உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனக்கிறுக்கல்கள் 17

         https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtl1/v/t1.0-9/12239589_1026897280693839_8216304524201071864_n.jpg?oh=f04999b254ad5f39fbc01bafab5cba34&oe=5704DBA1
 
மனதோடு நிகழ்த்த முடியாத சமாதானம் ஒரு வன்முறை..
 
திரும்ப திரும்ப எனும் தொடர் நிகழ்வுகள் திட்டமிடும் முன்னெடுப்பு, முன்பை விட சிறந்த நிகழ்வுக்காய் நம்மை தயார்படுத்துகிறது என்பதை உணர்ந்திட நிகழும் கணக்கற்ற சம்பவங்களின் கணக்கெடுப்பை தொலைத்திடும் விகிதம் மனிதனின் அஜாக்கிரதை என்ற உணர்வின் பெயராலே அழிகிறது.
 
நிலைகுலைதலும், நிலைத்திருத்தலும் எந்த நிலையிலிருந்து என்ற ஆதாரப் புள்ளி வரைகிறது வட்டங்களுக்கேற்ற கணித சமன்பாட்டை. அதன் ஆரங்களை கடந்திடும் தூரம் அவரவர்க்கான கணக்குகளின் புரிதல் விகிதங்களாகிட, எல்லோர் கணக்கும் ஏதோ ஒருவகையில் அடித்தல் திருத்தல்களோடே எழுதப்பணிக்கிற மனதின் அறிவற்ற செயல் ஒரு பூரணத்தை நோக்கிய அறிவோடான மனதின் கூட்டுப் பயணமென்பதை சொன்னால் மட்டும் புரிந்துகொள்ளவா போகிறோம்.
 
தற்காலிகமென்ற சுழல் எல்லாம் எதிர்காலமெனும் நிரந்தரமற்ற நிரந்தரத்தின் மீது் பின்னுகிற வலைக்குள் எட்டுக் கால்கள் மட்டும் முளைத்திடுமா என்ன? அது தூசி படர அனுமதிப்பதில்லை என்ற போதும் அதன் எச்சில் பின்னிப் பார்க்க துணைவதில்லை எதிர்காலமெனும் நுழைய மறுக்கிற நிகழ்காலமெனும் தற்காலிகத்தின் வலையை, மாறாக அது பார்த்துக்கொண்டே இருக்கிறது புழங்க மறுக்கிற இருளின் வாயிலை..
ஆட்படுகிறோம் அன்பிற்கு.. அதன் அத்தனை கெட்டிக்காரத் தனமான உணர்வுக்கும் ஆடிப் பழகிவிட்ட மனதின் கால்கள், சலங்கையற்ற பொழுதின் கூச்சலை ஏற்க மறுப்பதில்லை, இருந்தும் அதை ஒரு அனுபவமாக்கி ஆடிப் பார்க்கிற சொற்க்கூச்சல்கள் நம்மை ஒரு நிலைக்குள் இருக்கவிடுவதும் இல்லை.. 
 
எல்லாமும் சாதாரணமென்ற அசாதாரணத்தை புரிந்துகொள்ளத்தான் என்றால், நாம் எதிலிருந்து எதை நோக்கிப் பயணப்படவேண்டும்.. சாதாரணத்தின் அசாதாரணத்திலா? இல்லை அசாதாரணத்தில் சாதாரணத்திலா?எல்லாம் ஒன்று தானே என்று கேள்வி கேட்கிற மனம் எப்போதும் பதில்களை கொடுப்பதில் தாமதிக்கிறது. அது அதன் நிகழும் நிச்சமற்ற தற்காலிகமெனும் எதிர்கால நிகழ்விற்காய் காத்திருக்கிறது.
முன்பைப் போல் இருப்பதில்லை எதுவொன்றும் மாறாக முன்பிலிருந்து நகர்த்திக் கொண்டு வந்துவிட்ட நம் அறிவு, கேள்வியெனும் கண்ணாடியின் முன் பிரதிபலிக்கிறது, நாம் மறந்துபோன நமதான அன்பின் பிம்பங்களை. அது எதிரொலிப்பதில்லை எதையும் மாறாக நாமாகவே நம்மை மாற்றிப் பார்க்க அனுமதிக்கிறது..
 
எதுவும் சிக்கல் தானென்பதும், எதன் சிக்கலும் அவிழ்க்க முடிகிற சுலபமென்பதும் உச்சரிப்பில் ஏறிக் கொள்கிற கணம் உணர, அதை ஒவ்வொரு நூலிழை நொடியிலும் பிறழாது வாழ, நுட்பத்தில் பயணிக்க வேண்டுமென்ற அறிவை மனதோடு ஏற்றிக் கொண்டு பயணப்படும் சவாரி இரு குதிரையில் பயணிப்பது போன்று.. அது லாகவத்தோடு கட்டுப்படுத்த தெரிந்த சவாரியென்பதை ஏறி அமர்ந்ததும் உணர முடியுமா என்ன?
 
சிராய்ப்புகளும், சீல் காயங்களும் கற்றுத் தருகிறது வெகுவாய் விட்டு இறங்க முடியாத இடம் எதுவென்பதை..பயணம் அனுபவத்தால் சுகப்படுகிறதே அன்றி உடனிருப்பவரால் அல்ல என்ற முரணை, முன் விட்டு, பின் வந்து யோசிக்கிறேன்.. உடனிருப்பவர் தானே அனுபத்தின் கண்களை திறக்கச் செய்கிற ஆசானாய் இருக்கின்றனர். ஆக எதுவும் வேறு வேறு அல்ல.. எல்லாம் வேறு வேறான ஒன்றின் மற்றொன்று..
 
ஒரு பைத்தியக்காரியின் புலம்பலாய் இது தெரிந்திடும் என்பது திண்ணமாகிவிட்ட போதும், நமக்குள் கூடிடும் நரை எதனால் என்பதை தெரிந்து வைத்திருக்கிற பக்குவம் வாய்க்கப்பெற்றவர்கள் என்னைப் பொறுத்தவரை பெரும் பாக்கியவான்கள்... 
 
எதையும் அந்தக் கணத்தில் வாழ்வதற்கே வாழ்வென்ற பெயர் வந்த போதும், அந்த கணத்தில் தோன்றும் உணர்வை யார் முன்னும் பிரதிபலிப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்துகொள்ள உடன் வருகிற ஊமையின் சொற்கள் துணையாகிறது மெளனத்தின் பெயரால்.
மெளனக்கிறேன் சொற்களின் துணையோடு.. 
 
கொஞ்சமாய் நடிக்கப் பழகுதல் மட்டுமே இங்கே மனிதர்களைப் போல் வாழ்கிற மந்தைகளின் மத்தியில் நாம் போடுகிற முகப்பூச்சென்பதை நம்மை கோமாளியாக்கி அலையவிடும் சம்பவங்களே நமக்குக் கற்றுத் தருகிறது.. ஆக வாழ்வு என்றைக்கும் சுவாரஸ்யமானது. அதில் அழுது பார்ப்பதும், அழுத்தத்தின் மீதேறி சவாரி செய்வதும் அவரவர் கைக்கு அடங்குகிற பயணத்தின் லாகவத்தைப் பொறுத்து..
 
ஒவ்வொரு திருப்பமும் கணக்கற்ற சம்பவங்களின் வளைவுகளை வாரிவிடுகிற அனுபவம்.. விழுதல் மட்டும் கற்றுத் தருவதில்லை, கவனிக்க மறந்த எத்தனையோ சொல்லின் நூழிலை கணமும், விட்டுச் செல்லும் சொல்லின் தடங்களும் போதுமானது, புரியாத இந்த பயணத்தை அனுபவமெனும் பயணக்குறிப்போடு அறிந்து கடப்பதற்கு..இதற்கு ஒரு நாடோடியாகத் தான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை இருந்தும் அவசியம் என்ற அனுபவமே ஒரு நாடோடியென்பதை நடந்து பார்த்த கால்கள் மட்டுமே அறிந்த இலக்கற்றதின் இலக்கு.
 
நடந்து பார்க்க இன்னும் பேசுவோம்..
 
- ரேவா 
 
 
 
 
 
 

0 கருத்துகள்: