உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனக்கிறுக்கல்கள் 18

                  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/10400924_1046089478774619_4285609702563093304_n.jpg?oh=968c875d591bba314137ae39bdc88577&oe=5714F73E
 
திரும்பிப் பார்க்க வேண்டியதிருக்கிறது. 
 
ஒவ்வொரு நாளும் ஒரே நாளைப் போன்ற வேறொன்றுக்கான நுழைவாயிலாகத் தெரியும் எந்தவொன்றின் தொடக்கச் சூட்சுமப் புள்ளியும், தொடங்கிய இடத்தை தொலைக்கையில், தன்னை என்னவாய் தக்கவைத்திருக்கிறதென்ற இடம் அதிமுக்கியமாகிறது தொடங்கிய, தொலைத்த எதுவொன்றிற்கும்.
.
அதன் பிற்பாடு அவரவர் நிலம், அவரவர் கைமணல், கட்டியெழுப்புவது அவரவர் சாமர்த்தியம்.
 
நிதானமென்ற கட்டுக்குள் இல்லாத எதுவும், ஜல்லிக்கட்டுப் பொழுதின் வாடிவாசலைப் போல் திமிறிக் கொண்டு நிற்கிறது. தன்னைக் காத்தவரையும், பயி்ற்றுவித்தவரையும் மீறி, அனைத்திலிருந்தும் தன்னைக் காக்கவேண்டுமென்ற ஒற்றைப் புள்ளி, அத்தனையையும் அடித்துத் தூக்கும் இடம் உயிர் வாழ்தலுக்கான அபாயப் புள்ளி, அதுவே உணவுச் சங்கிலி அல்லது மனம் உருவாக்கும் உணர்வுச் சங்கிலி கற்றுக் கொடுத்த பாடமாகவும், இனி நிதானித்து இருப்பதற்கான ஒத்திகையாகவும் மாறிப்போகிறது.. இது உறவுக்கும் உணர்வுக்கும் பொருந்திப்போவதன் பெரும் பங்கு, நிலம் சார்ந்து மனம் தேக்கிவைக்கும் தட்பவெட்பத்தால் ஆனது. 
 
தன்னை தனக்குள்ளே அனுமதிப்பது என்பது நம் சுயத்தின் எதுவரையென்ற புள்ளி எனக்கு எப்போதும் சவாலான காட்டுப்பாதை தான். வனமிருகங்களற்ற இடமென்ற எண்ணம், எப்போதேனும் நிகழ்கிற ஏதோ ஒரு தொலைதலில், நம்மை மீட்டெடுக்கிற சத்தம், மிருகங்களின் தோரணையை மனதிற்குள் நின்று பார்க்கத் தருகிற சுயதரிசனம் ஒரு அபாய எச்சரிக்கை மட்டும் தானா?
 
நமக்கு மட்டுமே கேட்கிற நம் நியாயத்தின் குரல்கள் ஏன் அத்தனை வலியோடு கேட்கிறது. மெச்சூட் மைண்ட் என்று சொல்லிப் பழகிய, நம் வளர்ப்பு குணம் பசிக்கும் பொழுதில், அத்தனை கட்டுப்பாடுகளையும் அத்துக்கொண்டு போவது எஜமானியிடம் மட்டும் தானே என்ற எண்ணம் எத்தனை பெரிய அகச்சிக்கல். ஏற்பதில் இருக்கும் கெட்டிக்காரத் தனம் பிசகிடும் போது அனுமதிக்கிறோம், ஒப்பனையுடைய நாவை.. அது கட்டி ஆள்கிறது நாடி நரம்பென அத்தனையையும்..
 
உலகம் உருவகித்திருக்கும் அத்தனை அசைவின்மையின் மீதும் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொண்ட மனித மனம், மாயை என்ற சொல்லின் தொலைவுக்கு வருவதற்கு, எத்தனை மனித வழித்தடங்களைக் கடந்திட வேண்டும்.. எதற்கு இந்த ஒட்டுமொத்தமும் என்ற கேள்வி தோன்றையில், கைவசம் இருக்கிற தனித்த ரேகைகள் வரைவது யாருக்காக, யாருடைய தீவை?
 
சுமைதாங்கிக் கல்லாகி விடுகிற மனதை கவனிக்காது அமர்பவரும், தன் பாரம் இறக்குபவரும் ஏதோ ஒரு பயணத்தை நோக்கி கிளம்பிவிடுகையில், கல்லின் பாரம் நிலம் மட்டும் சுமக்கவேண்டுமென்ற எண்ணம் எத்தனை பெரிய கொடூரம்.. ஆனாலும் அது அப்படி தான்.. அதன் தனிமைக்கு இரையாகிற வெயில், நிழல்களை தனதென்ற சொந்தம் கொண்டாடி பின் பருவமாற்றங்களில் இலையுதிர்த்துக் கிடக்கும் மொட்டை மரங்களுக்கு ஒப்பானது.. வேர் இருக்கும் வரை துளிர்த்திடுமென்ற செய்தி, வேர் மட்டுமே அறிந்த ரகசியம்.. அது இந்த பிரபஞ்சம் உருவாக்கி வைத்திருக்கும் மாபெரும் சக்தி.. உதிர்கின்ற எந்த நிலையிலிருந்தும் தன்னை மீண்டும் தானாய் வளர்த்தெடுத்துக் கொள்கிற சக்தி, படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் இருக்குமென்பதில் மனிதத் திமிர் கொஞ்சம் கலன்று ஓடுகிறது..
 
ஆனாலும் அன்னியப்படுகிறோம் அதிக உரிமையின் பெயரால் மனிதரில் இருந்து மற்றதில்..
 
வாழ்ந்து பின் சாவதற்கும்
செத்துக்கொண்டே வாழ்வதற்குமான தூரம்
நாம் தேர்ந்தெடுப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை..
 
அறிவை எப்போதும் உணர்விலேற்றும் பயணம் அதிசிக்கலானது தான் என்றாலும், பழகப்பட்ட பாதைகளாய் மாற, கரடுமுரடான இடங்களை ஊடுருவிக் கடந்து தான் மனதைச் செப்பனிடவேண்டியிருக்கிறது..
 
அதுவரை நம்மை இன்னொரு நாளுக்கு அல்லது இன்னொரு நாளைப் போன்ற வேறொன்றுக்கு நம்மை அனுமதிக்கிற எந்தவொரு இடத்திலும் நாம் என்னவாய் இருக்கிறோம் என்பது அதிமுக்கியம்..
 
இதுவரை எனக்கு எழுதவாய்ப்பு ஏற்படுத்திய இந்த வருடத்தின் ஏனைய மனக்கிறுக்கல்களால், நான் செப்பனிட்டுக்கொண்ட என் சுயம் எனக்கு எந்த வகை நேர்த்தி என்பதை, எழுதும் இந்த கணம் உணர்கிறேன்.. 
 
வருகின்ற வருடம் எல்லா வருடத்திலிருந்தும் இன்னொரு வாய்ப்பு என்பதில், உற்சாகம் தொற்றிக் கொள்ள, இனி என்ற இரண்டு வார்த்தைக்குள் எழும்பக் காத்திருக்கிற சாம்ராஜ்யம், எந்த வகையான படைபலத்தால் என்பதை பொருந்திருந்தே பார்க்கத் தோன்றுகிறது..

என் ஏனைய மற்ற 17 மனக்கிறுக்கல்களுக்கும், அதில் உருமாறியிருக்கிற அத்தனை மனிதர்களுக்கும் இந்த காலத்திற்கும் நன்றி என்றே..
 
இன்னும் கவனிப்பதில்,கற்பதைப் பேசுவோம்..

-ரேவா

1 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு...
தொடருங்கள்.