உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

மழைக் காலம்


முழுதாய் வளர்வதற்குள்ளான காத்திருப்பை அணில் கடித்துவிட அதன் இதழ்களில் ரோஜா வாசம்.. அதன் குட்டிக் கைகளுக்குள் அகப்பட்ட மலரின் விரிதல் கற்றுத் தேராத காத்திருப்பின் மணம்..

பார்த்துப் பார்த்து வளர்த்தாலும் வாடிவிடுகிற மலரின் புரிதலைப் போலவே இந்த கணம். அதன் வாசம் பிறவி உடுத்திப் பார்க்காத செவ்வண்ணம். வளர்தல் ஒருவிதமான காத்திருப்பு, அதன் வசமான புரிதல் வேர்கொண்ட விதைகளுக்கான விடுதலை.. 

சுதந்திரம் நம் கைமணல்.. ஊற்றுகிற சொல்லின் நீர்மை உயிர் வளர்ப்பதற்கான ஆதாரம்.

.
என் செடிகளுக்கு மத்தியில் ஒரு செந்நிற ரோஜா செடியுண்டு.. எப்போதாவது ஜோடியாய் பூக்கும் அதன் புன்னகையின் போதெல்லாம் தொற்றிக்கொள்கிற நறுமணம் என் மறுபிறப்பு. 

இம்முறையும் மொட்டொன்றை வளர்வதற்குள்ளே அணில் கடித்துவிட அதன் விழிகளுக்குள் அகப்பட்ட மிரட்சியை அணில் தன் சத்தங்களின் வழியாய் உடைத்துக் காட்டுகிறது.க்க்க்கிவிக் க்க்க்விக் சத்தம் பாண்டிய நாட்டில் நீதிகேட்கிற பரல்களின் சத்தமாய் மனதை நிறைக்கிறது
நியாயங்கள் என்றும் விலை போவதில்லை.

அது வளர்கிறது புரிதலுக்கேற்ற பக்குவத்தின் நிழலில்..


நாமாக ஏற்றிக்கொண்டுவிட்ட உருவத்தின் மீதான கனத்தில் தவறவிடுகிற கணமென்பது ஒரு யுகத்திற்கான வேண்டுதல்..அது பிடுங்கப்பட்டாலும் மலர்கிறது. மலர்தல் புரிதலின் ஒருவழிச்சாலை..அங்கே திசைகள் இல்லை.
நாமாக ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்ட பிம்பம் நம் பிம்பம் மட்டுமா? அது ரோஜாவினுடையதாய் இருந்த போது காத்திருந்தது. அணிலின் இதழாக மாறிய போது கொஞ்சம் கொஞ்சமாய் அணிலின் இதழாய் மலர்கிறது..பின் சுவருக்கு சுவர் வெயில் உடுத்தி தாவுகிறது..

எதையும் எப்படி பார்ப்பது என்பதில் பித்தாகி நிற்பதற்கு பின்னிருக்கும் இருட்டு தனிமை மட்டுமே அல்ல. அது சத்தியத்திற்கான வெளிச்சம். அங்கே சத்தங்கள் நீதிகேட்கிற மெளனத்தின் பரல்கள்..

மெளனம் என்றும் பேசப்படுவதில்லை. அது மிச்சம் வைத்திருக்கிறது காத்திருப்பை. அது கைகூடும் போது உண்ட மிச்சம் போக மிச்சத்தில் விரிகிறது செந்நிற ரோஜாவாக.
இதழ்களைத் தொலைத்ததை ரோஜா கைகாட்டிவிடுகிற போதும், ரேகைகள் இன்னும் மிச்சமிருக்கிறது என்பது வேரின் பாக்கியம்
அல்லது வேர்கொண்ட மனதின் நம்பிக்கை..

காத்திருப்பின் மிச்சத்தில் சிரிக்கப்பழகிவிட்ட என் ரோஜா இதழ்கள் மாடி முழுதும் பூத்து மணக்கிறது.. இப்போதும் அணில் வருகிறது..
வாடுதலென்பது உண்ணப்படும் / உணரப்படும் வரை உயிர்வாழ்கிறது ஒரு முடிவுறாக் காலத்தைப் போல்.

-ரேவா


0 கருத்துகள்: