உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
காதல் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 ஜனவரி, 2013

புரியாக்காலமது



இன்றோடு வருடம் ஆறாக, என் நினைவுதனில் வற்றாது ஓடும் ஒரு பிரவாகமாய்  நீ உருவெடுத்திருக்கிறாய், இன்னும் இன்னும் ஆழமாய்.
ஒரே பார்வையில் பருகிவிட முடியா ஆழத்தில்  நீ இருக்கிறாய் என்பது மட்டும் திண்ணம்..எப்படி ஆரம்பம் என்ற புள்ளியில் தெளிவில்லையென்றாலும் அமர்களமாய் நீ மனதமர்ந்த காலம் என்றும் எனக்கு விழாக்காலம் தான்..

 மழைக்கு ஒளிந்து கொள்வதின் பொருட்டு, என் துப்பட்டா தூரலில் பதியமிட்ட அந்த பார்வைக்குப்பின் பல மழையை சந்தித்தாகிவிட்டது, ஒன்றிலும் உன்னை சந்தித்த உற்சாகமில்லை என்பதே உண்மை..பிரிதொரு நாள் என் இருக்கை அருகில் வந்தமர்ந்த தினம் யுத்தம் செய்யும் எந்தன் உள்ளத்தின் ஓசை நீ அறிந்திருப்பாயா என்று நான் அறியேன்.. 
ஆர்பாட்டமில்லா உன் புன்னகை, கர்வத்தை மறைக்கும்  உன் குறும்பு மீசை, திருத்தம் செய்த உன் புருவம், பாங்காய் எடுத்த வகிடு, கையோடு இட்டிருந்த அந்த மஞ்சள் கயிறு, நெற்றி நடுவில் சின்னதாய்  குங்குமம் இவையெல்லாம் உனக்கு கூடுதல் அழகை கொடுக்கத்தான் செய்தது..

ஹாய் மேம், இப்படித்தான் ஆரம்பித்தாய்..

உங்கள எங்கையோ பார்த்திருக்கேனே என்பதைப்போல் நான் ஆரம்பமானேன்..

கிட்டதட்ட குட்டி மழையொன்று சில்லென்று என் நெஞ்சம் நனைக்க, மழைவிட்டதும் வெரித்திருக்கும் வானத்தை போல் அழகு நிறைந்ததாய் இருந்தது அன்றைய தினம்..பரஸ்பரம் அறிமுகம் முடிந்தாகிற்று, தொலைபேசி எண்ணுக்குள் நுழைந்து கொண்டு குறும்பு செய்தது என் நெஞ்சம்..அதை உணர்ந்தவனாய் உடன் கொடுத்தாய் உன் எண்ணை..
வீடு வந்தாகிற்று விற்றுத்தீர்த்த பலாப்பழத்தின் வாசம் போல விடாது துரத்தியது உன் வாசம்.. ஏதே ஏதோ குழப்பம் கொண்டு அனுப்ப நினைத்து அழித்த குறும்செய்திகள் எண்ணிக்கையில் 100த்தொட, என்னை நான் திட்டிக்கொண்டே தூக்கிப்போனேன்...

காலை 6 மணி இப்போதெல்லாம் என் மூன்றாம் கைகளாய் மாறிப்போன கைப்பேசியை எடுத்து பார்த்துத்தான் ஆரம்பமாகும் என் அத்தனை நாளும், இன்று மட்டும் ஒரு ஆனந்தவிருட்சத்தை விழிக்கு தந்தது, குட் நைட் என்னும் குறும் செய்தியில் தொடங்கி அன்பு தாங்கி அனுப்பட்ட அத்தனை குறும்செய்திகளாலும் நிறைந்து வழிந்தது என் கைப்பேசி..என்ன நினைப்பான் என்னை என்ற எண்ணம் மேலிட, சின்னதாய் மன்னிப்பில் தொடங்கி வைத்தேன் அன்றைய நாளை..அதன் பின் பதிலேதுமில்லாது போனது, அதைப்பற்றி நினைப்பேதுமில்லாமல் மூழ்கிப்போனேன் எந்தன் வேலையில்..

ஏதோ புரியாத உணர்வு தொண்டை நெருக்கி, புலப்படா வலிவந்து கண்ணீரில் முடிக்க, விதி அமைத்துகொடுத்த பயனாய் வந்து நிறைத்தது அவன் அழைப்பு
பரஸ்பர பேச்சிலும் பிடிபடா ஏதோ ஒரு உணர்வை அவனோடு பேசையில் உணர்ந்தேன்... பின்னும் இரவும் பகலுமென எங்கள் நேரத்தை தின்று தீர்த்தது எங்கள் இரவுக்குமான பிடிபடா ஏதோ உணர்வு...

உடைத்து பேசிவிடவேண்டுமென்ற எண்ணத்தில் துளிர்த்துக்கொண்டிருந்த மனஒத்திகைகளை இனம் கண்டவனைப்போல் என் அருகில் வந்தான்

இன்னைக்கு ஈவினிங் நம்ம ஆபிஸ் பக்கத்தில இருக்கிற காபிடேக்கு போவோம் வர்ஸிதா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..

ம்ம்ம்ம் ஒகே பார்க்கலாம் ப்ரியன்...

உள்ளுக்குள் உற்சாகக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டாலும் வெளியே எதுவும் நடக்காதைப்போல் காட்டிக்கொள்வது எத்தனை பெரிய சங்கடமென்பதை அன்றே உணர்ந்தறிந்தேன்... 6 மணிக்கு இதோடு 6000 முறை கடிகாரம் பார்த்தாகிவிட்டது, நகராத கடிகாரம் உலக அழிவை கண்முன்னே நிறுத்துவதைப்போலொரு மாயையைக்கொடுக்க, நிறுத்திக்கொள் உன் கற்பனையை என்பது போல் 6 மணியை நெருங்கியது...

இதோ கண்முன் திரையிட்டு நாடகம் நடத்தும் எங்கள் உணர்வுகளுக்கு காதலெனும் பெயர் சூட்டுவிழா நடந்தேறிக்கொண்டிருக்கிறது...

இருவருக்குள்ளும் ஒளிந்து விளையாடிய காதல் பிள்ளையை கண்டெடுத்து இதோ வருடம்  6 ஆக, காதலியலை முழுதாய் படிக்கும் முயற்சியில் ஒவ்வொரு நாளும் புதுப்புது பாடம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது....
நினைவுகளில் எப்போதும் சூல் கொண்டு எங்களை சுமங்கும் அஸ்திவார நியாபங்களே எங்களின் அந்த புரியாக காலங்கள் தான்.....

ஒவ்வொரு சமாதானங்களுக்கு 
பின்னும் 
முளைத்து வரும்
அத்தனை விருட்சமும் 
காதலே.....

  - ரேவா

செவ்வாய், 1 மே, 2012

சிந்துவாகிய நான்............



                மை இருட்டு கேள்வி பட்டிருக்கின்றேன், இது என்ன மையிட்ட என் கண்களை கூசச்செய்யும் இருட்டு... இந்த எகத்தாள வார்த்தைகளை உதிர்த்த படி நானிருக்க, அங்கு தான் அவன் முதல் காட்சி காணக்கிடைத்தது..பள்ளி பருவத்தேர்வு ஒன்றில், என் பள்ளிக்கு தேர்வெழுதவந்த அவன் நிறத்தை பரிகாசித்து, பிள்ளைகுறும்பை அவனிடம் கொட்ட, சிறுபிள்ளை மனம் கொண்ட அவன் கூனிகுறுகி நின்ற இடம் இன்னும் மனக்கண்ணில் திரையிட, மன்னிப்பு என்னும் வார்த்தை மூலம் நண்பனாய் அறிமுகமானான்.. 

பள்ளி தேர்வுகள் முடியும் தருவாயில், பிள்ளை மனம் கொண்ட அவனின் நட்பும் ஆட்டோகிராப் நோட்டில் தஞ்சம் புகுந்தது.காலப்போக்கில் கரையான் அரிக்கும் பக்கமாய் நட்பின் நினைவுகள் ஒவ்வொன்றையும் காலக்கரையான் அரிந்து தின்றுகொண்டிருந்த காலமது. கல்லூரி வளாகத்தில் சேர்க்கை விவரம் அறிய நின்றிருந்த இடத்தில் மீண்டும் துளிர்ந்தது எங்கள் நட்பு,, மோகன் இதுதான் அவன் பெயர். இந்த பெயரை தன் அம்மாவிற்க்கு அடுத்து நானே அழைப்பதாய் அடிக்கடி சொல்லிக்கொள்வான். கல்லூரியில் எல்லாருக்கும் மோகன் என்றால் கரிச்சட்டி என்று தான் அறிமுகமாகியிருந்தான். இவன் அதிர்ந்து பேசி ஒரு நாளும் நான் பார்த்ததில்லை. அன்று அந்த சம்பவம் நடக்கும் வரை....உனக்கும் சிந்துக்கும் காதலாமே, உனக்கு எங்கயோ மச்சமிருக்குடா? உன் கலருக்கு அவளா என்னால நினைச்சே பார்க்கமுடியலடா? என்னத்த காட்டி அவள மயக்கின சொன்னா நாங்களும் முயற்சி பண்ணுவோம்ல இந்த வார்த்தை கேட்கும் வரை பொறுமையாய் இருந்த மோகன் மிகவும் உணர்ச்சி வயப்பட்டு அவர்களுடன் சண்டையிட என் தோழிகளின் வாயிலாய் இந்த பிரச்சனையை அறிய கல்லூரி வளாகத்திற்க்கு செல்லுவதற்க்குள் தலைமை நிர்வாகிகளால் மோகனும் பிற நண்பர்களும் இடை நீக்கம் செய்ய பெற்றனர்..

 இதுவரை உணராத அவன் இருப்பை அவன் இல்லாத இந்த பத்து நாட்களில் உணர்ந்தேன்..அவன் அன்பு என்னை எவ்வளவு தூரம் ஆக்கிரமித்திருக்கின்றது என்பதை எனக்கே அடையாளம் காட்டியது அவன் இல்லாத அந்த நாட்கள்... அன்று மாலை கல்லூரி முடித்து வரும் தருவாயில் எனக்காய் காத்துக்கொண்டிருந்தான் மோகன்.

சிந்து கொஞ்சம் இரு நானும் வரேன்..
அட மோகன் இங்க எங்கே  நீ உன்னை தான் காலேஜ் ல இருந்து சஸ்பென்ட் பண்ணிட்டாங்கள்ல அப்பறம் எங்க இங்கே..
சிந்து நீ இன்னும் மாறவே இல்லை, ஸ்கூல்ல பாத்த அதே சிந்து தான், இன்னுமும் என்னை கேலி பண்ணுற சிந்துவா தான் இருக்க.
சாரி டா எதோ விளையாட்டுக்கு சொன்னேன், சரி எதுக்கு இங்க வெயிட் பண்ணுற மோகன்..
ஒன்னுமில்லை உன்னை பார்க்கனும்போல இருந்தது அதான் வந்தேன் சிந்து.
சரி பாத்துட்டையா கிளம்பு மோகன் எனக்கும் டைம் ஆச்சு...

           இப்படி வெறும் நலம் விசாரிப்புகளில் தான் எங்களில் பெரும்பாலனா நாட்கள் கழிந்தது, ஆனாலும் மோகனின் அன்பு கொஞ்சம் கொஞ்சமாய் என்னை ஆக்கிரமித்து வந்ததை உள்ளமது உணர்ந்து கொண்டு தான் இருந்தது..
கல்லூரி முடியும் காலம் வந்தது..இங்கேயும் சின்ன நினைவேட்டில் தன்னை ஒளித்துக்கொள்ள சித்தமாய் இருந்தது நட்பு..

மோகன் என் ஆட்டோகிராப் நோட்டில் கையெழுத்து இடுவதற்க்கு பதிலாய் தன் காதலை சொல்லியிருந்தான்..என் மனமும் அதை எதிர்பார்த்தாலும், பழைய குறும்புத்தனம் ஏனோ அவனிடம் மட்டும் வந்து வந்து சென்றது...
பதிலுக்கு அவனிடம் சென்று மோகன் உன் கலருக்கு நானா? உனக்கே இது விளையாட்டா தெரியல
எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு மோகன் என்று எப்பொழுதும் போல என் அறியா தனத்தை வெளிப்படுத்த,
எல்லோர் முன்னிலையிலும் இன்றும் தலைகவிழ்ந்து நின்றான் என் நண்பன்... இல்லை இல்லை என்னவன்..சின்ன சீண்டலாய் நான் நினைத்து செய்தது என் வாழ்வை வெகு தூரத்திற்க்கு புரட்டி போட்டது..
அன்று கண்ணீர் மழ்க என்னிடம் இனி உன்னை என் வாழ்வில் ஒரு நாளும் தொல்லை செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றான்..
நானும் அவன் வீட்டிற்க்கு சென்று சமாதானம் செய்துகொள்ளாலாம் என்ற துணிவில் அமைதியாய் இருந்துவிட்டேன்..

        இதற்க்கிடையே வேலை தேடும் போராட்டத்தில் அவனை மறந்தே போயிருந்தேன், சற்றென்று அவன் ஞாபகம் துளிர்க்க அவனிடம் சென்றேன், எத்துனை பெரிய முட்டாள் தனம் என்வாழ்வில் அரங்கேறியது என்று அன்று தான் உணர்ந்தேன். மோகனின் தாயார் காலமானதும் அதன் பின் கல்லூரி கேம்பஸ் இன் டர்வீயுவில் செலக்ட் ஆனதற்க்கான பணி நியமனத்தை பெற்றுகொண்டு அவன் கனடா சென்றதாகவும் அவன் இருக்கும் இடத்தில் அருகில் இருப்பவர்கள் என்னிடம் சொல்லி நான் வந்தால் என்னிடம் கொடுக்கச்சொல்லி ஒரு கடிதத்தையும் கொடுத்திருந்தான்..

அன்புத் தோழி சிந்துவுக்கு,

இது நாள் வரைக்கும் என் அன்பு தோழியாய் இருந்தவளுக்கு இந்த பிரிவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்குமோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் உன் இருப்பை என் இயலாமையில் உணர்கிறேன் சிந்து. ஒரு தடமாவது என் பெயர் சொல்லி அழைக்க மாட்டாயா என்று ஏங்கித்தவிக்கிறது என் மனம்.. எங்கு சென்றாலும் உன் நினைவு என்னை நிம்மதியாய் என் செயலை செய்யவிடுவதில்லை, அதனாலே இந்த துணிகற செயலில் இறக்கினேன்.. என் அம்மாவின் அஸ்தியை ஏந்திக்கொண்டு உன் நினைவை என் ஆஸ்தியாய் எடுத்துச்செல்கிறேன்.. உன் நட்பு எனக்கு இன்னுமோர் தாய்மடி.. எல்லோரும் என்னை தள்ளிவைத்து விளையாட நீ மட்டுமே என் உணர்வுகளை புரிந்த உன்னத ஆத்மா என்றிருந்தேன், நீயும் சிறுபிள்ளை கையிலிருக்கும் பொம்மை தான் நான் என்பதை உணரவைத்தாய்.

ஆனாலும் தோழியே உன்னை எல்லோரை போலவும் நட்புக்குள் அடைக்க மனம் இடம் தரவில்லை அதனாலே, என் தகுதியை மறந்து இந்த தங்க கிளையை என் உடன் வைத்துக்கொள்ள நினைத்தேன்.. அது எத்தனை பெரிய தப்பு என்பதை இப்போது உணர்கிறேன் டா.. இனி உன் வாழ்க்கையை இந்த நண்பன் கரிச்சட்டியன் இல்லாமல் சந்தோஷமாய் வாழு.. உன்னோடு கழித்த ஒவ்வொரு நிமிடத்தையும் நெஞ்சுக்கூட்டில் சுமந்துசெல்கிறேன்... நீ என் காதலாக தொடராவிட்டாலும் ஒரு நட்பாய் என்னை தொடர நினைத்தால் இந்த மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்...

பிரியங்களுடன்
எல்லோருக்கும் கரிச்சட்டியன்
உனக்கு மோகன்...
   கடிதம் முடித்த இடத்தில் கரைதட்டி நிற்கும் என் கண்ணீரைப்போலவே சில வார்த்தைகள் அவன் கண்ணீரால் அளிக்கப்பட்டு இருந்தது..ஆனாலும் என் காதல் என் கைவிட்டு போகவில்லை என்ற தைரியத்தில் அவன் மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்பினேன்...

எப்படி டா இருக்க மோகன்,

நீ இல்லாம எனக்கு போரிங்கா இருந்தாலும் ஒன்னும் பிரச்சனையில்லை, எனக்கு நல்ல வேலை கிடைச்சிருக்குடா, நல்ல சம்பளம், லைப் நல்லா போகுது, நீ உடம்ப பாத்துக்கோடா மோகன்... பாய்..

      இப்படியே பெரும்பாலனா மின்னஞ்சல்கள் அக்கறை விசாரிப்புகளாகவே நிறைந்து இருந்ததே தவிர என் காதலை ஏனோ அவனிடம் சொல்ல மனம் அனுமதிக்கவில்லை..

             மோகனிடமிருந்து ஆறுமாதமாய் எந்த மின்னஞ்சலும் வரவில்லை, என்னை பல நூறாய் அறுத்து போட்டதை போன்ற வலி. எந்த செயலையும் செய்ய வாய்க்கவில்லை.. அவன் இருக்குமிடத்தை என் இன்னோரு நண்பனிடம் சொல்லி விசாரித்து பார்த்தேன்,அவனை பற்றிய விவரமேதும் தெரியவில்லை
என்ற செய்தியை தாங்கியிருந்தது நண்பனின் பதில்..இதற்கிடையே எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தேற, என் காதலை என் குடும்பத்திடம் சொல்லி அனுமதி வாங்கி, அவனிருக்குமிடம் நோக்கி பரந்து வந்தேன்...

               ஒவ்வொரு நிமிடமும் ஊசியால் குத்தி கிளிப்பது போன்ற உணர்வு அத்தனையும் உன் விளையாட்டு தனத்தால் வந்ததுதான் சிந்து, இந்த செயலுக்கு நீ வாழ் நாள் முழுதும் அனுபவிக்க போகிறாய் என்று ஏனோ மனது அடிக்கடி ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.. காரணம் ஆறு மாதத்திற்கு முன் நான் அனுப்பிய செய்தி அப்படி, எனக்கு வந்த வரன் ஒன்றின் புகைப்படத்தை மோகனிடம் அனுப்பி நான் இவனை தான் விரும்புவதாய் அவனை சீண்டி விட்டதன் விளைவு தான் நான் அனுபவிப்பது..

             அவன் இருக்குமிடம் சென்றேன், அவனை பற்றியே செய்தியேதும் அங்கு இல்லை அவன் வேலை செய்யும் இடத்திலும் முன்னறிவித்தல் இன்றி வேலையை விட்டதாய் கேள்விபடவே, எப்படியும் இங்கு வந்துவிடுவான் என்று அவன் இருந்த அறையிலே தங்கி கொண்டு அவன் பணி புரிந்த அலுவலகத்திலே பணி புரிந்து கொண்டிருக்கிறேன்.. இன்றோடு வருடம் ஏழு ஆகிறது.. அவன் எனக்கு அனுப்பிய கடிதத்திலும், மின்னஞ்சலிலும், பரிசு பொருளிலும், அவனறியாமல் அவன் பேச்சை பதிவு செய்த கோப்புகளும் தான் என் இத்தனை நாள் வாழ்வை உந்தித் தள்ளியது..இனியும் அவன் வருவான் என்று உள்மனது உரக்கச்சொல்லிக்கொண்டே இருக்க, இறுதியில் வந்து சேர்ந்தான் என்னவன்... 

            அடடா அவன் உருவத்தில் தான் எத்தனை மாற்றம், பணமும் பதவியும் கிடைக்க பெற்றவர்கள் அத்தனையும் கிடைக்கபெறுவர் என்பது எத்துணை பெரிய உண்மை.. அவன் உருவத்திலும், பேச்சிலும் எத்தனை பெரிய மாற்றம்.. ஆனால் நான் நான், அவனில்லாத இந்த பொழுதுகளில் கணவனை இழந்த கைம்பெண்ணை போலத்தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.. கவலையின் குறியாய் என் முகத்தில் வயதான தோற்றம், அய்யோ இது அவனுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்று உள்ளுக்குள் உழன்று தவிக்கிற கேள்விக்கு விடையாய் அவன் பின்னிருந்து வந்தால் சித்ரா. அவள் உடையிலே தெரிந்தது அவன் மோகனின் மனைவி என்பது.. எத்தனை பெரிய தவறு நம் அறியாமையில் விளைந்தது என்பதை உணர்ந்து கொண்டு, எப்போதும் போல என் சிறுபிள்ளைத்தனத்தை இம்முறை போலியாய்

           பரவாயில்லையே மோகன் கடைசில உனக்கும் ஒருத்தி மாட்டிட்டாளா? வாழ்த்துக்கள் பா... எனக்கு இங்கே வேலை கிடைத்தது, அதான் நீ எப்படியும் இங்கு வருவன்னு உன் அறையிலே தங்கியிருந்தேன்.. நான் நினைத்ததும் நடந்திருச்சு, என் நண்பன நான் பாத்துட்டேன்.. சரி டா எனக்கு வேலைக்கு நேரமாச்சு, நான் இந்த அறையிலே தங்கிக்கிறேன். நீயும் உன் மனைவியும் வேறு ஒரு இடத்தில் தங்கிகோங்க டா பீளிஸ்.....

எதற்கு நான் இங்கு வந்தேன் அவனும் கேட்க்கவில்லை... நானும் சொல்லவுமில்லை...என் தவறுக்கு கிடைத்த தண்டனையாய் அவன் நினைவுகளை தனிமையில் சுமந்து கொண்டு, பெற்றோரின் வருத்தத்தை சம்பாதித்து கொண்டு, இன்று வேறு ஒரு நாட்டில் பணி புரிந்துகொண்டிருக்கிறேன்..அவன் இப்போதும் கானல் நீராய் என் காதலை வளர்த்துச்செல்கிறான்.....


சரியான நேரத்தில் கொடுக்கப்படாத மன்னிப்பும், சரியான நேரத்தில் சொல்லப்படாத காதலும் ஆயுள் உள்ளவரை நம்மை கருணை கொலை செய்துகொண்டே இருக்கும் என்பதற்கு உதாரணம் தான் நான்..........................


திங்கள், 5 மார்ச், 2012

பொய் கோபம்

THANKS: Google



இந்த நேரம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துவிடும் நித்யா இன்று தான் அலுவலகம் கிளம்பும் நேரமாகியும் வராததை அடுத்து அவளுக்கு போன் செய்தான் பிரபஞ்சன்... அவள் போன் அணைத்து வைக்கப்பட்டது என்ற செய்தி அவனுக்கு பதட்டத்தை வரவைக்க, நித்யாவின் அலுவலகத்திற்க்கு தொடர்பு கொண்டான், அங்கும் அவள் கிளம்பி போய் வெகு நேரமான செய்தி அவனுக்குள் இடியாய் இறங்கியது...

அவள் தோழிகள் நம்பருக்கும் தொடர்பு கொண்டு, அங்கும் எதிர்ப்பார்த்த செய்தி கிடைக்காததை அடுத்து வருத்தமும், பயமும் கலந்து கொள்ள கதவு திறக்கும் ஓசை கேட்டு, ஜன்னலை பார்த்தான், வருவது அவள் தான் என்று தெரிந்து, நிம்மதியடைந்தாலும், அவள் அலட்சியமாய் வந்தது, பிரபாவுக்கு கோவத்தை ஏற்படுத்தியது...

என்ன பிரபா மணி 7ஆச்சு நீ இன்னும் office போகலயா?

நான் போறது இருக்கட்டும் நீ எங்க போன இவ்வளவு நேரம்...

அவன் வார்த்தையில் இருக்கும் கோவத்தை உணர்ந்தவளாய், சாரி டா, ரீமா அவ பெண்ணுக்கு ட்ரஸ் எடுக்க என்ன கூட்டிட்டு போனா அதான் இவ்/ளோ நேரம் பிரபா.. சாரி

உன் சாரி யாருக்குடி வேணும்... இவ்வளவு நேரம் வரலையே ஒரு போன் பண்ணி சொல்லிருக்கலாம்ல நானாவது நிம்மதியா offlice கிளம்பி போய் இருப்பேன் ல..

இல்லை போன்ல சார்ஜ் இல்லைடா? அதான்......

போன வாரம் நான் என் ஃப்ரண்ட்ஸ் ஒட அவுட்டிங்க் போகும் போது, என் போன்ல சார்ஜ் இல்லை அதான் உனக்கு போன் பண்ணி சொல்லமுடியலன்னு சொன்னதுக்கு எவ்வளவு கோவப்பட்ட, உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?

பிரபா அது வேற இது வேற?

எப்படி டி வேற வேற ஆக முடியும் சொல்லு.....

இப்போ ஏன் வந்ததும் வராததுமா சண்டை போடுற. நீ offlice போ டைம் ஆச்சு...

காரணம் கேட்டா கிளப்ப சொல்றயா? என்ன ஒரு பொறுப்பில்லாத பதில் நித்தி, நீ வரலன்னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா?

பிரபா நீ இந்த பயத்த தெரிஞ்சுக்கனும்னு தான் அப்படி பண்ணேன் சாரி டா...

என்ன நித்தி சொல்ற?...

ஆமாம் ஒவ்வொரு வீகெண்ட்லயும், நீ உன் ஃப் ரண்ட்ஸ் ஒட போயிடுற, சில நேரம் உன் ஃப் ரண்ட்ஸ் கம்பெல் பண்றாங்கன்னு டிரிங்ஸ் எடுத்துக்கிற, நீ வீடு வந்து சேர்ர வரைக்கும், நான் படுற பாடு எனக்கு தான் தெரியும் நடுவுல ஒரு போன் பண்ணுறது கூட கிடையாது, நான் பண்ணாலும் switch off....
காரணம் கேட்ட சார்ஜ் இல்லைனு சொல்லுவ...எத்தனை தடவ தான் இதே உப்பு சப்பில்லாத காரணத்தையே கேட்கிறது... நீ புரிஞ்சுக்கனும்னு தான் இப்படி பண்ணேன்... நான் எப்போவோ வீட்டுக்கு வந்துட்டேன்... என் பீல் உனக்கு புரியனும்னு தான் ரீமா பிளாட் ல கொஞ்சம் நேரம் இருந்தேன்... உன் cap வந்தும் நீ போகலனு தெரிஞ்சதும் தான், மனசு கேட்காம வந்தேன்... நீ கிளப்பு பிரபா டைம் ஆச்சு...

வாயடைத்து போய் பதில் எதுவும் சொல்லாமல் மெளனமாய் சென்றான் பிரபா...

பதில் எதும் சொல்லாமல் அவன் செல்வதை வருத்ததோடு பார்த்தாள்... சற்று நேரத்தில் கைபேசி சிணுங்க, பிரபாவிடமிருந்து செய்தி,  sorry nithi  just now i realized my mistake,  hereafter i wont do it... dinner is on the table. please do take them. I love you de :))))))) 

 நான் எதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுக்கோடா... I TOO LOVE YOU HONEY...




 நமக்கு பிடித்தவர்கள் மீது நாம் காட்டும் கோவமும் ஒரு அன்பே.............



செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

வழி விடுங்கள் காதல் வருகிறது....



       மழை விட்ட நேரத்து, இலை ஒட்டிய மழைத்துளிப்போல, நீ சென்ற பின்னும் இன்னும் இன்னும் தூறல்களால் நிறைந்து கொண்டிருக்கிறது என் காதல் வானம்...

எப்படியோ இருந்தவளை இந்த காதல் இப்படி மாற்றும் என்று நான் அறியவில்லை, நலம் விசாரிக்கும் தோழிகளிடமும், என்னைப்பற்றிய உன்னை பற்றியே சொல்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது எனக்கு...ஆம் ஆண் வாசம் அறியாத என்னை, ஆட்டிபடைக்கப்போகும் என்னவன் ஒரு பேருந்து பயணத்தில்  தான் எனக்கு அறிமுகமானான்...

பொதுவாக பெண்கள் அழகில் கர்வப்பட்டு காதல் கொள்ளும் ஆண்கள் மத்தியில், உன்னை தனித்துக் காட்டியது உன் கூச்சகுணம் தான்... உன்னை முதன் முதலாய் பார்த்த தினம் என்று எதுவும் என் நினைவுக்கு வராவிட்டாலும், நீ முதல் முதல் என்னிடம் பேசிய தினம் ஏனோ இன்னும் உள்ளுக்குள் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கிறது...


     அன்று முதல் நீயும் நானும், சேர்ந்து பயணித்த பயணத்தில் எல்லாம் என்னுள் உற்ற நண்பனாய் மாறிப்போனாய்...எனக்கு பிடித்தவைகள், பிடிகாதவைகள், அரசியல், குடும்ப சுழல் என்று அனைத்தையும் பகிரும் ஒரு அந்தரங்க டைரியாய் என்னை ஆட்க்கொண்டது உன் அன்பு..ஒவ்வொரு விடியலும் உன்னோடான பயணத்தின் எதிர்பார்ப்பிலே சுகமாய் விடிந்தது, என்னை அடக்கி ஆளும் இந்த மாற்றத்திருக்கு பெயர் தேட விரும்பா விடினும், இந்த பயணம் ஏனோ தினம் தினம் பல கனவுகளை விதைத்து சென்றது...

.   ஆடவர் கண்பார்த்து பேச கூச்சப்படும் நாணம் இது வரை வாய்த்ததே இல்லை எனக்கு, ஆனாலும் ஒரு பயணத்தில் என் அருகாமை, உன்னை பாடாய் படித்தியதில் தான் அறிந்தேன் நாணம் என்பது இருவருக்கும் பொதுவானது என்று ... அன்று மட்டும் ஏனோ என் இரவுகள், ரசாயனமாய் என்னை எரித்து தின்றது...விடிந்திடும் பகலுக்காய் விளக்கு வைத்து காத்திருந்தேன், விடியல் வந்தது.
எனக்காக காத்திருக்கும் உனக்காய் இன்று நான் காத்திருந்தேன்..
புல்லாங்குழலில்
இருக்கும் இசை
போலவே
எனக்குள்
நீ

கண்கள் படபடக்க, இதயம் ஏனோ உன் பெயர் சொல்லி துடிக்க, உன் வரவிற்காய் என் விழிவாசல் காத்திருந்தது... மெல்லிய உன் நறுமணம் என்னை கடத்திச் செல்ல, இத்தனை நாள் உன் அருகாமையில் உணராத ஒன்றை முதல் முதலாய் உணர்ந்தேன்.... இறுதியில் என்னை வெட்கம் ஆட்க்கொள்ள நீ காரணமாய் அமைந்துவிட்டாய்...


முதல் முதலாய்
என் விழிகள் படிக்க 
விரும்பிய 
புத்தகம்
உன் இதயம்.....

எப்போதும் போல ஒற்றை புன்னைகையை சிந்திவிட்டு நீ இருக்க, என் கண்கள் ஒற்றனாகி உன்னை வேவு பார்க்க தொடக்கி விட்ட இந்த விந்தைக்கு என்ன பெயர் என்று விளங்கவில்லை..அந்நேரம் பேருந்து வந்துவிட, உன்னை பற்றிய சிந்தனையில் லயித்திருந்த என்னை பற்றிய உன் கரங்களில் வாயிலாய் மீண்டு வந்தேன் இவ்வுலகிற்கு...   

தொன தொணக்கும் என் உதடுகள் ஏனோ இன்று மௌனத்தை மட்டுமே பற்றி கொண்டு, அவன் மொழிக்காய் காத்திருந்தது...இந்த நிமிடங்கள் வசந்தங்களாய் என் வாழ்க்கையை நிறைத்தது, அவனுக்கான நிறுத்தத்தில் அவன் இறங்கிவிட, அவன் இருந்த இடத்தில் அவன் நினைவுகளுடன் சேர்ந்து பயணித்தேன்....

மௌனத்தை விட  சிறந்த மொழி
இல்லவே இல்லை
இந்த 
காதலுக்கு...

எப்பொழுதும் பேசிதீர்க்கும் நாளாய் இந்த நாள் இல்லை...எப்போதும் நானாய் இருந்த நான் இப்போது இல்லை.... என்னவாயிற்று எனக்கு என்று எண்ணியே நிமிடங்கள் கரைந்தன..இரவு ஏனோ ஒரு புதிரை வைத்து விடை தேட வைத்தது... இந்த நிலவும் நட்சத்திரமும், இதுவரை நான் காணாத தோற்றத்தை காண தந்தது.... இதை காதல் என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், எட்டித் தள்ளவும் முடியாமல் மற்றுமொறு தூங்கா இரவை தாரை வார்த்து தந்தது அவன் நினைவு...

நீயில்லாத
நான் அத்தனையிலும்
நான் நலமில்லை...

உள்ளத்து உளறல்களை அவனிடம் சொல்லிவிட எத்தனித்து விடிந்தது பொழுது...வகை வகையாய் ஒப்பனை செய்த வார்த்தை மலர்களை, நாணம் என்னும் நார் எடுத்து, காதலாய் கட்டிவைத்து காத்திருந்தேன் அவன் வரவுக்கு...
எப்போதும் போல மௌனம் பற்றி வந்தவனின் இன்றைய மௌனம் என்னை வழக்கத்திற்கு  மாறாய் கலவரப்படுத்த, சொல்லவா? வேண்டாமா? என்ற தயக்கத்திலே காலங்கள் பல  நகர்ந்தன....

என் அன்பை
உன்னிடம் சொல்லியிருந்தால்
எனக்கு காதலன்
கிடைத்திருப்பான்...
சொல்லாத அன்பால்
எனக்கு காதல்
கிடைத்திருக்கின்றது...

காலங்கள் நகர நகர நீ மட்டும் இன்னும் இன்னுமாய் வேர்விட்டுக் கொண்டிருந்தாய் என்னுள்...விடிந்த பொழுதில் இருந்து, உனக்கு பிடித்த உணவில் இருந்து,பிடித்த பொருளில் இருந்து, பொழுது போக்கும் தனிமையில் இருந்து, என்னைக் கடக்கும் உன் சாயல் கொண்ட மனிதர்கள் வரை,  அத்தனையிலும் நிழலாய் உன் நினைவுகள் தொடர, இது காதல் தானா என்ற தயக்கத்திலே நான் இருந்தேன்...

என் எல்லாக் கவிதைகளிலும்
சொல்ல முடியா
அன்பை விதைத்திருக்கின்றேன்,
என்றேனும் உன் பார்வைக்கு
வந்தால் புரிந்துகொள்
என் காதலை...

சுற்றிய சுற்றமும், நட்பும் என்னை பரிகாசம் செய்ய, என் காதலை உன்னிடம் சொல்லிடச் சொல்லி கட்டளை இடுகிறது.  உன்னை பற்றிய நினைவுகள் இனி வேண்டாம் என்று நினைத்தாலும், மறக்க நினைக்கும் தருணங்களில் எல்லாம் மறக்காமல் வந்துவிடுகின்ற இந்த நினைவுகளே என் காதலுக்கு இப்போதைக்கு போதுமானதாய் இருக்கிறது...

உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
என் காதலை சொல்ல
தைரியம் வருகிறதோ
இல்லையோ?
மறக்காமல் கவிதை
வந்துவிடுகிறது..

இப்போதெல்லாம் பேருந்து பயணத்தில் அவனை காண முடிவதில்லை..
எப்போதும் போல நானும் அவன் நினைவுகளுமாய் பயணங்கள் நீண்டு கொண்டிருக்கிறது..வருடங்கள் பல கழித்து சந்திக்கும் என் எல்லா நட்பும், , இப்போவாவது காதலை சொல்லிவிட்டாயா என்ற அக்கறை விசாரிப்பை விரித்து விட்டு செல்கிறது...


இப்போதும் எப்போதாவது எங்கேயாவது உன்னை பார்த்தால் சொல்லிவிடலாம் என்ற ஆயத்தமாகவே இருக்கிறது என் காதல்.. தவறவிட்ட தருணங்களே என்னை பார்த்து பரிகாசம் செய்ய, அவனை பார்த்துவிட்டால் அவனுடன் சேர்த்துவிடுவதாய் சொல்லி சொல்லியே துடிக்கிறது என் இதயம்...அவன் வழித்தடத்தில், புதைந்து விட துடிக்கின்றதாய் சொல்லிக்கொள்கின்றன  கால்கள்...அவன் கைப்பிடிக்குள் தஞ்சம் புக துடிக்கின்றது என் கைகள்..அவன் விழி ஈர்ப்பில் மயங்கி விழ காத்திருக்கின்றது என் கண்கள்...


உணரமுடியா அன்பை,
வாழ்த்து அட்டையிலும்,
ஒரு பூச்செண்டிலும்,
சின்ன பரிசுகளிலும்,
உணர முடியுமாயின்,
இந்த கவிதை சொல்லட்டும்
என் அன்பை..

கடல் அலைகளோடும், நிலவொளியோடும், யாருமற்ற உலகை உணரும் நிமிடங்களுக்காக காத்திருக்கின்றேன் நான்... நீ என்னை சேராவிட்டாலும் பரவாயில்லை..என்றேனும் என் காதல் இந்த எழுத்துகளாய் உன் கண்ணில் படட்டும்...பொல்லாத என் காதல், சொல்லாததை என் கவிதைகள் சொல்லட்டும்..  கொஞ்சம் வழிவிடுங்கள்  காதல் வருகிறது இந்த கவிதையை காண...

மழை விட்ட நேரத்து, இலை ஒட்டிய மழைத்துளிப்போல, நீ சென்ற பின்னும் இன்னும் இன்னும் தூறல்களால் நிறைந்து கொண்டிருக்கிறது என் காதல் வானம்...

மறுஜென்மத்தில்
நான் மனிதனாக
பிறக்கின்றேனோ? இல்லையோ?
இந்த ஜென்மத்தில்
மனிதனாக இருக்கின்றேன்.
ஆம்
நான் காதலிக்கிறேன்...
காதலிக்கப்படுகின்றேன்
இந்த கவிதைகளால்... 


நண்பர்கள் அனைவருக்கும் அன்பு தின வாழ்த்துக்கள்.... :)




வணக்கம் வலையுலக உறவுகளே, இந்த பதிவு கூட காதலர் தினத்துக்கு உதித்த கற்பனைதானுங்க...எதுக்கு சொல்றேன்னு புரியும்னு நினைக்கிறேன்....அடுத்த பதிவுல சந்திக்கலாம் :) :)

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

அடைமழைக் காதல்

( பதிவுலகில் தொடர்பதிவு என்பது பரிட்சயம். இங்கு நண்பர்களாகிய சௌந்தர்,நான், கூர்மதியன்  ஆகிய மூவரும் ஒரு முயற்சி செய்திருக்கிறோம ஒரே தலைப்பை எடுத்து யார் என்ன எழுதபோகிறோம் என்று சொல்லிக்கொள்ளாமல் தங்கள் மனதுக்கு படும் கதை,கவிதை,கட்டூரை என்று எதுவாக வேண்டுமானாலும் வடிவமைக்கலாம் என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தோம். இதன் படி ''அடைமழை காதல்'' என்னும் தலைப்பில் எங்கள் கண்ணோட்டத்தில் பதிவு எழுத ஆரம்பித்தோம். அதன்படி கீழே தொடர்வது என்பதிவு..!அவர்கள் பதிவை அவர்களில் பெயரில் சொடுக்கி பார்த்துக் கொள்ளவும்....வழக்கம் போல இந்த பதிவு உங்கள் பார்வை பயணத்தில்......)


             காதல் உச்சரித்த  மாத்திரத்தில், உள்ளுக்குள் உயிர் பூக்கச்செய்யும் என்ற பலர் சொல்லி கேட்டதை அன்றே உணர்ந்தேன்....மாலையில் ஒரு மழை நாளில், குடைக்குள் இடம் கேட்டவனை அனுமதித்தேன்...பார்த்த மாத்திரத்தில் சொக்கி நின்றேன் அவன் விழி மந்திரத்தில் ..அவன் முதல் பார்வையிலே முற்றும் துறந்த என் காதலனாய் என்னுள் நுழைந்தான்..மழைக்கு நன்றி சொல்வதா?, இல்லை மழையில் நனையாமல் இருக்க குடை கொடுத்த  என் தோழிக்கு  நன்றி சொல்வதா? இல்லை தயங்காமல் என் அருகில் வந்து, குடைக்குள் இடம் கேட்டு, எனக்குள் காதல் மழை பொலியச் செய்த இவனுக்கு நன்றி சொல்லவா?, என்ற புரியா சந்தோஷத்தில் ஹார்மோன்கள் யுத்தம் செய்யயிலே, வந்தவன் அமைதி கலைத்தான், ஹலோ ஸ்வேதா  என்று.....

என் பெயர் இவனுக்கு எப்படி தெரியும் என்பதை விட, என் பெயர் இத்தனை அழகா என்று உள்ளுக்குள் உரைத்துக் கொண்டு, பொய்யாய் ஒரு கோவப் பார்வை அவனை பார்த்தேன்..என் பார்வையில் தாக்கத்தை உணர்ந்தவன் 
சாரி ஐ ஆம் விஷ்வாஸ்.....
ஐ ஆம் வொர்கிங் அஸ் அ சாப்ட்வேர் என்ஜினீயர்,
பை தி வே,நான் நீங்க இருக்கும் அதே ஏரியாலதான், உங்க வீட்டுக்கு எதுத்த வீட்டுல குடிவந்திருக்கோம்..   ஐ நோ you வெரி வெல்,எங்க  அம்மா உங்கள பத்தி சொல்லிட்டே இருப்பாங்க என்ன அடுக்க அடுக்க அதிர்ச்சி கொடுத்து  பேசிக்கொண்டே போனவனை, கண்கொட்டமால் பார்த்துக் கொண்டிருந்தது உள்ளிருக்கும் காதல்....  

உள்மனது அவனறியாமல் என்னிடம் உரையாடியது, அறிவு கெட்டவளே, இவ்ளோ நாள் இவன எப்படி டி மிஸ் பண்ணுன.... ஹி இஸ் டூ ஸ்மார்ட்...ஹலோ ஸ்வேதா கேன் யூ ஹியர் மீ, என்று இடைமரித்தவனை .....  
என்ன என்று கேள்வி கேட்பதைப் போல பார்த்தேன்.... உங்க வீடு வந்திருச்சு, தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப், என்று என் பதிலுக்கு காத்திராமல் அவன் இல்லம் நுழைந்தான்...நானோ இருப்பு கொள்ளாமல், அவன் உருவம் மறையும் கடைசி புள்ளிக்காய் காத்திருத்தேன் ..ஐயோ எப்படி மறந்தேன் என் வீடு வந்தது கூட  தெரியமால், ஒரே பார்வையில என்ன ஆச்சு எனக்கு ...என்ன அவன் என்ன நினச்சிருப்பான்...என்னடி ஸ்வேதா மொதோ பார்வையிலே ஸ்பாட் அவுட் அகிட்டயேடி...போச்சு உன்ன அவன் தப்பா நினச்சிருப்பான்..

வெளியில் குடைக்குள் ஒரு போராட்டம்  அவன் தனியே என்னை விட்டு சென்றதில் இருந்து....என்னடி எதுவும் நேத்திக் கடனா?...பக்கத்துக்கு வீட்டு மாமி கேட்கையிலே உணர்ந்தேன்..மழை விட்டு வெகுநேரம் ஆகியிருந்ததை..பதிலுக்கு சிரித்து விட்டு, பதில் வருவதற்குள் வீட்டுக்குள் சென்றேன்...மழையில் நனைந்த உடைகளை உலர்த்த முடிவு செய்து ஜன்னலின் கதவுகளை திறந்துவிட்டேன்... மணலோடு வந்த மழை  வாசம் மறுபடியும் அவன் நினைவுகளை விதைத்து சென்றது..

எப்படி நிகழ்ந்தது 
என்று யோசிக்கும் முன்னே,
பலர்க்கு காதல்
அரங்கேறி விடும்...
என் காதலும் அப்படித்தான்..

கனவுகளில் இருந்தவளை மீட்டெடுத்தது அந்த குறும்செய்தி,
வாட் யு டூயிங் ஸ்வேதா?
யார் நம்பர் என்று குழம்பிக் கொண்டிருக்கையிலே,
ஐ ஆம் விஸ்வாஸ்...திஸ் இஸ் மை நம்பர்...
இன்றே முளைத்த என் காதலுக்கு இத்தனை வலிமையா, மனதில் அவன் அலைபேசி என் வாங்கி இருந்திருக்கலாம் என்ற எண்ணம் இத்தனை வலிமை கொண்டு, அவனிடம் என் நினைவை சேர்த்ததா?....
இருப்பினும் சுதாரித்து, பதில் செய்தி அனுப்பினேன்...
என் நம்பர் உனக்கு எப்படி தெரியும்னு?
தெரியும்.....என்று பதில் வந்தது....

கொஞ்சம் இடைவெளி விட்டு அமைதி காத்தேன்...என்ன நடந்தது?...யார் இவன்?...எதற்கு என் மனது இவனை தேடுகிறது?...பார்த்த மாத்திரத்தில் காதல் வந்துவிடுமா?... ஒருவேளை இவன் அழகனாய் இருப்பதால் எனக்கு இவன் மீது காதல் வந்ததா?...இல்லை முதல் பார்வையிலே இவன் மீது காதல் வந்ததால் அழகாய் தெரிகிறானா?...எதற்கும் பொறுமையாய்  இரு ஸ்வேதா என்ன உள்மனம் எரிச்சரிக்க, பதில் அனுப்பாமல் உறங்கிப்போனேன்...

பொழுது விடிந்தது, அலுவலகம் செல்ல ஆயத்தமாகி கொண்டு இருந்த நேரம். இன்று ஒப்பனைகள் இட்டுக் கொள்ளாமலே, காதலால் சிவந்திருந்தது கன்னம்...வழக்கமாய் உதட்டோரம் ஒட்டி இருக்கும் புன்னைகையில் வழக்கத்திற்கு மாறாய், வெட்கம் ஒட்டி இருந்தது...வாசல் வந்து நின்று, அவன் வரவை உறுதி செய்தேன், என் வருகைக்காய் காத்திருந்தவன் போல, என்னோடு அவனும் சேர்ந்து வந்தான்....

விஸ்வா : குட் மார்னிங் ஸ்வேதா...
ஸ்வேதா: குட் மார்னிங் விஸ்வா....
விஸ்வா : என் பேரு இவ்ளோ அழகுன்னு நீ என் பேர சொல்லும் போது தான் தெரியுது ஸ்வேதா...
ஸ்வேதா: (நம்ம மனசுல நினச்சத இவனும் அப்படியே சொல்லுறானே!!!) அப்படிலாம் இல்ல உங்க பேரு நெஜமாவே அழகா இருக்கு...

விஸ்வா : அழகு பெண்கள்,
உதடுச் சாயத்தோடு
பொய்யையும் சேர்த்தே
பூசி இருப்பார்களாம்....

ஸ்வேதா: அப்படியா?

விஸ்வா : ம்ம்...

ஸ்வேதா: சரி நீ.... இல்ல ஒன்னும் இல்ல,

விஸ்வா : என்ன சொல்ல வந்த சொல்லு.
.
ஸ்வேதா:இல்ல ஒன்னும் இல்ல,

விஸ்வா : சரி நானே  சொல்லுறேன்... ஐ லவ் யூ ஸ்வேதா..

ஸ்வேதா : (மனசில் இருப்பதை கண்டறிந்து விட்டானோ என்ற பயத்தோடு ) விஸ்வா உங்கள எனக்கு நேத்து தான் தெரியும்...அதுக்குள்ளே இப்படி பிரப்போஸ் பண்ணுறது உங்களுக்கு சரியா இருக்கா?....

விஸ்வா : என்ன உனக்கு நேத்து தான் தெரியும், ஆனா உன்ன நான் இங்க வந்த ஆறு மாதமாவே தெரியும்....முதல் பார்வையிலே காதல் வரும்ன்னு, என் நண்பர்கள்  சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன், ஆனா அத மொத மொத உணர்ந்தேன் உன்ன பார்த்தவுடனேயே, என் மனசுக்குள்ள காதலா வந்துட்ட ஸ்வேதா...

ஸ்வேதா: (நம்மப் போலவே நினைகிறானே, நம் காதலன் என மனதுக்குள் சிரித்துக் கொள்கிறாள்...) சாரி எனக்கு உங்க மேல அப்படி எந்த எண்ணமும் இல்லை விஸ்வாஸ்... பாய் ஐ ஆம் மூவிங் நொவ்...

அவன் ஏக்கமாய் பார்ப்பதை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்... அலுவலக பணிகள் ஒன்றும் செய்யமுடியவில்லை...கோப்புகள் அனைத்திலும் அவன் ஏக்கப் பார்வையே என்னை ஆட்டிப் படைத்தது...அலுவலக நண்பர்கள் அந்நியமாய் தெரிந்தனர்.... அலுவலக நாட்காட்டி, ஒவ்வொரு நிமிடத்திலும், நெருப்பள்ளி போடுவாதாய் ஒரு எரிச்சல்...அவன் குரல் கேட்க நினைத்து, அவனை தொடர்பு கொண்டேன்...

அவன் இணைப்பு கிடைக்கமால், இருதயம் இடமாறித் துடிக்க, இரண்டே நாளில் நான் மாறிப் போனதை எண்ணி, வெட்கம் தான் வந்தது...

காதல் ஒரு
அழகான திருட்டு,
எப்போது
களவாடினோம்,
எங்கே களவாடப்பட்டோம்
என்று தெரியாமலே,
இதயங்களை தொலைக்க வைக்கும்...

கண நேரக் கனவை கலைத்தது, அந்த அழைப்பு, அவன் தான் அவனே தான்...மனது பட்டாம் பூச்சியாய் படப்படத்தது...இரு கைகளும் சிறகுகளாய் வானில் விரித்து பறக்கவைத்தது....

ஹலோ ஸ்வேதா,
ஹாய் விஸ்வா
இம்ம்..சாரி ஸ்வேதா உங்கிட்ட பேசாம இருக்க முடியல, எந்த வேலையும் செய்ய முடியல, இன்னைக்கு சாயங்கலாம், உன் ஆபீஸ் பக்கத்துல இருக்கிற பீச்க்கு வரையா?
வேண்டாம் என்று தொண்டைவரை சண்டையிட்ட வார்த்தை, வெளிவரும் போது காதலாய், சரி வரேன் என்று பதில் சொன்னது அவனிடம்...
ஓகே பாய் ஸ்வேதா... ஐ ஆம் வைட்டிங் பார் யூ... பாய் நொவ்...
இணைப்பை துண்டித்தாலும், இன்னும் இருதயத் துடிப்பு வேகத்தைக் குறைக்கவில்லை... கண்கள் ஒவ்வொரு நிமிடமும், கடிகாரத்தோடு சண்டை இட்டுச் சென்றது...

அலுவலகம் முடிந்தது, என்னையும் அறியாமல் கால்கள், அவன் இருக்கும் திசை நோக்கி விரைந்து சென்றது...எப்போதும் ஒப்பனைகள் பூசிக்கொண்ட முகம், இன்று வெட்கங்களை அள்ளி பூசிச் சென்றது...

காதலிக்க தொடங்கும்
பலருக்கும்,
கவிதை வந்துவிடுகிறது...
உன்னை பற்றி
எழுதுகையில்,
என் எழுத்துக்கும்
காதல் வந்துவிடுகிறது
அவ்வளவு அழகு நீ...

கடல் ஓசை நடுவே, அமைதியாய் கடல் மணலில் விரல் பதித்து விளையாடும் குழந்தையாய், அழகாய் அமர்ந்திருந்தான். அவன்அருகில் சென்றேன்...என்னை பார்த்ததும், படப்படத்த அவன் விழிகள் பார்த்து கிறங்கி நின்றது என் காதல்...

ஸ்வேதா, நான் உன்ன விரும்புறேன், நீ இல்லாத ஒரு வாழ்க்கையை நான் நினைக்க விரும்பல, என் மேல நம்பிக்கை இல்லாட்டி, எப்போ என்ன பிடிக்குதோ அப்போ என் கிட்ட உன் காதல சொல்லு, மறு நிமிசமே உன்ன என் அம்மா முன்னாடி, அவங்க சம்மதத்தோட  என் மனைவியா ஏத்துக்கிறேன்....

இவனை பார்பதற்கு முன் ஒத்திகை பார்த்து கையேடு எடுத்து வந்த வார்த்தைகள், பேசப்படாமையே இருந்தன இந்த சந்திப்பில்..என்ன ஸ்வேதா ஆச்சு உனக்கு, அவன் பேசுறதுக்கு பதில் சொல்லாமையே இருக்கையே, என உள்மனம் என்னை உந்தி தள்ளியது... விஸ்வா?

சொல்லு ஸ்வேதா.....
எனக்குள்ள மாற்றம் இருக்கு,,
எனக்கு உன்ன பிடிச்சிருக்கு, ஆனாலும்,
முதல் பார்வை மோதலில் காதல் பிறக்குமா?.....

அடி பைத்தியக் காரி,
கண்கள் பேசத்
தொடங்கிவிட்டால்
அதற்க்கு பெயர்
காதல்....தெரியாதா?

இம்ம்...

எப்போதும் எனக்கு நீ இப்படித்தான்
இரட்டை குழந்தையை தான் பிரசவிப்பாயா?

என்ன சொல்ற?....

இல்ல உன் உதட்டு தழுவலில், பிரிந்து வரும் ஓசை,

இம் என்ற இந்த இரட்டை குழந்தையைத் தான் எனக்கு இதுவரை கொடுத்திருக்கு, அதான் கேட்டேன்....

புன்னகையுடன் வெட்கத்தையும் அவனுக்கு  பரிசளித்தேன்,

விஸ்வா ஐ லவ் யூ...

காதல் எத்துணை
வலிமையானது,
ஒரே நாளில்
என் அடையாளங்களை
மாற்றிப் போட்டுவிட்டதே....

இருவரும் குடைக்குள் தஞ்சமான அதே இடத்தில் இன்று காதலர்களாய் கதை பேசி நடந்தோம்...விஸ்வாஸ்  இடைமறித்து, உனக்கு என்ன என்ன பிடிக்கும் ஸ்வேதா?..................

எனக்கா, எதையும் எண்ணாம உன்னை மட்டும் எண்ணப் பிடிக்கும்...

பாருடா, நீ கூட அழகா பேசுறயே...

பின்ன அழகன் நீ என்கூட இருக்கையில, என் பேச்சு அழகா இருக்கிறதுல
என்ன அதிசியம் இருக்கு...

ஸ்வேதா, நம்ம ரொம்ப அதிஸ்டசாலிகள் இல்லையா, நம்மக்கான நம்மோட காதல் குழந்தையை இருவரும், சரியான புரிதலோட அடையாளம் கண்டுக்கிட்டோம் இல்லையா...

இம்ம்..ஆமாம் விஸ்வா..ஒரே நிமிடத்தில் எத்துணை மாற்றம்...காதலோடு சண்டையிட்டவள், இன்று உன் காதலியாய் உன் கரம் பற்றி வருகிறேன்,

நீ கண்ணுக்குத்தான் மையிட்டாய்,
என்றால்
எனக்கும் மையிட்டு
எப்படி மயக்கினாய்
உன் கதலனாக?

ஹ ஹ...

சிரிக்காத, ஸ்வேதா..

சரி, வீடு வந்துருச்சு, நீ உன் வீட்டுக்கு போ விஸ்வா,

ஹே நீ வீட்டுக்கு வா?...அம்மாகிட்ட உன்ன அறிமுகம் செய்து வைக்கிறேன்...வா

ஏன் டா, இப்படி...எத்தன நாளா எனைத் தெரியும்னு அம்மா கேட்ட என்ன சொல்லுவ?

டா வா? என்னடி கட்டிக்க போறவன டா னு சொல்லுற, இதெல்லாம் உன் அத்தைக்கு பிடிக்காது...ஒன்னு தெரியுமா ஸ்வேதா, இந்த வீட்டுக்கு குடிவந்த அன்னைக்கே, என் அம்மா உன்ன பாத்து, எனக்கு இந்த மாதிரி ஒரு மருமகள் தான் அமையணும்னு சொன்னங்க...அப்போவே உன்ன கொஞ்சம்  பிடிச்சிருச்சு...அப்பறம் அன்னைக்கு ஒரு நாள், பச்சை  சேலையில் வெளியே நீ வந்த அப்போ, வீட்டு பூக்கள் கூட்டமே, இடமாறி பூத்து விட்டோமொனு தலை கவிழ்ந்து உன்னை பார்த்தப்போ, உன் அழகு கண்டு கொஞ்சம் பிடிச்சது, அப்பறம் அன்னைக்கு ஒரு நாள் என் அம்மாவுக்கு அன்பாய் நீ இட்டு விட்ட கோவில் திருநீறில், கொழுந்து விட்டு எரிந்தது என் காதல்..

கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை கொள்ளை கொண்ட,
காதல் திருடி நீ...

நல்ல கவிதையா பேசுறயே....

அழகு பெண்ணே ஒரு கவிதை தான்....அதிலும் என் தேவதை நீ கூட இருக்கையில, மூச்சு காத்துக் கூட கவிபாடுது...நான் என்ன செய்ய?
.சரி என்ன உனக்கு எப்படி பிடிச்சது சொல்லேன்...

நீ தான் என்ன மொத்தமா பிடித்திருக்கயே...இதுல தனி தனியா என்னத்த சொல்ல....சரி விஸ்வா உன் அம்மா நம்ம காதல ஏத்துப் பாங்களா?

இந்த தேவதைய யாருக்குத் தான் பிடிக்காது...கண்டிப்பாக பிடிக்கும் செல்லம்...

என்னடா இங்க நடக்குது....

என்ன ஸ்வேதா இங்க வந்து இருக்க?......

அம்மா நான் ஸ்வேதா வா காதலிக்கிறேன்....

என்ன விஸ்வா சொல்லுற,

ஆமாம் ஸ்வேதா இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால வாழ முடியாதுமா?

நீ என்னம்மா சொல்லுற ஸ்வேதா?

எனக்கும் விஸ்வா வா பிடிசிருக்குமா?

நல்ல பசங்க, இப்போதான் ஸ்வேதா ஜாதகத்த அவங்க வீட்டுல இருந்து வாங்கிட்டு  வந்தேன்....உங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா நாங்க முடிவு பண்ணி இருக்கோம். அதுக்குள்ளே நீங்க முந்திக்கிடேங்களா?....

அதிர்ச்சில் இருந்து மீளாத எங்களை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறோம்....
ஒரே பார்வையில் காதல் கொண்டு, போராட்டம் இல்லாமல், காதலோடு கிடைத்த வாழ்க்கையை எண்ணி எண்ணி, சொல்லெனா மகிழ்ச்சியில் திக்கி முக்காடிக் கொண்டிருக்கிறோம்....இடையில் கல்யாண வேலைகள் ஜோராய்  நடைபெற்றுக் கொண்டிருக்க,

விடாத தூறலாய் , அவன்  காதலில் நான் நனைய,
என் காதலில் அவன் நனைய எங்களோடு சேர்ந்து நனைகிறது
எங்கள் அடைமழைக் காதல்....

முடிந்தால் எங்கள் திருமணத்திற்கு வரவும்.....உன்னை அவளோடு எதிர் பார்க்கின்றோம் மழையே............

எப்போதும் வந்து விழும்
மழை,
இந்த முறை கொண்டு
வந்தது எனக்கான காதலை.