உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

கரித்துண்டுகள் வரையும் வார்த்தைக் கோடுகள்




இருத்தலின் இருண்மை
வேர்களில் துளிர்த்து
இரவுக்கு இட்டுச் சென்றும்
நிலா ஒளிர்தலின் விளிம்பில்
புராதன மணத்தைத் தொலைத்திருந்தேன்

பாசிக் கரையில் கால் வைத்த பின்
கோயில் புறாக்களின் சிறகடிப்பு
மகிழ்வுறுத்துவதாய் இருக்கவுமில்லை

களவாடப்பட்ட நிலத்தின் மீது
உரிமை கோரும் பிள்ளையாய்
கருஞ்சாம்பல் பூசிய நினைவிலிருந்து
தோண்டியெடுக்கிறேன்
பொசுங்கி கிடக்கும் வார்த்தைகளின்
மண்டையோட்டை

இன்னும் அடங்கிடாத் தணலில்
நேசமென பெய்த மழை
கிளப்பிய சூட்டில்
வேரழிய
வெந்துபோகிறது
ரகசியங்களின் இலை உதிர்த்த
இருண்மையின் மொட்டை மரம்

-ரேவா

(painting :LaurenWadkins)


 நன்றி : யாவரும்.காம் Jun 01-06-14)


0 கருத்துகள்: