உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

மனக்கிறுக்கல்கள் 19

பருகுதலுக்கான நேரம், வெற்றுக்குவளையைப் போல் சூடானது அல்ல.
அது அனுமதிக்கிறது எல்லா சூட்டின் திரைகளையும்..
ஓர் அமைதி அதற்குள் கிடந்தாடுகிற தர்க்கமன இரைச்சலென்ற எதுவொன்றையும் காணக்கொடுக்காத இந்த மனதின் திரைவிலக்கும் உரையாடலுடைய மனிதர்கள் கிடைப்பது அத்தனை லேசுபட்ட விசயம் கிடையாது
ஆனால் அது அமைவதின் சுலபம்..
சுலபமென்பது வாய்ப்பதின் சிக்கல் :)
எதையும் நிரந்தமென ஏற்றுக்கொண்டு வாழப்பழகிக்கொண்ட முட்டாள் தனங்களின் மேல் விழும் அடி, எருமைமாட்டின் மேல் விழும் அடியாக இருப்பதில்லை, அது சொரனையெனும் ஆதித்தோலை அவிழ்த்துவிட்டு கறித்துண்டாக்கிவிடும்படியான காயங்கள். 
ஆனால் அவை நம் வழிக்கான சுலபம்.:)
எரிச்சல் உண்டுபண்ணுவதில்லை உலர்வதற்கான வாய்ப்பை. அப்படியே விட்டுவிடுவதில் இருக்கும் உண்மையை ஏற்கும் போது, காற்றின் போக்கில் காயம் உலரத்தொடங்குகிறது. ஆனாலும் அல்லாடுகிறோம்.பொருத்திப் பார்க்கிறோம்.
எதையும் பொருத்திப் பார்ப்பதெனும் படிப்பு, ஓர் அனுபவப் பாடம்.. அது மதிப்பெண்ணிடுவதில்லை என்ற போதும் மாறுகிறது சூழலுக்கு ஏற்றபடி. நாமாக அமைத்துக்கொள்வது அதளபாதாளமாக நம் மீது ஏறிக்கொண்டுவிடுவது, விழுந்து முழிக்கையிலே தான் 

விழிகொடுக்கிறது..அது எல்லாம் ஒன்றே தான் என்ற முடிவின் சிக்கல். எப்போதும் சொல்வதைப் போல் ஒன்றின் வேறு வேறு ஒரே கண்கள்..
தடுமாறுகிறோம், தடங்களைத் தொலைத்து. நடந்தபோது தெரிந்த ஒன்று, நினைக்கும் போது பிசகுவதை, பக்குவக்குறையென்று மட்டும் சொல்லிவிடமுடிவதில்லை. பிசகுதல் நிற்பதற்கான பாடம்.
பாடம், கற்பதற்கு அசைவற்றுக் கிடப்பதின் வாழ்நாள் :)
வலியற்று இருப்பதே வலிக்கான பாடம். என எதையுமே கற்றல் அனுபவமாக ஏற்றுக்கொள்ள மறுக்கிற மனது, நிரந்தரமென்ற தற்காலிகத்தின் மேல் நிற்கப்பழகிவிட்ட மாயையின் செளகர்யம். நாம் ஏற்க மறுக்கிற நிஜத்தின் ஒற்றைப் படிமம்.
சொல்வதைப் போல் எளிதாவது இல்லை வாழ்வது
நிரந்தமற்ற குடைகளில் கீழ் இளைப்பாறுதலென்பது வெயிலுக்கான நிஜம்.
நிஜம் மட்டுமே என்றும் தொடர்கிற நிழல்..
நிழலறியும் குடைகளோடு தொடர்வோம்
இன்னும் பேசுவோம்.

-ரேவா 


0 கருத்துகள்: