உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

மீள் சுழற்சிக்குள் சிக்கிக்கொண்ட காத்திருப்பு


*
கடந்துபோனவைகளை கையில் வைத்திருக்கிறேன்

பிரித்துப்பார்க்கும் ஆவலோடு
கைகளைப் பற்றிக்கொள்


நீங்கும் நிமிட இடைவெளியின் பயம்
விடைபெறலின் ரேகைக்குள் ஒட்டிக்கொண்டிருப்பதை
ஈரம் தோய ஒற்றியெடு


கையசைப்பில் வளரும் வாத்சல்யம்
பிரித்தனுப்பும் சுவாசத்தை
பொறுமை தீர விட்டிழு


ஏற்றுக்கொள்ளும் பக்குவமெங்கும் 
முளைத்துவிட்ட வார்த்தைகளை
ஒவ்வொன்றாய் பறி


மலர் மலராய் மெளனம்
நாரில் மணக்கும் உரையாடல்
கட்டி முடித்த காரணத்தை முடிச்சிடு


மாலையானதின் சாத்தியத்தில்
நிகழ்ந்தாக வேண்டிய சம்பிரதாயம்
வாடுவதற்குள்


இன்னொரு கழுத்தை நீ தேடவேண்டும்


- ரேவா

நன்றி : கீற்று.காம்

Painting : Nikola Durdevic

0 கருத்துகள்: