உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

நீ என்பது என் எழுதாக் காலம்நீ இருக்கும் திசை நோக்கி என் சொற்களை அனுப்புகிறேன். அவை பிறந்த குழந்தையின் பிஞ்சுப் பாதங்களுக்கு ஒப்பானது. முதல் முதலாய் பூமி பார்க்கும் அதற்கு இந்த உலகத்தின் வழியெதுவும் தெரியாது..தெரிந்ததெல்லாம் அதற்கு பசி மட்டுமே..

பசிக்கும் நேரத்தில் அதன் குரல் அழுகையின் சுவை.. அதற்கு பாகுபாடு இல்லை. பருவங்கள் மாற மாற மாறும் அதன் பருவம் கோடைக்கானது மட்டுமல்ல என்பதை எப்போதாவது புரியவை..

கம்பங்கூழ் நேசமென அருகிப் போய்விட்ட இந்த உலகில் மனித நிழலென்பது ஒரு அடிக்கும் சற்றுக்குறைவாய் போய்விட்ட இந்த பிரபஞ்சத்தில் தான் அது நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் அதற்கு துணை புரி.

மரத்துப் போய்விட்ட பாதங்களுக்குக் கீழ் பதுங்கியிருக்கிற நிழலென்பது நடப்பதற்கான தெம்பென்பதை ஏதாவது ஒரு மழைக்காலத் தேனீரின் போது புரியவை..

ஒட்டுமொத்தமென்பது நாம் வாழும் மிகச்சில எண்ணிக்கையில் அடங்கிப் போவது ஒரு பெரிய கணக்கு. அவை தேறிய வகுப்பின் போது கடினமாய் தெரிந்து பின் வந்து நிற்கும் வகுப்பின் போது எளிமையாய் இருக்கும் கணக்கைப் போல் புரிதல் தருணத்தின் புரிதலற்று.

இறுதியாய் குழந்தையின் பாதங்களென்று அவற்றை அலட்சியப் படுத்தாதே.. அவை ஏழு உலகம் அளக்கும் வாய்ப்பிற்கு உட்பட்டது..

-ரேவா

0 கருத்துகள்: