குழந்தைகள் பூங்காவில் தனித்து விடப்பட்ட
ஊஞ்சலாய்
உனதிந்த மெளனம்
காற்று கலைத்து ஆட்டி விடும் அதனிடம்
கட்டுண்டிருக்கும் சங்கிலியாய்
என்னை இறுக்கிப் பிடிக்கிற அமைதியில்
க்ரீச் சத்தம்
வெறிச்சோடிய வார்த்தையின் வரிசையை
ஊஞ்சலில் ஏற்றி விட
பிடி தொலைத்த பிள்ளையின் அழுகையாய்
உன்னைத் தேடும் சொல்லில்
பயத்தின் பீதி
சமாதான முந்தாணையில் கண்ணீர் துடைத்து
ஆடுவதற்கு வழிசெய்கையில்
இரு கைப் பிடித்து விளையாடிப் பார்க்கிறாய்
மெளனத்தை திசையெங்கும் வீசி
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக