உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

டைரிக் குறிப்புகள்ஒரு நெடுஞ்சாலையின் பிரியமென இருக்கிறது இந்த இருப்பு..

கையசைத்தல் கணம் கவனிக்கும் முன் கழன்றுவிட்ட இலைச்சருகின் பச்சையக் கனவாகிற போது, இந்த வாழ்தலை வாழ்தலின் வழியே ரசிக்கிறேன்..

எதன் பொருட்டும் மண்டியிடப் பழகாத வாழ்தலின் பிரார்த்தனையென்பது வெள்ளைக்கோடுகளாய் சாலையின் இருபக்கமும் பிரிந்துகிடக்கையில் நடப்பதற்கான சாத்தியம் நாம் மட்டுமா என்ன?

எங்கிருந்தோ நீள்கிற வெப்பத்தின் கைகளைப் பற்றிக்கொள்கிறேன். நிழல் என்பது ஒரு நீண்ட தனிமை.. அது வேண்டும் போது தருகிற இருண்மையை, நிழலின் வேறொரு கண்ணாய் பார்க்கிற தரிசனத்திற்கான தவமென்பது
இந்த ஆயுளை ஆயுளுக்குமாய் பயன்படுத்துவது தான் என்ற இடத்திற்கு வருவது ஒரு நீண்ட தியானம்..

அந்த தியானத்தின் முன் மனிதச் சத்தங்கள் ஒரு புல் மிதிபடுகிற ஓசையைப் போன்றது.

கண் திறக்கிறேன்..

புல்லின் மேலிருக்கும் பனித்துளியை விழுங்குகிற வெயில், வெயிலை தன் பாணியில் உறிஞ்சிக் குடிக்கிற அந்தி, அந்தியை இருளில் கரைக்கிற நிலவு, நிலவை மறைக்க இன்னும் கூட தேய்பிறை

ஒன்றை மிஞ்சும் ஒன்று..

வாழ்தல் கொண்டாட்டம்
வாழ்தல் ஒரு பரிசு
வாழ்தல் குழந்தையின் கண்கள்
வாழ்தல் ஒரு அறியா மொழி
சுருக்கமாய்
வாழ்தல் தொப்புள் கொடி

அறுபட்டாலும் ஒட்டிக்கொள்ளும் சுவாரஸ்யம்

கொண்டாடுதல் ஒரு தவம்
கொண்டுவிடுதல் அதன் வரம்..


வரம் வாய்க்கும் ஆயுள் எழுதாக் காகிதம்..

எழுதிப் பார்ப்போம்,

-ரேவா

0 கருத்துகள்: