சக்கரம் ஓடி ஓடி நம்மை கொண்டு வந்திருக்கும் இத்தூரம் பயணக் களைப்பை
கொடுக்க, இளைப்பார கிடைக்கும் நிழல் தான் இவ்வருடத்தின் இறுதி நாளெனும்
நினைப்பு வேரென எழுகிறது மனதிற்குள்...
மனம் இந்த வருடத்தின் ஒட்டுமொத்த காட்சியையும் குகையோவியமாய் மனதிற்குள் வரைந்து பார்க்கிறது.
எத்தனை எத்தனை நிறமான மனிதர்கள், அவர்களில் தான் எத்தனை விதமான குணங்கள்
இத்தனையும் தாண்டி செஞ்சாந்து நிறத்தில் திலகமிட்டு விடும் அனுபவத்தைக்
கொடுத்த இவ்வருடத்தை, பிரிய தோழமையை வழியனுப்பையில் உண்டாகும்
மூச்சடைப்போடு வழியனுப்பி வைக்கிறேன்...
இவ்வருடம் முழுதும் வாழ்க்கையை உயிரோடு தான் நகர்த்தியிருக்கிறேன் என்பதற்கு
அடையாளமாய் வந்து சேர்ந்த ப்ரியங்களும், துயரங்களும், தோல்விகளும்,
வெற்றிகளுமாய் கைக்கோர்த்து அடுத்த வருடத்திற்குள் கைதூக்கி அனுப்பி விட,
என் ப்ரிய தோழனே போய் வா...
நேரம் கிடைக்கையில் எல்லாம் என் மனக் குரங்கு உன் கிளை தேடி வரும்......
நிச்சயம் உன் கிளைகள் எனக்காய் சில விசயங்களை ஒளித்தே வைத்திருக்குமென்பதை,
புத்தன் மறைத்து வைத்திருக்கும் புன்னகைக்குள் இருக்கும் ஈரமெனக்கு
உணர்ந்துகிறது..
போய் வா நண்பா....
எனை நீ அழைத்து வந்திருக்கும் இக்காலத்திற்காய் நன்றி...
மீண்டும் என்றேனும் ஒரு நாளில் கோப்பை தேனீரோடு என் அருகமர்வாய்...கதைபேசிச் சிரிப்பாய்...
இப்போது உனக்கு சொல்லிக் கொள்வதெல்லாம்
குழந்தை மொழியோடே
ஒரு குட்டி டாட்டா........................
போய் வா நண்பா..
-ரேவா
பூங்கொத்து நின் பார்வை
களி நடனம் உன் சிரிப்பு
ஊழிக்கூத்து உன் கோவம்
மேகக்கூட்டம் உன் ஊடல்
மழைச்சாரல் நின் தீண்டல்
கோப்பை தேனீர் உன் அணைப்பு
பெருங்கடல் உன் நேசம்
நான் என்பவள் உன் வரைக்கும்...
இறுதியாய் முகம் பார்க்கும்
மயான சடங்கிற்கும் அழைத்தே செல்கிறாய்
அதுவரை அறியாத உயிர் பயமொன்று
உள்ளுக்குள் உதறலெடுக்க
கனவுகளை எரியூட்டி
கண்ணிர் குடமுடைத்து
திரும்பிப்பார்க்கமலே அங்கிருந்து கடக்கிறாய்
பழக்கப்பட்ட கையசைப்பிற்கும்
தோள் சாய்தலுக்கும்
வழியின்றி மறைய
வரைந்து போகிறாய்
சிறு புள்ளியை
உயிரடங்கும் பொழுதுகளைவிட
உயிரோடிருத்தலே வலிதருவதாய் இருக்கும்
இவ்வேளையில்
மிச்சமிருக்கும் ஞாபகங்களையும்
எரித்துவிட்டு அங்கிருந்து நகர
மறைத்தலின் பொருட்டு
வந்து விழுந்த
மழை
எதன் பொருட்டு
எதற்காக பெய்யத் தொடங்கியதென்று
தெரியாமலே வந்துசேர்ந்தேன்
நான்....

ரொம்ப நாள் கழித்து மனது சொன்ன ஒரு விசயத்தை
எழுத்தில் ஏற்றுவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாவும், நிறைவாவும்
இருக்கு..முகனூல் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை தருது..
சிலருக்கு தன் துயரங்களின் வடிகாலாகவும், சிலருக்கு துயரங்கள் ஆரம்பமாகும்
இடமாகவே கூட முகநூல் இருக்கு..ஆக யார் எங்க இருக்காங்கங்கிறது அவரவரின்
தெளிவைப்பொறுத்த விசயமா இருக்க, இந்த முகனூல் வால் எல்லாத்துக்கும்
முக்கியமான விசயமா மாறிப்போயிடுது இல்லையா, என் எண்ணத்தில், அசைபோடலில்
இருக்கிற விசயத்தை எழுத்திலிட்டு சுவற்றில் பதிவு செய்தவுடனே அது எனக்கு
சொந்த மில்லாத ஒன்னா போயிடும் பட்சத்தில் வாழ்க்கையும் அப்படி ஒன்னாத்தான்
எனக்கு தெரியுது, அடடா ரேவா ஏதோ அட்வைஸ்ஸோ இல்லை வேற ஏதோ சொல்லப்போறான்னு
நினைச்சா அப்படி எதுவும் இல்லவே இல்லை... இது முழுக்க முழுக்க என்
பால்யத்தின் கரைகளை வேடிக்கை பார்க்கும் பதிவு தான் எனக்கு...
பொதுவா நம் உலகம் நம்ம சுற்றியிருக்கிற ஒரு 10, 20 குடும்பங்களோட முடிஞ்சு
போயிடுறது இல்லாட்டியும் கூட ஆரம்பிக்கிற இடம் இதுவாத்தான் இருக்கும்..
அப்படி என்னை சுற்றியிருக்கிற ஒரு 20 குடுத்தினக்காரர்கள் மத்தியில் என்
சிறுவயது நட்பாய், பகைவீழ்த்தியாய், சொத்தாய், என் எண்ணங்களை கை வழி
பயணத்தின் மூலம் பிரதிபலிக்கிற ஒரு கரும்பலகையாய் எனை வளர்த்தது என்
வீட்டிற்கு எதிரிலுள்ள காம்பவுண்ட் வால் தான்... ஒரு 15 குடுத்தினதாரர்களை
மொத்தமாய் அடைத்து வைத்திருக்கும் அந்த கட்டடத்தில், என் போன்ற
பிள்ளைகளுக்கு பெரிய அரணாய் இருந்ததே அந்த வால் தான்...
எப்போதும்
பள்ளி முடிந்து சாயங்காலம் வீடு தேடி ஓடிவருகையில், இன்றைக்கான தன் களம்
தயாராகிவிட்டதென்ற மகிழ்ச்சியில் வாஞ்சையாய் எனை பார்த்து அந்த சுவர்
புன்னகைப்பதைப்போல் எப்பவும் எனக்கு தோன்றும்... பிள்ளைகளோடு சேர்ந்து
கண்ணாமூச்சி விளையாட்டில் கண்களை மூடிக்கொள்ள, தோள்கொடுத்து நான்
சாய்ந்துகொள்ள முதல் நட்பாய் இருந்தது அந்த காம்பவுண்ட் சுவர் தான்...
இன்றைக்கு சில நெல் மணிகளோடு ”அ” வென்ற எழுத்தை எழுதிப்பார்ப்பது
சம்ரதாயமாய் மாறிவிட்ட சூழலில் என் முதல் அ வை முழுதாய் சுமந்து நிற்கும்
அந்த சுவரை, என் பால்யத்தின் நீட்சியாகவே பார்க்கின்றேன்...
முதன்
முதலாய் வந்து சேரும் முதல் அத்தனையையும் சேர்த்துவைத்திருக்கிற அந்த
சுவற்றை வெறும் செங்கலென கடந்து செல்பவர்கள் மத்தியில் எனக்கு எப்போதுமே
அச்சுவர் அப்படியாய் இருந்ததே இல்லை..
ஒரு நீளச்சுவரில் ஆளுக்கு
இவ்வளவென்று பிரித்துக்கொண்டு, தனக்கான தன்னை வெளிக்காட்டிக்கொள்ள பெரும்
உதவியாய் இருந்ததும், பங்கிட்டுக்கொள்வதிலிருக்கும் சந்தோஷத்தை குடும்ப
அல்லாது சொல்லிக்கொடுத்த ஒரு உயிரற்ற ஜீவன் அச்சுவர்
மட்டுமே..ஓடிப்பிடித்து விளையாடுதலில் ஜெயித்தவர்களின் பெயர்களை தாங்கி
நின்று, அடுத்த போட்டிக்கு வென்றுவிட வேண்டுமென்ற உத்வேகத்தையும், அழகழகான
வண்ணமலர்களை வரைந்து, பார்வை நீருற்றி அதை வதங்கவிடாமல் பாதுகாத்து,
அனைத்துக்கும் உயிர்கொடுத்து பார்க்கச் சொன்ன தன்மையையும் எனக்குச்
சொல்லிக்கொடுத்தது அச்சுவர் மட்டுமே...
கெளரவச் செங்கலால் எழும்பி
நிற்கும் மனிதர்களைக் காட்டிலும் எனக்கு எப்போதும் அச்சுவரில்
தனிப்பிரியம் தான்.பொய் வேசம் பூணத்தெரியாதது கூட அதன் மீது தனிப்பிரியம்
வரக்காரணமாய் இருந்திருக்கலாம்... ஒவ்வொரு வயதின் முதிர்ச்சியிலும்
ஆசைப்பட்ட, அசைப்போட்ட பல விசயங்கள் அங்கிருந்தே ஆரம்பித்தது,
சாக்பீஸ்ஸைப்பிடித்து அ வென்று சொல்லி அனைவரையும் கவனிக்க வைத்த இடத்தில்
நான் ஒரு ஆசிரியராய் ஆகவேண்டுமென்ற எண்ணம் துளிர்த்தது... அழகாய்
வரைகிறாயென்று எதிர்வீட்டு அத்தை சொன்ன பொழுதொன்றில் ஓவியராய்
வந்துவிடவேண்டுமென்ற ஆசை வளர்ந்தது... கண்டதில் காணாத ஒன்றை கண்டு
சொல்லயில் கவிஞராய் வந்துவிடவேண்டுமென்ற கனவும் தொடர்ந்தது, இப்படி
படிப்படியாய் ஆசைகளின் மேகக்கூட்டங்களை அத்தனையும் வாங்கிக்கொண்டு நான்
வாழ்வில் என்னவாய் ஆகப்போகிறேனென்ற எண்ணத்தை தெரிந்துவைத்துக்கொண்டு ஒரு
மர்மப்புன்னகை புரியும் தீர்க்கதரிசியாகவே எனக்கு தெரிகிறது அச்சுவர்...
பிள்ளைக்கண்ணீரை, பால்யக் கனவை, முதல் முதலில் ஆண்னென்பவன் என்னிலிருந்து
வேறுபட்டவனென்ற உணர்வை, நட்புக்குள் கட்டுப்பாடு விதிக்க கற்றுக்கொண்ட
எல்லைக்கோட்டை எனக்கு கொடுத்ததெல்லாம் அச்சுவர்... உயிரற்ற ஒன்றை போகின்ற
இடமெல்லாம் தூக்கிச்சுமத்தல் கஷ்டமென்று தான் அந்த பாழாய்ப்போன கடவுள்
நினைவைப்படைத்தானே என்னவோ, எப்போதெல்லாம் என் கண்ணீர் உடைபட்டு தெரிக்குமோ
அப்போதெல்லாம் சாய்ந்துகொண்டு என் கண்ணீரை வாங்கியதும், இன்றும் அந்த
ஈரக்கண்ணீரை ஒவ்வொரு மழை நாளின் போதும் தரிசிக்க கொடுப்பதும் எனக்கு
வியப்பாய் தான் இருக்கும்..
வயதுகளை கடந்தும், வயோதிகத்தில்
முதிர்ந்தும் போனாலும், சில கட்டுமானங்களால் மீள் தோற்றத்திற்கு
திரும்பிவிடும் இச்சுவர் எப்போதும் எனக்கு பாஸிட்டிவ் வைப்ரேஷனை
தரத்தவறுவதே இல்லை...
இதோ இப்போதும் தீபாவளி பண்டிகைக்காய்,
இன்னும் தான் வளர்த்துவிடக் காத்திருக்கும் புது புதுப்பிள்ளைகளுக்காய்,
வெள்ளை உடையெடுத்து போட்டுக்கொண்டிருக்கிறாள்... இவ்வெள்ளை வர்ணமென்னவோ என்
வாழ்க்கைகான வசந்தம் வந்துவிட்டதாகவே என்னை நம்பச்சொல்கிறது....
அச்சுவரோடு நானும் வந்து அமரக்காத்திருக்கும் அவ்வர்ணத்திற்காய் எழுப்பிவைக்கிறேன் என் எண்ணச்சுவரை......
-ரேவா
இன்றைக்கான நாள்
எப்போதும் போல
புன்னகை தவழ
எதிரினில் இருக்கும் எவருக்கும் புரிந்திடா
உதட்டுசாயமென மாறின பழக்கம்
அலுவலக தொடர்பு
மாலை தாண்டிய களைப்பு
தவறவிட்ட வாய்ப்பு
தட்டிக்கழிக்க காரணம்
தடுமாற்றம் தந்த அவமானம்
பதிலடி கொடுத்த வன்சொல்
பேருந்து நெரிசல்
எதிரினில் எரிச்சலென
ஏகபோகமாய் இந்நாள் கழிய
இன்றைக்கு தனியாய் கவிதைகளில்லை
என்னிடம்...
பேசுவதற்காகத்தான்
உனை வரச்சொன்னேன்
வரும்வழியெல்லாம் மனம்
பேசியச்சொற்களின் அயற்சி
உனைபார்த்ததும் ஓய்வெடுத்துகொள்ளுமென
சத்தியமாய் நினைக்கவேயில்லை
மெளனமாய் இந்த நிமிடம்
துளி புன்னகையில்லை
சினேக விசாரிப்புகள் இல்லை
நம்மிடையே சூழ்ந்திருந்த
அந்த உன்னத உணர்வும்
இந்நிமிடம் கிடைக்கவில்லை
உன் பார்வையின் வழியே நினைவோட்டம்
கொஞ்சம் நிதானித்து இருக்கலாம் தான்
என்ன செய்ய
பேசமாலே கிடக்கும்
என் சொற்களை
காதலெனும் சிறகெடுத்து
நானுனக்கு மாட்டிவிட்டபின்
இலக்கின்றி பறந்தலைந்த பொழுதொன்றில் தான்
எங்கோ தொலைத்திருந்தேன்
என் ஒற்றைச்சிறகை
சில்லு சில்லாய் சிதறிக்கிடக்கும்
பிரியங்களின் வார்த்தைகளிலெல்லாம்
நிறைந்து கிடக்கின்ற முகம்
இறைத்து போட்டபடியிருக்கிறது சபையேறா பேச்சுகளை
கதைசொல்லி களைத்து போகின்ற இடம்
காரணமின்று சிரித்துப்பார்த்த தடம்
எது என்னை உன்னை நோக்கியிழுத்ததென்று
நினைப்பை கொடுத்த களம்
அத்தனையும் தாண்டி
கடல் மணலின் பாதங்கள் பரப்பி விளையாடும்
பிள்ளைமனதாகிப்போகின்ற
ப்ரியத்தின் முன்
வெட்கங்களை உண்டு
வேட்கைகளை நிறைவேற்றும் உன் தளமெனக்கு
அன்னியமாய்பட்ட போதும்
அடுத்தடுத்த எடையிழப்புகளால்
நிலைகுலைந்து போன சுயம்
உன் முகமெடுத்து கொண்ட போதும்
உனது விருப்பங்களுக்கு முன்
பலியிடப்படும் எனது கனவுகளைபற்றியோ
காணாமல் போகும் வார்த்தைகளைபற்றியோ
பற்றற்றுபோன
பற்றுதலை பற்றி
யாதொரு கவலையுமுனக்கு இல்லையென்ற போதும்
தொலைத்திருப்பேனென்று
தெரிந்திருந்தால்
நண்பனாகவே இருந்திருக்கலாம்
நீ