உடையவர்களே உரிமையானவர்கள்..
அண்ணனிடம் பேசிக்கொண்டிருக்கையில் சுவாசத்தை நெறித்த இரண்டே இரண்டு வார்த்தைகள் இவை.. அழைப்பேசியை துண்டித்து முடித்த பின்னும், விபத்தில் உடல் துண்டாவதை, உணர்வு, மூளைக்கு அனுப்பி அதை நாமே வேடிக்கை பார்க்கிற போது, நம் கண்களில் இருக்கிற வலி போல இருக்கிறது இந்த வரிகள்..
சொற்களை நமக்கான ஏந்திவருகிற அத்தனை பேரும் நமக்கான தேவதைகள்...
மூச்சடைக்கிறது..
சுவாசிப்பதற்கு யாரேனும் கொஞ்சம் சொற்களைக் கொடுத்தால் தேவலாமென்று தான் இருக்கிறது. இருப்பென்பது எதிலிருந்து தொடங்குகிறது என்பதை இப்போதும் யோசிக்கிறேன்..
இருப்பது என்பது இருப்பாகுமா? அல்லது இல்லாத பின்னும் இடம் பிடிக்கிற சொற்களுடைய மனிதர்களின் இருப்பை, இருப்பென்று மட்டும் சொல்தல் சரியாகுமா? சொற்களோடு விளையாடும் அர்த்தங்கள் ஒரு கூட்டு சமையல் தான்.. விரும்பிய சுவையின் தேர்வு நமக்கான அருமருந்து..
யாரிடமும் இப்போதெல்லாம் சொற்களின் பொருட்டு மண்டியிட விருப்பமில்லை.. கூடுடைய பறவைகளை, அதன் திசையிலிருந்து பார்க்கிற கண்களைக் கொடுத்துவிட்ட காலத்தின் முன், அதன் பறத்தலை மரம் ரசிக்கிறது அல்லது அது அப்படி தான் நிகழ்ந்தாகவேண்டுமென்ற வேரின் போக்கை தக்கவைத்திருக்கிறது.
கிளையுதிர்தலும், இலையுதிர்தலும் ஒன்றாவென்று வேரிடம் கேட்கும் மனதில், வேறிடம் இல்லையென்பதே வேர் அறிந்த ரகசியம் என்ற வார்த்தை விளையாட்டுகளில் மனம் லயிப்பற்றுக் கிடக்கிறது. ஆனாலும் எல்லாவற்றிலும் வேர்பிடித்திருக்கிறது.
நம்பிக்கையற்றுவிட்ட நம்பிக்கையிலே பிழைத்திருக்கப் பிரியப்படுகிறேன். நெருங்குவதற்கான கதவுகளை முழுக்க மூடிக்கொண்ட பின்னும், இருள் திறந்துவிடப் பிரியப்படுகிற சுவாசித்தலுக்கான வெளிச்சம் நிலவாய் மட்டும் இருந்துவிட்டுப் போகட்டும் என்பதில் மனம் கெட்டிப்படுகிறது.
என் டைரிகள் என்னை வந்து சேராத இந்த காலத்திலும், எனக்கான இடத்தை, நான் மட்டுமே வளர்க்கிற என் வனத்தை, தொலைந்த வழிப்போக்கன் ஒருவனின் பாடலில் தென்பட்ட சுகத்தைக் கொண்டு கடக்கப் பிரியப்படுகிறேன்..
.
மிச்சமிருக்கிறவரை அத்தனையும் செலவுகள்
என்ற எனதிந்த வரிக்குள்ளே நான் பத்திரமாகிக்கொள்கிறேன்...
-ரேவா
1 கருத்துகள்:
டைரிக் குறிப்புக்கள் அருமை.
கருத்துரையிடுக