உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

மழைக் காலம்




மழை குளித்த நிலங்கள் முதல் பிரசவம் கண்ட தாயைப் போல் புதுவாடை கொண்டு மணத்துக்கிடக்கிறது..
மழைப் பொழுதின் ஒவ்வொரு வருகையும் ஒவ்வொன்றை உடுத்திக்கொள்ளும் போது இந்த மழையின் நிர்வாணம் காணும் அழகு கன்னிக் கனவு..

ஒவ்வொரு மழையும் ஒரு முதல்..
முடிவுகள் காணாத தொடக்கமென்பது மழைக்கான கொண்டாட்டம்..

வெயிலை மீறி நேற்று பெய்த மழையால் அழகேறிக்கொண்ட வீதிகளை நாலு சுவர்களின் மத்தியிலிருந்து மொட்டைமாடிச் சுவர்கள் தாண்டி பார்க்கும் போது, மீறிப்போகச் சொன்ன மனதை நேற்று கால்கள் கேட்டு பயணப்பட்டது ஒரு சுகானுபவம்..

என்னை மீறிய மனமென்பது எண்ணிலடங்கா கால்களின் கூட்டு.. புரியும் போது அவை விடையறியாத கணக்கு..

பழக்கப்பட்ட வீதிகள் தான் பருவக்கனவுகள் போல் மழைக்காலத்தின் வெள்ளந்தி முகங்களைச் சூடிக்கொள்வது, பால்யத்தோழனின் காதலை நினைவு படுத்துகிறது..

ஏற்கவா வேண்டாமாவென்ற திண்டாட்டங்கள் இல்லாத ரசிப்பு ஒரு கொண்டாட்டம். அது சுத்தமான தேசாந்திரியின் திட்டமிடல். கை நிறைய காரணங்களற்று திசையின்றி போகும் திசை ஒரு முகம். அதன் புதிர்கள் ஒரு வயோதிகம்..

வாழ்க்கை வயோதிகம்.. புரிந்திடும் நரை மழைபோல புதிர்.
நரையென்பதும் மழை..
நனைந்திடக் கிடத்திடும் வரமென்பது நாலு பேருக்கான நன்றியுரை..

இருப்பதைத் தாண்டி இந்த இயற்கை அழைத்துச் செல்லும் ஒவ்வொரு வழியும் என் புதுப்பிறப்பு.. அதை மீறச்சொல்லும் அழுகைகள் எல்லாம் என்னிலிருக்கும் எண்ணிடலாங்கா மழை..

மழை ஒரு புதிர்காடு.. பருகக்கிடைத்த தேனீர் விதை..
விருட்சங்களாகும் சிந்தனையோடு கிளம்பிடும் பார்வை ஒரு தனிசுவை..

சுவைத்து வாழ மழையோடு இணைந்து கொள்வோம்..

இங்கே வெயில் மீறி மழைமேகம் கூடத்தொடங்கிவிட்ட இன்னொரு மாலை வீசித்தெறிக்கும் காற்றின் வாடை, நாளை மலரக்காத்திருக்கும் செம்பருத்திப் பூவின் இன்றைய நடனம், மொட்டில்லாத ரோஜா இதழலில் வருகைக்கான கொண்டாட்டம், விதைத்து வைத்திருக்கும் விதைக்கான முதல் இலையென அத்தனையும் மழைவாங்கிக்கொள்ள பிரியப்படுகிறது
முதல் காதலைப் போல..

வா மழையே
முன்நெற்றி முத்தம் என் பைத்தியக் காதலின் தவம்..
வரம் தர வா..

-ரேவா

0 கருத்துகள்: