எதுவொன்றும் இப்படித்தானென்ற ஒட்டுமொத்தத்தின் ஒற்றை நூல் பிடித்து பறக்கவிட ஆயத்தமாகும் காற்றின் திசை நமக்குச் சொந்தமற்றது. அது கற்றுத்தருகின்றவை கணக்கற்றவை என்ற போதும் பிழைகாண்பதில் பிழைக்கின்ற பிடி மீண்டும் கையகப்படுத்துகிற துணை ஒரு பெருந்தனிமை.
தொட்டில் பிள்ளையின் பழக்கத்திற்கு மாறிவிடுகிற மனமும், மடி கிடைக்கையில் புரண்டழும் அதன் தர்க்க குணமிடும் பேய்க்கூச்சலும் சகிக்க முடியாததாகவே இருக்கிறது. அவை நம்மை எதிர்த்திசை நோக்கி அழைக்கிற ஒற்றை வழியிலிருந்து தப்பித்து, தனக்கென்ற வழியை நிறுவிக் கொள்ள போராடும் இடமெங்கும் முளைக்கும் சொற்கள் சப்பாத்திக் கள்ளியின் முட்கள்.
நம் வறட்சியின் மீது நம்மை வளர அனுமதிக்கும் ஈரம், நம் நிலமென்பதின் கர்வம் விரிய கற்றுக்கொள்ளும் அதன் கோடை ஒரு வரம்
அனுமதித்தலின் அனுமதிக்காத இடமும், அது நாமறியாது அழைத்துப் போயிருக்கும் தொலைவும், விடுபடும் கைகளின் இளஞ்சூட்டிலிருந்து ஓட்டமெடுக்கையில் கூச்சலிடும் அன்பின் பிறழ்வும், நம்மை நமக்குள்ளே ஒரு சுயகழிவிரக்கத்தை தூண்டிவிட்டு, அதில் தூண்டில் புழுவாக்கும் சம்பவங்களை மொய்க்கவிடும் இந்த கடலளவு ஆழம் மூச்சிரைக்கிறது.
கரை தேடும் நேரம் மனம் பிறழ்கிறது.
அக்கரைப் பச்சைகளாகிவிட்ட கணக்குகளற்றவையும், இக்கரைக்கு அற்பமாகிவிட்ட கணக்கில் வராதவைகளையும் கட்டிக்கொண்டு பயணப்படுகிற மனமொரு தேசாந்திரி. அதன் இலக்கற்ற இலக்கின் மீது, சிந்தை விரிய இடம் கொடுக்கும் உணர்வை, அறிவின் வழியே வேடிக்கை பார்க்க அனுமதிக்கிற காலம் ஒரு கூழாங்கல்.
நதி அதன் போக்கு..
சிதறும் ஒலி அதன் ஊற்று.
தொற்றிக் கொள்ளும் நேரத்தில் உடன் வரும் ஒட்டுண்ணி உணர்வு இந்த வாழ்வு..
தனித்தலையும் போது தலைக்கவசமாய் தொடரும் நிழல் அதன் வரம்.
பழகிவிட்ட பழக்கமல்லாதவைகளும், வழக்கத்தில் மாறிவிட்ட பழகியவைகளும், ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்திற்கு நம்மை பார்க்க அனுமதிக்கிற கண்ணாடிகளாகையில், அதன் நுட்பத்தை பார்க்க வாய்க்கிற கண்கள் வெளிச்சம் பெற்றவை, என்பதை விட வேறென்ன வேண்டும் எழுதிக் கடக்கும் இந்த மனக்கிறுக்கல்களுக்கு..
கொஞ்சம் காலம் இந்த மனக்கிறுக்கல்களை தள்ளிவைக்கலாமென்ற என் ஆசையை, ஒரு நிமிடத்தில் உடைத்துக்கொண்டு வந்துவிட்ட இதன் கரையில் சற்றே உட்கார்ந்துகொள்ளப் பிரியப்படுகிறேன்..
இன்னும் நிறைய பேசுவோம்.
-ரேவா
Painting : Byron May
0 கருத்துகள்:
கருத்துரையிடுக