உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனக்கிறுக்கல்கள் 14

                

அர்த்தமற்றதாக போய்விடும் இருத்தல்களும், அதை அர்த்தத்திற்குள்ளாகிவிடப் போராடும் இருப்பும், வெற்றுக் குடுவையில் நிறைந்திருக்கும் கண்ணுக்கு அகப்படாக் காற்றைப் போல். திறந்து வைத்த பின்னும் நிறையும் வெறுமை குடிக்கும் தீராத தாகத்தை, எந்த நதியின் அல்லது எந்த சுனையில் இருந்து பெறுவதென்ற தவிப்பு நீலத்தோடு விரிகிறது..

பற்றிக்கொள்ளும் கொடியுடைய கைகளைத் தாண்டி, ஊன்றிடத் துடிக்கும் வேரின் தேடலை, அதன் ஈரத்தின் தேவையை, தர்க்கவாதம் செய்வதால் மட்டுமே வளர்த்துவிடமுடியுமென்ற திமிர், ஆதிக்க முகத்தோடு வளர்வதின்  நிஜத்திற்குப் பின் வெளிப்பட்டுவிடும் பச்சோந்தி முகம் அருவறுக்கத்தக்கது.

எதையும் சிரித்துக் கடப்பது பழகிய மொழியாய் இருந்துவிடுவதின் இலகுத் தன்மைக்குள், வளர்ந்துவிட்ட மனம் அர்த்தங்களை முடிச்சிட்டுக்கொள்ளும் விதமும், அதன் பயிற்று முறைக்குள் சிக்கிக் கொண்ட வளர்ப்பும், ஆட்டு மந்தைகளின் தரிசனத்தை, ஒரு புத்தனின் பார்வைக்குள்ளிருக்கும் அமைதியைப் போல்,  நமக்கு காட்சியில் கற்றுக் கொடுத்துவிடுவது தற்செயலான தற்செயலன்று, அது முட்கள் நிறைந்த காட்டுப் பாதை என்றே சொல்லத்தோன்றுகிறது..

எதையும் எளிதைப் போல் கடப்பதும், கடப்பதின் பின்னிருக்கும் ஊடுருவலை கவனிக்காத நடையும், நடக்கும் சம்பவங்களை ஒரு தற்காலிகத் தீர்வுக்கு மட்டும் கடத்துவதாய் இருக்கும் குணத்தின் சிக்கலை வாசிப்பில் உணர்ந்த பெர்முடாஸ் முக்கோணமாய் பார்க்கிறேன்.. நாம் நம் தீர்வுகளுக்குத் திரும்புவதில்லை.

எலும்பற்ற நாவின் மனம் எழுப்பிப் பார்க்கும் குணத்தின் சுவை, உட்செல்லும் தேவைகளின் செரிமானத்திற்குப் பின் வெளியேறுதலை உறவின் அல்லது வாழ்வின் இயற்கையென்று எடுத்துக் கொள்வதைத் திமிரென்று  சொல்லிப் பழக்கிவைத்திருக்கும் இந்த கட்டமைப்பை உடைக்கிற சொற்களின் உளி ஒரு மெளனமாய் இருந்துவிடுவதின் வீச்சு செதுக்கிற கைகள் மட்டுமே அறிந்திருக்கிற உழைப்பு.

ஒன்றை, ஒன்றைப் போலவே இயக்கிப் பார்த்த அல்லது அப்படித் தானென்று எழுதிப் பார்த்த முறைகளை, மெளனத்தால் வேறொன்றாய் காட்டுகையில், பிறழும் மனதை, பனிக்குடமுடைந்த பேறுகால வலியென்று மட்டும் சொல்லிடமுடியவில்லை. அது மரணத்திற்கும் பிறப்பிற்கும் நடுவில் வாழ்ந்து சாகிற நரகத்தைப் போல்..

யாருடைய கைகளும் கொதிக்கிற எண்ணெய் கொப்பரைக்குள் உதவிக்கு நீள்வதில்லை. ஒரு நொடியில் முடிந்துவிடுகிற வாழ்வின் மலர்தலை அட்சிக்கத் தெரியாத கடவுளர் மனம் இருப்பதால் என்ன பயன்? முரண்டு பிடிக்கும் சவலைப் பிள்ளைக்கும், அது ஏங்குகிற அன்பிற்கும் ஒரு நூலிழையைக் காட்டிவிடுகிற அறிவை ஏன் உணர்வை உதிர்த்து யோசிப்பது இல்லை?

நமக்குப் பழக்கப்பட்டுவிட்டதால் சரியாகிவிடும் தவறுகளும், பழக்கத்தின் பார்வைக்குப் பிடிபடாததனால் தவறாகிவிடும் சரிகளையும் எந்த நியாயத்தராசில் இடுவது. மூடிய கண்களுடன் நீதியைத் தூக்கிப்பிடிக்கும் தேவதைகள் இங்கே செல்லாக் காசுகள்.

ஓட்டைகள் உலகமாகிவிட்ட நவீனத்தில் ஓசோன் பொத்தலைப் பற்றி பேசுவதில் பலனில்லை தான். 

அவரவர் வேகம், அவரவர்க்கான அப்பம். எழுதிய அரிசியில் ஏமாந்தவர்களின் தலையெழுத்து..

இதில் அர்த்தமற்றதாக போய்விடும் இருத்தல்களும், அதை அர்த்தத்திற்குள்ளாகிவிடப் போராடும் இருப்பும் வெற்றுக் குடுவையில் நிறைந்திருக்கும் கண்ணுக்கு அகப்படாக் காற்றைப் போல்..

 நாம் நம் திசைகளுக்குத் திரும்புவதில்லை...


இன்னும் பேசுவோம்.

-ரேவா


painting : Mo Tuncay

0 கருத்துகள்: