காத்திருக்கும் மனம் சலங்கை கட்டத் தொடங்கிவிட்டது மோனா. நடுக்கூடத்தில் மனமிடும் ஆட்டத்திற்கு ஜதி சொல்கிற உனதழைப்பில் முன் போல் ஈர்ப்பில்லை என்ற போதும் இருக்கிறாய் என்பதில் பெரும் பள்ளம் மூடி நிறைக்கிறது கேள்விக்குள் அகப்படாத உணர்வை..
எத்தனை மாற்றங்கள், எண்ண எண்ண மட்கும் உரமாகிறது சம்பவங்களின் மேலேறும் மனம். காரணம் ஏதென்று எதைச் சொல்வது மோனா. தித்திப்பை நோக்கி நகரும் எறும்புகள் கூட்டமென வரிசையிடுகிற சம்பவங்கள் சூழ்நிலைக் கைதிகள் தான் மோனா. சூழ்நிலைக் கைதியென்ற சொற்களின் பதம் சரியா? வெல்லப் பாகிற்க்காய் காய்ச்ச நேருகிற இனிப்பின் மறுவடிவம் பொறுமைக்குள் சிக்கி நூல் பதமாவதைப் போல், காத்திருத்தல் என்பது கணக் கச்சிதமென்ற பதத்திற்கு வருவதற்குள் தவறவிடுகிறோம், சரிதானே மோனா?
அந்த கடற்கரையோர ஒற்றைத் தனிமைப் படகு தான் எப்போதும் விருப்பத்தேர்வு என்ற போதும், வெயில் ஊன்றிக் கிடக்கும் அது தனிமைக்கடல் நோக்கி கடுந்தவம் புரிவதை என்றாவது உணர்ந்திருக்கிறாயா மோனா. அந்த படகு எதைப் புரியவைப்பதற்கான குறியீடு மோனா? அந்த படகின் கேவல் உனக்கு கேட்கிறதா ? அது விடாய் நாளில் மறந்து வைத்துப் போகிற பஞ்சிற்கான அவதியைப் போன்றது.
உணர்வுகள் ஒருவழிப் பாதை மோனா.. திருத்தங்கள் எனும் திரும்புதல்கள் எல்லாம் திசைகாட்டி ஆகிவிடுவதில்லை. இருந்தும் உன் திசை கிழக்கா மேற்க்கா மோனா?..
சம்பவங்கள் பிரசவிக்கையில் ஆழ்கடலென உன்னை சூழ்கொள்கிற மெளனம், அலை நோக்கி கால் நனைக்க விரும்பும் என்னை கரை பக்கம் திருப்பிவிடும் அவதிக்கு என்ன பெயர் வைப்பது..
நம் மேனி உரசும், நாசி நுழையும் உப்புக்காற்றெல்லாம் நாம் சந்திக்கும் போது கடலின் தனிமையுடைகிற பொழுதிற்கான நன்றியாய் எனக்குத் தெரிகிறதென்ற என் பைத்தியக்கார தனத்தின் மேல் எப்போதும் கேலி தான் உனக்கு.
சரி அதை விடு மோனா..
கடல் மெளனம் குடித்த காதல்கள் எங்கும் இப்படித் தான்..
எப்போதும் காதலில் பெருமழை தான் மோனா. எல்லா மழையும் கடல் போய் சேர்வதில்லை என்பதை எப்படி விளங்கிக் கொள்கிறாய் மோனா..
குடைகளற்ற நிலமொன்றின் மழையில் நனைதலும், நிழல் விரித்தாடும் வெயில் சொற்களில் தோகை விரிக்கும் மனதின் மழைக்கான நடனமும் வேறு வேறா மோனா? எல்லாம் ஒன்றின் இன்னொன்றொன்று என்பதை எப்போதும் நான் மறுப்பதில்லை மோனா. உன் திசை அதை ஏற்பதும் இல்லை மோனா
இன்னொரு வருடத்திற்குள் நுழையப் போகிறோமென்பதை கடலிடம் சொல்கிறேன் மோனா.. அது புத்தனின் புன்னகையைப் போல் புதிராய் சிரித்துவைக்கிறது.. புரிவதின் ஆழம் புரிந்து கொள்வதிலோ, புரிந்து கொண்டதிலோ இல்லை தானோ மோனா..
இருந்தும் காத்திருக்கும் மனம் சலங்கை கட்டத் தொடங்கிவிட்டது மோனா..
காத்திருக்கும் அந்தக் கடல்
நம் கடல்
தரைத்தட்டிக் கிடக்கும் சொற்களின் படகு
கடுந்தவம் புரிகிற ஆழ்மெளனத்துள்
முத்தெடுக்கும் வாய்ப்பு
செத்துப் பிழைக்கும் வாழ்வில்
மூச்சென்ற மூலதனம்
நுரைகக்கி ஓயாது
அலைகளின் சோழி உருட்டி விளையாடுகிற
கடலுடன் காத்திருப்போம்
கடலின் கடலாகவே
-ரேவா
26-12-15
8.50Am
0 கருத்துகள்:
கருத்துரையிடுக