உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
அலைவிளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அலைவிளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 டிசம்பர், 2016

அலை விளையாட்டு 10

*
கொண்டாடப்படவேண்டிய நாளின் தொடக்கம் உன்னிலிருந்து ஆரம்பிக்கிறது மோனா.. 
தொலைத்தொடர்புகளற்ற வனாந்திரத்துப் பறவையின் சுதந்திரத்தைப் போல சிறகுகள் பெற்றுவிட்ட கர்வம் வானளக்கிறது. அது பறந்து பறந்தே பெற்றுக்கொண்டுவிடும் கொண்டாட்டம் வந்து அமர்கிற இடம், நிஜத்தினூடாடும் வாழ்வின் பெருங்கருணை.. 
இலையுதிர்த்துவிட்ட மரங்கள் சூடிக்கொள்கிற வரவில், வசந்தங்கள் பூக்கிறது, அதன் மணம் காட்டுத் தேனியீன் ரீங்கரிப்பால் மொய்க்கும், தேனடைக்குள் நிறைந்திருக்கும் தேனீன் சுவைக்கு ஈடானது..
தித்திப்பென்பது பழகிப்போன கசப்பின் அடிச்சுவையிலும் இருக்கிறதென்ற பழக்கம், பயிற்றுவிக்கிற சம்பவங்களின் வழியே உன்னை நெருங்குகிறேன் இன்னும் ஆழமாய். 
காட்டுப்பாதை விரிகிறது சொல்லொன்றை விதைப்பதின் வழியே..
நுழைகிறேன், தொலைதலின் பொருட்டே..
:) 
காலடித்தடங்களைக் களவாடிக்கொள்ளும் நேசத்தால் புதுப்பாதைகள் உருக்கொள்கிறது. அங்கே நமதென்ற காலடி ஓசைக்குள், ஒத்திசையும் உணர்வுகள் கால்கொலுசு. அந்த உணர்வின் சத்தம் அடர்ந்த காட்டில் நம்மைத் தவிர்த்து யாருமில்லையென்பதைப் போன்ற எண்ணத்தின் ஓசை.. ஓசையென்பது சூல்கொண்ட பெண்ணொருத்தியின் கரு வயிற்றில் நெளியும் கணப் பிறழ்வின் நடனம் ..
தொட்டுணர்கிறேன் நினைப்பதின் வழியே..
ஏகாந்தமென்ற உணர்வின் நூல்கொண்டு பறக்க வாய்க்கிற மனதின் போக்கில் உன்னை நெருங்க நினைக்கிற உயரமெல்லாம் உன்மத்தம்..அது தொட்டுத் தொட்டுப் பார்க்கிற பருவப்பெண்ணின் பருபோல, அழகு கலந்த துயரம்..
உயர உயரப் பறக்கிறேன், காற்றின் போக்கிற்கெல்லாம் அசைந்துகொடுக்கிற காகிதத்துண்டில் சிறைப்பட்டுக்கொண்ட ஈக்குச்சியின் பிடிப்போ உன்னை நாடுமிந்த மனமென்று யோசிக்கிறேன் மோனா..பட்டமென்பதை தாக்கிக்கொண்டிருக்கும் பிடிப்பு தான் ஒரு ஈக்குச்சியைப் போலென்னை எண்ணவைக்கிறது.. இரண்டு தனித்தனிக்குள் சேர்ந்துகொள்கிற ஒற்றைச் சொல்லின் உயரமெல்லாம், பறக்ககொடுக்கிற பிடியின் லாகவமென்பதை உணர்கிறேன்..
பறக்கிறேன் வானை துண்டுக்காகிதமாக்கி.. 
தொட்டுவிடும் தூரம் தான் முயற்சி அது வளர்கிறது, இளைஞன் ஒருவனின் பருவக்கனவுபோல..
ரகசியங்களற்ற ரகசியத்தில் அமைதிகொள்கிறேன்.. 
யாரும் பருக நினைக்காத சுவைக்குள் ஒளிந்திருக்கும் தாகத்தின் மேல், தாகம் கொண்டிருக்கும் இந்த இருப்பை, இந்த கணத்தில் கொண்டாடிக்கொள்ள உன்னை நினைப்பதில் வழியாய், இறுகிக்கொண்டுவிட்ட பனிப்பாறையொன்றின் மீது வெயில் விரிக்கும் கருணையைப் போல், உருகி உருகியே உன் வழித்தடம் நெருங்குகின்றேன்..
குளிர் அனத்துகிற நிமிடம், வெயில் போர்த்துகிறது..
வெயிலும், குளிருமாய் மாறி மாறிப்பெய்யும் பருவத்தின் மேல் மழையின் நடனம், கடல் சேர்வதற்கான விளையாட்டு தான் மோனா..

-ரேவா





திங்கள், 18 ஜனவரி, 2016

அலைவிளையாட்டு 9

 
 
மோனா..
 
நானாய் ஏற்படுத்திக்கொண்ட இந்த ஒற்றைச் சொல்லின் பிம்பம் வளர்க்கிறது, நீரற்ற வேரின் பொழுதை. நீயற்ற பொழுதை வெயில் தீண்டுவதில்லை என்ற போதும், அதை சுவைக்கப் பழகியிருக்கும் இந்த நிழல் வெயில், காலத்தின் தீனி..
 
பெருந்தாகம் எடுக்கிற போதும், பசிக்கிற வேளைக்கு ஆட்படுகிற போதும் கரைமீறி வருகிற உன் கடல், கால் நனைப்பதற்கு எனக்கான தீவென்பது எத்தனை பெரிய ஆசுவாசம்..எவ்வளவு பெரிய கர்வம், அத்தனையையும் மீறிய ஆறுதல். 
 
மனிதக்கடல்கள் பல நம்முள் சங்கமிப்பதும், பின்னது கானல் நீராய் காணாமல் போவதும் நமக்கொன்றும் புதிதில்லை தான் மோனா. ஆனால் நீர்ச்சுழிகளை, எதிர்ப்பார்ப்பின் வளைவுகளுக்குள் செலுத்திப் பார்க்கும் போது சிக்கிடும் நம் சுயம், எத்தனை பெரிய கொடிய அரக்கனாகிறான் என்பதை கவனிப்பதில் அயற்சியும் பிடிக்கிறது மோனா..அதை மீறி சம நிலைக்கு செலுத்த முற்படுகிற துடிப்பில், வார்த்தைகளின் புஜங்கள் கடுக்கிறது. எல்லை மீறிடுமோ என்ற படபடப்பே அசைக்க மறக்கிறது, அடுத்தவர்களை நோக்கி. 
 
யாருமற்ற அமைதிக்குள் கரைகிற பொழுதின் கடல், கரை போகத் துடிக்கிறது. அது செவி சாய்ப்பதில்லை கடலின் பேரமைதிக்கு. எங்கேயும் வெளிச்சத்தின் இருட்டு தான் என்பதை எந்த இருட்டின் வெளிச்சத்தால் நாம் தரிசிக்கிறோம் மோனா?. கேள்விகள் எழுப்புகிறது இருப்பை. ஆனாலும் வாழ்வதில் பதில்களேதும் கிடைப்பதில்லை தான் மோனா.
 
வருவதும், வந்த பின் வராமல் போவதுமான தத்துவ வார்த்தைகளை உதிர்க்கையில் எல்லாம் பழுத்த இலையொன்றின் பச்சைக் கனவுகள் தான் விழாமல் பிடித்துவைத்திருக்கிறது என்பதை நீயும் அறிந்திருக்கிறாய். வாழ்வு என்பது என்ன மோனா? உன்னை நான் பார்க்கிற இந்த கண்ணாடி எழுத்தில் நீ எப்படி தெரிகிறாயோ அப்படி தானே இந்த வாழ்வும். ஆனால் அதில் ஏன் இத்தனை சிக்கல்? யாருமற்றவராய் நாம் பிறப்பதில்லை என்பதை நம் தொப்புள் குழிகள் சொல்லிடும் தானே மோனா?
 
சுவாசமெடுக்க இங்கே எத்தனை உயிர்கள் துடிக்கிறது பார்த்தாயா? 
 
நம்மை மீறி நாம் பற்றிடத் துடிக்கும் கைகளிலும் ரேகைகள் உண்டு மோனா. அது வளர்த்துப் பார்த்திருக்கும் தூரங்களின் அளவிற்கேற்ப, நம் பயணங்களின் நிறுத்தங்கள் என்பதை நாம் எப்போதும் ஏற்றிட மறுக்கிறோம். உரிமை, உரிமை மீறலாய் மாறிடும் போது, உருவாக்கி வைத்த ஒன்று, ஒன்றுமற்றதாய் உருவாகிப் போகிற இந்த வார்த்தை விளையாட்டைப் போல் இலகுவானது இல்லை. 
 
எதையும் கைக்குள் வைத்திட நினைக்கும் போது காணாமல் போகிறோம், அதீத சுதந்திரத்திற்குள் அனுமதிக்கும் போது, சிறைபடுகிறோம் இதன் இரண்டிற்கும் நடுவிலிருக்கும் வாசல், எந்த யாத்திரீகனின் பயணக்குறிப்பு மோனா? இதில் தேசாந்திரியின் மனமும் கால்களும் வாய்ப்பதென்பது யாருக்கான இலக்கு?
 
தேடுபவர் கண்டடைவர் 
 
என்ற இரண்டு சொல்லில் இருக்கிற தேடுதலும், கண்டடைதலும் மறைத்து வைத்திருக்கிற மாய குகையின் வாசல் எங்கிருந்து ஆரம்பம் மோனா? தேடுதலிலா, இல்லை தொலைத்தலிலா? தொலைவதிலா? நோவாவின் வயதை பெற்றிடத் துடிக்கும் உறவு நிலைகளின் எதிர்பார்ப்பை பாதுக்காக, நம்மை எந்த பெட்டியில் அடைத்துக் காப்பது மோனா?
எந்த கடவுள் அதை காப்பாற்றுவார்? கடவுளர்கள் என்ற சொல்லிற்குள் இருக்கிற மனிதனின் நேர்மை கடவுளாவதா? இல்லை கடவுளைச் சேர்வதா?
பதில்கள் மனிதர்களாவதில்லை என்ற போதும் அது சுமக்கிறது தன் பக்குவத்திற்கு ஏற்ப மனிதர்களின் காலங்களை. 
 
நுழைகிறோம். 
 
பரிசோதனைக் கூடத்தின் எலிகளாகிடும் உயிர்வதைகளின் மதிப்பு பல உயிர்களுக்கான காப்பீடு. வலிகள் இப்படித்தான் மோனா. ஏற்பதில் எதுவொன்றும் இன்னொன்றைக் கொண்டுவரும் என்பதைப் புரிந்திட நாம் இன்னொரு கடலுக்குள் பயணப்பட வேண்டும் தான் மோனா.
 
கட்டட்டற்ற சுதந்திரந்தின் காட்டுப் பலம் ஓர் அசுரப் புயல். அது அடித்துப் போகட்டும், அகப்பட்ட யாவற்றையும். இருப்பதை இருப்பதாய் கொள்வதால் எது நம் இருப்பென்று அறிகிற ஆவல் எழுப்பட்டும் யாவற்றையும்.

அதோ அங்கே உன் கடல் காத்திருக்கிறது மோனா
வருகிறேன் கரை மீறி.

-ரேவா 
 
 
 

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

அலைவிளையாட்டு 8

 
 
காத்திருக்கும் மனம் சலங்கை கட்டத் தொடங்கிவிட்டது மோனா. நடுக்கூடத்தில் மனமிடும் ஆட்டத்திற்கு ஜதி சொல்கிற உனதழைப்பில் முன் போல் ஈர்ப்பில்லை என்ற போதும் இருக்கிறாய் என்பதில் பெரும் பள்ளம் மூடி நிறைக்கிறது கேள்விக்குள் அகப்படாத உணர்வை..
 
எத்தனை மாற்றங்கள், எண்ண எண்ண மட்கும் உரமாகிறது சம்பவங்களின் மேலேறும் மனம். காரணம் ஏதென்று எதைச் சொல்வது மோனா. தித்திப்பை நோக்கி நகரும் எறும்புகள் கூட்டமென வரிசையிடுகிற சம்பவங்கள் சூழ்நிலைக் கைதிகள் தான் மோனா. சூழ்நிலைக் கைதியென்ற சொற்களின் பதம் சரியா? வெல்லப் பாகிற்க்காய் காய்ச்ச நேருகிற இனிப்பின் மறுவடிவம் பொறுமைக்குள் சிக்கி நூல் பதமாவதைப் போல், காத்திருத்தல் என்பது கணக் கச்சிதமென்ற பதத்திற்கு வருவதற்குள் தவறவிடுகிறோம், சரிதானே மோனா?
 
அந்த கடற்கரையோர ஒற்றைத் தனிமைப் படகு தான் எப்போதும் விருப்பத்தேர்வு என்ற போதும், வெயில் ஊன்றிக் கிடக்கும் அது தனிமைக்கடல் நோக்கி கடுந்தவம் புரிவதை என்றாவது உணர்ந்திருக்கிறாயா மோனா. அந்த படகு எதைப் புரியவைப்பதற்கான குறியீடு மோனா? அந்த படகின் கேவல் உனக்கு கேட்கிறதா ? அது விடாய் நாளில் மறந்து வைத்துப் போகிற பஞ்சிற்கான அவதியைப் போன்றது. 
 
உணர்வுகள் ஒருவழிப் பாதை மோனா.. திருத்தங்கள் எனும் திரும்புதல்கள் எல்லாம் திசைகாட்டி ஆகிவிடுவதில்லை. இருந்தும் உன் திசை கிழக்கா மேற்க்கா மோனா?.. 
 
சம்பவங்கள் பிரசவிக்கையில் ஆழ்கடலென உன்னை சூழ்கொள்கிற மெளனம், அலை நோக்கி கால் நனைக்க விரும்பும் என்னை கரை பக்கம் திருப்பிவிடும் அவதிக்கு என்ன பெயர் வைப்பது..
 
நம் மேனி உரசும், நாசி நுழையும் உப்புக்காற்றெல்லாம் நாம் சந்திக்கும் போது கடலின் தனிமையுடைகிற பொழுதிற்கான நன்றியாய் எனக்குத் தெரிகிறதென்ற என் பைத்தியக்கார தனத்தின் மேல் எப்போதும் கேலி தான் உனக்கு. 
 
சரி அதை விடு மோனா.. 
 
கடல் மெளனம் குடித்த காதல்கள் எங்கும் இப்படித் தான்..
 
எப்போதும் காதலில் பெருமழை தான் மோனா. எல்லா மழையும் கடல் போய் சேர்வதில்லை என்பதை எப்படி விளங்கிக் கொள்கிறாய் மோனா..
 
குடைகளற்ற நிலமொன்றின் மழையில் நனைதலும், நிழல் விரித்தாடும் வெயில் சொற்களில் தோகை விரிக்கும் மனதின் மழைக்கான நடனமும் வேறு வேறா மோனா? எல்லாம் ஒன்றின் இன்னொன்றொன்று என்பதை எப்போதும் நான் மறுப்பதில்லை மோனா. உன் திசை அதை ஏற்பதும் இல்லை மோனா
 
இன்னொரு வருடத்திற்குள் நுழையப் போகிறோமென்பதை கடலிடம் சொல்கிறேன் மோனா.. அது புத்தனின் புன்னகையைப் போல் புதிராய் சிரித்துவைக்கிறது.. புரிவதின் ஆழம் புரிந்து கொள்வதிலோ, புரிந்து கொண்டதிலோ இல்லை தானோ மோனா..
 
இருந்தும் காத்திருக்கும் மனம் சலங்கை கட்டத் தொடங்கிவிட்டது மோனா..
 
காத்திருக்கும் அந்தக் கடல் 
நம் கடல் 
தரைத்தட்டிக் கிடக்கும் சொற்களின் படகு 
கடுந்தவம் புரிகிற ஆழ்மெளனத்துள் 
முத்தெடுக்கும் வாய்ப்பு 
செத்துப் பிழைக்கும் வாழ்வில் 
மூச்சென்ற மூலதனம் 
 
நுரைகக்கி ஓயாது 
அலைகளின் சோழி உருட்டி விளையாடுகிற 
கடலுடன் காத்திருப்போம் 
கடலின் கடலாகவே

-ரேவா
 
26-12-15
8.50Am 
 
 

அலைவிளையாட்டு 7




உன் கதகதப்பு தேவையாய் இருக்கிறது மோனா.. காற்றடிக்கும் திசைவெளியெங்கும் அலைவுறுகிற மனம் இழுத்துவருகிறது, அசைவுக்கு ஆட்பட்ட உன் அத்தனையையும். நடுநிசிப் பொழுதில் கூரையில் உட்கார்ந்திருக்கும் பூனையின் கண்களாகிறது உன் பெயரற்ற இவ்விருப்பு.. விடியல் எனும் செலவுகள் இப்போதெல்லாம் கைகளைக் கடிப்பதில்லை மோனா. 


செலவற்ற வரவுகளாய் நினைவுகள் நிறையத் தொடங்கிவிட்டது.. கைவிட்டு எண்ணி எண்ணிப் பார்க்கும் சிறுமியின் உண்டியல் கனவாகிறது, கைக்கோத்து நடந்த சொற்களின் பழக்கம்.. தீவிரம் ஏதுமில்லை மோனா.. இங்கே மழை மேகம் கூடத்தொடங்கியிருக்கிறது.. மண் வாசம் மல்லுக்கட்டுகிறது உன் பெயரோடு..
 
சுவாசிக்கிறேன் மோனா.. மழை கரைத்து விடுகிறது மனச்சுவரை..
மண் வாசம் நிறைக்கிறது, உன் குரலின் நியாபகத்தை..
குரலின் பசலைக் கொடி அற்றுப் போய்விட்ட நிலத்தின் ஈரம் மறுக்கிறது, வெயிலின் கரங்களை.. ஈரங்களை உலர்த்தும் குரலின் தாய்ச்சூட்டைத் தேடுகிறது, மடிதந்துப் பழக்கிய, பழக்கத்தின் தொற்று..
 
சவலைப் பிள்ளையின் ஒட்டிய கன்னங்களை ஒத்திருக்கிற நியாபகங்களால் தீர்வதில்லை அன்பின் பசி.. மார்முட்டிக் குடித்த பாலின் பச்சை வாசத்தை தேடுகிற உச்சரித்த சொல்லின் இதழ் கொண்டிருக்கிறது, கடலின் தாகத்தை..
கடலின் தாகம் நீ அறிவாயா மோனா...
அலை அலையாய் நழுவிச் சேர்த்த கடல், திருப்பித் தருகிற ஓசை ஒவ்வொன்றிலும் நம் உரையாடல். அது கரை வந்து மீண்டும் கடலுக்கே திரும்புவதை பிழையென்று சொல்வதா இல்லை அது அலையின் சுழற்சியென்று எடுப்பதா மோனா? 
 
அடிவயிற்றின் பிரசவக்கோடுகளாகிறது, அலை இழுத்துச் சென்ற நேசத்தின் பாத அடிமணல்.. நிலைகுலைகிற நிமிடம் சில்லிடுகிற காற்றாய் இந்த அமைதி ஒப்படைக்கிறது இன்னொரு அலைக்கு.. நுரைகள் கறைகளாகிவிடுவதில்லை தான் மோனா.. பட் பட்டென்று காற்றில் உடைந்துவிடுகிற குமிழ்கள் உயிர்வாழ்கிற நிமிடங்களின் வண்ண உடைக்குள், வானவில்லாய் நீ பொருந்திப் போகிறாய்..
 
வளைவதில்லை நீ, ஆனாலும் மழை எதிரொலிக்கிறது உன்னை.
நறுக்கியப் பழத்துண்டுகளில் தூவுகிற மிளகுப் பொடியின் நெடி இந்த தூரல்.. ஞாபக நாசி சட்டென ஏற்பதில்லை இந்த மாற்றத்தை.. உண்பதின் சுவை இனிப்பதில்லை நீயற்ற மழையில்.
ஜன்னல் கைகளாகிற பார்வையை நீட்டி வைத்திருக்கிறேன் வார்த்தைகளின் வெளியில்.. 
 
இங்கே மேகம் கருவறை இருட்டைப் போல் அத்தனை பாந்தமாய் இருக்கிறது. காட்சிகளற்ற நிம்மதிக்குள் உன்னை இருத்திப் பார்க்க ஆசையுறுகிறேன்.. தொப்புள்கொடியின் வழி சுவாசம் வாங்குகிற பிள்ளையாகிற குரலில் நெளிகிறது உன் ஒவ்வொரு உச்சரிப்பிற்கும்..
 
குரலின் அடிவயிற்றில் கைவைத்துப் பார் மோனா.. நம் உரையாடல் கருவின் அசைவு உன்னை இன்னொரு தாயாய் உனக்கே உணரத்தரும்..
நெளிகிறது பார்.. அது நம்மை உணர்கிறது மோனா.. 
 
பனிக்குடமெனும் கடல் உடைத்து நீ பிரசவிக்கக் காத்திருக்கும் நம் குரல் அலையா இல்லை கடலா மோனா..
 
கடலோடு காத்திருக்கிறேன் மோனா..
 

-ரேவா
 
 

அலைவிளையாட்டு 6

              

பகலும் இரவும் இங்கே மாறி மாறி வருகிறதை நீ அறிகிறாயா மோனா. இதென்ன பைத்தியக்காரத் தனம், இரவும் பகலும் தானே தொடர்ந்து நம்மை இயக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை மோனா.. பகலும் இரவும் வெறும் பகலும் இரவும் மட்டும் தானா என்ன?

கணக்கற்றவைகளை கண்காணிக்கப் பழகியிருக்கும் மனதின் கூச்சல் தனித்து வாழப் பழக்கியிருக்கிறதென்பதை எதிர்க்கொள்ளும் ஒவ்வொருவரிடமும் சொல்வதைப் போன்ற அபத்தத்தை நான் வெறுக்கிறேன். நீ எங்கு சென்றாய் மோனா? நிழலற்ற இந்த வெயில் புறமுதுகில் வியர்வையாகி கோடுகிழிக்கிறது எதார்த்தை. எவ்விடம் நான் நிற்பதென்ற நிலைகுலைவு அகழ்ந்தெடுக்கிறது வேரற்ற எனதிருப்பை..

இப்போதெல்லாம் திறப்பதில்லை உன் கதவு. மெய் விலாசங்கள் தேடித் திரிவதில் வெடிப்பு கண்டுவிட்ட மனம் தேங்குகிறது தற்காலிக பள்ளத்தின் ஈரத்தில்.. கையள்ளிப் பருக சித்தமாய் இல்லை கண்ணெட்டும் தொலைவில் இருக்கும் கானலை.. வாழத் தெரியாதவரென்றும் அதன் வகையில் பிழைக்கத் தெரியாதவரென்றும் சொல்வது காதில் விழத்தான் செய்கிறது மோனா..இருந்தும் நீ திறப்பதில்லை இக்கதவை..

தட்டப்படும் ஒலிச் சத்தம் செவியற்ற மனதிற்கு விழப்போவதில்லை தான். ஒரு குருட்டு யாசகியின் தட்டில் விழும் செல்லாக்காசென கிடக்கிற சலுசு விலையாகிவிட்ட பிரியத்தை யாரும் எண்ணிச் சேர்க்கப்போவதில்லை.. அவரவரக்கு அவரவர் கைமண். அவரவர் காரணம். மண்பாண்டமென மாறிவிட்ட புழக்கத்தில் இல்லாதவையை அருகில் சேர்ப்பதில்லை. என்பதை நீயும் அறிந்து தான் இருக்கிறாய் மோனா..

திரும்பப் போவதில்லை என் திசை..

கைக்காட்டி மரமாகிவிட்ட  இந்நிலையை ரசிக்கிறேன். பிஞ்சுவிரல் பகிர்ந்து கொடுக்கும் சின்னக் கையசைப்பில் முளைக்கிறது இவ்விருப்பு.. பத்துவிரல்கள் போதும் தான்.. மனதோடு கைகோத்து நடக்க.. எவர் பாத்திரத்தையும் களவாடும் எண்ணமில்லை... பசி, தீரா பசி இவை மட்டும் நிறைப்பதில்லை எதையும்.. தேடல், தொடர் தேடல் இவை மட்டும் கொடுப்பதில்லை தாகத்தை.. தாகம், தாகம், பெருந்தாகம் கொண்டு வந்து சேர்ப்பதில்லை நதியை. நதி, நதி ,அதன் அடியில் கூழாங்கல்லாவதை ரசிப்பதில்லை யாதொரு மனமும்..

க்டல் தேடுகிறேன். கைபற்றுகிறேன். அலை போதும், அது மட்டும் போதும்.. நெருங்குகிற ஆழம் இழுக்கிற வேகம் துடித்துத் துடித்து மூழ்கி மூச்சிரைத்துச் சாவ சித்தமாய் இருக்கிறேன்..

கடல் என்பது கடல் மட்டுமே இல்லை, சாவென்பது சாவது மட்டுமே அல்ல என்பதையும் விளக்கிச் சொல்கிறேன்..

இங்கே பகலும் இரவும் மாறி மாறி வருவதை நீ அறியப்போவதில்லை மோனா..

திறவா கதவில் ஒட்டிச்சென்றிருக்கும் ரேகைகள் பற்றி விரியும் என் சுவர் இனி அனுமதிப்பதில்லை யாதொரு மரத்தின் வேரையும்..

போதும் போதுமென்றிருக்கிறது மோனா...


-ரேவா

image : thanks to kavya Reddy


அலைவிளையாட்டு 5

 

மழை மேகம் இங்கே கூடத்தொடங்கியிருக்கிறது மோனா.
எங்கிருக்கிறாய் நீ, எதிலும் குளிரற்ற சொல் வாட்டுகிற வெயிலின் தனிமைக்குள், சிறு ஆறுதலாவது கடல் பார்க்கிற மெளனம் தான் மோனா.. ஒரு  நீண்ட மெளனம் உன்னை துணைக்கழைக்கிறது என் பேசா சொற்களின் ஊடே. பெண்டுல மனதில் ஆடிப்பார்க்கிற இடவல நகர்வுகள் எனக்கு ஏற்பதில்லை என்ற போதும் விருப்பமற்றதை விரும்பிச் செய்கிறதைப் போன்ற காலம், சிறை விட்டுப் பிரிந்த தனிமையின் ஒற்றை இறகு தான்..

விளையாட்டுப் பொருளாகிவிட்ட பிரியங்களை, குழந்தையின் செப்புப் பானைகளைப் போல் பழக்கப்படுத்திவைத்திருக்கும் விரல்கள் என்னை பயங்கொள்ளச் செய்கிறது மோனா. தவிப்படங்கா ஒரு தவமொன்றை யாரும் கலைக்காதிருக்க வேண்டுகிறேன். பரிமாறப்பட்ட ஈர நெஞ்சின் நினைவுகள் பசிதூண்டும் ஆவலை அதிகரிக்கிறது மோனா.. ஓர் உச்சி வெயிலில் இரு மதில்களுக்கு இடையே  கம்பிகள் செருகி அதன் இடைவெளியில் போர்வை போர்த்தி, வீடென உருவகித்து விளையாண்ட காலங்கள் இனி திரும்பப் போவதில்லை என்ற நிஜத்தை கண்ணாடியின் பிழைக்கண் வழியாய் தரிசிக்கிறேன்.

நெஞ்சு முட்டும் விம்மல்கள் எரிகல்லென வீழ்கிறது கனவின் நிலத்தில். நம் நிலா வளர்வதில்லை, என்ற ஏக்கம் உனக்கும் இருக்கும் தானே.. பெளர்ணமிக் கடல்  நம் நினைவின் கரைக்கு ஏன் வருவதில்லை மோனா. கைகள் பற்றி நடந்த கடல் மண், கண்களில் உவர்ப்பை உகுக்குகிறது. அதன் ஆழம் யாரும் அறிவதில்லை. சிரிப்பதைப் போன்று நடிப்பதின் கலை எனக்கு கைவருவதில்லை அதனாலே தனிமை வனம் புகுகிறேன். யாரையும் என்னுள் அனுமதிக்கா குணம் அடர்த்தியாக்குகிறது என்னை எல்லாவற்றிலிருந்தும். நான் திரும்பவதில்லை திசைகாட்டி முட்களின் திசைகளுக்கு.. கழன்று விழுந்த திசைகாட்டி முட்கள், கடல் கோர்த்து வைத்திருக்கும் முத்துகள் தான் மோனா

அலை திருப்பிவிடுகிறது உன்னை என் கரைக்கே. நான் ஏற்பதில்லை எதையும்,  பாதம் நகர்வதில்லை, அலை மோதிப் பிரியும் விளையாட்டிற்கு. மெளனம் வேண்டும், கடல் குடிக்கும் அளவில் அதுவும் இருக்கவேண்டும்.

பெளர்ணமி பார்த்த கடலின் வசீகரம் தான் இந்த வாழ்வென்பதை, உச்சியேறும் வரை நாம் பொறுத்திருந்து உணரத்தான் வேண்டுமா?. வளர்வதும், வளர்ந்து தேய்வதும் இயல்பின் மயக்கமென்ற உண்மை எப்போது புரியும் மோனா.

இயல்பாய் இருக்கவிடாத கண்மூடித் தனங்களை, அதன் கட்டுப்பாட்டு அறைகளை துவம்சம் செய்ய நினைக்கிற கோபத்தின் உஷ்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் உருக்குகிறது நிழலை. கரையும் நிழல் ஏன் கூடு திரும்புவதில்லை என்ற அந்தியின் கேள்வியில் முட்டையிட்டு காத்திருக்கிற தவிப்பை, வலி பிரசவிக்கிற எதுவும் உணரும் மோனா..

இங்கே மழை மேகம் கூடத் தொடங்கியிருக்கிறது, இடிச் சத்தங்களினுடே வெடித் தழக்காத்திருக்கும் அந்த மழையின் தாகம் கடல் சேர்வது தானே மோனா.. மழை கடலின் தவிப்பா, இல்லை கடலை சேர நினைக்கும் மழையின் தவிப்பா? மழை என்பது மழை மட்டுமே இல்லை தானே? 

இங்கே மழை மேகம் கூடத் தொடங்கியிருக்கிறது மோனா.. நாம் மழையினூடே கடல் பார்ப்போம் வெவ்வேறு திசைகளின் வழியாய்..

நான் திரும்புவதில்லை மழையற்ற தேசத்திற்கு..

நீ அனுமதிப்பதில்லை கடலை உன் வானத்திற்குள்..

ஆவியாகி பொழியக் காத்திருக்கிற ஒவ்வொரு சொல்லும் மழை.. மழை ஒவ்வொன்றின் பரிமாணமும் இறுதியில் சங்கமிப்பதைப் பற்றி நீ யோசிக்க வேண்டாம்..

காரணம் இங்கே மழை மேகம் கூடத் தொடங்கி புள்ளிகளிட்டு தன்னை வனமென வளர்த்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு துளி விதையும் முளைக்கிறது பிரம்மாண்டமாய்..


- ரேவா


அலைவிளையாட்டு 4

 

தீர்மானங்களற்ற நெடும் பயணத்தின் ஜன்னல் ஆகிறாய். உன் வழியே வேடிக்கை பார்க்க பழகிவிட்ட விழிகளுக்கு திடீர் கதவடைப்பாய் திரள்கிறது மெளனிக்க விரும்பும் சொற்கள். கலைக்கக் காத்திருக்கிற காற்றென இத்தென்றல்
உன் சுவாசமென்று சொன்னால் தப்பா?

நான் மொழிகிறேன் மழையாக
நிறைகிறேன் நீயாக
விரிகிற ஈரம் விரிக்கிறது வானத்தை

தென்னையின் கீற்றில் விழுகிற சூரியன் வெட்டித் தருகிற இளநீர் உன் வெயில் முத்தம்
நா வறட்சியற்று பருகிகுறேன். இனிக்கின்ற ஆழம் சுவைக்கிறது சத்தத்தை. மொழி வழுக்குகிறது இளநீர் வழுக்கையென
லாகவப்படுத்தி வழித்தெடுக்கிறாய் நாணத்தை. உண்ணத் தொடங்கையில் பெரும் பசி கைப்பற்றுகிறது சிம்மாசனத்தை.
கோலோச்சுகிறாய் அதிகாரத்தால்,பிரகடனப்படுத்துகிறாய் ப்ரியத்தால்.

பூனைக்குட்டியின் காதுகளென படபடக்கிறது இரவு. பைத்தியக்காரீயின் பட்டாம்பூச்சிக் கனவுகளாகிறது பிடித்து வைத்த வண்ணங்கள். சிறகடிக்கிறேன் வண்ணத்தில், சிறைபிடிக்கிறாய் வானத்தில்.

சுதந்திரவெளி உன் பால் முத்தம். அது வளர்கிறது.
உச்சி வருகையில் பருவப்பெண்ணின் வனப்பென என் பார்வை நிறைகிறது.

மடியெனும் கடல் கொடு, உன் முத்தப் படகில் இன்னொரு கடல் நாம் வார்ப்போம். நம் கடலை நாமே மீட்டுவோம்.
அதுவரை இந்த உலகம் வேண்டாம். உனது எனதென்ற பிரிவினை வேண்டாம். சத்தங்களை மட்டும் சாட்சியமாக்குவோம்.
மீறும் வாய்ப்பை அதற்கு நாமே தருவோம்.

கறைகள் கரைகளுக்கு இல்லை.
திரும்பும் வரை காத்திருக்க மட்டுமே தெரிந்த இந்த நேசத்தை நங்கூரமாக்குவோம் கரைகளுக்கு.
ஆழம் போவோம் கடலுக்கு.

உன் மடி என் கடல்.
மடிகொடு பெளர்ணமியென வளர்த்துப் பார்ப்போம் இந்தப் பிரியத்தை.


-ரேவா

அலைவிளையாட்டு 3

 

வருடங்கள் பலவற்றை சில வார்த்தைகளால் கடந்துவிட்டோம் மோனா.

உன் சிறு விழி வழியாய் நான் காண்கின்ற உலகம் கடலளவு விரிகிறது எனக்குள்ளே. ஏழு கடல் ஏழு மலை தாண்டிய உள்ளம் எனக்கொரு தீவு. நீ மட்டுமான நீயில் நிறைந்துகொள்கிற இருப்பை, கடல் தொடுவானமென வரைந்து பார்க்கிறேன்.
உன்னை உனக்குள்ளே தேடுவதில் பெரும் களிக்கொள்கிறேன்.

தோள்சாய்ந்து உனை வேறாய் காண்கிற நேரம், சிற்றலையென கால் நனைக்கிறது ஆவல். பெரும் ஆசைக் கொண்டு உன் காதுமடல் ஸ்பரிச்சிக்க நேரும் தருணத்தின் உப்புச்சுவை, கடல் சங்காய் ஒளித்துவைத்திருக்கிறது அடங்கா சுவாசத்தை..

மனக்காதுகள் பொத்தி உன்னை அறிய நேருகின்ற பேராவல், என்னை ஒவ்வொருமுறையும் துடுப்பசைக்கச் சொல்கிறது. காற்றின் போக்கில் அலைவுறும் படகென தனிமை உன் கரை நோக்கி இழுக்கிறது.

சுடுமணல் தன்னில் பதிய நேர்கிற காலடி உன் முத்தம்.
அது ஈரங்களோடு ஒட்டிக்கொண்ட பின்னும் உரைக்கும் சூடு அடைகாக்கிறது அதே முத்தத்தை.

ஆழப்பதியும் முத்தம் உன் உதடுகளின் தீர்க்க ரேகை. நாம்  நம் கரைகளுக்கு திரும்புவதில்லை..அதற்கு கரை ஒரு போதும் நம்மை அனுமதிப்பதில்லை. நடுக்கடலில் குடிகொள்ளும் பெருந்தனிமையை நீயும் நானுமாய் குடித்துக் கடப்போம்..
கடல் சிப்பியின் பொறுமையென அதன் ஆழத்துள் லயித்து மிதக்கட்டும் படகு. 

மனிதரற்ற மனம், பறவையின் குணம் கொண்டு பறப்போம், சிறகுகளென்ற குறியீடு வேண்டாம், துக்கிக்கச் செய்யும் பிரிவுகள் வேண்டாம், நம் வானம், நம் கடல், நம் பறவைகள், நமதான ஆழம், தூரப் பார்வைக்கு புள்ளிகளாவோம். தொலைந்து தொலைந்தே இந்த காதலை மீட்போம்..தொடுவானமொன்றின் தூரத்திற்கே இந்த உணர்வைக் கூட்டிப் போவோம்..


நீ என் சிற்றலை
கடல் நம் இலக்கு..
மிதக்கிறேன் உனக்குள்ளே..

நாம் கரை சேர்வதில்லை. கரை அதற்கு நம்மை அனுமதிப்பதும் இல்லை.. வா 

வருடங்கள் பலவற்றை சில வார்த்தைகளால் ஏற்கனவே நாம் கடந்துவிட்டோம் மோனா.


 -ரேவா

அலைவிளையாட்டு 2




நிறைய நிறைய அன்பு செய்த பின்னும் நிறையாத இந்த பேரன்பு கடலளவு விரிகிற போது, அலை தேடி ஓடி மணற் பாதம் புதைய, ஈரம் வாங்குகிற பேராவல் ஒவ்வொருமுறையும் கடல் தேடச் சொல்கிறது.

பேராவல் உன் பேச்சு.. பெருந்தீ என் கோபம்
கட்டுப்பட மறுக்கிற போதெல்லாம் சுட்டெரிக்கிற சூரியன் உன் சமாதானம்..
கொடுத்தனுப்ப முடியாத வாசங்களை தைத்து வைத்திருக்கும் இச்சுவாசம் சூறாவளி.. சுழன்றடிக்கிற போதும் அது இழுத்து வருகிற அத்தனையிலும் ஒட்டிக்கொண்டுவிடும் உன் முகம் ஒரு பெளர்ணமி..

அள்ள அள்ளத் தீராத முத்தங்கள் கடல் முத்துகள்.. ஆழம் போக அனுப்பும் படகு நம் வாழ்விற்கான துடுப்புகள்..கரை சேருதலுக்கு முன் நிறைகிற படகில் விலையாகும் நியாபகம் தீராத நம் உரையாடல்.
கொடுத்தனுப்பவோ, கொண்டு சேர்க்கவோ பிரியப்படாத வார்த்தைகள் அதில் நங்கூரங்கள்..

பார்வைக்கு தெரிகிற புள்ளி புரிபடாத அன்பின் சூட்சும விதை.. அது வளர வளர நிறையும் வானம் இன்னும் உயர்த்துகிற தூரம் எட்டிப் பிடிப்பதற்கான வாய்ப்புகள்.

உன் பார்வை ஒரு நட்சத்திரம் அதில் நம் இரவுகள் ஒரு எரிகல். நீந்தும் நினைவில் பற்றிக் கொண்டுவிடும் வெப்பம் ஒளிர்விக்கிற பாதை பெரும் வனம்.

தடங்களற்ற பாதை, தடையங்களாகும் வார்த்தை.. திரும்புதல் தொலைத்து மூழ்கும் வனம் ஒளித்து வைத்திருக்கிற முகங்கள் நம் அந்நேரத்துக் குரல்கள்..

அது கடல் விட்டு கரை சேர வரும் அலையின் குரல்கள்.
மீண்டும் கடலுக்கே தன்னை ஒப்படைக்கும் அன்பின் குரல்.

நான் உன் அலை.. நீ என் குரல்..

முகங்களாகும் வரை தொடரும் இக்குரல் ஒரு பெருங்கடல்....


-ரேவா

அலைவிளையாட்டு

 

ஓர் அதிகாலைக் குளிர்ப்பொழுதில் உடல் சூட்டிற்காய் அருகில் வந்து சுருண்டுகொள்ளும் ப்ரிய பூனைக்குட்டியைப் போல் துயில்கொள்ளும் உன்னை பூனைக்குட்டியை அன்பு செய்வதைப் போன்றே தடவிக் கொடுக்கின்றேன்.. நீயும் உன் ப்ரியமும் நடுச்சாமத்தில் பூனை உருட்டும் பால்கிண்ணங்களைப் போல். அதற்குள் கொச்சை வாடையோ, பழையதின் தடமோ ஒரு போதும் இருந்ததே இல்லை.

உன் குரலின் கதகதப்பு எனக்கு குளிரின் வெப்பத்தையும், வெப்பத்தின் குளிரையும் தருபவை. அவை யாவும்  பருவங்களை ஏற்க பக்குவம் செய்த வழித்தடங்கள் தானென்று எனக்குத் தெரியும்  மோனா..

உன் அன்பு காட்டுத்தீயைப் போன்று என்னை கபளீகரம் செய்யும் ஒவ்வொரு முறையும் என் வனாந்தரத்துப் பறவைகளின் குரல் தான் எனக்கு நடுக்கத்தைத் தருகிறது. வெளியேறும் ஒவ்வொரு மிருகத்திலும் என் முகம் மாறி மாறி தெரிவதை நானே உணர்ந்திருந்த போதும் நீ அத்தனையையும் உள்ளடக்கி என்னை எரித்துக்கொண்டிருந்த இந்த வேள்வி தரும் தாய்ச்சூடு எனக்குப் புதிது தான்.

எதிர்கொள்வதில் இருக்கும் நேசத்தை மீறி அதை அறிவின் துணையோடு பார்க்கக் கொடுத்த உன் ஆளுமையின் மூக்குக் கண்ணாடி இன்றும் என் முகத்திற்குப் பொருந்திப்போவது பெருத்த ஆச்சர்யம் தான் எனக்கு.

சடசடத்துப் பெய்யும் மழை நாளில் இதழேற்கும் சூட்டோடு சினேகமாகும் தேனீர் சுவை நீ எனக்கு. அடிநாக்கின் கசப்புப் பற்றிய கவலை எனக்கு இப்போதெல்லாம் இருப்பதே இல்லை. எதுவொன்றும் இப்படித் தான் ஆரம்பமாகுமென்ற என் கணக்குகளின் விகிதத்தை மாற்றிப்போட்ட உன் வருகை என் வாழ்வின் அதிமுக்கிய வரவு.

இது காதலோ நட்போ எதுவுமோ இல்லை. இது நான்.. அது தான் நீயும்.

தனித்து அலையும் நாட்களில் ப்ரிய பூனையொன்று காலுக்கடியில் வந்து வந்து போவதைப் போல் உன் நினைவின் சிற்றலை  என் கரை மோதிச் சிரிக்கிறது..

நம் கடலில் பெரும் அமைதி. 
கருவறையில் தாயின் தொப்புள் கொடி மூலம் சுவாசம் வாங்கும் பிள்ளைக்குள் இருக்குமே ஒரு பயங்களற்ற அமைதி அது போன்ற அமைதி. 

 நீ என் வாழ்வின் கொடுப்பினை மோனா.





ஓவியம் : சுரேஷ் குமார்