ஓர் ஒப்புதலுக்காய் காத்திருக்கும்
உயர் அதிகாரியின் மேஜைக் குறிப்புகளாய்
குவிந்து கிடக்கிறது
நகர வேண்டிய தூரங்கள் குறித்த அறிவிப்பும்
அதற்கான அனுமதியும்
வேறு வேறு வேலைகளின் மிகுதி
கவனிக்க மறந்த இரக்கமற்ற கணங்களில்
வாங்கிய கடனுக்கு வாசல் வந்து நிற்பவனைப் போல்
மிரட்டுகிறது
இதயத் துடிப்பில் விடிந்திடும் பொழுது
இன்று திறந்திடுமென்ற கனவுக்கான
தேடுதல் சாவி
தேடியெடுத்த நம்பிக்கை தொலைவு
கடப்பதன் தூரத்தை
கானல் திரை இட
இன்னும்
எரியூட்ட அனுமதி கிடைக்கா
அனாதைப் பிணமொன்றின் உதட்டுச் சிரிப்பில்
இறுக்கும் வெறுமையாய்
மூச்சுத் திணற வைக்கின்ற காலங்கள்
செல்லரித்த குறிப்புகளாய்
எதற்கும் உதவாதென்ற உன் ஒற்றைக் கையெழுத்து
அச்சாணி கழண்ட வண்டிச் சக்கரமாய்
திசை மாற்றி ஓட விடுகிறது
ஓர் ஒப்புதலுக்காய் காத்திருந்த சமாதானத்தின் தூரத்தை
- ரேவா
(நன்றி -கீற்று.காம்)
ஓவியம் - Gill Bustamante
0 கருத்துகள்:
கருத்துரையிடுக