உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 16 மே, 2015

சொற்களின் ஜன்னலில் ஊர்க்குருவி

வட்டத்தில் வரையப்பட்டவொன்றை
மாற்ற நினைக்கையில்
ஆதாரப்புள்ளி மட்டும் அரைவட்டம் எடுத்துக்கொள்ள

எஞ்சியவற்றை எடுத்துத்தின்னத் தொடங்கிய தனிமை
பார்ப்பவற்றையெல்லாம் கேட்டு அடம்பிடிக்க
எதைக்குறித்து இத்தேர்வென்று
தெரியாமலே விட்டுவைத்தேன்


நாற்சுவராயினும்
நான்மட்டுமிருக்கும் இவ்வுலகம்
யாவரும் வந்தமர மறுக்கும்
பாலையின் கோடையைக் கொடுக்க


காற்று வந்து கதைகேட்கும்
மெளனம் அதை மொழிப்பெயர்க்கும்
சுவர் பல்லியது இசையமைக்கும்
கடிகார ஓசையதும் ஓயாது உரையாடும்
இருளின் வெளிச்சமே இரவின் விலாசமாகும்
இப்படித்தானெப்போதுமென பூனையது நெட்டிமுறிக்கும்
சினேகமாய் கனவுவந்து புறமுதுகில் தட்டிக்கொடுக்கும்
பருகக்கிடைத்த தேனீரிலும் பாலாடை உறவாடும்
பசித்திருக்கும் சில சொற்களுக்கும்
பசியாற -கனவுருவம் பலியாகும்


பசியாறா நினைவதுவும்
பாதிவழியிலே கிடந்தழுக
சுவருடைத்து பெய்த மழை
அதன்வழியே கீழிறங்க
மழைக்குப்பின் வேறாகியிருந்த இவ்வறையின்
வேரறிதல் எளிதன்று

எளிமையாய் சொல்வதென்றால்
எஞ்சிய சொற்களையும்
தின்ன தருவேன்
சன்னலில் வீடமைத்த என்வீட்டு சிட்டுக்குருவிக்கு..

0 கருத்துகள்: