உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

பெளர்ணமி வளர்த்துப் பார்க்கிற மொட்டைமாடியின் நடை பிறை பொழுதுகள்

 https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12074649_1003368753046692_1693416596829799927_n.jpg?oh=972d6d877cbd7805daf01bd2cee6f710&oe=570BE50A
 
                நேற்று, இன்று என்பதிலிருந்து முற்றிலும் வேறானது என்பதை எழுதும் இந்த கணம் கொடுக்கிற முகத்தில் இருந்து பார்க்கிறேன். நேற்றைய முகநூல் நோட்ஸ் பகுதியும், இன்று அது தன்னை புதிதாய் சூடியிருக்கிற இந்த முகமும் நான் எழுத ஆரம்பித்த ஒன்றை சரியென்றே எனக்கு எண்ணச் சொல்கிறது.
இந்த பதிவு மனக்கிறுக்கலாகிவிடக்கூடாதென்று கவனிக்கிறேன்.வருவதை ஏற்று.
 
எப்போதும் மொட்டைமாடி என் மனதிற்கு நெருக்கமானது. சிறுவயதிலிருந்தே நானும் நான் மட்டுமான என் இடத்தை நான் எப்போதும் மீட்டெடுப்பது மொட்டைமாடியிலிருந்து தான். நான் மனிதரல்லாது கூட இருந்துவிடுவேன் ஆனால் ஒரு பத்துக்கு பத்து அளவிலான, என்னளவிலான ஒரு குட்டிவானத்தை தரிசிக்கமுடியாத போது, ஒரு மனப்பிறழ்வைப் போலாகிவிடுகிற வெற்றிடத்தின் நெருக்கடியை, இந்த நாற்பக்கமும் சுவரெழுப்பி இருக்கிற மனிதரைப் போன்று நடமாடும் வீடுகள் எனக்கு ஏற்படுத்திவிடுவது உண்டு.
 
பிறை காலங்களும், அது கிழக்கிலிருந்து மேற்காகவும், மேற்கிலிருந்து கிழக்காகவும் தன்னை வளர்த்துக் கொள்கிற வெளிச்சங்களை நான் எப்போதும் நிலவற்ற இருளிலிருந்தே கவனிக்கப் பழகியிருகிறேன் என்று நம்பிக்கொள்கிறேன். பெளர்ணமிக்கான பொழுதுகள் வளர வளர மனதிற்குள் தொற்றிக் கொள்ளும் ஆரவாரம் இன்றளவும் குறையாமல் இருப்பது தான் நம்மை நாம் தொலைக்காமல் இருக்கிறோமென்ற சுயபரிசோதனையின் ஒற்றை துளியாக எனக்குத் தெரிகிறது.அந்தவகையில் பெளர்ணமிப் பொழுதில் நடந்து பார்க்கிற கால்களும், அது மனதளவில் கூட்டிப் போகிற எனக்கான பயணத்தையும், இதுவரை யாருக்காகவும் நான் விட்டுத் தந்தது இல்லை. நிலவு எனக்கு அத்தனை ஸ்பெஷல். 
 
எனக்கு யாருமில்லை
நான்கூட என்ற வரிகள் நியாபகத்திற்கு வரும் போதெல்லாம் வெளிச்சமிட்டுக் காட்டுகிற இந்த இயற்கையின் ஒற்றைப் பிரதி நிதியாக இந்த நிலவு எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது. 
 
தனித்து நான் மேற்கொள்கிற ரயில் பயணங்களாகட்டும், இல்லை நண்பர்களோடான எப்போதாவது வாய்த்த இரவு நேரப் பயணங்களாட்டும் பெளர்ணமியில் இருப்பதை எப்போதும் தேர்ந்தெடுத்துச் செய்திருக்கிறேன். ஆயினும் பெண் பிள்ளைகள் என்ற கணக்கின் காலவரையறைக்குள், இரவின் முகம் நமக்குக் காட்டிவிடும் நிமிடமுள் வேகம் இதயத்துடிப்பை விட மிக நுட்பமானது.
 
நேற்று பெளர்ணமி..
 
பிறை தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்த்துக் கொண்டு வருகையில் மொட்டைமாடிகள் எல்லாம் பால்வீதிகளைப் போல் மாறிவிடுவதின் அழகும், அடுக்கிவைத்திருக்கிற தொட்டிச் செடிகளின் மேல் விழுகிற வெளிச்சத்தின் பின் சுவரோவியமாகும் செடியின் நிழலும், பெளர்ணமி இரவை எனக்கு வேறொரு கொண்டாட்ட மன நிலைக்கு கொண்டுபோய்விடும் எப்போதும். கடந்த மூன்று நாட்களாய் சரியாய் சொல்வதென்றால் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாளிலும் நிலவை பார்க்காது திரும்பி என் அறை புகுந்ததின் புழுக்கம் தான் இந்த பதிவுக்கு காரணமாய் இருக்குமென்று நம்புகிறேன்.
 
தொடர்ந்த மழை மாற்றத்தால், மேகத்திற்குள் தஞ்சம் புகுந்துவிட்ட நிலவும், எப்படியும் வந்துவிடும் காத்திருப்போமென்ற நினைப்பில் புள்ளி வைக்கத் தொடங்கி, பின் வெளுத்து வாங்கிய மழையும், மொத்தமாய் வடிந்து முடிய கிட்டத்தட்ட மணி இரவு ஒன்றாகிவிட்டது. இதற்கு மேலும் அப்பாவைத் தாண்டி மொட்டைமாடியை அடைவது பெரிய பிரயத்தனம், அந்த வீர சாகசத்தையும் செய்துமுடித்து மாடிக்கு வந்தால், மதுவின் போதை தெளியாத ரோட்டோர குடிமகன்கள் ஞானம் பெற்ற அரைக்கண்களால் பார்ப்பதைப் போன்ற அந்த நிலவின் பார்வை, கோவித்துக் கொண்டு அறை வந்து படுத்தாயிற்று. இங்கே மதுரையில் நேற்று மொத்தமாய் ஒரு ஆறுமணி நேரம் அடித்துப் பெய்த மழையில் சில்லிட்டு அறையில் இறங்குகிற காற்றும், கவனிக்காத சவலைப் பிள்ளையின் சிணுங்கலாகிவிட்ட இரவையும் கடத்திக் கொண்டு வர பெரும் முயற்சி செய்து, விடியல் என்று நம்பக்கூடிய ஒரளவு வெளிச்சம் வந்ததும் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்துவிட்டேன் அதிகாலையிலே.
 
பெரும் மழைக்குப் பின்னான வீதிகளும், குளித்து முடித்து அடிமுடியில் பெண்கள் சிறுமுடிச்சிட்டு அந்த முடிச்சில் துளித் துளியாய் சொட்டிக் கொண்டிருக்கும் நீரைப் போல், மழையில் குளித்ததின் அடையாளத்தை வெட்கத்தோடு தாங்கியிருக்கிற சிமிண்ட் சிலாப்புகளின் வழி, வழிகிற ஈரமும், ஈரங்களை சிவப்புக் கம்பளாக்கிவிடும் மொட்டைமாடியின் தரைகளும், பருவப் பெண்ணின் வனப்பைப் போல் திடீரென்று கூடுதல் அழகாகிவிடும் தொட்டிச் செடிகளும், அது கூடுதலாய் தன்னை பசுமைக்குள் நிறமாற்றம் செய்துகொள்வதைப் போன்று நம்புகிற மனமும், ஆடியடங்கி ஒரு மொத்த ஈரத்திற்குள் கட்டுப்பட்டு, கிளிப்பின் பிடிக்கு ஆட்பட்டு கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் துணிகளும், செல்போன் டவர்ஸ் இன்னும் கூட தொடர்பில் வைத்திருக்கிற சிட்டுக்குருவிகளின் சிறகசைப்பும், வெள்ளை நாரையொன்றின் அடிவயிற்றில் பிரசவிக்கிற மழைக்குப் பின்னான இளவெயிலும், சுவர்களை பிடித்துவைத்திருக்கும் ஈரத்தை கைகளால் வாங்கி பால்கனி வழியாய், மழைக்குப் பின் அடித்தார் போல் தூங்குகிற மனித வீடுகளை அடைகாத்திருக்கும் கூடுகளை வேடிக்கை பார்ப்பதும் இரவின் வெளிச்சத்தை வேறொருவகையில் விரித்துக் காட்டிவிடுகிறது..
 
மழை ஒரு கொண்டாட்டம்
நிலவு
மழையின் தீரா தாகம்.
 
ஒரு மழைக்குப் பின்னான இளவெயில், பால்வீசும் மகவின் பல்முளைக்காத சிறுகடியைப் போல். அது தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் எழுப்பிக் கொள்வதின் வெப்பக் கதிர்களை வைட்டமின்களாகப் பார்க்கப் பழகிவிடும் மனம் ஒரு தனிப் பக்குவம்.
வானத்தில் இப்போதும் நிலவிருக்கிறது.
எதிரே சூரியன்.
இருப்பதின் வெளிச்சம் இல்லாததாய் இருப்பதோ என்று கேள்வி கேட்கிறேன்.
இருளின் வெளிச்சமும், வெளிச்சத்தின் இருளும் எதிரெதியாய் இருக்க, அதை மீறி நடக்கப் பழகிவிட்ட வாழ்வில், நாம் வளர்ந்துபார்ப்பதற்கான அத்தனையும் கூடவே பயணக்கிறது, நாம் தான் கவனிப்பதற்கான மனதை வளர்த்துப் பார்ப்பதற்கான சந்தர்ப்பமற்று திரிகிறோமென்று எண்ணுகிறேன்.
 
ஒரு நல்ல நண்பன் நூறு புத்தகத்திற்கு சமம். நல்ல நண்பனாய் நமக்கு கடைசி வரை என்ற மாய வார்த்தைக்குள் யார் இருக்கமுடியும். நமக்கு நாம் மட்டுமே கடைசி வரை என்று நம்புகிறவள் நான். என் மனதின் வழியாய் புரட்டுகிற பக்கங்களும், அதில் புரியாது கடப்பதையும், புரிந்ததாய் நடித்ததை எந்தளவில் உள்வாங்கியிருக்கிறாய் என்ற புரட்டலையும் நான் மேற்கொள்ள பெளர்ணமியில் என் பிறைகாலங்கள் எனக்கு உதவியிருக்கிறது..
 
நம்மை நாம் வளர்த்துக் கொள்வதும், அந்த வளர்ச்சிக்குப் பின் பூரணத்தில் தொலைதலும், மீண்டும் ஒரு புதியதை நோக்கி இருப்பதிலிருந்தே வளர்த்துப் பார்ப்பதும் நிலவைப் போன்றது.
மனதின் பயணக்கால்கள் ஆரம்பிக்கும் வேகம் அவரவர் சித்தம்.

நீயாகிவிடுவதில்லை
எந்தவொரு மழையும்.

இன்னும் வளர்வோம்.
 
 
-ரேவா



0 கருத்துகள்: