உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 12 மே, 2015

பார்வைத் தூண்டிலில் பிடிபடும் காட்சிகளின் நிறம்


*
எழுதி முடிக்கப்பட்ட கவிதை
எழுதப்படாத வெள்ளைக் காகிதத்தைப் போல
வெற்றுச் சொற்கள் நிரப்பி வைத்திருக்கும் ஆழத்தை
கடக்க ஆவலுறும் வாசகனுக்காய் கைகளை நீட்டியே
காத்திருக்கிறது 


எளிமை வளர்த்துவிட்டிருக்கும் செளகர்யம்
கரையில் அமர்ந்தபடி
அலைமோதிச் சிரிக்கும் எண்ணங்களில்
கால் நனைத்து திரும்பிவிடும்
தடுப்பில்
சுனாமிப் பேரலை ஞாபகம்


மூச்சித் திணறியோ
அலை இழுத்துச் சென்றோ இறந்தவர் எண்ணிக்கை
ஆழத்தில் அடைபட்ட கணக்கென்பது
ஓர் எச்சரிக்கை உணர்வு 


கண்ணுக்குத் தெரிந்திடும் மாயக்கோட்டின் பின்
வேறொரு உலகம் திறந்துவிடும் சுயத்தை
கடக்கத் துணியும் தோணிகளில்
ஏற்றுமதியாகும் உயர்தர மீன்கள்


பேரம் பேசி வாங்கிப் பழகிய நமக்குள்
குவிந்திருக்கும் கவிச்சி வாடை
இரவல் மீனுக்காய் சண்டை போடுகையில்
இறந்த மீனின் கண்களென நிலைகுத்திக் கிடக்கிறது
எழுதியக் கவிதையில் எழுதப்படாத கவிஞனின் அந்தரங்கம்

.

-ரேவா

0 கருத்துகள்: