உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

குறுஞ்செய்தியோடு தொடங்கும் நாளின் நீ
உன் குறுஞ்செய்தியோடு
தொடங்கும் நாள் எனக்கு அலாதியானது

மஞ்சள் புன்னகையால் எழுந்த கிழக்கின்
கோப்பை தேனீர்
எனக்கது

கலைந்த விரிப்பில்
உறங்கும் டெடி பியரொன்றின்
நேசம்
போல் அது

அழ வைத்து திரும்பும்
பள்ளிப் பேருந்தின் அந்தி நேர விடுபடல்
தான் அது

பெரு நகரந்தன்னில்
விடுமுறைக் கால வெறிச் சோடலின்
பின்னிருக்கும் விழாக்கோலம்
எனக்கது

கூண்டுப் பறவை
திசை அறியா நேரத்தில்
வான் நோக்கி பறந்திடும்
சிறகசைப்பே
எனக்கது

பயணப் பொழுதில்
பறக்கும் மனதை பிடித்து நிறுத்தும்
மெல்லிசை
தான் அது

கதை சொல்லி உறங்கும்
பிள்ளை அணைப்பின்
இளஞ்சூடு
எனக்கது

மாறாப் பிரியத்தின்
இன்னொரு அன்னையை உணரும்
பொழுதே
எனக்கது

எனக்கென கொடுத்தாலும்
தனக்கென்று உன்னை சேர்த்து
நமக்கென மாறும்
உன் குறுஞ்செய்தியோடு தொடங்கும்
நாளெனக்கு அலாதியானது

-ரேவா

0 கருத்துகள்: