உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 12 மே, 2015

நிலம் வேண்டும் காருண்யத்தின் வெளிச்சம்


*
நிற்பதற்கு வசதியாய் இல்லை நிலம்

எழுந்து நடக்க ஏற்றதொரு பிடி கிடைக்கா வசதியில்
வந்தமரும் வறுமைக்குள்
வயிறார கொறிக்கும் சொற்களை
மழைக்கு சூடாய் வறுத்துத்தரும் படி கட்டளையிடுகின்ற
பிரியத்தின் குரல்
கதகதப்பாய் இல்லை


ஜன்னல் தாண்டி பெய்துவிட்ட வாய்ப்பை
பொய்த்துப் போகச் செய்யும் காலத்தை
கருணை ததும்ப அள்ளி முத்தமிடும்
எதார்த்த வேடம் பொருந்தவும் இல்லை


ஏற்றதை எடுத்தாளும் சாமர்த்தியம் வாய்த்திடாத
ஒப்பனைக்குள் ஒளியும்
கோமாளி மூக்கின் இளஞ்சிவப்பில்
கருக்கலைந்த ஏமாற்றத்தின் நிறம் வரையும்
அந்திக்கும் விடியலுக்கும் சம்மந்தம் இல்லை


வண்ணங்களின் பிறை வளர்த்திடும் இருள்
கனவுக்கு வெளிச்சமென்று தெரிந்திட்ட போதும்
நிற்பதற்கு வசதியாய் இல்லை நிலம்


-ரேவா 

நன்றி :கீற்று- (18-03-15)

painting : Nancy Eckels

0 கருத்துகள்: