உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 12 மே, 2015

சொல் விளையாட்டில் வெற்றியின் முடிச்சு


*

சொற் சிறகில் உயரப் பறக்கும் அர்த்தங்கள்
கூடு திரும்புவதில்லை


தனக்கேற்றவைகளை தகவமைத்துக் கொள்கின்ற
உதிர்ந்த இறகில்
ஓராயிரம் அர்த்தப் பிழைகள்


உயரங்களைத் தொடுவதில் இருக்கும் வேட்கை
அற்பமாகிப் போன ஆரம்பத்தை நோக்கித்
திரும்புவதும் இல்லை


பறத்தல் காத்திருப்பின் தவம்
பறத்தல் நேசிப்பின் உரிமை
பறத்தல் கூடுகளுக்குச் செய்யும் நன்றி
பறத்தல் சிறகின் நியதி


அட்சயபாத்திரமென அள்ள அள்ளக் குறையாத சொல்லில்
பசியாற எல்லோருக்குமென ஒரு கவளம்
மிச்சமிருக்கும் சொற்கள்
தனிமைக்குத் தீனி


நின்று பழகும் சொல்லின் நிழலில்
துணைவரும் வெயில்
தூரமாகும் வெளிச்சங்களை விட அழகானது


சொல் விளையாட்டின் அர்த்தப் படிக்கட்டில்
மூச்சுவாங்க பின்வருபவர்கள்
லிப்டைத் தேர்ந்தெடுப்பவர்களாகவே இருக்கின்றனர்


மூச்சு வாங்க ஏறும் தொலைவில்
ஆரோக்கியத்தின் முன்னேற்றம்
விலையாகும் வியர்வைக்குப் பின்
விருந்தாகும் சம்பவங்கள்
புரியத் தேவையில்லை

அவர்கள் முன்னேறிவிட்டார்கள்

சொற்களின் வரிசை குறித்தோ
அதன் சூட்சும முடிச்சுகள் குறித்தோ
கவலையின்றி அழுத்தும் பட்டனில்
வந்து நிற்கும் இடம்
பிரதானம்


வேக வேகமாக
மிக நிதானமான காய் நகர்த்தலில்
வெட்டப்பட்ட சொல்
உச்சியேறிய லாகவத்தின் பின்
பறிபோன நியதி
அவர்கள் முன்னேறிவிட்டார்கள்


வெற்றியின் வெளிச்சம்
மறையும் இருள்
முன்னேறுதலின் கணக்குகள் சரிபார்க்கப்படுவதில்லை


நிற்கும் இடத்திலிருந்து கிளம்பும் அம்புகள்
பாய அனுமதிக்கும் மரமென இருப்பதில்
பயிற்றுவித்த சொல்லின் ஆதித் திமிர்
அத்தனைக்கும் போதுமானது


-ரேவா

0 கருத்துகள்: