உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

அலைவிளையாட்டு 7




உன் கதகதப்பு தேவையாய் இருக்கிறது மோனா.. காற்றடிக்கும் திசைவெளியெங்கும் அலைவுறுகிற மனம் இழுத்துவருகிறது, அசைவுக்கு ஆட்பட்ட உன் அத்தனையையும். நடுநிசிப் பொழுதில் கூரையில் உட்கார்ந்திருக்கும் பூனையின் கண்களாகிறது உன் பெயரற்ற இவ்விருப்பு.. விடியல் எனும் செலவுகள் இப்போதெல்லாம் கைகளைக் கடிப்பதில்லை மோனா. 


செலவற்ற வரவுகளாய் நினைவுகள் நிறையத் தொடங்கிவிட்டது.. கைவிட்டு எண்ணி எண்ணிப் பார்க்கும் சிறுமியின் உண்டியல் கனவாகிறது, கைக்கோத்து நடந்த சொற்களின் பழக்கம்.. தீவிரம் ஏதுமில்லை மோனா.. இங்கே மழை மேகம் கூடத்தொடங்கியிருக்கிறது.. மண் வாசம் மல்லுக்கட்டுகிறது உன் பெயரோடு..
 
சுவாசிக்கிறேன் மோனா.. மழை கரைத்து விடுகிறது மனச்சுவரை..
மண் வாசம் நிறைக்கிறது, உன் குரலின் நியாபகத்தை..
குரலின் பசலைக் கொடி அற்றுப் போய்விட்ட நிலத்தின் ஈரம் மறுக்கிறது, வெயிலின் கரங்களை.. ஈரங்களை உலர்த்தும் குரலின் தாய்ச்சூட்டைத் தேடுகிறது, மடிதந்துப் பழக்கிய, பழக்கத்தின் தொற்று..
 
சவலைப் பிள்ளையின் ஒட்டிய கன்னங்களை ஒத்திருக்கிற நியாபகங்களால் தீர்வதில்லை அன்பின் பசி.. மார்முட்டிக் குடித்த பாலின் பச்சை வாசத்தை தேடுகிற உச்சரித்த சொல்லின் இதழ் கொண்டிருக்கிறது, கடலின் தாகத்தை..
கடலின் தாகம் நீ அறிவாயா மோனா...
அலை அலையாய் நழுவிச் சேர்த்த கடல், திருப்பித் தருகிற ஓசை ஒவ்வொன்றிலும் நம் உரையாடல். அது கரை வந்து மீண்டும் கடலுக்கே திரும்புவதை பிழையென்று சொல்வதா இல்லை அது அலையின் சுழற்சியென்று எடுப்பதா மோனா? 
 
அடிவயிற்றின் பிரசவக்கோடுகளாகிறது, அலை இழுத்துச் சென்ற நேசத்தின் பாத அடிமணல்.. நிலைகுலைகிற நிமிடம் சில்லிடுகிற காற்றாய் இந்த அமைதி ஒப்படைக்கிறது இன்னொரு அலைக்கு.. நுரைகள் கறைகளாகிவிடுவதில்லை தான் மோனா.. பட் பட்டென்று காற்றில் உடைந்துவிடுகிற குமிழ்கள் உயிர்வாழ்கிற நிமிடங்களின் வண்ண உடைக்குள், வானவில்லாய் நீ பொருந்திப் போகிறாய்..
 
வளைவதில்லை நீ, ஆனாலும் மழை எதிரொலிக்கிறது உன்னை.
நறுக்கியப் பழத்துண்டுகளில் தூவுகிற மிளகுப் பொடியின் நெடி இந்த தூரல்.. ஞாபக நாசி சட்டென ஏற்பதில்லை இந்த மாற்றத்தை.. உண்பதின் சுவை இனிப்பதில்லை நீயற்ற மழையில்.
ஜன்னல் கைகளாகிற பார்வையை நீட்டி வைத்திருக்கிறேன் வார்த்தைகளின் வெளியில்.. 
 
இங்கே மேகம் கருவறை இருட்டைப் போல் அத்தனை பாந்தமாய் இருக்கிறது. காட்சிகளற்ற நிம்மதிக்குள் உன்னை இருத்திப் பார்க்க ஆசையுறுகிறேன்.. தொப்புள்கொடியின் வழி சுவாசம் வாங்குகிற பிள்ளையாகிற குரலில் நெளிகிறது உன் ஒவ்வொரு உச்சரிப்பிற்கும்..
 
குரலின் அடிவயிற்றில் கைவைத்துப் பார் மோனா.. நம் உரையாடல் கருவின் அசைவு உன்னை இன்னொரு தாயாய் உனக்கே உணரத்தரும்..
நெளிகிறது பார்.. அது நம்மை உணர்கிறது மோனா.. 
 
பனிக்குடமெனும் கடல் உடைத்து நீ பிரசவிக்கக் காத்திருக்கும் நம் குரல் அலையா இல்லை கடலா மோனா..
 
கடலோடு காத்திருக்கிறேன் மோனா..
 

-ரேவா
 
 

0 கருத்துகள்: