உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனக்கிறுக்கல்கள் 9



எண்ணற்ற திருப்பங்களை உள்ளடக்கிய வாழ்வில், எதிர்பாராத இழப்புகள், ஏற்படுத்திவிடும் நம்பிக்கையின்மை மீது அமர்ந்து, கடந்து வந்தவைகளை கவனிக்க நேருகின்ற தருணம், கடக்க இருக்கின்ற மீதிக்கான முதல் சுழியாய் இருக்கின்ற போது, புதிய சூத்திரத்தை எழுதிப் பார்க்கத் துணிகின்ற தருணங்கள் முதல் பிரசவத்திற்கு ஈடானது.

பிரசவிக்க முடியா வார்த்தைகளின் திணறலும், இதுவரை பகிர்ந்தவைகள் மொத்தமாய் வந்து நினைவடைக்கும் ஸ்தம்பித்தலும் எதையும் செய்யவிடாது திணறடிக்கும்  தணல் பொழுதும், ஞாபகங்களின் குளிருக்கான சூடாய் அவை இருக்குமென்ற நம்பிக்கையில், சம நிலைக்கு வர முயற்சி செய்கின்ற மனதின் தேற்றுதலை  எழுதிட முடிகின்றதென்ற ஆறுதல் இப்பொழுதுக்கு போதுமானதாய் இருக்கிறது.

ஒன்றும் அதோடு ஒத்திசையும் இன்னொன்றும், இன்றை வேறொன்றாய் காட்சிபடுத்த முனையும் காலத்தின் நிலைக்கண்ணாடி முன், எதிர்படும் நிகழ்வின் முகம்  நம்முடையதா? என்ற கேள்வியும், அது அப்படி இல்லையென்ற பதிலின் பின்னிருக்கும் நியாயமான வளர்ச்சியும், நம்மை அழைத்து வந்துவிடும் இடம் ஜன சமுத்திரம்.

தேடியடைதலின் ஆழமும், கரித்துக் கிடக்கும் சம்பவங்களில் நனைதலும், வாழ்தலுக்கான எதிர்ப்பு சக்தியென்ற முறையில் பார்க்கப் பழகுதலில், பாதம் தொடும் அலை முகங்கள் வெறும் முகங்கள் மட்டுமே இல்லை தானே.

சுயத்தின் பிடிப்பில் நின்று பார்த்து எதிர்க்கொள்ளும் அலைகள் ஊன்றுதலுக்கான வலுவைச் சொல்லித் தருபவைகளாய் இருக்கும் பட்சத்தில் அதன் அத்தனை வலிமைக்குப் பின்னும், வலிக்க அடித்து மீண்டும் கடலுக்கே திரும்பும் அவைகளை நாம் சாதாரணமாய் எடுத்துக் கொண்டுவிட முடியாது தான்.

நம் மீது நமக்கிருக்கும் வலுவை நமக்குப் பறைசாற்றுபவைகளாய் வந்து வந்து போகும் அலைகளும், அதன் பின்னனியின் ஆழத்திலிருந்து நம்மை நெருங்கிவரும் ஏனைய அலைகளும், நம்மை ஆழத்திற்கு பழக்கத் துணிகின்றதென்ற பார்வை அத்தனை லேசில் வந்துவிடுமா என்ன?

நின்று பார்த்து முடியாமல் போவதும், கைகள் கோர்த்து தாக்குப் பிடித்தலும், பின் பழக்கத்தில் ஊன்றுதலும், நம் சுயத்தின்  காலுக்கடியில் அலை இழுத்துச் செல்லும் மணலில் ஆட்டங்காணும் நிலையின்மையும், எதையும் வேறாய் பார்க்க முடியாததற்கு ஒரு மூலகாரணமாய் அமைந்து போகின்ற போது, நம்மை நம் மனம் ஒரு சுயபரிசோதனைக்கு அழைத்துப் போகும் இடம் ஒரு கொல்லனின் பட்டறை..

பழுக்கக் காய்ச்சிய சொற்களும், அதன் பதத்திற்கு ஏற்ப வளைத்து கொடுக்கும் நேர்த்தியும் கைவர மூலப்பொருளோடு ஒன்றிணையும் கலப்போ அல்லது காத்திருப்போ தான் மூலத்தின் விலைமதிப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறதென்பதை, ஒரு பெரும் போராட்டத்தின் பின்னான காத்திருப்பில் உருவெடுக்கும் மனம் உணரத்தொடங்கையில், அடித்துக் காய்த்த சம்பவங்களும், அதன் பின் பழக்கமாய் போன மரத்த தோளும், ஒரு பெரும் சுமையை பூக்கூடையாக்கும் வலிமைக்கு வந்துவிடுமென்பதே, இல்லாமல் போனதின் வலி நம்மை கரைக்கு அழைத்து வரும் வழியாகிறது...

இன்னும் பேசுவோம்..



-ரேவா

painting : Leon K. L. Chew   

0 கருத்துகள்: