உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 15 ஜனவரி, 2016

முகங்கள் (அருணா அக்கா)






மனிதர்கள் மீதான நம்பிக்கை தளர்ந்திடும் போதெல்லாம், தளர்வினும் மேலான அதிபலத்தை மனதிற்கு பாய்ச்சுபவர்களும் மனிதர்களாகவே தான் இருக்கிறார்கள்.

ஒன்றின் முகத்தை இன்னொன்றில்  நாம் பார்க்க நினைக்கும் போது ஏற்படுகிற அனுபவம்?!, நம் மனம் சார்ந்த அறிவின் விளக்கு..  

ஒளிச்சித்திரங்கள் நம் கைவண்ணங்கள்..  

அதில் ஒரு வண்ணம் இது  

அருணா அக்கா! சட்டென்று நாம் கடந்து போய்விடுகிற ஒரு சாமானிய மனுசி.. எனக்கும் அவர்க்குமான அறிமுகம் என் கல்லூரிக் காலங்களில் computer class க்கு அருகிலே Beauty parlour ஒன்றில் வேலைக்கு சேர்ந்த ஒருத்தியாகத் தான் எனக்குத் தெரியும்

சட்டென்று நம் மனிதத் திமிர் மீது ஏறிக்கொள்கிற நிறம் சில நேரங்களில் பச்சோந்தியை விட மோசமானது. அதை இன்றைய அனுபவத்தின்? வழியே உணர்கிறேன், அப்போதிருந்தே யாரையும் அருகில் அமர்த்திப் பேசுவதென்பது என்னளவில் கைவராத காரீயம்.. மனம் ஒத்துழைத்தால் மாறிப்போகிற என் சுபாவம் அருகிருப்பவர் மட்டுமே அறிந்த ஒன்று

தினமும் போய் வருவதில் அந்த முகம் ஏந்தியிருக்கும் சிரிப்பிற்கு பின்னிருக்கும் ஏதோ ஒரு பகிரப்படாத வேதனை வார்த்தைகள் தேடித் தவிப்பதாய் எனக்குத் தோன்றும். ஆனாலும் யார் வார்த்தைகளையும் அவர் அனுமதித்தாலும், வரையறைக்குள் வரையறை வைத்திருக்கிற என் அகராதி கொஞ்சம் அகராதி தான். :) 

முதன் முதலாய் Beauty parlour பிரவேசம். ஒரு வேற்றுகிரகவாசியாகிப் போன என் நிலையை இன்று நினைத்தாலும் எனக்கு சிரிப்புத்தான் வரும். அப்படியே என் சக தோழிகளோடு கிளாஸ் முடிந்ததும் வாய்ப்பிருக்கும் போதெல்லாம் பேசுகிற வாய்ப்பை முதல் முறை. நானே தேடிப் போய் அக்காவிடம் ஏற்படுத்திக்கொண்டேன். அதிகப் பிரசங்கித் தனமென்று மனம் சில நேரம் சொன்னாலும், நம்மால் கொடுக்க முடிந்த வார்த்தைகள் என்பது மீளமுடியாதென்ற நினைப்பில் இருப்பவர்களுக்கு ஒரு பெரும் பலம்..
அதை இப்போதும் நம்புகிறேன்

அது சரியாகுமா? இல்லையா என்றெல்லாம் தெரியாது, மனம் சில நேரங்களில் குருட்டுத்தனமாய் கையிலெடுத்துக்கொள்கிற மனதின் குணம் என்னை என்னளவில் நேர்மையாய் வழி நடத்தியிருக்கிறது என்றே இப்போதும் நம்புகிறேன்

வருடங்கள் பலவற்றை தின்றும், இப்போதும் எங்களிடம் தீராத வார்த்தைகள், எங்களின் வெயிலுக்கான நிழல். இதை அவரிடம் கூட நான் வெளிப்படுத்தியது கிடையாது. அவருக்கும் இதுபோன்றதொரு எண்ணமிருக்கிறதா என்றெல்லாம் கூட எனக்குத் தெரியாது. அன்பு ஓர் உள்ளார்ந்த அனுபவம். அது தன்னைத் தானே வெளிப்படுத்திக்கொள்ள நினைக்கும் தருணங்களைத் தவிர, மற்ற நேரங்களில் சும்மாய் கிடந்து அதை வேடிக்கை பார்ப்பது எனக்கு பிடித்த ஒரு விசயம்

அக்காவின் தனிப்பட்ட வாழ்க்கை மீதும், அதன் ரகசியங்கள் மீதும் எனக்கு எப்போதும் கேள்விகளோ, அந்த கேள்விகளோடான ஈர்ப்போ இருந்ததே இல்லை. புருவத் திருத்தத்திற்காக உட்காரும் நிமிடங்களில் கிடைக்கிற சொற்ப வார்த்தைகளோ அல்லது அந்த நிமிடங்களில் கிடைக்கிற மெளனத்தால் மனதில் பரவுகிற அமைதியோ எங்களுக்கு கொடுப்பது தனி பீல்.. 

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அக்காவின் வார்த்தைகள் ஒரு ஊற்றாகி என் முன் ஊறிக்கொண்டே கிடக்கும், அதை ஒரு பெளர்ணமியின் மொட்டைமாடி ரசித்தலைப் போல் அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பேன், காதுகளை வைத்து

சில நேரங்களில் அதீத உற்சாகமாகியிருக்கும் அவர் குரல், பல நேரங்களில் சலிப்பின் எல்லைக்குள் ஓர் தீவிரவாதத்தைப் பண்ணிக்கொண்டு நிற்கும். அப்போதெல்லாம் ஒரு கோமாளித்தனத்தை நான் ஏற்றுக்கொண்டுவிடுவது பின் வந்து பார்க்கையில் என்னை எனக்கே ஆச்சர்யப்படுத்துவது

அக்கா 35-ல் இருந்து 40 வயதிற்குள் இருக்கக்கூடியவள் என்பது இப்போதும் என் எண்ணம். திருமணமாகி 6 மாதத்திலே கணவனை இழந்து, கருவை சுமந்திருந்தவள் என்பது பழக்கத்தின் பின் நாட்களில் நான் தெரிந்துகொண்டது. அக்காவிற்கு வலது கண்ணில் சுத்தமாய் பார்வை இல்லை. இதையெல்லாம் இங்கே பதியவேண்டுமென்ற அவசியம் கூட இல்லை தான். இருந்தாலும் நம்மை நாம் சுமப்பதில், நம் கைமீறும் கட்டுப்பாட்டை சில நேரங்களில் கம்பேர் மைண்ட் என்னும் மோசமான சாத்தான் தட்டிப்பறித்திடாது இருக்கவே இதைச் சொல்கிறேன்

இருந்தாலும் இதுவும் ஒரு கம்பேரிசன் தான்
 எதற்கும் எதற்குமானது என்பது உங்களுக்கானது?  

வாழ்க்கையின் அத்தனை மேடுபள்ளங்களையும் ரசித்துக்கடப்பது என்பது அதை அப்படியே ஏற்பதால் மட்டுமே கிடைப்பது என்பதை சமீபங்களில் உணர்கிறேன்.. 

அக்காவிற்கு ஓரே பையன்..இப்போது அவன் கல்லூரி முதலாமாண்டு படிக்கிறான். அவன் பெயர் கூட எனக்குத் தெரியாது அல்லது ஞாபகத்தில் இல்லை

எப்போதும் குடும்பம் சார்ந்தோ இல்லை கைவிட்டுப் போன என் வேலை குறித்தோ என் நண்பர்கள், என் எழுத்து என எதாவது ஒன்றைக் குறித்தோ அன்றைய பேச்சு இருக்கும். எப்போதேனும் தப்பித் தவறி வந்துவிட்ட நாளிதழ்களில் என் கவிதையை படித்ததாகவும், ஒன்றுமே புரியவில்லை என்பதும் ஒரு புகாராக இருக்கும்.  

பார்வை குறைப்பாட்டால் தவறிவிடும் புருவத்திருத்தங்களின் கச்சிதத்திற்காய் சில நேரங்களில் வருகிற வாடிக்கையாளர்களிடம் திட்டுவாங்கிக்கொண்டு கைபிசைந்துகொண்டிருக்கிற அக்கா, என்னை எப்போதும் புருவத்திருத்தத்திற்கு வேறு இடத்திற்கு போகச் சொல்வாள், அவளுக்குத் தெரியாது, இது அவளை அணுக எனக்குக் கிடைத்த வாய்ப்பென்பது.  

நான் மறுத்திருக்கிறேன்..
பத்தோ பதினைந்தோ நாட்களில் வளர்ந்துவிடுகிற மயிர் என்னளவில்  
புற அழகை ஒத்திப்போடுவதால் என்ன கேடு நேர்ந்திடப்போகிறது


இதை ஒட்டி எப்போதும் எங்களிடம் வாக்குவாதம் உண்டு.. 
அந்த வாதங்களின் பிற்பாதியில் அவள் நேர்த்தியின் மீது அவளுக்கு நம்பிக்கையைக் கொண்டுவந்திருந்தது. ஆக அந்த வாக்குவாதங்கள் பின்னாட்களில் அப்படியே படிப்படியாக குறைந்தும் போயிற்று. 
 

அக்காள் சொந்தமாய் ஒரு பார்லர் தொடங்கினாள். கணிசமானபவர்களின் வருகை அவளுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கக்கூடும். 
தெம்பானாள்.. 

நவீனம் சில நேரங்கள் கொடூர அரக்கன்.  
தனக்குப் பொருத்தமில்லாதவரென்ற தன்முனைப்பு இல்லாதவரை தன் அசூரப்பசிக்கு விழுங்கிவிடும். நிறைய நவீன பார்லர்கள், வாய்க்குள் வராத ஆங்கிலப்பெயரில் அழகேற்றம் செய்ய, அது எதுவுமில்லா அவளும், அவள் பார்லரை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியும் காலத்தின் முன் ரசமிழந்து நிற்பதாய் எனக்குத் தோன்றும்

அவ்வப்போது அவள் பார்லர் சார்பில் நானும் கல்யாண பெண்களுக்கு மெஹந்தி இட்டும் விட்டிருக்கிறேன்

பின் நம் தனிச்சூழல், மனம்நம் வாழ்வு என்ற சுய நலப்போக்கு பார்லருக்குள் நுழையும் போதெல்லாம் நலம் விசாரிப்போடு எழுந்து வந்திருக்கிறேன்

நேற்று முன் தினமும் அப்படித்தான். பொங்கல் வேலைகளுக்கான ஏற்பில் உடல் சோர்வும், ஏதோ ஒரு மனச்சோர்வும்  இயங்கவிடாது இருக்கையில் அவள் கடைக்குள் சென்றுவிடலாமென்று தோன்றி சென்றுவிட்டேன்.. 

என் நண்பர்களை, பின் காலவட்டத்தில் ஓர் அரைப்புள்ளியாகக்கூட இல்லாமல், காணாமல் போவதை எல்லாம் அவள் பார்த்திருக்கிறாள், என் வார்த்தைகள் வெளிவராமல்.. அவளுக்குப் புரிந்திருக்கலாம். நான் என் மனதையோ வார்த்தைகளையோ சட்டென்று யாருக்காகவும் திறந்துவிடுவதில்லை. அவருக்கும் கூட..

நேற்று முன் தினம் சட்டென்று ஜெயகாந்தனைப் பற்றியும், புத்தரைப் பற்றியும், சுஜாதாவின் எழுத்துலகம் பற்றியும் அவள் பேச ஆரம்பிக்க நான் பிரம்மிப்பின் பித்தில் போய் நின்று கொண்டேன். சட்டென்று என்னை நானே ஒங்கி அறைவதைப் போன்ற உணர்வு. ஒரு உருவத்தின் மீது நாம் ஏற்றிக்கொள்கிற கனம் யாரின் கனம்? இதில் நம் அனுபவம் என்பது யாரின் கற்றல்? அல்லது யாருடைய கற்பித்தல்? ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி தொற்றிக்கொண்டது. அவளுக்கு பேஸ்புக் பற்றியும் அந்த மாய உலகத்தின் பின்னிருக்கும் விஷம அரசியல் பற்றியும், டிவிட்டர், கூகிளென்றும், உள்ளூர் விசயங்கள் குறித்தும் பேசியிருக்கிற எனக்கு ஏன் புத்தகங்களைப் பற்றி அவரிடம் பேசவில்லை என்று தோன்றியது

நாமே ஒரு யூகத்தில் எடுத்துக்கொண்ட அடுத்தவர்களின் அறிவை, நம் அறிவால் எந்தமுறையில் அளவிடுவது? அவள் நேற்றைக்கு ஒரு திறந்த புத்தகமாகி, எழுதா என் பக்கங்களில் எழுதிக்கொண்டிருந்தாள். நான் பிழைகண்டு நடுங்கிய சோர்வின் பிழைகளை அவள் பேசப் பேச திருத்திக்கொண்டே இருந்தேன்.. 

கிளம்பையில் எண்ணங்கள் வலிமையானது ரேவா என்றாள்
 
சட்டென்று தூக்கிவாரிப் போட்டது எனக்கு, என்னோடு இயங்குகிற என் அத்தனைபேருக்கும் தெரிந்த விசயம் நான் அடிக்கடி உபயோக்கிற வாக்கியம் இது.. மே பீ அவரிடமே கூட இதை நான் சொல்லியிருக்கலாம்.. 

நாம் கொடுக்கிற ஒன்று, நமக்கு வேறொன்றாய் திரும்பிவருவதை, எந்த ஒன்றின் ஒன்றால் என்று தேடிக் கொண்டிருக்கவேண்டிய தேவையில்லை. வருவதை ஏற்பதால் வாழலாம்.. 

அவரிடம் கனிவாய் பேசிவிட்டு, பழக்கப்படாத பொங்கல் வாழ்த்தையும் சொல்லிவிட்டு வந்தேன்.

 இனி அவளிடம் பேச நிறைய கதைகள் இருக்கிறதென்கிற உற்சாகம் எனக்கு போதுமானதாய் இருந்தது, எஞ்சிய விழாக்காலங்களைச் சுத்தப்படுத்த

இம்முறை புருவத்திருத்தம் முன்பை விட அழகாய் இருப்பதாய் என் தங்கை வேணி சொல்லிவிட்டாள்.. 

இதைவிட வேறென்ன வேண்டும், திருத்தம் வேண்டும் மனதிற்கான திருப்பத்திற்கு.. 

முகங்களைப் படிப்போம்..

இன்னும் பேசுவோம்

-ரேவா 







1 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

எண்ணங்கள் வலிமையானது...
உண்மைதான்.
ஆளை வைத்து எடை போடுவதால்தான் பலரை நாம் சரியாக அறிய முடிவதில்லை....
அருணா அக்கா அருமை.