உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனக்கிறுக்கல்கள் 15

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xta1/t31.0-8/12094884_1009049519145282_4455243658917325813_o.jpg
 
ஒரு விளையாட்டுத்தனம் எடுத்துக்கொண்டுவிடும் மிகப்பெரிய விசயத்தை விளையாட்டுத்தனத்தோடு கவனிக்கத் தொடங்கியிருப்பதை தலைப்பில் ஏறியிருக்கும் எண்ணிக்கையில் இருந்து உணர்கிறேன்.. ஒரு தெளிந்த வானம் சூடிக்கொள்ளும் அழகு, மழையால் மலர்ந்ததென்ற உண்மையை உணரத்தந்த நேரங்கள் வலுவானது..
 
குளித்த வீதிகளும், இன்னும் கட்டுக்குலையாத மழை ஈரத்தால் விரியா வெளிச்சமும், சூழலை ஒருவாறு வெளிச்சமிட்டுக்காட்டிடும் மந்திரக்காரியின் கைப்பொம்மையைப் போன்றது. அதன் அத்தனை அசைவும் அறிவிலிருந்து பிறப்பதில்லை என்பதை நடந்து ஓய்ந்து உட்காரும் பொழுதுகளில் உணரமுடிகிறது..
 
வெளி நடமாட்டமற்றுப் போய்விட்ட உரையாடல்கள் உருவாக்குகிறது, உள் நடமாட்டத்திற்கு உகந்த வார்த்தைகளின் வரையறைகளை. எல்லை மீறல் எதுவரையென்பதை எடுத்துத் தந்துவிடும் சம்பவங்கள், திரும்புதலுக்கான திசையடைத்து பெய்வதில், நின்ற இடத்தில் முளைத்திடும் காளான்களால் யாருக்கு என்ன பலன்? 
 
ரயில் பெட்டிகளைப் போல் அடிக்கிக்கொண்டு கிளம்பும் உணர்வுகளை, தாங்கிக்கொண்டு பயணப்படும் முடிவுறா தண்டவாளங்களை ஆகச்சிறந்த நட்பென்று எப்போதும் சொல்லலாம்.. அது நிராகரிப்பதில்லை எந்த பயணத்தையும்.. சுமை கண்டு அஞ்சுவதில்லை..வெற்றிடத்திற்காய் வருத்தப்படுவதில்லை.. வெயில், மழை, இருண்மையின் தீவிரவாதமென எதற்கும் தன்னை ஒப்படைத்துக் காத்திருக்கிற அதன் துறவி மனம் நம்மை எப்போதும் ஈர்ப்பது. ஆனாலும், தண்டவாளங்கள் ஆகிவிடுவதில்லை நாம் எவர்க்கும், அப்படியே பிறர் நமக்கும் என எழுந்துகொள்கிற எதார்த்தம் ” எல்லாம் சில காலம் ” என்ற ஒற்றை வரிக்குள் இருந்து அடம்பிடிப்பதை, அறிவு நிறைகுடமென நடக்கப் பழகிவிட்டபோதும், முரண்டுபிடிக்கும் மனதை சில நேரங்களில் அடித்துத்தான் இழுத்துவரவேண்டியிருக்கிறது..
 
ஒருவருக்கு சாத்தியமாகிற ஒன்று, இன்னொருவருக்கு சாத்தியமாகாது போய்விடுவதின் பின்னனி முழுக்க முழுக்க நிலம் சார்ந்ததென்று மட்டும் சொல்லிடமுடியவில்லை. எதையும் எளிதைப் போல் கடந்துவந்து பழகிவிட்ட தொலைவு, நம்மை இறக்கிவிடும் இடங்களிலிருந்து பார்க்கையில் தான் கிளம்பிவந்த வடிவத்தின் தோற்றுவாய்களை உணரமுடிகிறது.
எல்லாமும் தியரிட்டிக்கல் அனுபவங்ளாகிவிடுவதை, தனித்து நிற்கையில் செயல்முறைக்கான களமென்பதை, கவனித்து நடப்பதற்குள் கடந்துவிடுகிற தொலைவை நிந்திப்பதால் என்ன பிரயோஜனம்? ஆக ஒவ்வொரு மனிதர்களும் நமக்கு ஒவ்வொரு தியரி.. அவர்களின் பக்கங்களின் நிறைவில் செயல்முறைக்கான பயிற்சிகள் தொடங்கவிருப்பதை, நாம் விரும்பினாலே ஒளிய அதில் தேருவது கடினமென்ற முதல் அ வை நாம் வயதின் பட்டங்கள் பெற்ற பிறகே தான் உணர்கிறோம்..
 
எதுவும் சுலபமல்ல.. ஆனால் எல்லாமும் சுலபத்தின் கடினம்..
வாதாடும் மனம் அவிழ்ப்பதில்லை வாதத்திற்கான ஒற்றை சூட்சும முடிச்சை..அது மேலும் மேலும் இறுகுகிறது. நடந்து சலிப்புற்ற சம்பவங்களின் மேடை, மனப்பாடமாகி உணர்வற்றுப் போய்விட்ட சொற்களின் நாடகத்தை கேலி பேசுகிறது. பாராட்டுதல் எனும் கபடம் காசு பார்க்கத் தொடங்கிவிட்ட வியாபாரத்தின் பின் விலைபோவதில்லை விற்கத் தெரியாத உணர்வின் நிலை.
 
ஆனாலும் மன்றாடுகிறோம்..
 
திருச்சபைகள் பாவங்களுக்கான மன்னிப்புக்கூடங்கள்.. அது ஏற்ற விடுவதில்லை பிரார்த்தனைகளின் தீபத்தை.. மீறி ஏற்றினாலும் காற்றடிக்கும் திசை சொந்தமாக்குகிறது வெளிச்சத்தை.
ஒரு உண்மையின் சூல் தன்னை பிரசவிக்கும் காலம், ஒவ்வொரு உயிர்க்கும் மாறுபடுமென்பதின் காத்திருப்பில் கைபற்றுவிடலாமென்ற குறைந்த அளவு நம்பிக்கையில் கடந்துவிடலாம் மிச்சத்தை.
ஓர் அழுகுரலின் பிறப்பு ஆற்றிவிடும் அத்தனையையும்..
ஒரு தெளிந்த வானம் சூடிக்கொள்ளும் அழகு, மழையால் மலர்ந்ததென்ற உண்மையை உணரத்தந்த நேரங்கள் வலுவானது..

இன்னும் பேசுவோம்.
 
-ரேவா



0 கருத்துகள்: