மனக்கிறுக்கல்கள் ஒவ்வொன்றுக்கும் நான் எடுத்துக்கொள்ளும் கால அளவு என்னளில் முக்கியமானது. நெருக்கித் தள்ளும் சம்பவங்களும், அது விடுவிக்கக் காலம் போட்டுப்பார்க்கும் போர்க்கால அறிவிப்பும், ஒன்றை வேறொன்றாய் பார்க்க நிர்பந்திக்கும் சூழலும் தான் அனைத்துக்கும் காரணம் என்று சொல்லலாம்..
இதோ என்னை எழுத அனுமதிக்கும் இந்த மனக்கிறுக்கல்களையும் அதன் பின் வரிசையிட்டு அமரக்காத்திருக்கும் வார்த்தைகளும் தன்னை எவ்வாறு பிரசவித்துக்கொள்ளபோகிறதென்ற எதிர்ப்பார்போடே அதற்கு இசைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன்..
நேற்று ஏப்ரல் 29-2015
அண்ணன் கவிதைக்காரன் இளங்கோவின் பிறந்த நாள்.
முட்டித்தள்ளுகின்ற நெருக்கடிக்கு மத்தியிலும் எங்களின் இம்சைகளைப் பொறுத்துக்கொள்கின்ற ஒருவராய் அண்ணன் மட்டுமே இருக்கிறார். எல்லா நாளும் ஒரே நாள் என்ற கணக்குகள் எங்கள் எல்லோருக்கும் இருக்கும் தானென்றாலும், அண்ணனின் பிறந்த நாளை நேற்றைப் போன்றதொரு நாளென்றே நினைக்கமுடியவில்லை.
நடந்துகொண்டிருப்பவைகளும், ஏற்கனவே நடந்தேறியவைகளையும், இப்படித்தானென்று யூகிக்க முடியாத ஆனால் ஓரளவு யூகித்தலின் நுணுக்கத்தில் புலப்படக்கூடிய நடப்பதற்கான சாத்தியங்களையும், ஒரே தட்டில் இட்டு அளந்துபார்க்கின்ற மனமும், அதை சமநிலையில் தக்கவைத்துக்கொள்வதிலிருக்கும் திடமும் அண்ணன் வழியிலிருந்தே பெற்றிருக்கிறோம் என்பதைச் சொல்வதில் தயக்கம் எங்களுக்குள் இருந்தது இல்லை..
இக்கோடைப் பொழுதுகளுக்கென்ற குளிர் ஆறுதலாய் ஒரு பிடி இருப்பதை உணர்த்துவதைத் தவிர வேறென்ன இருக்கிறது இந்த வாழ்தலுக்கு.
கடக்கும் நிமிடங்களில் தொலைந்துபோகின்ற வாழ்வில், ஆட்களின் அளவுகேற்ற ஒப்பனைகளை உடுத்தியிருக்கும் மனிதர்களும், அது கலைந்திடாதபடி இருக்க அவர்கள் எடுக்கும் பிரயத்தனங்களும் என்னளவில் எனக்கு சிரிப்பை உண்டு பண்ணுபவை.அதன் அத்தனைக் கெட்டிக்காரத் தனங்களுக்குப் பின்னும் மனம் கட்டிவைத்திருக்கும் சர்க்கஸ் கூடாரம் அதனினும் கெட்டியானது.
365 நாட்கள் நமக்கு சமைத்துப் போட்ட கணக்கற்ற சம்பவங்களின் விருந்தில் பசியாறி, மீண்டும் அந்த முதல் நாளை அடுத்த வருடத்தில் சந்திக்கையில், நாம் தின்று செரித்த விசயங்கள் என்ன என்பது கவனிப்பு மனதோடு இருப்பவர்களுக்கு வசப்படுவது.
அப்படி இந்த வருடத்தின் முதல் நாள் நேற்று.
ஆக இங்கே ஒவ்வொரு நாளும் முந்தைய வருடத்தின் முதல் நாள் என்று பார்க்கையில், வாழ்வின் மீதும் அது நமக்கு விரித்து வைத்திருக்கும் சம்பவங்களின் சிவப்பு கம்பளங்கள் மீதும் நாம் நடந்து போவது எப்படி என்று தீர்மானிப்பது எவ்வளவு முக்கியமானதாகிறது இல்லையா?!
ஒரு நுணுக்க வித்தியாசம் நம்மை இங்கிருந்து மனிதரில்லா வேறொரு இடத்தை நோக்கித் தூக்கியெறிவது ஒரு வார்த்தையால் நிகழுமெனில், நாம் வார்த்தைகளுக்கு கொடுக்கவேண்டிய அல்லது கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய முக்கியத்துவமென்ன என்பதை நம் புதிர் அவிழும் நிமிடங்களில் உணரலாம்.
இங்கே எல்லோரும் Copied Version's தான்.
ஆனாலும் Copied Versionனில் கிட்டாத செளகர்யத்தை, அல்லது இருந்தால் நன்றாய் இருந்திருக்குமோ என்ற எண்ணத்தைக் கொடுக்கின்ற விசயம், புதிய ஒரு வெர்சன் நோக்கி உந்தப்படுகையில் தான், copied Versionனின் new versionனுக்கான அத்தியாவசியம் புரிந்துபோகிறது..
குழப்புவது போலிருந்தாலும் தெளிந்து களைப்பது ஒரு சுகவிளையாட்டு. அது மனதை உற்காசத்தோடே வைத்திருக்கும் ஆரோக்கிய விளையாட்டு..
நம் கைக்கு வந்து சேரும் கணக்கற்ற மனிதர்களும், அவர்கள் கையில் கணக்காய் வைத்திருக்கும் முகமூடிகளும், நம்மளவில் நம் அக தரிசனத்தை இன்னும் ஆழமாக்க வருபவர்களென்ற பார்வை கிட்ட, ஒரு தேசாந்திரியின் பயணக் கால்களை மனது வாங்க வேண்டும்.
இலக்கற்ற பயணத்தின் வழித்துணையாய் நம் சுமைகளை அமைத்துக்கொள்வதும், அதைச் சுமப்பதால் வலுவேறும் மனமும் வாய்க்க இன்னும் கூட தூரங்கள் போவோம்..
நடந்துபார்ப்பதை எழுதிப் பார்ப்பதில் இறக்க முடிகின்றவர்கள் வரம் வாய்த்தவர்கள்.
அந்தவகையில் வாய்த்த வரங்களோடு இன்னும் கூட ஆழமாய் பயணப்படுவோம்..
இன்னும் பேசுவோம்...
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக