உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

அலைவிளையாட்டு

 

ஓர் அதிகாலைக் குளிர்ப்பொழுதில் உடல் சூட்டிற்காய் அருகில் வந்து சுருண்டுகொள்ளும் ப்ரிய பூனைக்குட்டியைப் போல் துயில்கொள்ளும் உன்னை பூனைக்குட்டியை அன்பு செய்வதைப் போன்றே தடவிக் கொடுக்கின்றேன்.. நீயும் உன் ப்ரியமும் நடுச்சாமத்தில் பூனை உருட்டும் பால்கிண்ணங்களைப் போல். அதற்குள் கொச்சை வாடையோ, பழையதின் தடமோ ஒரு போதும் இருந்ததே இல்லை.

உன் குரலின் கதகதப்பு எனக்கு குளிரின் வெப்பத்தையும், வெப்பத்தின் குளிரையும் தருபவை. அவை யாவும்  பருவங்களை ஏற்க பக்குவம் செய்த வழித்தடங்கள் தானென்று எனக்குத் தெரியும்  மோனா..

உன் அன்பு காட்டுத்தீயைப் போன்று என்னை கபளீகரம் செய்யும் ஒவ்வொரு முறையும் என் வனாந்தரத்துப் பறவைகளின் குரல் தான் எனக்கு நடுக்கத்தைத் தருகிறது. வெளியேறும் ஒவ்வொரு மிருகத்திலும் என் முகம் மாறி மாறி தெரிவதை நானே உணர்ந்திருந்த போதும் நீ அத்தனையையும் உள்ளடக்கி என்னை எரித்துக்கொண்டிருந்த இந்த வேள்வி தரும் தாய்ச்சூடு எனக்குப் புதிது தான்.

எதிர்கொள்வதில் இருக்கும் நேசத்தை மீறி அதை அறிவின் துணையோடு பார்க்கக் கொடுத்த உன் ஆளுமையின் மூக்குக் கண்ணாடி இன்றும் என் முகத்திற்குப் பொருந்திப்போவது பெருத்த ஆச்சர்யம் தான் எனக்கு.

சடசடத்துப் பெய்யும் மழை நாளில் இதழேற்கும் சூட்டோடு சினேகமாகும் தேனீர் சுவை நீ எனக்கு. அடிநாக்கின் கசப்புப் பற்றிய கவலை எனக்கு இப்போதெல்லாம் இருப்பதே இல்லை. எதுவொன்றும் இப்படித் தான் ஆரம்பமாகுமென்ற என் கணக்குகளின் விகிதத்தை மாற்றிப்போட்ட உன் வருகை என் வாழ்வின் அதிமுக்கிய வரவு.

இது காதலோ நட்போ எதுவுமோ இல்லை. இது நான்.. அது தான் நீயும்.

தனித்து அலையும் நாட்களில் ப்ரிய பூனையொன்று காலுக்கடியில் வந்து வந்து போவதைப் போல் உன் நினைவின் சிற்றலை  என் கரை மோதிச் சிரிக்கிறது..

நம் கடலில் பெரும் அமைதி. 
கருவறையில் தாயின் தொப்புள் கொடி மூலம் சுவாசம் வாங்கும் பிள்ளைக்குள் இருக்குமே ஒரு பயங்களற்ற அமைதி அது போன்ற அமைதி. 

 நீ என் வாழ்வின் கொடுப்பினை மோனா.





ஓவியம் : சுரேஷ் குமார்


0 கருத்துகள்: