உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

மார்கழியில் தனிமை

பனி கொட்டும் மார்கழியில்
தூரத்தில் ஒலிக்கும் பக்திப் பாடலோடு
கலந்து கொடுக்கும் தேனீரைப் போலிருக்கிறது
மனச்சூட்டின் இளங்காலை

கசங்கிக் கிடக்கும் மெத்தை விரிப்பில்
கலைந்திருக்கும் நேற்றைய ரங்கோலிச் சிதறல்களை
விரல்களால் சரிசெய்து
அதன் அதன் இடத்தில் இட்டுவிட

மொத்த வண்ணமும் ஒன்றாய் சேர்ந்து
கருப்பு முகம் வரைய
விரலிடுக்கின் வழி இறங்கிய ஈரம்
உண்மையின் நிறத்திற்கு ஏங்கி

அடுக்கப்பட்ட வரிசையில்
சலனமின்றி கிடக்கின்ற மெத்தை விரிப்பை
கலைத்துப் போட

அமைதி உடைக்கும் மின்விசிறியோ
சிரிக்கும் புத்தனோ
அண்ணன் மகளின் விளையாட்டு பிரவேசமுமின்றி
நீர்த்துக் கிடக்கும் எனதறையில்

மாரி வந்து ஆடிப் பார்க்கிறாள்
எல் ஆர் ஈஸ்வரியாகி

-ரேவா

0 கருத்துகள்: