உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

மார்ச் மாதத் துணுக்குகள்


 1.


கொஞ்ச நேரமேனும் பேச ஆளற்ற இருப்பு 
எதைக் கொடுத்திடப் போகிறது
மூச்சு முட்டும் சொற்களைத் தவிர.

2.

உதறிடத் துடிக்கும் அறிவிற்கும் 
உறுத்திக் கொண்டிருக்கும் மனதிற்குமான 
பயண இடைவெளியே
ஓர் உறவின் தூரம்.. 

3.


தனிமை இருளுக்குள்
கைபற்றி நடக்கிறது நிழலின் தனிமை..
உடன் வருகிறது தூரத்து வெளிச்சம்.

4.


அடர் இருளின் மெளனத்தில் தனித்து அருந்தக் கிடைக்கிற காபி ஒருவகையான ஸ்லோ பாய்ஷன்...
# இரவுக் குறிப்புகள்

5.


யாருமற்ற அறையில் அசைந்து கொண்டிருக்கிறது இரவு
விடியலின் திசையருகே நிறுத்திவைத்திருக்கிற புத்தனின் கண்களில் இரவின் வெளிச்சம்
#இரவுக் குறிப்புகள்

6.

தொலைப்பதற்காகவே கண்டெடுக்கப்படுகிறோம்...

7..

ஒளிந்துகொள்வதற்கு ஏதுவாய்
ஒரு குரல்
உடன் வருவதைப் போல்
ஒரு நிழல்
சாய்ந்துகொள்வதெற்கென
ஒரு மடியென
தர மறுக்காத இரவு
காலத்தின் பிச்சை


8.
 
வருடங்களின் திரைச்சீலைக்குள்
வார்த்தைகளின் வெட்டவெளிச்சம்
விலகுதல்
விலக்குதல்
கற்றுத்தந்துவிடுகிறோம் காரணத்திற்கு

9.

 குரல்களை பின் தொடரும் நாய்குட்டி மனசிற்குள்

வளரத் தொடங்கும் பிம்பம்
குவளைக் காடு..

10.

 எந்த சப்தமற்றும் கிடக்கிற அறைக்குள்

வெயில் விசிறும் காலடித் தடங்களின் மேல்
சொல்லின் வியர்வைப் பூக்கள்.

11.

இருக்கிறாய் என்பது ஒருவகையான ஆத்ம திருப்தி
இல்லாத நிமிடங்களின் கனம்
உன்னைச் சூழாதிருக்க
இருக்கிறேன் என்பது
இருக்கும் வரைக்கான பிரார்த்தனை


12.


காபி கோப்பைகளைப் போல் இருக்கவே பிரியப்படுகிறேன்
கசப்போ
இனிப்போ
நிறைவதில் தான் இருக்கிறது எல்லாமும்
இருப்பதோ நிறைவதின் வெற்றிடம் என்பதைச் சொல்லிக்கொள்ளப் பிரியப்படுகிறேன்.
ச்சியர்ஸ்

13.

பற்றிக்கொண்ட விரல்கள் அவ்வளவு தூரமில்லை
விடுபட்ட இடங்கள்
விளக்கத்தின் ஆச்சர்யம்
நாமோ நின்று கொள்கிறோம்
நிரப்பப்படாத கேள்விக்குள்

14.

வெயில் பறந்துவருகிற முற்றத்தில்
குளிர்கால இறகுகள்
காற்று வரைந்து பார்க்கிறது
சிறகுள்ள நிழலை

15.


இத்தனைக்குப் பிறகும்
சிரிக்க விரியும் உதடுகளை
வெறுப்பதெப்படி
கற்றுத் தேர்ந்துவிட்ட நடிப்பை
இரவல் கொடு
இதுகாறும் நிம்மதியற்ற பொழுதுகள்
இனி நிம்மதியாய் விடியட்டும்.


16.

 வெறுமனே சொல்லிட முடியுமென்றால்
சொல்லிடலாம்
சொல்லில் அடங்கா ஓசைக்குள்
அடங்கமறுக்கிற இந்த மெளனம்
ஒரு திருட்டுபூனை


17.
பேச ஆளற்ற இருப்பு தீர்கிறது
பேசப் பேச

சுவர்களில் விரிகின்ற ரேகைகளோ
வார்த்தை வரை நீள்கிறது
கையெட்டும் தூரம்
தீர்ந்துபோகட்டும்
யாசகம்


18.

தொலைவது தொலைவாகும் போது
வாழ்வது சுலபமாகிறது.

0 கருத்துகள்: