எனது வீட்டின் அறைக் கதவை தாழிட்டேன்
அப்படியே ஜன்னலுக்கு திரையிட்டு
வெளிச்சத்தைப் பூட்டினேன்
வெளியேற துடித்த துயரத்தின் காலைக் கட்டி
மேசையில் அமரவைக்க
இரு குவளை தேனீர்
துயரத்திற்கும் எனக்குமாய் வந்து சேர்ந்தது
கொதிக்க கொதிக்க பார்த்த துயரம்
ஊதி ஊதி பெரிதாக்கியது
அறையின் உக்கிரத்தை
பின்
அதுவும் காளி நடனமாட
கலைக்கூத்தாடி போல் நானும் ஆடினேன்
மெல்லிய இசைகேட்கும் எனதறை
இப்போது பேயிசையில் அதிர்ந்துகொண்டிருக்க
எரியும் நெருப்பொன்று எங்கிருந்தோ வந்து
சாம்பலாக்கியது
ஆக
துயரமும் நானுமாய்
தற்கொலையில் வென்றிருந்தோம்
இனி இது கவிதையில்லையென்று
சொல்பவர்களை பற்றிய கவலை நமக்கெதற்கு...
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக