உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

தொடரும் நினைவுகளின் துணைக்கால் (அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து )


               அளவுகள் தெரியாத ஆரம்பம் ஒரு பிரம்மாண்டம். அது புலனாகும் போது தெரிகிற உச்சி இன்னொரு ஆரம்பம், மறுபடியும் இன்னொரு பிரம்மாண்டம்.. இது ஒரு தொடர் ஓட்டம். உட்கார நேருகிற ஒவ்வொரு இடத்திலும் தொடர்கிற மாராத்தான்.
களைப்பு சொற்களின் சுவை.
அகவெளிக்குள்ளிருக்கும் உலகம் அடர்காடு அங்கே சத்தங்கள் பிறப்புறுப்புகள், அது அடையாளங்காட்டிவிடுகிற இனம் மனித இனத்திற்கு அப்பாற்பட்ட உருவ அமைப்புகள். உள்ளிருக்கும் உறுப்பு நம்மை அடையாளம் காட்டிவிடுகிற அல்லது காட்ட மறுக்கிற புற உலகத்தின் மீதோ நமக்கு ஆயிரம் கண். 
இதில் அன்பு என்பதே அத்தனைக்குமான ஆதாரம்..
ஆரம்பிக்கிறேன். 
மற்றபடி
இங்கே எண்ணிக்கைகள் அழியும் கணக்கு. 
அண்ணன்.
பரீட்சயமான சொல்லென்பது வெறும் சொல் மட்டும் தானா? அது ஒரு சுனை.
அதிகம் பழகாத சுபாவம் என்னை நானாய் அனுமதித்த இடமென்பது இடமட்டும் அல்ல. இருந்தும் அங்கே வழக்கமான சம்பாஷணைகளுக்கு இடமில்லை. இந்த பழக்கத்தின் அருகாமையற்ற முதல் நாளை எனக்கு ஆறுதல் தரும் நாளாய் நான் மாற்ற இதை எழுதிப் பார்க்கிறேன்.
கடந்த வருடங்களில் அண்ணனோடு அண்ணனின் பிறந்த நாளில் உடனிருந்திருக்கிறேன். 365 நாட்களின் வித்தியாசம் ஒரு மலையாகிக்கொள்ளும் போது உச்சியில் நிற்கிற நடை வெறும் நடை மட்டும் தானா? அது ஏறி நின்று பார்க்கும் போது சுமை கூடிக்கொள்கிற பார்வையின் கனம். அந்த கனம் இலகுவானது எழுத்தின் வழி. 
இறக்கிவைத்திருக்கிறோம் தொடங்கிய கணத்திலிருந்து கனத்தை.
திரும்பிப் பார்க்கையில் எதுவும் இலகுவானதாய் இருந்திருக்கவில்லை. ஆனால் நின்று கொண்டிருக்கிற இடம் தொடர் சிக்கலின் புதிர் விடை.
வாழ்த்துவதெற்கென்று தனிபட்டு எனக்கு எந்த வார்த்தைகளும் சத்தியமாய் தோன்றவில்லை.. வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உடன் வரப் போகிற அண்ணனை எதைச் சொல்லி வாழ்த்துவது..அழுத்தமாய் கைகள் கோத்து உடன் செல்வதைத் தவிர்த்து.
அப்படியும் மீறி வாழ்த்த இந்த நிமிடத்தின் ஆகச்சிறந்த சொல்லாய் மெளனம் மட்டும் தான் இருக்கமுடியும். அப்படியொரு ஆகச்சிறந்த மெளனத்தைக் கொண்டு விளங்க முடியா இந்த வாழ்வின் கடந்து விட்ட ஒவ்வொரு நொடியின் துணையோடும் உங்களை வாழ்த்துகிறேன் அண்ணா..
இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
கொண்டாடும் மன நிலையில் நீங்கள் இல்லாது போனாலும் கொண்டாடிக்கொள்ளும் மனநிலை எங்களுக்கானது..
கடந்து போகிற ஒரு நொடி வாழ்வில் அத்தனையும் கொண்டாடப்படவேண்டியது என்பது எண்ணத்தின் முதிர்வு..
மகிழ்ந்திருங்கள் அண்ணா 
அரூபங்களின் கால்கள் ஆடுகிற நடனம் நகர்விற்கானது.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா..
இனிக்கும் பொழுதுகள் என்றைக்கும் உங்களுக்கானதாய் வசப்படட்டும்..
அன்பும் வாழ்த்தும்..


-ரேவா
0 கருத்துகள்: