உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனக்கிறுக்கல்கள் 4

                

சட்டென்று ஒட்டிக்கொண்டு விட முடியா சுபாவத்தின் பின், மனம் ஓர் உறவோடு விளையாண்டு பார்க்கும் உரிமையின் அளவீட்டில் உருமாறும் குணத்தில், சாத்வீகத்தை தக்கவைத்துக் கொள்ளுதலும்,   நம்மை நாமாய் அப்படியே ஓர் உறவில் வைத்திருப்பதில் காலம் மேற்கொள்ளும் நிலையாமையையும், ஓர் ஒப்பீடு ஓப்பிட்டளவில் மட்டும் நம்மிடம் தக்கிவிடுவதில்லையென்ற தத்துவத்தின் அடர்ந்த காட்டுப்பாதை, கையில் கொடுக்கும் கிளைப் பாதை அடக்கிய குறிப்புகளைக் கொண்டு கண்டுணர்தலில் கிடைப்பது வெறும் காட்சிகள் மட்டும் அல்ல.

ஓர் எளிய நம்பிக்கை பொய்த்துப் போகும் இடத்தில், எடுத்துத் தரத்துணியா எதுவொன்றும் போக்குக்காட்டும் ஆரம்பப்புள்ளியை அவசர அவசரமாய் தேடியடைகையில், அடைபட்டு நிற்குமிடம் அத்தனை ஆசுவாசத்தைத் தரத்துணிந்திடாது தான். ஆரம்பம் அவசரமாய் எழுப்பப்படுகையில் ஆட்டங்காணப்படும் அஸ்திவாரங்கள் அபாயகரமானது அதே நேரத்தில் அதன் உண்மைத் தன்மையின் கலவைகளை தேடியெடுக்கும் மனம் வாய்த்திருப்பின் அந்த இக்கட்டுத்தருணங்கள் கலைத்துவைத்திருக்கும் ஆட்டங்கள் சுவாரஸ்யமிகுந்த அழகான விளையாட்டும் கூட..

ஒரு பொம்மலாட்டக் கலைஞனின் கையில் நூலாகும் கதாபாத்திரங்கள்  கலைஞனின் அசைவுகளுக்கு உட்பட்டவை  தானென்று தெரிந்துவிட்டால் என்ன சுவாரஸ்யம் இருந்திடும் இந்த வாழ்க்கையில்..   நம்மையறியாமல்  நம் தலைக்கு மேல் கட்டப்பட்ட கயிற்றில் அல்லது வேறொருவரின் நூலில் நாம் கட்டப்பட்டு நம்மையறியாது நாம் அதில் கட்டுப்படும் தருணமும், கட்டப்பட்ட நூலின் மகுடிக்கு தலையசைத்து நம்மீது விஷம் கக்கும் மனிதர்களும், வாழ்வை வேறுவேறு நிறத்தில் நம் மனதில் வரைந்து காட்ட, வெயில் பொழுதால் நம் வாசலுக்கு வந்தவர்களென்ற பார்வைத் திரணை  நாம் சரியாய் பெற்றுவிட்டால் இருளின் வெளிச்சங்கள் நமக்குள் ஒரு புத்தனை வரவழைக்கும் யுக்தியைச் சொல்லிக்கொடுத்துவிடும் தான்..

அப்படியா என்ற அப்படியில்லாமல் போன அப்படிக்குப் பின்னால் எல்லாம் அப்படித்தான் என்று வாழ்ந்துகாட்டிய ஒரு ஜென் கதையை அண்ணன் வழி கேட்டு அதை ஒவ்வொரு காரணத்தின் மூலத்தின் அப்படியிலும் அப்ளே செய்துபார்க்க  கைக்கு வந்து சேரும் சம்பவங்கள் என்னளவில் கவனிக்கத்தகுந்தவை..

 கட்டுமானமோ அல்லது மீள்கட்டுமானமோ எழுந்து நிற்க எடுக்கும் கலவையில், உண்மைத் தன்மைக்கான பிரயத்தனங்களைப் பொருத்தே அது காலத்திற்கும் சாட்சிகளாய் நிற்கும்..

சாட்சிகளாக காட்சியில் நிற்பது வெறும் படிமம் மட்டுமே அல்ல என்பதின் வேர் உணர்வோம்

சாட்சிகளாவோம்..


இன்னும் மனதோடு பேசுவோம்


 -ரேவா

painting : Auguste Herbin 

0 கருத்துகள்: