உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

மழைக்காலம்




மழை வடிந்த இரவுகள் காதலால் நிரம்பிய வழியும் விடியல்கள்.

நாசி பிடிக்கும் வரை உள்ளிழுக்கும் காற்றின் ஈரத்திற்குள் சலங்கை கட்டும் மனதிற்கு ஏற்ற இசையென்பது கைகோக்கும் குளிர்காற்றின் தலைவருடல் மட்டுமே. கேசம் அசைக்கிற காற்றில் எல்லாம் புது இசை பிறந்து இரவை காதலோடு தாலாட்டுகிறது.

ஈரம் உலராத தளத்தில் பதிக்கும் பாதத்தில் வேர்கொள்கிற நிறம் வெறுமை உடுத்திப் பார்க்கும் பச்சை நிறம்.. அதற்கு சருகுகள் பற்றி கவலை இல்லை. தொலைதல் கணம் கண்டெடுக்கப்படும் வரை உயிர்கொடுக்கிற பச்சையம் போதுமாகிறது யாவற்றின் யாவற்றுக்கும்.

உள்ளிழுக்கும் ஒவ்வொரு மழைக்காற்றிலும் ஒரு பெரும் வனம் உள்சென்று வெளிவருகையில் இன்னொரு வனமாய் அடர்த்தியாகுகிறது, அதற்குள் தொலைந்து தொலைந்து கண்டெடுக்கப்படுகிற ஓவ்வொரு விதைக்குள்ளும் மழை உடைத்து வனம் பெருகுகிறது..

நான் மழையின் வனமாகிறது போது வனத்தின் மழை என்னை வாரிக்கொள்கிறது விதையாக..

நாசியேறுகிற குளிரின் மேல் குரல் போர்த்துகிற ஞாபகங்களின் கதகதப்புக்கு நிலவின் நிறமிட்டுப் பார்க்கிறேன்.அவை நிலவைப் போல வளர்ந்து தேயும் மாயவித்தை தெரிந்து வைத்திருப்பது இப்போதும் என்னை அச்சுறுத்துவது.

மழையை நினைவில் இட்டு நிலவோடு பருகுகிறேன். கதகதப்பு வேண்டும் தீராத நினைவுகள் குளிரக் குளிர பருகுகிறது அதே ஆதிச் சூட்டை

தனித்து என்ற சொல்லோடு மழையைப் பருகும் போது இருட்டிக்கொண்டு நிற்கிற மேகத்தின் மேல் பெருகுகிற கருணை கட்டுடைக்கிறது, மனம் காணாத ஈரத்தை..

மழை ஈரம் இன்றைய நிலவரப்படி தூரத்துப் பிரச்சார நெடி கலந்த காற்றோடு உள் செல்கிறது..

விடியல் வரும் வரை மழை வலுக்கவே மனதும் பிரியப்படுகிறது..

-ரேவா

0 கருத்துகள்: