ஓர் இருப்பை மையப்படுத்தி விழித்துக்கொள்கிற முகபாவங்களை ரசிக்கிறேன். பூச்சுகள் இல்லாத போதும் அதன் புழக்கத்தின் வாசம் பழைய நளினத்தைக் கொண்டுவருவது பெருத்த ஆச்சர்யம் தான். நாமே மறந்துவிட்ட நம் சுவடுகளை பத்திரப்படுத்தும் இந்த நீயூரான், நமக்குள்ளே நம்மை வேவு பார்க்கிற உளவாளி. அவனின் தந்திர எல்லைக்குள் கட்டுண்டுகிடக்கிற மனதை, வேறு வேறாய் படிக்கக் கொடுக்கிற காலம் ஒரு கொடுப்பினை..
நமக்கேற்ற காதுகளாய் நாம் இருப்பது தான் என்றைக்குமான நம் வாழ்வின் பலம். அது துணை தேடுகையில் கூசுகிறது. பேய் இரைச்சலில் சிக்கிக்கொண்டிருக்கும் நெடுச்சாலை ஓரத்துப் செடிகளின் அசைவைப் போல், சதா ஓய்வுராது சத்தங்களை அசைபோட்டுக்கொண்டே இருக்கிறது. உச்சரித்துக் கிடக்கும் வார்த்தைகள் சில்லுகளாய் நொறுங்கிக் கிடக்கையில், எதிரொலிக்கும் பிம்பம் நம்மை வேறாய் முகம் காட்டுகிறது. அது சாலையில் இறந்துகிடக்கும் பறவையொன்றின் கண்களால் காண்கிற உலகத்தைப் போலே அத்தனை ரம்மியம்?! அதன் பிய்ந்த சிறகுகளை பறக்க அனுமதிக்கிற காற்றின் கருணையைப் போல் அது வேறொரு பிறப்பு ..
தயங்கித் தயங்கிச் சேர்கிற இடமும், ஒரு தயக்கம் தன்னை வேறாய் வளர்த்துப் பார்க்கிற மரமும், மறந்துவிடுகிற வேரை மூலாதாரமாய் பிடித்துவைத்திருக்கும் நிலமும் இங்கே பிரதானம். ஒரு கணக்கை மீறி நீளுகிற வேரின் கைகள் அனுமதி வேண்டுவதாய் நினைக்கும் போதே, மீண்டும் தன்னைப் பரிசோதிக்கிறது. அது கதவுடைய மனிதர்களைப் போலே முகம் காட்டுகிறது. தட்டப்படும் கைகளை விட, திறக்கத் தயாராய் இருக்கிற நிலமே ஈரம் உறிஞ்ச அனுமதிப்பதின் மூலம் ஓர் உயிர்பித்தலை பார்க்கையில் அறியாதவகையில் செய்து முடிக்கிறது. அது எவ்வகை உயிர்த்தலென்பதை பரிசோதனைக் காலம் அனுமதிக்கிற சரிபார்த்தலில், நீளும் வேரின் கைகள் நமக்கு ஆவணப்படுத்துகிறது.
நீளும் வேரின் கைகள் ஓர் யாசகனைப் போல். யாரிடமும் வேண்டிப் பெறுகிற அன்பை மனமெனும் பாத்திரத்தில் எல்லாப் பொழுதும் சேகரிக்கிறது. அதைத் தடவிப் பார்த்தே பேருவகை கொள்கிறது. அதற்கு எப்போதும் திகட்டல்கள் ஏற்படுவதே இல்லை. நிறைய நிறைய யாசித்துப் பெறுகையில் தன் கொள்ளளவை மறக்கிறது. அப்படியே முற்றிலும் ஓரு நாள் எதுவுமில்லையெனும் போது, எதுவுமற்றதென்ற மாயையைக் கண்ணாடியில் காணும் முகம் போலவே கண்ணுறுகிறது.
பயணங்கள் ஓவ்வொன்றும் புதிதானவை. அவை பேருந்து நடத்துனரின் கையில் இருக்கும் விசிலைப் போலவே. ஓர் ஆணைக்குப் பின் எழுந்துகொள்கிற சத்தம், நிறுத்திவிடும் இடம் நமக்கு முக்கியம். மனிதரற்றுப் போனாலும் மனதோடு போட்டிப் போடுகிற உரையாடல்கள், மீண்டும் நாம் வேறாய் எழுவதற்கு அனுமதிக்கும் நிறுத்தம் அதனினும் முக்கியம்.
ஒவ்வொரு நிறுத்தமும் நமக்கு ஒவ்வொரு நினைவு.
அதைப் புரட்டிப் பார்க்க அனுமதிக்கிற ஜன்னலோரமென கிடக்கிற கைகள் நமக்கு வரம். அக்கைகளைப் பற்றிக் கொண்டு பயணிக்கிற போது, கிடைக்கிற அனுபவம் இதுவரை எழுதிவைத்திருந்த பிழைக் கணக்குகளை, அல்லது ஒட்டுண்ணி உணர்வுகளை வேறாய் திருத்துவதற்கான வாய்ப்பு.
பயணத்தின் கைகள் ஏதோ ஒரு வழித்தடத்தில் தொலையலாம், அல்லது தொலைவதற்காகவே சேரலாம்.
அதுவரை பற்றியிருந்த கைகளின் ஈரமும், அவை நம் ரேகைகளோடு வளர்த்துப் பார்த்த நீளத்தில் விரியும் காட்டுப் பாதையும் சுவரஸ்யமானவை. அத்தனைச் சத்தங்களுக்கு மத்தியிலும், உண்மையான இருட்டை எதிர்கொள்வதெனும் சவாலுக்குள்ளும் நம்மைத் தேடியெடுக்க அனுப்பப்படுகிற, அத்தனை கதவுடைய மனிதர்களுக்குமான விலாசமாகிவிடுகிற இந்த அன்பெனும் ஒற்றை முகவரி தட்டப்படும் கைகளுக்கானவை.
திறக்க அனுமதிப்பது அவரவர் அனுபவங்களுக்குச் சொந்தமானவை..
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது
எல்லாம்
- நகுலன்
Painting : Nora Franko
இன்னும் நிறைய பேசுவோம்..
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக